தனித் தமிழ்நாட்டைத் தடுத்தாரா பெரியார்?

 தனித் தமிழ்நாட்டைத் தடுத்தாரா பெரியார்?
(தமிழ்நாடு)
  
தமிழ்நாடு தனிநாடு ஆவதைத் தடுக்கவே பெரியார் திராவிடத்தைக் கையில் எடுத்தார்  என்பது குணா பெரியார் மீது சுமத்தும் இரண்டாவது குற்றச்சாட்டு.
பெரியாரின் 60 ஆண்டு கால அயராத உழைப்பால் விழிப்பும், மானமும், அறிவும், சூடும், சொரணையும், கல்வியும், வேலையும், வருவாயும், வாழ்வும், வசதியும் பெற்றுள்ளவர்கள் சிலர் இன்றைய சூழலில், நான்கு அறைக்குள் உட்கார்ந்து கொண்டு, ஏதோ புதியதைக் கண்டுபிடித்து விட்டோம் என்று பிறர் பாராட்ட வேண்டும் என்ற மலிவு ஆசையில், நுட்பமாக எதையும் ஆராயாது, மேம்புல்லை மேய்ந்து, அதுவும் அங்கொன்று இங்கொன்றுமாய் மேய்ந்து, தங்களை அதிமேதாவியாக எண்ணிக் கொண்டு, இன்றைய நிலையிலிருந்து கருத்துக்களைக் கூற முற்படுவது அறியாமை. அதுவும் ஆயுள் முழுவதும் இத்தமிழ்ச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவே, மூத்திரப் பையோடு மூலை முடுக்கெல்லாம், பழைய காரில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணித்து, பல்லாயிரக்கணக்கான மணி நேரம் பேசி தன்னலமற்ற, அப்பழுக்கற்ற, ஒப்பில்லா உயர் பணியாற்றிய ஓர் உலகத் தலைவரைக் கொச்சைப்படுத்த முயன்று, கொச்சையாக எழுதியும் இருப்பது அசல் அயோக்கியத்தனம் ஆகும்.
இப்படிப்பட்ட குணாக்கள்அறிவு நாணயம் இருப்பின், தங்கள் வாதத்தில் நியாயம் இருப்பின் ஒரே மேடையில் நாள் குறித்து வந்து விடட்டும், நாங்கள் சந்திக்கத் தயார். அதைவிட்டு, அச்சிட்டு எதையும், எவனும் விற்கலாம் என்ற உரிமையைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மாபெரும் தலைவரைத் தமிழன் தலைமுறை தலைமுறையாய் நன்றி பாராட்ட வேண்டிய தலைவரை ஆழ்ந்த ஆய்வு இன்றி அறைகுறையாய் அறிந்தவற்றை வைத்து, அனுமானம், ஊடகம், அய்யம் என்ற வகையில் கருத்துக்களை இவர் வைத்துள்ளதை வன்மையாகக் கண்டித்து விட்டு, இவரது இரண்டாவது குற்றச்சாட்டுக்கான பதிலை அளிக்க விரும்புகிறேன்.
திராவிட நாடு கோரிக்கை ஏன்?
ஆரியப் பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, மானமும் அறிவும், உரிமையும் உள்ள இனமாகத் திராவிட இனம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிடர் அமைப்புகள் ஏற்பட்டு மக்களிடையே விழிப்பூட்டியதோடு, உரிமைக்காகவும் போராடின என்பதை மேலே கண்டோம்.
இந்நிலையில் வடக்கில் ஜின்னா அவர்கள் மத அடிப்படையில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் பகுதிகளைப் பாகிஸ்தான் என்று பிரிக்க கோரிக்கை வைத்துப் போராடி, நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், அதே அடிப்படையில் திராவிட மக்களின் பகுதியான திராவிட நாட்டை (தமிழகம் + கேரளம் + ஆந்திரம் + கர்நாடகம் உள்ளடக்கிய பகுதி) தனிநாடாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினைப் பெரியார் முன்வைத்தார். அதற்கு ஜின்னாவின் உதவியையும் நாடினார்.
