திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்
குணாவின் முதல் குற்றச்சாட்டே, தந்தை பெரியார் தமிழர் என்ற பகுப்பில் தமிழ்த் தேசியம் அமைக்க முற்படாமல், திராவிடர் என்ற பகுப்பில் திராவிட தேசியம் அமைக்க முற்பட்டதாலே தமிழர்க்குக் கிடைக்க வேண்டிய தமிழ்த் தேசம் கிடைக்காமல் போனது. தமிழ்நாடு சுரண்டப்பட்டது; தமிழர்கள் வீழ்ந்தனர் என்பதாகும். எனவே, இது குறித்து நுட்பமாகவும், தெளிவாகவும், சான்றுகளோடும் சுருக்கமாகக் காண வேண்டியது கட்டாயம் ஆகும்.
தமிழும் திராவிடமும் வேறு வேறா?
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல் எழுதி வெளியிட்ட தோழர் குணா, அந்த நூலை, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் நினைவாக... வெளியிட்டுள்ளார். அந்த அளவிற்கு அவர்மீதும் அவர் ஆய்வின்மீதும் அவரின் முடிவுகள்மீதும் ஆழ்ந்த பற்றுள்ளவர் குணா என்பது வெளிப்படுவதோடு, அவரே இதைத் தன் நூலில் குறிப்பிட்டும் உள்ளார். எனவே, அவரால் மதித்து ஏற்கப்படும் பாவாணர் தமிழ் - திராவிடம் பற்றி என்ன கூறுகிறார் என்று முதலில் பார்ப்போம்.
இக்கால மொழியியலும், அரசியலும் பற்றித் தமிழும், அதனினின்றுந் திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் திராவிடம் என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே. தமிழ் - தமிழம் -
த்ரமிள - திரமிட - திரவிட - த்ராவிட - திராவிடம் என்று கூறி தமிழே திராவிடம் என்றானது என்கிறார். அதாவது தமிழும் திராவிடமும் வேறு வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றே என்கிறார். - (ஒப்பியன் மொழி நூல், பகுதி - 1, பக்கம் - 15, தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 14.)
பாவாணரின் முடிவு முழுமையும் ஏற்புடையது. மாறாக, திராவிட என்னும் சமற்கிருதச் சொல்லே தமிழில் திராவிடம் என்றானது என்று கூறப்படும் கருத்து முற்றிலும் தவறானது. காரணம், சமற்கிருத மொழியில் அதற்கான வேர்ச்சொல் இல்லை.
திராவிடம் (திராவிடர்) என்னும் சொல்லாட்சி :
திராவிடம் என்ற சொல் மூன்று நிலைகளில் பயன்பாட்டில் உள்ளது.
1. தமிழ் என்பதன் திரிந்த நிலை. எனவே தமிழுக்கு மறுபெயர் அல்லது தமிழைக் குறிக்கும் மாற்றுச் சொல்.
2. தமிழுடன் பிற மொழிகள் கலந்ததால் உருவான (உருமாறிய) கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள் வாழும் பகுதிகளான கருநாடக, ஆந்திர, கேரளப் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்.
3. தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளுக்கும், கடலுள் மூழ்கிய குமரிக்கண்டம் போன்ற பகுதிகளுக்கும் உரிமையான தொன்மையான தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் சொல்.
இப்பகுதிகளுக்கெல்லாம் தனித்து உரிமை பெற்ற மக்களுக்கு எதிராக, கைபர், போலன் கணவாய் வழியாக வந்து மெல்ல மெல்ல பரவிய ஆரியர்களுக்கு எதிராகப் பயன்படும் சொல்.
எனவே திராவிட இனத்தை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் சொல். ஆக, தொகுத்து ஒரு வரியில் சொல்வதாயின், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டுத் தமிழரை, உருமாறிய தமிழ்ப் பேசும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்ஆகியோரை பிற மொழி பேசி வடமாநிலங்களில் வாழும் திராவிட இனத்தவரைக் குறிக்கும் சொல் திராவிடம்.
ஆம், இன்றைக்குத் தென்னிந்தியாவிலும், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ஒரிசா, மேற்குவங்கம், பீகார், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று பல மொழிகள் பேசி பலவிடங்களில் வாழும் தொன்மைத் தமிழர் மரபில் வந்தவர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். இன அடிப்படையில் பார்க்கையில் அவர்களும் தமிழர்களே (திராவிடர்களே)
அஸ்ஸாமில் ராங்கியா மாவட்டத்தில் பூடான் செல்லும் சாலையில் 25 கி.மீ.
தொலைவில் உள்ள ஓர் ஊரின் பெயர் தமிழ்ப்பூர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அண்மையில் தன் கிளையை அமைத்த வடமாநில ஊரின் பெயர் கடம்பூர்.
