கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில்
குழப்பல் பேர்வழி குணா!

மார்வாடிகளிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டே பெரியார் மார்வாடிகளை எதிர்க்கவில்லை. மாறாக, பாதுகாத்தார் என்று குற்றஞ்சாட்டிய குணாவை அதற்கென்ன ஆதாரம் என்று கேட்டபோது, குமரிமைந்தன் என்பவர், தமிழ்த் தேசியம் என்னும் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார் என்று குறிப்பிடுகிறார். அந்த குமரி மைந்தனே குணாவைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:

(29.08.2008இல் குணாவிற்கு குமரிமைந்தன் இணையத்தில் எழுதிய நீண்ட கடிதத்திலிருந்து சில பகுதிகள்)

நாகர்கோயில்
 29.08.2008 குமரிமைந்தன்,
தமிழ்க்குடில், தெற்குச் சூரங்குடி (அஞ்சல்)
குமரி மாவட்டம்.
 ....................................................
....................................................
தமிழ் அணுவியம் என்ற தலைப்பில் எழுதியிருந்த தங்கள் நூலின் தலைப்பை, வள்ளுவத்தின் வீழ்ச்சி என்று மாற்றியதன் பின்னணியில் என்ன முரண்பாடுகள் செயற்படுகின்றனவோ அவையே கர்நாடகத் தமிழர்களின் இன்றைய வீறுகெட்ட மந்த நிலைக்குக் காரணமாகவும் வெளிப்பாடாகவும் எனக்குத் தோன்றுகின்றன. கர்நாடகத் தமிழர்களின் இடையில் உள்ள உறவு நிலைகளை அல்லது உறவு சீர்கேடுகளைத் தமிழகத்துத் தமிழ்ப்பேசும் மக்களிடையில் விதைப்பதாக உங்கள் அணுகல் உள்ளது. கர்நாடகத்தில் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் பிற மொழியாளர்களுக்கும் உள்ள முரண்பாடுகளைத் தமிழக மண்ணில், குறிப்பாக 1956 நவம்பர் 1ஆம் நாளுக்கு முன்பிருந்த (வடஇந்திய பனியாக்கள் நீங்கலாக) தமிழ் தவிர்த்த வீட்டுமொழி பேசும் மக்களுக்கும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் இடையில் உருவாக்கித் தமிழர்களுக்குக் கேடு செய்வதாக உள்ளது.

குணா, ஊகங்களை உண்மை என்று சாதிப்பவர். அறைகுறை தகவல்களைத் தொடர்புபடுத்தி கருத்துச் சொல்பவர். எதிலும் ஆழமான அறிவோ, ஆய்வோ இவருக்கு இல்லை. இவரை ஆய்வாளர்கள் ஏற்பது ஓர் அறியாமையே!

இன்றைய வானிலையைக் கண்டுபிடித்தவர்கள் என்று பறையரில் ஒரு பிரிவான வள்ளுவர் ஜாதியினரைக் குறிப்பிடுகிறீர்கள். அந்த வள்ளுவரில் எத்தனை பிரிவினர் உள்ளனர்? ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தொழில் அல்லது பிற அடையாளங்கள் உள்ளனவா? அவர்களில் எந்தப் பிரிவினருக்கு வானியல் கண்டுபிடிப்புகள் உரியவை என்பன போன்றவற்றிற்கு விடை தேடியிருக்கிறீர்களா என்றெல்லாம் கேட்க விரும்புகிறேன்.

வானியல் உன்னிப்புக்கு (கூர்ந்தாய்வுக்கு) அல்லது நோட்டமிடுவதற்கு மக்களில் பல்வேறு தொழில் செய்வோருக்குத் தேவையிருக்கிறது.