ஜின்னாவின் ஒத்துழைப்பு இன்மையாலும், திராவிடப் பகுதியில் இதற்கான எழுச்சி ஏற்படாததாலும் திராவிட நாடு கோரிக்கை வலுவிழந்தது. அதற்காக எழுச்சி தமிழகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமே இருந்தது. எனவே, திராவிடம் என்பது சென்னை மாகாணம் என்றே எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைத் தாய்மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக் கொண்ட நாடுகள் இன்று திராவிடம் என்று சொல்லப்படுவதை யாவரும் அறிந்ததே. அந்தத் திராவிடம் என்பது பெரிதும் சென்னை மாகாணமாகவே இருக்கிறதுடன், மற்றும் சிறிது சென்னை மாகாணத்தைத் தொட்ட சுற்றுப்புற நாடாகவும் இருக்கிறது. .வெ.ரா. சிந்தனைகள்  731
திராவிட நாடு பிரிவினை என்று நாம் என்ன சொல்கிறோம் என்றால், சென்னை மாகாணந்தான் இன்று திராவிட நாட்டு விஸ்தீரண அளவு  விஸ்தீரணத்தின் அளவு கூடுவதும் குறைவதும் நம் சவுகரியத்தைப் பொறுத்தது.
- (ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்பக்கம். 25)
திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றம் அடைவதற்கும் பாதுகாப்பதற்கும், திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், இந்திய மந்திரியின் நேர்ப்பார்வையின்கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
- .வெ.ரா. சிந்தனைகள்  பக்கம் 655.
மேற்கண்ட பெரியாரின் கருத்துக்கள் திராவிடம் என்பதும் திராவிட நாடு என்பதும் சென்னை மாகாணத்தைக் குறிப்பதாக 1940 வாக்கிலே வந்துவிட்டது. எனவே, திராவிட தேச கோரிக்கை தமிழ்த் தேசிய கோரிக்கை என்பதாக அப்போதே பரிமாணம் பெற்று விட்டது.
1955 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கியபோது, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, தமிழ்த் தேசிய போராட்டத்திற்கு வந்து விட்டார் பெரியார்.
பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே, நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலையில்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால், சீக்கிரம் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது.
காரணம்,
1.      கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில் அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றிய இழிவோ வெட்கமோ கிடையாது. மத, மூட நம்பிக்கையில் ஊறிவிட்டார்கள்.
2.      அவர்கள் இருவருக்கும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தாங்கள் அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை.
என்று தமிழ்த் தேசியத்திற்கு (தமிழ்நாடு பிரிவினைக்குப் போராடிய பெரியார், தமிழன் என்ற சொல்லைவிட்டு, திராவிடன் என்ற சொல்லைத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டுத் தமிழன் என்று சொல்லியாவது தமிழினத்தைப் பிரிக்கலாம் என்றால், அதுவும் நடவாதபடி பார்ப்பான் (ஆரியன்) நானும் தமிழன் என்று உள்ளே புகுந்துவிடுகிறான்.
- (ஆதாரம் : பெரியாரின் 12.10.1955 தேசிய அறிக்கை).
அது மட்டுமல்ல, பார்ப்பனர்களை எதிர்த்த அளவிற்குக் கன்னடர்களையும், மலையாளிகளையும் எதிர்த்தார்.
- (.வெ.ரா. சிந்தனைகள்  பக்கம் 692)
அது மட்டுமல்ல, பார்ப்பானுக்காகத் தமிழன் என்ற பெயரை விலக்கி திராவிடன் என்று பெயர் வைக்க வேண்டியுள்ளதே! என்று வேதனையும் பட்டுள்ளார்.
- (12.10.1955 தேதியிட்ட பெரியார் அறிக்கை)
1954இல் தன் பிறந்த நாள் அறிக்கையில், தோழர்களே, தமிழ்நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங் கொள்ளையடிப்பதோடு தமிழ்நாட்டைப் பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும் தலையெடுக்க வொட்டாமல் மட்டந்தட்டி வருகிறது. இந்தவொரு முக்கியமான காரியத்துக்காகவே, வடநாட்டான், அரசியலிலும் தமிழ்நாட்டைத் தனக்கு அடிமைப்படுத்தி தனது காலடியில் வைத்திருக்கிறான்... என்று கொதித்தெழுந்தார்.