மேற்கு வங்கத்தில் டாடா கையகப்படுத்திய சர்ச்சைக்குரிய நிலம் உள்ள ஊர் சிங்கூர்.
இந்தியா, பாகிஸ்தானில் உள்ள எல்லா பகுதிகளையும் ஆய்வு செய்தால் ஊர் என்று முடியும் ஊர்கள் ஆயிரக்கணக்கில் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. எனவே, நான் முன்னர் குறிப்பிட்டதுபோல இந்தியாவும் இந்தியாவைச் சுற்றியுள்ள சில நாடுகளும் தமிழர்களின் தொன்மைப் பகுதியாகும்.
அந்நிலையில் தமிழர் பகுதிக்குள் முதன்முதலில் நுழைந்த வேற்று இனம் ஆரிய இனம். நுழைந்த இனம் பிழைப்பதற்கு மாறாய் ஆதிக்கம் செலுத்த முனைந்ததால் தமிழ் இனத்திற்கும் (திராவிட இனத்திற்கும்) ஆரிய இனத்திற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இனப்பகை. எனவே, ஆரியத்திற்கு எதிர்நிலை திராவிடம் என்றானது.
பெரியார் பிடித்த திராவிடம் :
பெரியாரின் திராவிடக் கொள்கையைப் பார்ப்பதற்குமுன் அவரது இலக்கு என்ன, கொள்கை என்ன, விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது கட்டாயம். பெரியார் உலகளாவிய பார்வை கொண்டவர். மனிதநேயத்தின் மறுவடிவம். மனிதருக்குள் எந்த பேதமும் இருக்கக் கூடாது என்றவர். தனக்குத் தேசாபிமானமோ, பாஷாபிமானமோ கிடையாது என்று கூறியவர்.
எனவே, அவர் ஓர் இனத்தின்மீது பற்றோ, மொழியின்மீது பற்றோ, ஒரு ஜாதியின் பற்றோ, ஒரு பண்பாட்டின்மீது பற்றோ கொண்டவர் அல்ல. பொதுவுடைமை, சமஉரிமை சமுதாயம் அவர் காண விரும்பியது. அதற்குத் தடையானது எதுவோ அதை எதிர்த்தார், தகர்த்தார். அவர் பிறந்த தமிழ்நாட்டில் வந்தேறிகள் ஆதிக்கம் செலுத்தவும், மண்ணுக்குரியவர்கள் அடிமைகளாய் வாழவும் கண்டு பொறாது, அதை மாற்றத் திட்டமிட்டார்.
மண்ணுக்குரியவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமான சூழ்ச்சிக்காரர்களை நுட்பமாய்க் கண்டறிந்தார். ஆரியப் பார்ப்பனர்களே அனைத்திற்கும் காரணம் என்று முடிவு செய்தார். தொடக்கத்தில் தமிழகம், கன்னடம், ஆந்திரம், கேரளம் உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை அவர்முன் வைத்தாலும் அதன்பின் தமிழ்நாடு அளவிலே தன் கோரிக்கைகளை முன்வைத்தார்.
பெரியாரை ஆய்கின்றவர்கள் யாராயினும் அவர் பேச்சின் தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் பேச்சின் நோக்கைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் உள்ளத்தை உற்று நோக்கி உய்த்து உணர வேண்டும். இப்பார்வையில்லாமையே பெரியாரைப் பிழையாக நினைக்கக் காரணமாய் அமைகின்றது.
திராவிடம் என்ற சொல்லாட்சி பெரியார் உருவாக்கியதா? பெரியாருக்கு முன் பல நூறாண்டுகளாய் பயன்பாட்டில் உள்ள சொல் திராவிடம் என்பது.
கி.மு.
முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்... திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.
கி.பி.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப் பயன்பட்டது.
1856 இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or
South Family of Languags)
என்ற நூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.
திராவிடம் என்ற சொல்லை நீதிக் கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ உருவாக்கவில்லை. குறிப்பாக பெரியார் திணித்தார் என்பது தவறு. அறிஞர் இராம. சுந்தரம் அவர்கள் இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே, திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களை,தென்மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்.
குமாரிலபட்டர் (கி.பி.
7ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார் (tadyatha dravidadi bhassyam
ever.... so in the Dravida and other
languages.
(ச. அகத்தியலிங்கம், திராவிட மொழிகள், 22).
மனு ஸ்மிருதியில் திராவிட இனம் பற்றிய குறிப்பு உண்டு.
கியர்சன் (Linguistic Survey of India
Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன் (Dr.Hodgson) என்பவர்தான் திராவிடன் (Dravidan) என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.
1816இல் வெளியான A.D.Campwell-ன் தெலுங்கு மொழி இலக்கண நூல் முன்னுரையில் எல்லீஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ முதலிய மொழிகளைத் தென்னிந்திய மொழிகள் (Dialacts of South INDIA) என்று குறிக்கிறார்.