ஊர்ப்புறத்து மக்கள் நெல் அவிக்க வேண்டுமானால்கூட வானத்தையும் பிற அடையாளங்களையும் வைத்து மழை வருமா வராதா என்று அறிவார்கள். இதுபோல் குமுகத்தில் (சமுதாயத்தில்) மக்களில் ஏறக்குறைய அனைத்துப் பிரிவினரும் தத்தம் வாழ்நிலைத் தேவைகளுக்காகத் தத்தமக்குரிய வானியல் உள்ளடக்கிய பல்வேறு அடையாளங்களைக் குறியாக வைத்திருந்தனர். உழவன், குயவன், செங்கல் அறுப்போன்,

இடையன் என்று எத்தனையோ பேர் வானத்தைப் பார்த்து வயிறு வளர்க்க வேண்டியவர்கள் நம் குமுகத்தில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ளனர். இடையர்கள் ஆடு மாடுகளை மேய விட்டு விட்டு ஓய்வு வேளையில் என்னென்னவோ செய்ய முடியும். திருமூலரைப் போல அரிய சிந்தனைகளை உருவாக்க முடியும். நீங்கள் குறிப்பிடும் வள்ளுவருக்கு என்ன வாய்ப்பு இருந்தது. இனி கடலோடி மீனவர்களுக்கு வருவோம்.

கடலிலிருந்து பார்க்க கரையும் மரங்களும், கட்டடங்களும் மலைகளும் மறைந்துவிடும் தொலைவில் சென்று நொடியிலிருந்து பகலில் கதிரவனும் இரவில் வான் பொருட்களும் இன்றி அவர்களால் எவ்வாறு திசையை அறிய முடியும்? அதனால்தான் உலகில் பல பகுதிகளிலும் உள்ள மக்களும் கடற்கரை கண்ணிலிருந்து மறையாத தொலைவுக்குள்ளேயே கடற்செலவு (பயணம்) மேற்கொண்டிருந்தனர். தமிழர்களின் முன்னோர்கள் வான்பொருட்கள் மூலம் திசையறிந்து இரவு வேளைகளில் நடுக்கடலில் கலம் செலுத்தினர். ஆனால், நாள் முழுவதும் மேக மூட்டத்துடனிருக்கும் கால மழையின்போது எப்படித் திசையறிய முடியும்?

இதற்கும் ஒரு முடிவு வந்தது. காந்தத்தின் தன்மையறிந்து காந்த ஊசியைக் கண்டுபிடித்தனர்.

இந்த நடவடிக்கைகளில் உங்கள் வள்ளுவர்களின் பங்கு யாது? இப்படிப் பல்வேறு மக்கள் குழுவினரிடையிலும், பொது மக்களிடையிலும் பரந்து கிடந்த உண்மைகளை ஒருவரோ பலரோ தொகுத்திருக்கக் கூடும். அவர்கள் யார்? அவர்களுக்கு வள்ளுவர்களோடு ஏதாவது உறவு உண்டா? என்றாவது உங்களால் காட்ட முடியுமா?
இந்தக் குமுக வரலாற்றிலிருந்து உங்கள் எழுத்து திசை திரும்புகிறது. ஒவ்வொரு நாள் மீனுக்கும் தலைவர்கள் இன்னின்னாரென்று ஏதோ ஒரு நூலில் உள்ளவற்றைப் படித்து எழுதியுள்ளீர்கள்.  

 இவ்வாறு அரிய கருப் பொருட்களை நம்மைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு ஜாதிப் பெருமை பேசி அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்...

நம் கணியர்கள் பயன்படுத்தும் ஓரை வட்டம் ஆகிய அந்தப் பட்டியல் நமக்கு என்றும் பெருமை சேர்க்கும்    சிவவாக்கியரின் அருஞ்செயலாகும். இவ்வாறு பட்டியலிடும் உத்தியை உலகுக்கு வழங்கியவர்களே நாமாகலாம். இதைச் செய்தவர் அல்லது செய்யாதவர்கள் வள்ளுவர்கள் என்றாவது நம்மால் நிலைநாட்ட முடியுமா
  
நானறிந்த வரையில் வள்ளுவர்கள் என்ற ஜாதியார் தமக்கே உரிய ஓர் ஒப்பற்ற முறையில் ஜாதகம் கணித்துப் பலன் சொல்பவர்கள் என்று தெரியும்.