1955இல் திராவிட நாடு கோரிக்கையும் அதற்கு இணையான தட்சண பிரதேசத் திட்டத்தையும் பெரியார் எதிர்த்தார் என்பதை குணா போன்ற குறுக்குச்சாலி பேர்வழிகள் குறிப்பில் கொள்ள வேண்டும். 1938 ஆகஸ்ட் 1ஆம் நாள் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழர் படை, தளபதி பட்டுக்கோட்டை அழகிரி, அய்.குமாரசாமிப்பிள்ளை, நகரதூதன் பத்திரிகையின் திருமலைச்சாமி ஆகியோர் தலைமையில் ஒரு படை இந்தியை எதிர்த்து திருச்சியிலிருந்து புறப்பட்டு 234 ஊர்கள் வழியாக 42 நாள்கள் நடந்து, 82 இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி, செப்டம்பர் 11ஆம் நாள் சென்னையை அடைந்தது.
அன்று மாலை (11.9.1938) சென்னை கடற்கரையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த மாநாட்டில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னிலையில், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார் பெரியார்.
1938இல் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய ஒரு தமிழர் தலைவரைப் பார்த்து, தரமிழந்து, அறியாமையின் உச்சத்தில் நின்று கொச்சைப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியத்தைக் கெடுக்கவே பெரியார் திராவிடத்தை எடுத்தார் என்று அபாண்டமாக, பொய்யாக, மோசடியாக ஒரு குற்றச்சாட்டை குணா கூறுகிறார் என்றால் அவர் ஒரு ஆரிய கைக்கூலியா? என்பதைத் தமிழர்கள் ஆராய்ந்து அறிய வேண்டும்.
அந்த மாநாட்டில் தந்தை பெரியார் முழங்கிய தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கமே தமிழ்த் தேசியத்திற்கான முதல் முழக்கம் என்பதை வரலாற்று அறிவுடைய அனைவரும் அறிவர், ஏற்பர். அதனால்தான் தந்தை பெரியார் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று நன்றியுள்ள அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.
அதுமட்டுமல்ல தமிழ்த் தேசியம் உருவாக, பெரியார் ஆற்றிய பணிகள் பல.
1.தனது ஏடுகளில் நாள்தோறும் எழுதினார்.
2.தமிழ்த் தேசியத்தில் ஆற்றலுள்ள ஆர்வம் உள்ள அறிஞர்களை விட்டு எழுதச் செய்தார்.
3.ஊர்தோறும் மேடைதோறும், நாள்தோறும் பேசினார்.
4.தன் தோழர்களை, தமிழ்த் தேசிய பற்றாளர்களைப் பேசச் செய்தார்.
5.கவிஞர்கள் மூலமாகத் தமிழ்த் தேசிய பாடல்களைப் பரவச் செய்தார்.
6.நடிகர்கள் மூலமாகத் தமிழ்த் தேசியம் குறித்து எழுதிய நாடகங்கள் மூலம் உணர்வு ஊட்டினார், வளர்த்தார்.
7.திரைப்படங்கள் மூலமாகவும் தமிழ்த் தேசிய உணர்வு பரவத் தூண்டினார், உதவினார், ஆதரித்தார்.
8.தமிழ்த் தேசியம் மலர, அதற்குத் தடையாக இருந்த ஜாதி, மதம், மூடநம்பிக்கை, ஆரியப் பார்ப்பனர் ஆதிக்கம் இவற்றை எதிர்த்து முடிந்த அளவு ஒழித்தார்.
9.தமிழரிடையே சமத்துவத்தை வளர்த்தார்.
10.தமிழரிடையே ஒற்றுமை வளர ஜாதி மறுப்பு (கலப்பு) மணங்களை நடத்தினார்.
11.    தமிழ்த் தேசியத்தின் அடிப்படையான தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். தமிழ் காலத்திற்கு ஏற்ப கருத்துக்களை உள்வாங்கி வளம்பெற வேண்டும். உலக மாற்றத்தின் தேவைக்கேற்ப ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் மாற்றமும், ஏற்றமும் பெற்று வளர வேண்டும் என்று பேசினார், அதற்கான செயல்களிலும் இறங்கினார்.