சமற்கிருதம் தொடர்பாக நூல் எழுதியவர்களும், திராவிட என்ற சொல்லை இனம், மொழி தொடர்பாகக் குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது. எனவே, (Caldwell coined the) சொல்வதைவிட, அவரே கூறுவதுபோல, “The
word I have chosen is Dravidan from Dravida, the adjectival form of
Dravida” என்பது பொருந்தும். எனினும், திராவிட என்ற சொல்லை வரையறுத்த பொருளில் பயன்படுத்தி, உலகெங்கும் பரவச் செய்த பெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. –
(காலச்சுவடு, நாகர்கோயில், செப்டம்பர் 1996, பக்கம் 34-35)
கேரள அறிஞர் டி.கே.
இரவீந்திரன் என்பவர் கூறுவது போல கால்டுவெல்லின், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்கள் அவரே எதிர்பாராத பண்பாட்டு, சமூக, அரசியல் உணர்வுகளை ஏற்படுத்தியது. தென்னிந்திய மொழிகள் பலவற்றை அவர், திராவிட மொழிகள் என வரையறுத்தது மட்டுமன்றி, தமிழர்கள் தாங்கள் ஆரியப் பார்ப்பனர்களால் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டு வந்ததை மறுதலித்துத் தங்களைத் தமிழ்நாட்டில் அந்தந்தப் பகுதியில் உள்ள திராவிட ஜாதி அடையாளத்தைக் கொண்டே குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
இறையியல் அறிஞர் ஜி.யு.
போப் மட்டுமன்றி, ஜே.எச்.நெல்சன், மவுண்ட் ஸ்டூவர்ட், எல்பின்ஸ்டன் கிராண்ட் டஃப் போன்ற ஆங்கில அதிகாரிகள்கூட தமிழர்களையும், தமிழ்மொழியையும் குறிக்க திராவிட, திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
பேராசிரியர் பி.
சுந்தரம்பிள்ளை, ஜே.எம்.
நல்லசாமிப் பிள்ளை, டி.
பொன்னம்பலம் பிள்ளை, வி.
கனகசபை பிள்ளை, சோமசுந்தர பாரதியார், எம்.எஸ்.
பூரணலிங்கம் பிள்ளை, ஜே.பி.டி.
டேவிட், சீனிவாச அய்யங்கார், மறைமலையடிகளார் முதலிய தமிழறிஞர்கள், நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே, திராவிடம், திராவிடர் என்ற சொற்களை மொழி, மரபின அடிப்படையில், தமிழ்மொழி, தமிழினம், தமிழ்ப் பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தினர். சீனிவாச அய்யர் ஒருவரைத் தவிர மற்றவர்கள், திராவிடம் என்பதை ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கும், உயர் தகுதிக்கும் எதிரான கருத்தாக்கமாகப் பயன்படுத்தினர்.
அது மட்டுமல்ல, நீதிக்கட்சியினர் திராவிடம் (திராவிடர்) என்று பேசுகையில் அதைத் தமிழ் நாகரிகம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றோடு தொடர்புபடுத்தியே குறிப்பிட்டனர்.
திராவிட நாகரிகத்தின் மேன்மை மனிதனுக்கு மனிதன் பிறவியிலேயே வேறுபாடு இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. திராவிடச் சிந்தனையின் தலைவர்களான திருவள்ளுவர், அவ்வை, கம்பர் ஆகியோர் கடவுளின் தலையிலிருந்து பிறந்தவர்களாக உரிமைப் பாராட்டுவதில்லை. ஆரியர்களே அந்த வேறுபாட்டை உருவாக்கி, விரிவாக்கி வர்ணாசிரம தர்மத்தை உருவாக்கினர். (Irschikg - 289).
1892 இல் ஆதி திராவிட ஜனசபையும், 1894 இல் திராவிட மகாஜன சபையும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாம் அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரால் உருவாக்கப்பட்டபோது திராவிடர் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டது.
1909 ஆம் ஆண்டு, சென்னை பார்ப்பனர் அல்லாதார் சங்கம் (The madras
non-brahmin Association)
அமைக்க முடிவு செய்தபோது, சிறுபான்மையினரான பிராமணரைச் சொல்லி, அவர்கள் அல்லாதார் என்று பெரும்பான்மை மக்களை ஏன் அழைக்க வேண்டும் என்று, The Hindu நாளேட்டில் ஆசிரியருக்குக் கடிதம் என்ற பகுதியில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இது அனைவரின் சிந்தனையையும் கிளறவே, 1912 இல் நவம்பர் 10ஆம் நாள் சென்னை திராவிடர் சங்கம் (The Madras Dravidian Association) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆக, பார்ப்பனர் அல்லாதாரின் அடையாளச் சொல்லாக திராவிடர் என்ற சொல்லாட்சி அதன்மூலம் நடப்பிற்கு அமைப்பு அளவில் வந்தது.