நிற்க. நான் சொல்ல வருவது என்னவென்றால் வள்ளுவர்கள் வானியல் நுட்பங்களைத் தாமாக அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுச் சூழலை இனங்காணாமல், இன்று பஞ்சாங்கங்களில் கிடைக்கும் வானியல் தரவுகளை அடிப்படையாக வைத்து ஜாதகம் பார்ப்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள்தாம் அனைத்து வானியல் கண்டுபிடிப்புக்கும் மூலவர்கள் என்பது சரக்கு (லாரி) ஓட்டுநர் அனைவரும் ஒன்று சேர்ந்து தாங்கள்தாம் என்ஜினைக் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாடினால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கிறது. ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவத்தின் வீழ்ச்சி நூலைப் படித்ததிலிருந்து, இது வள்ளுவத்தின் வீழ்ச்சியில்லை குணாவின் வீழ்ச்சி என்று நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. அதுகூடப் பெரிதில்லை. தமிழகம் இந்தப் பனியா அரசின் பின்னணியோடு சுரண்டப்படுவதை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் ஒற்றுமையை உருவாக்க அடித்தளமிட்டுக் கொண்டிருந்த குணா திடீரென திசை மாறி தமிழக மக்களிடையே மொழியடிப்படையில் பகைமை வேர் கொள்ளும் வகையில் எழுதத் தொடங்கியது எனக்குப் பேரிடியாக இருந்தது.

இப்பொழுது தமிழ் பேசும் மக்களிடையில்கூட சிவணியத்திற்கு எதிராகவும் கருத்துச் சொல்லத் தொடங்கியுள்ளது, தன் செயலின் தன்மையையும் அவற்றின் விளைவுகளையும் புரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ள முடியாத ஒரு மனநிலைக்கு நீங்கள் வந்து விட்டதையே காட்டுகிறது........    

 படையெடுப்பாளர்களின் காலைப் பற்றிக் கொண்டு, தமிழகத்தில் நாட்டுணர்வுடன் பகைவர்களை எதிர்த்து நின்ற மண்ணின் மைந்தர்களை ஒடுக்கிய, இன்றும் ஒடுக்கி வரும் ஜாதி வெறி பிடித்த, தமிழ் ஜாதியினர் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பதும் அனைவருக்கும் தெரிகிறது.

தங்களை வேண்டிக் கொள்கிறேன், தமிழகத்தில் உணர்வும், ஈகை நோக்கும் உள்ள இளைஞர் மட்டுமல்ல, மூத்தவர்களையும் கொண்ட கூட்டம் ஒன்று உங்கள் வழிகாட்டலில் தங்கள் சிந்தனைகளைத் திருப்பிக் கொண்டு நிற்கிறது. அவர்களுக்குத் தவறான வழியைக் காட்ட வேண்டாம். தமிழக மக்களின் பொருளியல் ஒடுக்கு முறையிலிருந்து விடுபட வேண்டிய சரியான பாதையை அவர்களுக்குக் காட்டுங்கள். புற முரண்பாடுகளுக்கு எதிராக நடத்த வேண்டிய கற்பனைக்கெட்டாத கடும் போரில் உள்ள முரண்பாடுகள் உருகி மக்கள் ஒன்றாகக் கலந்து விடுவார்கள் என்று வரலாறு நெடுகிலும் நாம் காணும் உண்மையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

நன்றி.                                                                                                             


    அன்புடன்,   
 குமரிமைந்தன்


மேற்கண்ட கடிதத்தில் குமரிமைந்தன் சுட்டிக் காட்டும் முதன்மைக் கருத்துகள் :

1. கர்நாடகத்தில் வாழும் வேறு மொழி பேசும் தமிழர்களுக்கும், தமிழ்மொழிப் பேசும் தமிழர்களுக்கும் உள்ள மோதலை, தமிழகத்தில் வாழும் தமிழ்ப் பேசும் தமிழர்களுக்கும், பிற மொழி பேசும் தமிழர்களுக்கும் இடையே குணா உருவாக்குகிறார்.

