உன் நடமாடும் கடவுளையே ஜெயிலில் வைத்த ஆட்சி திராவிட ஆட்சி

கடத்தல்களிலேயே நம்பர் ஒன் கடத்தல் கடவுள் கடத்தல்தான்!

பாஸ்போர்ட் வாங்காமல், விசா வாங்காமல் வெளிநாட்டிற்குத் தாராளமாகக் கடத்தப்படுகின்ற ஒரு பொருள் இருக்கிறது என்றால், கடத்தல்களிலேயே நம்பர் ஒன் கடத்தல் என்னவென்றால், நம்முடைய கடவுள்கள்தான். அதுவும் இந்துக் கடவுள்கள்தான். மற்ற கடவுள்களையெல்லாம் கடத்த முடியாது. ஏனென்றால், இஸ்லாமிய கடவுளுக்குத்தான் உருவம் இல்லை என்று சொல்லிவிட்டார்களே, அவர்களுடைய கடவுளை எப்படி கடத்த முடியும்? கிறித்துவர்கள் பரலோகத்தில் இருக்கும் பரமபிதா என்று சொல்லிவிட்டார்களே, அவர்களுடைய கடவுளை எப்படி கடத்த முடியும்? ஆகவே, அப்பேர்ப்பட்ட நிலையில், மிகப்பெரிய அளவிற்கு இந்துக் கடவுள்கள்தான் கடத்தப்படுகின்றன.

உன்  கடவுளையும்  காப்பாற்றுவது திராவிட ஆட்சிதான். அந்த திராவிட ஆட்சியில் இருக்கக்கூடிய ஒரு காவல்துறையின் பிரிவுதான் - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு. இதைக் கடவுள் என்கிறான், கடவுளை கடத்தும்பொழுது செய்தியாளர்கள் எப்படி செய்திகள் வெளியிடுகிறார்கள் என்றால், கடவுள் சிலை கடத்தல் என்று. ஏன் இப்படி செய்தி வெளியிடுகிறீர்கள். கடவுள் கடத்தல் என்று போடவேண்டியதுதானே!

நாய்க்கு இருக்கிற சக்தி, உன்னுடைய இந்துக் கடவுள்களுக்கு இல்லையே!

குழந்தையைக் கடத்தினால், அது வாயாலாவது சொல்லும். இந்த மரக்கட்டை என்ன சொல்லும், அந்த சிலை என்ன சொல்லும், நம்முடைய காவல்துறையினர் கண்டுபிடித்தால்தானே தெரியும். கடவுளைவிட கெட்டிக்காரத்தனமான போலீஸ் நாய் இருக்கிறதே - அது மோப்பம் பிடித்துதானே கண்டுபிடிக்கிறது. நாய்க்கு இருக்கிற சக்தி, உன்னுடைய இந்துக் கடவுள்களுக்கு இல்லையே!
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது - அவர் தந்த திராவிட உணர்வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியிட்டுள்ள செய்தியில்,
With Tamil Nadu’s politics in a churn, it would appear that the time has come for his views to get bigger play. Gurumurthy sees fatigue among Tamils with Dravidian parties. 
திராவிட இயக்கங்களைப் பார்த்து, தமிழர்கள் எல்லாம் களைப்படைந்து விட்டார்களாம். அதனால், இவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்., பா...) ஆசை வந்துவிட்டதாம்.

மனிதனுடைய பலவீனங்களில் மிக முக்கியமான பலவீனம்!

ஆசை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதில் ஒன்றும் தவறில்லை. அது மனித சுபாவம். மனிதனுடைய பலவீனங்களில் ஆசைப்படுவதுதானே மிக முக்கியமான பலவீனம்.
என்னுடைய சகோதரர் திருமாவளவனிடம் நான் உரிமை எடுத்துக்கொண்டு பேசலாம். அவரைப் பாராட்ட எவ்வளவு கடமைப்பட்டு இருக்கிறேனோ, அவரைக் கண்டிப்பதற்கும் கடமைப்பட்டிருக்கிறேன், அவசியப்பட்டால். இந்த நேரத்தில் அல்ல - இப்பொழுது ஏதோ வேடிக்கையாகவோ, இந்த மேடைக்காகவோ பேசுகின்ற பேச்சு அல்ல. தேர்தல் முடிந்து  முடிவு வெளிவந்தவுடன், முதல் ஆளாக நான்தான் அவரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். அப்போது சில விஷயங்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம்.

பாம்புகளையெல்லாம் அடையாளப்படுத்துவதுதான் நம்முடைய வேலை

ஏனென்றால், என்னுடைய சகோதரன் தொய்வடைந்து விடக்கூடாது. என்னுடைய சகோதரனுக்கு விரக்தி வந்துவிடக் கூடாது. அவரை எந்த இடத்தில் அமர வைக்கவேண்டுமோ, அந்த இடத்தில் அமர வைத்துப் பார்ப்பது வரை எங்களுக்கு வேலை உண்டு.