எனவே, பெரியாருக்கு முன்பே, ஆரியப் பார்ப்பனர்களின் (பிராமணர்கள்) ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் திராவிடர் என்ற ஒருங்கமைப்பை உருவாக்கினர் என்பதே உண்மை என்பதோடு, சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருப்பதுபோல, தமிழர்மீது திராவிடர் என்பது பெரியார் திணித்த சொல்லாட்சி அல்ல. பெரியார் கையாண்டதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே கையாளப்பட்ட சொல் இது.
பெரியார் தன் அமைப்பிற்கு முதலில் சுயமரியாதை இயக்கம் என்றே பெயரிட்டார்.
1916-ல் அயர்லாந்து நாட்டிலிருந்து வந்த அன்னிபெசண்ட்அம்மையார் ஹோம்ரூல் இயக்கத்திற்கு (Home Rule Movement ) தலைமையேற்ற பின்னர், அவ்வியக்கம் ஆரியப் பார்ப்பனர்களுக்குச் சார்பாகவும், அவரது கொள்கைகளுக்கு, சாஸ்திரங்களுக்கு, வர்ணப் பிரிவுகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டமையால், 1916 டிசம்பர் 20 ஆம் தேதி டி.எம்.
நாயர், பி. தியாகராயச் செட்டியார், டாக்டர் சி. நடேசனார் ஆகியோரைப் பொறுப்பாளர்களாகக் கொண்டு தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian
Liberal Federation ) உருவாக்கப்பட்டது. அதன் சார்பில் அவ்வாண்டு டிசம்பரில் (The
Non-Brahmin Manifesto) பிராமணர் அல்லாதாரின் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரில், தென்னிந்தியா என்று இருந்தாலும் அது திராவிடத்தைக் குறிப்பதாகவே கொள்ளப்பட்டு, அவ்வாறே அதன் செயல்பாடுகளும் அமைந்தன.
சென்னையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் கிளைகள், அமைந்த இடத்தின் பெயரால், இராயப்பேட்டை திராவிடர் சங்கம், ஜார்ஜ்டவுன் திராவிடர் சங்கம் என்று திராவிடர் பெயரிலேயே தொடங்கப்பட்டன.
சங்கத்தின் சார்பில், ஜஸ்டிஸ் என்னும் ஆங்கில ஏடு
1917 பிப்ரவரி முதற் கொண்டும், திராவிடன் என்னும் தமிழ் ஏடு, 1917 ஜுன் முதலும் வெளியிடப்பட்டன. ஆந்திரப் பிரகாசினி என்னும் தெலுங்கு ஏடும் நாளேடாக மாற்றி வெளியிடப் பட்டது. 1885 ஆம் ஆண்டு முதல் வார ஏடாக வெளிவந்து கொண்டிருந்த ஏடு நீதி கட்சி கொள்கைகளைத் தெலுங்கில் சொல்ல வாங்கப்பட்டு, நாளேடாக வெளியிடப்பட்டது.
1912இல் சென்னை திராவிடச் சங்கம் உருவாக்கப்பட்ட போதும், 1916 இல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சி தொடங்கப்பட்டபோதும் பெரியார், நாயக்கர் என்று அழைக்கப்பட்ட நிலையில் ஈரோட்டில் வணிகராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பெரியாரின் வணிக வாழ்க்கை 1905 முதல் 1919 ஆம் ஆண்டு வரை.
1919 ஆம் ஆண்டு பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக்கில், ஜெனரல் டயர் என்பவனால் நடத்தப்பட்ட படுகொலை, பெரியாரின் உள்ளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒரு கொதிப்பை உருவாக்கிற்று. ஆங்கில ஆட்சியை ஒழித்தே தீர வேண்டும் என்று ஓர் உணர்ச்சி அவருள் எழ வணிகப் பணியையும், ஈரோடு நகர சபை தலைவர் பதவி உட்பட 29 பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டுக் காங்கிரசில் சேர்ந்தார். இதைப் பெரியாரே குறிப்பிடுகிறார்.
- (ஆதாரம் : பெரியார் ஒரு நடைச்சித்திரம் மயிலைநாதன்)
1919 டிசம்பரில் நடந்த அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டிலும், 1920 செப்டம்பரில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு மாநாட்டிலும் பெரியார் கலந்து கொண்டார். 1921 இல் கள்ளுக்கடை எதிர்ப்புப் போர், 1924 இல் வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுல எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார். பார்ப்பன ஆதிக்கம் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உடையவராய் காங்கிரஸில் செயல்பட்ட பெரியார், தன்னுடைய கருத்துக்களை வெளியிட 1925 மே மாதம் 2ஆம் நாள் குடிஅரசு இதழை முதன்முதலில் வெளியிட்டார்.