2.. பறையரில் ஒரு பிரிவினரான வள்ளுவர்கள்தான் வானியலைக் கண்டுபிடித்தனர் என்ற குணாவின் கருத்திற்கு ஆதாரமில்லை. வள்ளுவர்கள் ஜோதிடம் (ஜாதகம்) பார்ப்பவர்களே தவிர வானிலை அறிந்தவர்கள், ஆய்ந்தவர்கள் அல்லர். லாரி ஓட்டுகிறவர்தான் லாரி எஞ்சினைக் கண்டுபிடித்தார் என்று கூறுவது போன்ற அபத்தம் குணா கூறும் கருத்து.

3.வானியல் சிந்தனைகள் உழவர், குயவர், மீனவர் போன்ற பல்வேறு மக்கள் தங்கள் அனுபவத்தால் அறிந்த உண்மைகளின் தொகுப்பு. அது ஒரு தனிமனிதரின் அல்லது ஒரு தனி ஜாதியினரின் சிந்தனையல்ல.

4.வள்ளுவத்தின் வீழ்ச்சி என்பது தவறு. குணாவின் வீழ்ச்சி என்பதே உண்மை.

 5.மார்வாடி, குஜராத்தி போன்ற பனியாக்களின் சுரண்டலை வெளிப்படுத்திதமிழக மக்களின் ஒற்றுமையை உருவாக்க அடித்தளமிட எழுதிய குணா, திடீரென திசை மாறி தமிழக மக்களிடையே மொழி அடிப்படையில்  பகைமை வேர் கொள்ளும் வகையில் எழுதத் தொடங்கியிருப்பது எனக்குப் பேரதிர்ச்சியாய் உள்ளது.

6.அயல் நாட்டினின்று பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்த்தி நம்மை ஆதிக்கம் செலுத்தும் ஆரியர்களின் காலைப் பற்றிக்                 கொண்டு, தமிழ் உணர்வாளர்களை (மண்ணின் மைந்தர்களை) ஒடுக்கும் உயர்ஜாதி வெறியர்கள் குணாவின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். குணா ஜாதியத்தை ஜாதி வெறியைத் தூண்டுகிறார்.

7.உணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் சிலர், முதியவர்கள் சிலர் என்று ஒரு கூட்டம் குணாவின் தவறான வழிகாட்டலில் தடம் மாறி நிற்கிறது. அவர்களுக்கு குணா தவறான வழிகாட்ட வேண்டாம். ஒடுக்குமுறையிலிருந்து விடுபட சரியான பாதையை அவர்களுக்குக் காட்ட வேண்டும்.

8.உண்மை எதிரிகளோடு நிகழும் போரில், தமிழரிடையே உள்ள குணா கூறும் முரண்பாடுகள் மறைய தமிழர் ஒற்றுமை தானே வரும். எனவே, குணாவின் உட்பகை ஊதிப் பெருக்கல் முயற்சி தோற்கும் இதுதான் வரலாறு சொல்லும் உண்மை. எனவே, குணாவின் ஆய்வும், அணுகுமுறையும், போக்கும் தவறானவை; அவர் தமிழரின் உணர்வுள்ள சிலரைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லுகிறார்; உண்மை எதிரியை மறைத்து, ஆரிய அடிவருடும் போக்கு கண்டிக்கத்தக்கது என்று தன் எதிர்ப்பை - கண்டனத்தை நேருக்கு நேரே குணாவிடமே தெரிவிக்கிறார் குமரிமைந்தன்.