எங்களிடையே இருக்கின்ற ஒற்றுமையை யாரும் குலைத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். அவ்வப்பொழுது சில நேரங்களில் சில அரசியல் சிக்கல்கள் வரும். அரசியல் ஒரு பரமபத விளையாட்டு. திடீரென்று ஏணியில் கடகட வென்று ஏறிக்கொண்டே இருப்பார்கள். திடீரென்று பாம்பு கடித்துவிடும். இப்பொழுது பாம்புகள் எல்லாம் கடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பாம்புகளை யெல்லாம் அடையாளப்படுத்துவதுதான் நம்முடைய வேலை.

கடவுளே எங்களிடம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறான்

ஆகவே, அந்த அடிப்படையில் இதைப் பார்க்கின்ற பொழுது, திராவிடர் கழகத்திற்கு அடுத்தபடியாக பார்த்தீர்களேயானால், இளைஞர்கள் ஏராளம் உற்சாகத்தோடு இருக்கின்ற ஓர் இயக்கம் இருக்கிறது என்றால், அது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.

அந்த இளைஞர்களை வழிநடத்துவது அவ்வளவு சுலபமல்ல. அவரிடம் நான் சொல்லுவேன், வழி நடத்துங்கள், இராணுவ கட்டுப்பாட்டைக் கொண்டு வாருங்கள். அந்த சக்திகள் வீணாகக்கூடாது - பயன்படவேண்டும்.

ஆர்.எஸ்.எசினுடைய அரசியல் அமைப்பான பா... நின்றதே. அது தமிழ்நாட்டில் காலூன்ற முடியுமா? இன்றைக்குச் சொல்கிறோம், இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் நீங்கள் காலூன்ற முடியாது; இங்கே மதவாதத் திற்கு இடம் கிடையாது.
குருமூர்த்தியல்ல, அவருடைய பாட்டன் அல்ல - கடவுளே எங்களிடம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறான். உன்னுடைய கடவுளையே எங்களுடைய ஆட்சி காப்பாற்றிக் கொண்டு வந்தால்தானே கடவுள்.

உன் நடமாடும் கடவுளையே ஜெயிலில் வைத்த ஆட்சி திராவிட ஆட்சி

உன் நடமாடும் கடவுளையே ஜெயிலில் வைத்த ஆட்சி திராவிட ஆட்சி. உன்னுடைய காஞ்சிபுரத்து சாமியார், ஜெயிலுக்கும், பெயிலுக்கும் போக வைத்த ஆட்சி திராவிடர் ஆட்சி. அந்த ஆட்சியை நீ வீழ்த்தலாம் என்று நினைத்தால், அது நடக்காது. இதுவரையில் எங்கள் ஆளைவிட்டுத்தான், எங்கள் கண்ணைக் குத்தினீர்கள். இப்பொழுது நாங்கள் என்ன செய்தோம் தெரியுமா? உங்கள் ஆளைவிட்டே உங்களுடைய கண்களைக் குத்த வைத்தோம். அதுதான் திராவிடம்.

இங்கிலீஷ் பத்திரிகையைப் படிக்கின்றவனா ஓட்டுப் போடுகிறான்?

திராவிடம் கடவுளைப் பார்த்து பயப்படவில்லை. நடக்கும், நாளைக்கும் நடக்கும். அங்கொன்று, இங்கொன்று செய்திகளைச் சொல்லிவிட்டு, இங்கிலீஷ் பத்திரிகையைப் படிக்கின்றவனா ஓட்டுப் போடுகிறான்? இதை நான் கேட்கவில்லை, எம்.ஜி.ஆர். என்னிடம் சொல்லிய விஷயம் இது.
ஏங்க, இங்கிலீஷ் பத்திரிகையைப் படிக்கிறவனா ஓட்டுப் போடுகிறான் என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

இது உங்கள் பேட்டிக்குப் பயன்படும்; உங்கள் பேத்திக்குப்  இது பயன்படாது. அதுதான் மிக முக்கியம்.

தமிழ்நாடு அரசியல் உருகும்; அது அய்ஸ் கட்டியாம்!

குருமூர்த்தி மேலும் சொல்கிறார்,
“A polarised political situation has been guiding TN since 1972. Nobody else had any influence or decisive role. Now one pole, the AIADMK, has been affected. A large part of the AIADMK vote was anti-DMK vote. It got it from the Congress  which declined and AIADMK prospered. BJP will grow if there is a meltdown in TN politics, which will soon happen,” he says.