கல்வி, வேலை வாய்ப்பில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையை அகற்ற பெரியார் பெரிதும் முயன்றார். 1916 ஆம் ஆண்டே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தர ஒப்புக் கொண்ட காங்கிரஸ், அதைச் செயல்படுத்தத் தவறியதால், காங்கிரஸ் மாநாடுகளில் அதற்குத் தீர்மானம் கொண்டுவர முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் இராஜாஜி, சீனிவாச அய்யர், ரங்கசாமி அய்யர் போன்றவர்களால் அம்முயற்சி தடுக்கப்பட பெரியார் வெறுப்புற்றார்.
1925இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் தீர்மானம் கொண்டுவர மறுக்கவே, வெறுப்புற்ற பெரியார் வெளியேறினார் காங்கிரசை விட்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி பார்ப்பனர் அல்லாதார் தன்மானத்தோடும், உரிமையோடும் வாழப் போராடினார்; பரப்புரை ஆற்றினார். தன்னுடைய கொள்கைக்கு ஏற்றதாக நீதிக் கட்சியின் கொள்கைகள் இருந்ததால் அதன் கூட்டங்களிலும் அடிக்கடி கலந்து கொண்டார்.
1931 ஆம் ஆண்டு ரஷ்யா சென்று வந்தபின் பெரியாரின் சிந்தனைகளில் புதிய கருத்துக்கள் பிறந்தன. அவரது பார்வை விரிந்தது. சமதர்மக் கொள்கைகளைப் பெரிதும் பேசினார். 1934இல் ஆங்கில அரசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்யவே, சுயமரியாதை இயக்கத்தின் சமதர்மக் கொள்கைப் பிரச்சாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் முழுக்க முழுக்க நீதிக் கட்சியின் சார்பில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பெரியார்.
தமிழ்நாடு தமிழருக்கே :
காங்கிரசிலிருந்து விலகி வந்து, சுயமரியாதை இயக்கமும் குடி அரசு இதழும் தொடங்கி, ஆரியப் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, தொழிலாளர் நலன் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி பரப்புரையாற்றினார்.
1939 ஆம் ஆண்டு பெரியார் நீதிக் கட்சியின் தலைவராக சிறையில் இருக்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, நீதிக் கட்சி தொண்டர்கள் பெரும்பாலோர் பெரியார் ஆதரவாளராகவே இருந்தனர். சுருங்கக் கூறின் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் வேறுபாடின்றி இணைந்து கலந்து செயல்பட்ட நிலையில் பெரியார் நீதிக் கட்சியின் தலைவரானார்.
22.5.1939 அன்று பெரியார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 24.5.1939 அன்று சென்னையில் பெரியாருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய பெரியார் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்தார்.
1940 ஆகஸ்ட் 4 ஆம் நாள் நீதிக் கட்சியின் 15 ஆவது மாகாண மாநாடு திருவாரூரில் நடந்தது. அப்போது,
திராவிடர்களுடைய கலை,
நாகரிகம், பொருளாதாரம், ஆகியவைகள் முன்னேற்றம் அடைவதற்கு, பாதுகாப்பதற்குத் திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர்ப்பார்வையின்கீழ் ஒரு நாடாகப் பிரிக்கப்பட அதற்கான திட்டங்களை வகுக்க பெரியார் ஈ.வெ.ரா.
உள்ளிட்ட தலைவர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமனம் செய்வது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆக, இந்நிலை வரை (1940 வரை)
திராவிடம் என்பதை மற்றவர்களே பயன்படுத்தினர். இதன்பின்னரே பெரியார் பயன்படுத்தினார். தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என நான்கு மொழிப் பேசும் திராவிட மக்களை உள்ளடக்கி நீதிக்கட்சி செயல்பட்டாலும், அதன் முதன்மைக் கொள்கைகளான, ஆரியப் பார்ப்பன எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, திராவிட நாடு கோரிக்கை போன்றவற்றுள் தமிழர்களைத் தவிர மற்ற மூன்று மொழியினரும் ஆர்வம் காட்டவில்லை. மாறாக ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு அடிபணிந்தே நின்றனர்.