12.    தமிழ்த் தேசியத்திற்கான ஆதரவும் அதிகாரமும் பெற அதற்கேற்ற அரசியல் அணுகுமுறைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும், அரசியல் ஆதரவையும், அரசியல் பிரச்சாரங்களையும் செய்தார். செய்தித்தாள், தொலைக்காட்சி, இணையதளம் இன்று உள்ளதுபோல ஊடக வசதிகள் இல்லாத காலத்திலே, ஒரு தகர வண்டியை உருட்டி ஊர் ஊராய்ச் சென்று இவ்வளவும் சாதித்தார்அச்சுக் கோர்த்து அச்சுக் கோர்த்து இரவுபகலாய் எழுதியும் அச்சிட்டும், அதை ஊர் ஊராய் அனுப்பியும் இவற்றைச் செய்தார். இன்றைக்கு கணிப் பொறியை எளிமையாகப் பயன்படுத்தி, பீராய்ந்து பெறும் அரைகுறைச் செய்திகளை வைத்துக்கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முனைப்பில் ஒரு இமயத்தை இடித்துத் தள்ள முயலும் முட்டாள்கள்  கயவர்கள் இவற்றை நன்கு சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியத்தின் ஓர் அடையாளமாகவே பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்று திராவிட இயக்கத்தால் கொண்டாடப்பட்டது. வடமொழியில் இடப்பட்ட பெயர்களையெல்லாம் செந்தமிழில் சூட்ட இந்த இயக்கம் பெரும்பாடுபட்டது. ஸ்ரீ என்பது திரு என்று மாற்றப்பட்டது.
நமஸ்காரம் வணக்கமாக்கப்பட்டது.
விவாக சுபமுகூர்த்தம் திருமணம் என்று அழைக்கப்பட்டது.
தெலுங்கு கீர்த்தனையும், கர்னாடக சங்கீதமும் காதுகளில் ஒலித்த நிலைமாற்றி, செந்தமிழ்ப் பாடல்களைத் தேனாகக் காதில் பாய்ச்சிய இயக்கம் திராவிடர் இயக்கம்.
தமிழ்த் தேசியத்தை தமிழ்ப் பண்பாடோடு, தமிழ் மரபுக்கு ஏற்ப, தன்மானத்தோடு, மூடத்தனம் இல்லா பகுத்தறிவு நோக்கில், ஜாதி மதங்களுக்கு இடமின்றி நாத்திக ஆத்திக சார்பற்று தன்னாட்சி உரிமையோடு அமைத்துக் கொள்ள பெரியார் முயன்றார்.
தமிழ்நாடு தமிழருக்கே என்பதில் நாத்திகமோ, மதமொழிப்போ, வகுப்பு எதிர்ப்போ இல்லை. இருக்கிறது என்று யாராவது சொல்வார்களானால் அவர்கள் அறியாதவராய் இருக்க வேண்டும் அல்லது விஷமப் பிரச்சாரம் செய்பவர்களாக இருக்க வேண்டும்.
- (ஆதாரம் : தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு பக். 13)
திராவிட இயக்கம் தோன்றாமல் இருந்திருந்தால் தமிழ் நாட்டிலும் இந்திய தேசிய உணர்வே வேர் ஊன்றியிருக்கும். ஆனால், அது ஆழப் பதியாமல், தமிழ்த் தேசியம் உருவாவதற் கான தளம், களம், அதற்கான கருத்துவளம் விழிப்புணர்வு இவற்றைத் தந்தது திராவிட இயக்கம், அதிலும் குறிப்பாகத் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் திராவிட நாடு கோரிக்கை குறித்து, 1938 டிசம்பர் இறுதியில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 14ஆவது மாநாட்டின் தலைமையுரையில் மிகத் தெளிவாக, தர்க்கரீதியாகக் கூறுகிறார். (பெரியார் சிறையிலிருந்து விடுத்த அறிக்கை மாநாட்டில் படிக்கப்பட்டது)
இந்தியாவை ஒரு நேஷன் என்பது எவ்வாறு பொருந்தும்? மொழிகளை அடிப்படையாக வைத்துப் பிரித்தால் இந்தியாவை அநேக நேஷன்களாகப் பிரிக்கலாம். அல்லது அங்கமச்ச அடையாளத்தின்மீது (உடற்கூறு அடிப்படையில்) பாகுபாடு செய்தாலும் ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள் என பல (நேஷன்) பிரிவுகளாகும். பழக்க வழக்க சமுதாயக் கோட்பாடுகளைக் கொண்டு பிரித்தாலும் அதுவும் பார்ப்பன பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் எனப் பல ஜாதி வகுப்புகளாகப் பிரிக்கப்படும். மற்றும் எந்த வகையில் பார்த்தாலும், இந்திய நேஷன் என்பதற்கு இந்தியா முழுமையும் சேர்ந்த நிலப்பரப்பு என்று எவ்வாறு பொருள்படும்?