அதாவது, தமிழ்நாடு அரசியல் உருகும். அது அய்ஸ் கட்டி.
பெரியார்தான் சொல்வார், பார்ப்பானுக்கு முன்புத்தியே கிடையாது - பின்புத்திதான் என்று.
இவர்கள் எல்லாம் கட்சி நடத்துகிறார்கள் என்றால், மிஸ்டு காலிலா கட்சி நடத்துகிறார்கள்? சொந்தக் காலில் கட்சி நடத்துகிறார்கள். ஆனால், இன்னமும்  உங்களுக்கு  சொந்தக் கால்  இல்லையேமிஸ்டு காலை  நம்பிக் கொண்டிருக்கின்ற ஒரு கட்சி - நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம் - திடீரென்று வந்துவிடுவோம் - கனவுலகில் வந்துவிடுவோம் என்கிறார்கள்.

இவர்களுக்கு சொந்தக்காலும் கிடையாது - சரியான பந்தக்காலும் கிடையாது

மிஸ்டு கால் என்றால் எனக்கு என்னவென்று தெரிய வில்லை. ஏனென்றால், நாம் எல்லாம் சொந்தக்காலில் நிற்பவர்கள். ஆனால், இவர்களுக்கு சொந்தக்காலும் கிடையாது - சரியான பந்தக்காலும் கிடையாது. இவர் வெறும் மிஸ்டு காலில் நின்றுகொண்டு, ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்று சொல்கிறார்கள்.

அய்யப்பன் கோவிலிலேயே  திராவிடனிசம் வந்துவிட்டதே!

அதற்குக் காரணம் என்னவென்றால், இப்பொழுது நிறைய கூட்டம் போகிறது அய்யப்பன் கோவிலுக்கு. அய்யப்பன் கோவிலிலேயே திராவிடனிசம் வந்தாகிவிட்டதே! பெண்கள் போர்க்கொடி தூக்கிவிட்டார்களே! ஏன்யா, நாங்கள் 10 வயதுக்கு மேல், 50 வயதுக்கு கீழே உள்ள பெண்கள் போகக்கூடாதா? என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களே!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டார்களே,

அரசியல் சட்டத்தில் ஆண் பெண் என்ற பேதம் இருக்கக் கூடாதே!
கடந்த முறை ஆட்சியில் இருந்தவர் காங்கிரஸ்காரர். அவர் ஒரு கிறிஸ்தவர். இதில் கை வைத்தால், நம்முடைய வாக்கு வங்கி போய்விடுமோ? என்று நினைத்திருக்கலாம்.

எவர் கோபித்துக் கொண்டால் எங்களுக்கு என்ன?

அரசியல் கட்சிகளுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு எங்களுக்கு. அந்த வாய்ப்பு என்னவென்றால், நாங்கள் சுதந்திர மனிதர்கள். அரசியல் கட்சிக்காரர்கள் என்ன நினைப்பார்கள், இது சொன்னால் ஓட்டுப் போய்விடுமோ? அது சொன்னால் ஓட்டுப் போய்விடுமோ? இவர் கோபித்துக் கொள்வாரோ! அவர் கோபித்துக் கொள்வாரோ! என்பதெல்லாம் எங்களுக் குக் கிடையாது. எவர்  கோபித்துக் கொண்டால் எங்களுக்கு என்ன? பெரியார்தான் சொல்வார்,

முட்டாள் பயலுடைய கோபத்தைப்பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்? அறிவாளிகளுடைய கோபத்தைப் பற்றிக் கவலைப்படு. முட்டாளை அறிவாளியாக எப்பொழுது ஆக்குவது. அதைப்பற்றி சிந்திக்கவேண்டாமா? அந்தக் கவலை நமக்கு. ஆகவே, அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குருமூர்த்தி சொல்கிறார்,

அதிகக் கூட்டம் டாஸ்மாக்கில் இருக்கிறது

கூட்டம் அங்கே போகிறது, இங்கே போகிறது என்கிறார். கூட்டத்தை வைத்தா கணக்குப் போடுவது? அதைவிட அதிகக் கூட்டம் டாஸ்மாக்கில் இருக்கிறது. அங்கே வருகின்ற வருமானத்தைவிட, டாஸ்மாக்கில் அதிக வருமானம் வரு கிறது. அதனால், டாஸ்மாக் சரி என்று சொல்வாயா?

டாஸ்மாக் போதை பொழுது விடிந்தால் போகும்; இந்த போதைப் பொழுது விடிந்தாலும் போகாது இது இரண்டுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். டாஸ்மாக் போதை பொழுது விடிந்தால் போகும். இந்த போதை பொழுது விடிந்தாலும் போகாது அந்த அளவிற்குப் பக்தியாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம். பெரியார் தொண்டர்கள் இருக்கிறோம். இதுதான் போராட்டம். இந்தப் போராட்டம் இருக்கின்ற வரையில் எப்படி திராவிடம் தோற்றுப் போகும்?


திராவிடம் என்றால் என்ன? நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள், இன அடிப்படையில் எடுத்துக்கொண்டால் கூட, பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் ஓர் அற்புதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

நூல் : திராவிடத்தால் எழுந்தோம்!
ஆசிரியர் :  கி.வீரமணி  

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!