எனவே, குணாவின் நட்பு வட்டாரமே அவரை ஏற்க வில்லை, அவர் கருத்தை ஏற்கவில்லை, அவர் செயல்பாடுகளை ஏற்கவில்லை. மாறாக, அவரது இன விரோதப் போக்கைக் கண்டு அதிர்ந்து, கண்டிக்கின்றது என்பது இவை வழி தெள்ளத் தெளிவாகிறது.

எனது கருத்துக்களை எழுதத் துவங்கும் முன் ஏன் இவற்றைக் குறிப்பிடுகிறேன் என்றால், என்னால் எடுத்து வைக்கப்படவிருக்கும் கருத்துக்கள், தரவுகள், குற்றச்சாட்டுகள், கண்டனங்கள் எவ்வளவு நேர்மையானவை, உண்மையானவை, சரியானவை, தமிழர் நலன் சார்ந்தவை என்பதை உய்த்துணர இவை துணை நிற்கும் என்பதாலும், குணாவின் ஆய்வுகள் எப்போதும் ஊகத்தின் அடிப்படையில் அமைந்தவை, ஆதாரமற்றவை, திரித்து மறைத்துக் கூறப்படுபவை, உள்நோக்கம் உடையவை, ஆரியத்திற்குத் துணை நிற்கக் கூடியவை, தமிழர்க்குக் கேடானவை என்பதை உணர்த்தவும் பயன்படும் என்பதாலுமாகும்.

ஆகவே, வரலாறு அறியாது, குணா போன்ற குறுக்குச்சால் பேர்வழிகள், குழப்பல் பேர்வழிகள், திரிபுவாதிகள், ஆரிய அடிமைகளிடம் ஏமாந்து பின் செல்லும் தமிழ் உணர்வாளர்கள் சரியான தடம் திரும்ப வேண்டும் என்பதே எங்களின் தமிழர் நலன் சார்ந்த வேட்கையும் வேண்டுகோளும் ஆகும் என்று கூறி, எனது கருத்துக்களை நடுநிலையோடு சீர்தூக்கித் தெளிய அழைக்கிறேன்.

பதம் பார்க்க ஒரு சோறு!

குணா என்னும் எழுத்தாளர், திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்ற நூல் எழுதியதன் முதன்மை நோக்கம் ஆரியப் பார்ப்பனர் களுக்குத் துணை நிற்க வேண்டும் என்பதே! அவர்கள் மீதான இன ஆதிக்க எதிர்ப்பு தமிழகத்தில் திராவிட இயக்கத்தால் ஆழப் பதியப் பெற்றிருப்பதால், அதை இளைய தலைமுறையிடம் மாற்றி, அவர்களைத் தமிழர்களோடு இணைத்து, தமிழர்களாக்கி, அவர்களின் ஆதிக்கத்தை, கொடுமையை மறைத்து, ஆரிய எதிர்ப்பாளரான பெரியாரை இழிவுபடுத்தி, திராவிட இயக்கத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்தி ஆரியத்திற்குச் சாதகமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் பணியை மிகத் தந்திரமாக, வஞ்சகமாக, மோசடியாக, பித்தலாட்டமாக, பொய்யாக, திரிபாக, திறமையாகச் செய்துள்ளார்.        தன்னை ஒரு தமிழ்ப் பற்றாளராய், தமிழர் பற்றாளராய் காட்டிக் கொண்டு, அந்தப் போர்வையில், அந்த நம்பக நிலையில் மேற்கண்ட தில்லுமுல்லுகளை அவர் திட்டமிட்டுச் செய்திருக்கிறார்.

இப்படிச் சொல்லும்போது தமிழர் பற்றாளர்களுக்கு, தமிழ்ப் பற்றாளர்களுக்கு வியப்பாகவும் இருக்கும்; நம்ப முடியாமலும் இருக்கும். எனவே, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஒரு எடுத்துக்காட்டை நூலுள் நீங்கள் நுழையும் முன்பே உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன்.