திராவிட நாடு கோரிக்கைக்குப் பெரியார் ஜின்னாவின் உதவியையும் நாடினார். பெரியாரின் கோரிக்கையை ஆதரித்த ஜின்னா, சென்னை மக்களுக்கு நான் எப்பொழுதும் அனுதாபம் காட்டியே வருகிறேன். அவர்களில் 90 விழுக்காடு பிராமணர் அல்லாதார். அவர்கள் தங்களுடைய திராவிடஸ்தான் உருவாக்க விரும்பினால் அதற்காகப் போராட வேண்டியவர்கள் உங்கள் மக்களேயாவர். பிராமணர் அல்லாத மக்களின் நியாயமான கோரிக்கையை நான் ஆதரிப்பேன் என்று வாக்குறுதியளிக்கிறேன்... என்று பதில் எழுதினார். ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதைவிட, ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதே முக்கியம். இந்திய நாட்டின் சுதந்திரம் அந்நியரிடம் மட்டுமல்ல, ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதிலும் உள்ளது என்பதில் பெரியார் உறுதியாய் இருந்தார்.
பெரியாரின் இலக்கும் அணுகுமுறையும் உயரியதாகவும், உண்மையானதாகவும் இருந்தும் மக்களை அதற்கேற்ப விழித்தெழச்செய்து, அணி திரட்டுவது விரைந்து நடக்கவில்லை.
மேலும் ஆங்கில ஆட்சிக்குப் பெரியார் ஆதரவளித்து, ஆரியப் பார்ப்பனர் அல்லாதாருக்கு உயர்வு கிடைக்கச் செய்யலாம் என்ற முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. ஆங்கில ஆட்சியாளர்கள் தொடர்ந்து இவரைப் புறக்கணித்து வந்தனர். காங்கிரசின் செல்வாக்கு கூடிவந்த நிலையில், நீதிக்கட்சியைச் சீமான்கள், மிராசுதாரர்கள் கட்சி, ஆங்கிலேயர்களுக்குத் துதிபாடும் கட்சி ஒன்று மக்கள் வெறுக்கும் நிலையும் வந்தது. எனவே, காலத்திற்கேற்ப நீதிக் கட்சியின் அமைப்பிலும், இலக்கிலும் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்தது.
1935 ஆம் ஆண்டு செங்குந்தர் மாநாட்டில் பெரியாருக்கு அறிமுகமான அண்ணா, பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப பெரிதும் துணை நின்றார். எனவே, குடிஅரசு பத்திரிகையின் உதவியாசிரியராக அவரைப் பெரியார் அமர்த்தினார்.
அண்ணாவின் எழுத்துக்களும் பேச்சுக்களும் நீதிக் கட்சியின் கொள்கைகளை மக்களிடையே பெருமளவிற்குக் கொண்டு சேர்த்தன.
1942இல் பெரியாரின் உதவியுடன் திராவிட நாடு பத்திரிகையை அண்ணா துவக்கினார். அண்ணாவின் முயற்சியால் நீதிக் கட்சி புத்துயிர் பெற்றாலும், மக்களின் மதிப்பீடு மாறவில்லை. எனவே, கட்சியின் பெயரை மாற்றி புதிய வடிவில், சரியான கொள்கைத் திட்டங்களுடன் கொண்டு செல்ல அண்ணா வலியுறுத்தினார். பெரியார் அதை ஏற்றுக் கொண்டார்.
1944 ஆகஸ்ட் 27 ஆம் நாள் சேலத்தில் நடந்த நீதிக் கட்சியின் 11 ஆம் மாநாட்டில், திராவிடர் கழகம் என்று நீதிக் கட்சியின் பெயரை மாற்ற அண்ணா தீர்மானம் கொண்டு வந்தார். அத்துடன் திராவிட நாடு என்ற பெயருடன் சென்னை மாகாணம் மத்திய அரசின் கட்டுப்பாடில்லாது இங்கிலாந்து பிரதம செயலாளரின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆக, 1909ஆம் ஆண்டு பார்ப்பனர் அல்லாதார் சங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 1944இல் திராவிடர் கழகம் என்ற பெயர் சூட்டப்பட்டது வரை,
திராவிடம் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டதில் பெரியாரின் வலியுறுத்தலோ, திணிப்போ ஏதும் இல்லை. திராவிடம் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டபோது பெரியார் காங்கிரசில் தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார்.
உண்மை இவ்வாறிருக்க, பெரியார் வேண்டுமென்ற உள்நோக்குடன் திராவிடத்தைத் திணித்தார். தமிழர் என்பதைப் புறக்கணித்தார் என்று கூறுவது மோசடித்தனமல்லவா?
திராவிட இயக்கத்தின் ஆணிவேரான 1909 ல் தொடங்கப் பட்ட பிராமணர் அல்லாதார் சங்கத்தின் முதன்மைக் கொள்கை பெரும்பதவி முதல் சிறு பதவி வரை எல்லாவற்றையும் பிராமணர்கள் பிடித்துக் கொண்டிருப்பதை மாற்றி, பெரும்பான்மை மக்களுக்கு அவர்கள் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதாய் இருந்ததால், இங்கு இனப் பார்வைதான் இயல்பாய் எழுமேயன்றி, மொழிப் பார்வை வர வாய்ப்பே இல்லை. எனவேதான் பிராமணர் அல்லாதாரைக் குறிக்கும் பொருள் பொதிந்த பொருத்தப்பாடுடைய, திராவிடர் என்ற சொல் தேர்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
அப்போது ஆரியர் ஆதிக்கத்தை வீழ்த்த திராவிடர் என்ற எதிர்நிலையே வலுசேர்க்கும், ஒருங்கிணைக்கும் என்ற உண்மை உணரப்பட்டே திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. அந்த அமைப்பை தமிழர் மட்டும் ஏற்படுத்தவில்லை. மலையாளி, கன்னடர், தெலுங்கர், தமிழர் என்ற நான்கு மொழிப் பேசும் தலைவர்களும் உருவாக்கினர். எனவே, அந்நிலையில் தமிழர் என்ற பெயர் சூட்டப்படவோ, அணி அமைக்கவோ வாய்ப்பே இல்லை, அதற்கான விழிப்பும், விவரமும் இல்லை என்பதே உண்மை. அதை அறிவுள்ள அனைவரும் ஒப்புவர். மேலும் சிறுபான்மையினரான ஆரியர்களைச் சொல்லி அவர்கள் அல்லாதார் என்று பெரும்பான்மையினரைச் சுட்டுவதே கேவலம், மானக்கேடு என்பதாலே, ஆரியர் அல்லாதார் திராவிடர் என்ற உண்மை நிலைக்கு ஏற்ப திராவிடர் என்ற சொல் இயல்பாகவும், கட்டாயம் கருதியும் பயன்பாட்டிற்கு வந்தது என்பதும் பெரும் உண்மை.
அது மட்டுமல்ல, திராவிடர் என்ற பெயர் சூட்டப்பட்டதற்குப் பெரியாரின் பங்கு ஏதும் இல்லை. காரணம், அப்போது அவர் அந்த அமைப்பில் இல்லை. அவர் காங்கிரசில் இருந்தார்.
எனவே, கன்னடர் என்பதாலே, தமிழர் என்ற சொல்லை விலக்கித் திராவிடர் என்ற சொல்லைத் திணித்தார் பெரியார் என்ற குணாவின் குற்றச்சாட்டு கோமாளித்தனமானது; உள்நோக்கம் உடையது; மோசடியானது!
ஆய்வறிஞர் அ.மார்க்ஸ் அவர்கள், பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கிற கூறுபடுத்தலை ஏற்காதவர்கள் தொடர்ந்து திராவிடக் கருத்தாக்கத்தை எதிர்த்து வருகின்றனர். தமிழர்களைப் பிளவுபடுத்துவதற்காக ஆந்திரரும், மலையாளியும் சேர்ந்து உண்டாக்கியதே நீதிக்கட்சி என சேரன்மாதேவி புகழ் வ.வே.சு.
அய்யர் அன்றே எழுதினார் (பாலபாரதி, மே,
25). ம.பொ.சி.
அதனைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் (தமிழகத்தில் பிற மொழியினர் 1976). குணா இதைக் கொட்டி முழக்குகிறார்.
இதுவே குணாவின் பாரம்பாரியம்.
என்று மிகச் சரியாகக் கணித்துச் சொல்லியுள்ளார்.
வ.வே.சு.
அய்யர், சி. இராஜகோபாலாச்சாரியார் இவர்களின் அணுக்கத் தொண்டர் ம.பொ.சி.
இந்த ம.பொ.சி.
யின் மறுவடிவம் குணா. பின்வரும் தலைப்புகளில் விரிவாகக் காணலாம். தமிழ் உணர்வாளர் என்ற போர்வையில் ஆரியத்தின் அடிவருடிய ம.பொ.சி.யின் அடுத்த வாரிசு குணா. எனவே, இவரிடம் தமிழர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
குணாவின் முதன்மை இலக்கு ஆரியத்தின் மீதான வரலாற்றுப் பழியைத் துடைக்க வேண்டும். ஆரியர்கள் நமக்கு எதிரிகள் அல்ல என்பதைத் தமிழர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். அதன் வழி ஆரியத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதே.
அதற்கு எதிராய் இருப்பது திராவிடர் கழகம், பெரியார், தி.மு.க.
அண்ணா, கலைஞர். எனவே, இவர்களைக் கொச்சைப் படுத்த வேண்டும். அதன்வழி ஆரியப் பார்ப்பனர்க்கு எதிர்ப்பில்லா நிலையை உருவாக்கி ஆரியப் பார்ப்பனர்களும் தமிழர்களே என்று அவர்களையும் தமிழராக்கி விட வேண்டும். ஆனால் தமிழனுக்குத் தன் வாழ்நாளையே செலவிட்ட பெரியாரைத் தமிழர்க்கு எதிரியாக்கி விடவேண்டும் என்று சதித் திட்டம் தீட்டி அதன் முதல் வேலையாகத்தான் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலைத் தீட்டியுள்ளார் குணா.