மார்வாடிகளிடம் பெரியார் கோடிக் கோடியாய் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாயும் பாதுகாப்பாகவும் இருந்தார் - இது குணாவின் குற்றச்சாட்டு. இது உண்மையா? மோசடிக் குற்றச்சாட்டா? பெரியாரை இழிவுபடுத்த செய்யப்பட்ட பித்தலாட்டப் பிரச்சாரமா? கண்டறிந்தோம் என்றால், குணாவின் குள்ளநரித்தனத்தையும் கண்டறியலாம். குணா கூறிய இக்குற்றச்சாட்டிற்கு ஆதாரம் என்ன? நாம் கேட்கும்போது குணா தரும் பதில், குமரிமைந்தன் எழுதிய தமிழ்த் தேசியம் என்கிற கட்டுரைதான் என்பது. இப்பதிலைக் கேட்டால் யாருக்கும் தோன்றும் கேள்வி, அந்த குமரிமைந்தனுக்கு எது ஆதாரம்? ஆம். இந்தக் கேள்வி ஆய்வாளர் . மார்க்ஸ் அவர்களுக்கும் எழவே, இதில் உண்மை காணும் முயற்சியில் இறங்கியுள்ளார். அது பற்றி . மார்க்ஸ் அவர்களே கூறும் செய்திகளைப் படித்தால், குணாவின் மோசடித்தனம் முழுமையும் வெளிப்படும்.மார்க்ஸ் கூறுகிறார்:

குணா வைக்கக் கூடிய ஆதாரங்களும் மிகப் பலவீனமானவை, கேலிக்குரியவை. எடுத்துக்காட்டாகப் பெரியார் மார்வாடிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு தமிழினத்திற்குத் துரோகமிழைத்தார் என்ற குற்றச்சாட்டை எடுத்துக் கொள்வோம். இதற்கு அடிக்குறிப்பு எல்லாம் போட்டுப் பிரமாதமாக ஒரு ஆதாரத்தை முன் வைக்கிறார். அதிர்ச்சியடையும் நாம் அவசர அவசரமாகப் புரட்டிப் பார்த்தால், மேலும் நமக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. குமரிமைந்தன் எழுதிய தமிழ்த் தேசியம் என்கிற கட்டுரைதான் குணாவின் அடிப்படை ஆதாரம். குமரிமைந்தன் இவரது நண்பர். இவருடன் ஒத்த கருத்துடையவர். நண்பர்களை ஆதாரமாகக் காட்டக்கூடாது என்பதில்லை. காட்டலாம். அந்த நண்பர்களின் ஆய்வு ஆதாரப் பூர்வமாக அய்யத்திற்கிடமின்றி நிறுவப்பட்டிருக்கும் பட்சத்தில் (ஆனால்) குமரிமைந்தனின் கட்டுரையைப் படித்துப் பார்த்தால்   அதில் எவ்வித ஆதாரமும் காட்டப்படாத முற்றிலும் நேர்மையற்ற அவதூறு என்பது புலப்பட்டு விடுகிறது.

பெரியார் தம் வாழ்நாளில் ஈட்டிய 125 கோடி பணம் நேர்மையாய் சேர்த்த பணமாக இருக்க முடியும் என குமரிமைந்தனால் நம்ப முடியவில்லையாம்எனவே, பெரியாருக்கும் மார்வாடிகளுக்கும் இடையில் ஒரு மறைமுகத் தொடர்பு இருந்திருக்குமோ என்ற அய்யம் எழுவதைத் தடுக்க முடியவில்லையாம். இறுதி மூச்சு வரை தமிழக மக்கள் மத்தியில் பார்ப்பனீயத்திற்கு எதிராகச் செயல்பட்டு ஓய்ந்த (மறைந்த) பெரியாரின்மீது அவரது பரம எதிரிகளான பார்ப்பனீய சக்திகளேகூட முன் வைக்காத ஒரு இழிந்த குற்றச்சாட்டை குணாவும், அவரது மைந்தனும் (குமரிமைந்தனும்) கூசாமல் முன்வைத்து விடுகின்றனர்.

தமிழ்ச் சூழலில் எதை வேண்டுமானாலும் கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விடலாம் என்கிற இறுமாப்பு தவிர வேறு என்ன நியாயம் இதற்குச் சொல்ல முடியும்? குணா விற்கு குமரிமைந்தன் ஆதாரம். குமரிமைந்தனுக்குப் பேயன். பேயனுக்கு குணா. எப்படி இருக்கிறது இவர்கள் அடிக்கும் லூட்டி? பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம் என என் அப்பாயி ஒரு பழமொழி சொல்வார். தட்டிக் கேட்க ஆளில்லை என்று நினைத்துக் கொண்ட இந்தத் தம்பிகள் செய்கிற சண்டப் பிரசண்டங்களை நாம் என்னென்பது!.........

இவர் குறிப்பிடும் ஆதாரங்கள் எவற்றையும் நவீனச் சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், அடித்தட்டு மக்கள் நோக்கில் சிந்திக்கின்ற அறிவுத் தொழிலாளிகள் எவரும் பொருட்படுத்த மாட்டார்கள். இவர் காலக் குறிப்புகள் கொடுப்பதில்லை. கொடுத்தால் மாட்டிக் கொள்வார்கள். குணாவின் ஆய்வு முறை அபத்தங்களை நிறையச் சொல்ல முடியும். திராவிட கயமை என எழுதக் கூசாத குணா (எழுதும் குணா) கண்முன் உண்மைகளைத் திரிக்கும் கயமைகளை மேலும் பல சந்தர்ப்பங்களில் மேற்கொள்கிறார்.

என்று நடுநிலையோடு, நன்றியுணர்வோடு, சமூக அக்கறையோடு, ஆய்வின் தூய்மையோடு, அஞ்சா உள்ளத்தோடு, உண்மைகளை உறுதியோடு, கண்டிப்போடு குணாவிற்குக் கண்டனங்களை எடுத்து வைக்கிறார் .மார்க்ஸ் அவர்கள். இப்படிப்பட்ட குள்ளநரி குணாதான் கூறுகிறார்,

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும், பெரியார் தமிழர் துரோகி என்றும். எனவே, அவர் நூலில் உண்மை, நேர்மை எப்படியிருக்க முடியும்! இப்படிப்பட்ட குணாக்களிடம் தமிழர்கள் மிக மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு குணாவின் குற்றச்சாட்டுகளுக்கு எனது ஆழமான பதிலை, ஆதாரங்களுடன் கூடிய மறுப்பைத் தமிழர்கள் முன், ஆய்வாளர்கள் முன் வைக்கின்றேன். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறும் குணாவின் குற்றச்சாட்டுகள் சரியா? தவறா? அறிவிற்குகந்ததா அல்லது அரைவேக்காட்டின் வெளிப்பாடா? தவற்றைச் சுட்டும் நோக்கா அல்லது வெறுப்பின் வெளிப்பாடா? தெளிவாக, நடுநிலை நின்று பார்ப்போம்.
முதலில், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற தலைப்பே தவறு. நிற்பவர்தான் விழ முடியும். ஆரியத்திற்கு அடிமையாகி, மானமிழந்து, உரிமையிழந்து தமிழர் வீழ்ந்து கிடந்த நிலையிலே திராவிடம் கையில் எடுக்கப்பட்டது. அப்படியிருக்க வீழ்ந்து கிடப்பவர் எப்படி திராவிடத்தால் விழ முடியும்? நூலின் அடித்தளமே தவறு. அதிலுள்ள செய்திகள் எப்படி என்று இனி ஆய்வோம்.

அன்புடன்,

மஞ்சை வசந்தன்



நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்  

ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!