அதனால்தான் அந்த நூல் முரண்பாடு மிக்கதாயும், குழப்பம் குவிந்ததாயும், திரிபு நிறைந்ததாயும், மோசடிமிக்கதாயும், சூழ்ச்சி நிறைந்ததாயும், தமிழர்களை ஏமாற்றுவதாயும் உள்ளது.
எடுத்துக்காட்டாக, திராவிடம் என்பதை எதிர்க்கும் குணா, வடக்கு வாழ்கிறது; தெற்குத் தேய்கிறது என்ற முழக்கத்தை ஏற்கிறார். இந்த முழக்கம் திராவிடத்தின் அடிப்படையில் எழுவதுதானே! தமிழர்களுக்கு எதிரானவர்கள் கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்றால், குணாவின் முழக்கம் எதுவாக இருக்க வேண்டும்?
கன்னடம் வாழ்கிறது! தமிழகம் வீழ்கிறது!
ஆந்திரா செழிக்கிறது! அன்னைத் தமிழ்நாடு அழிகிறது!
கேரளா உயர்கிறது! தமிழ்தேசம் தாழ்கிறது! என்றல்லவா முழங்க வேண்டும்?
அடுத்து திராவிட ஓர்மையின் அடிப்படையில் வடவர் பொருளியல் சுரண்டலைப் பற்றிய நல்லதோர் அறிவு அண்ணாவுக்கு இருந்தது என்று கூறும் குணா (திரா. வீழ்.
13),
தமிழர் ஒரு தனித் தேசிய இனமென்னும் ஓர்மையை ஒழிப்பதற்கென்றே, திராவிட ஓர்மை என்னும் பொய்மை தமிழரின் தலைமேல் சுமத்தப்பட்டது (திரா. வீழ் 17) என்கிறார்.
வடவர் எதிர்ப்பிற்குத் திராவிடம் நல்ல தீர்வு என்று முதலில் சொல்லிவிட்டு, நான்கு பக்கங்கள் தாண்டி, திராவிடம் என்னும் தமிழர் விரோத கொள்கையாலே தமிழர் வீழ்ந்தனர் என்கிறார். இந்தக் குழப்பங்களுக்கு, முரண்பாட்டிற்கு என்ன காரணம், ஆரியத்திற்கு ஆதரவாய் எழுத வேண்டும் என்ற ஆர்ப்பரிப்பில் (அறிவிழந்து அல்ல) அயோக்கியத்தனமாய் எழுதுகிறார் என்பதுதான்.
வடவர் என்கின்ற போதெல்லாம் குணா குஜராத்தியார், மார்வாடி என்று மட்டுமே கொண்டு, ஆரியர்களை விட்டு விடுகிறார். விட்டுவிட்டால்கூட மன்னிக்கலாம், அவர்களைத் தமிழரோடு சேர்த்துத் தமிழராக்குகிறார்.
வடவர் எதிர்ப்பு என்பதில் உண்மையான அக்கறை எவருக்கு இருப்பினும் அவர்கள் ஆரியர்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தங்கி தமிழ் பேசுவதால் ஆரியர்களைத் தமிழர்கள் என்று ஏற்க வேண்டுமாம். ஆனால், 600 ஆண்டுகளாகத் தமிழகத்திலே வாழ்ந்து தமிழ் பேசும் ஆதித் தமிழர், கன்னடத் தமிழர்களைத் தமிழ்நாட்டை விட்டுத் துரத்த வேண்டுமாம்.
இப்போது புரிகிறதா, நூல் எழுதும் முன் குணாவிற்குப் பையும் மையும் நிரப்பியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் என்பது!
பொருளாதார அடிப்படையில் வடவர் எதிர்ப்பு என்றாலும் பண்பாட்டு அடிப்படையில் வடவர் எதிர்ப்பு என்றாலும் அது ஆரியத்திற்கு எதிரானதாகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த எதிர்ப்புகளுக்கு திராவிடம் என்ற ஓர்மையில் ஒன்று சேர பெரியார் எடுத்த முயற்சி அறிவுப்பூர்வமானது. அதற்கு போதிய சூழல் இல்லாமல், மொழிவழி மாநிலம் அமைந்தபின் தமிழ்நாடு, தமிழர் என்ற நிலையில் ஓர்மையை உண்டாக்க பெரியார் எடுத்த முயற்சியும் சரியானது என்பதில் எவரும் மறுப்பு உரைக்க முடியாது மடையர்களைத் தவிர அல்லது மனுநீதி பார்ப்பனர்களின் அடிவருடிகளைத் தவிர.
Comments
Post a Comment