பர்மா பர்மியருக்கே என்று தீவிர கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றது நாம் அறிந்ததே! இலங்கைகாரர்களும் அப்படியே...!
ஆந்திர தேசியவாதிகள் சென்னை மாகாணத்தை விட்டு பிரிந்து தனக்கென தனி மாகாணம் ஒன்றை ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தை அவர்களே மேற்கொள்ள விரும்புகிறார்கள்.
அதேபோல், ஆரியர்களிடமிருந்தும், மங்கோலியர்களிடமிருந்தும் திராவிடர்கள் பிரிந்து போக வேண்டுமென்று நினைப்பது தேசீயத்திற்கு விரோதமாகுமா? என்று பெரியார் கேட்கிறார்.
எனவே, மேற்கண்ட கோரிக்கையில் பெரியார் ஆந்திரா பிரிந்து போவதையும் ஏற்று கருத்துக் கூறுவதால், பெரியார் இங்கு திராவிடர் என்றது தமிழரை மட்டுமே என்பது உறுதியாகிறது! எனவே திராவிட நாடு என்பது தமிழ்நாடுதான் என்பது தெளிவாகிறது.
மேலும், அய்ரோப்பாவில் 3 கோடி, 4 கோடி மக்கள் தொகை கொண்ட பெல்ஜியம், ஹாலண்டு, சுவிட்சர்லாந்து, டென்மார்க் போல, சென்னை மாகாணமோ, தமிழ்நாடோ ஏன் தனி நாடாக இருக்கக்கூடாது. அது எங்ஙனம் சாத்தியமில்லாமல் போகும்? என்று கேட்டார் பெரியார்.
குஜராத்தி சுரண்டலும், சிந்தி மார்வாடி சுரண்டலும் தமிழ்நாட்டைப் பாப்பராக்குகிறது (ஒன்று மில்லாததாக்குகிறது). இதற்கு எதிராய் நாம் துடிதுடித்தால் தேசிய விரோதமா?
திராவிட மக்கள் (தமிழ் மக்கள்) மீது ஆரியமதம் சுமத்தப்பட்டு, தமிழர் உழைப்பின் பலனை எல்லாம் தமிழரல்லா சிறு கூட்டத்தார் (ஆரியப் பார்ப்பனர்கள்) கொள்ளைபோல் சுரண்டுவதை, உறிஞ்சுவதை, இது நீதியா, முறையா, அடுக்குமா? என்று கேட்கப் புகுந்தால் அது தேச விரோதமா? தேசிய வேஷம் போட்டு நாம் அழுவதா? என்று கொதித்துக் கேட்கிறார்.
இங்கு ஆரியப் பார்ப்பனர்களின் சுரண்டலை, ஆதிக்கத்தை எதிர்ப்பது போலவே, குஜராத்தி, மார்வாடி சுரண்டலையும் பெரியார் கடுமையாய் எதிர்த்திருக்கிறார் என்பது விளங்குகிறது. எனவே, பெரியார் குஜராத்தி மார்வாடிகளை எதிர்க்காமல், கண்டுங்காணாமல் ஆதரவாய் இருந்தார் என்று குணாக்கள் பொய்யாய் குற்றஞ்சாட்டுவது எவ்வளவு மோசடியானது என்பதைத் தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்!
அது மட்டுமல்ல; பெரியார் தமிழ்நாடு தனியே பெற்றாலும், சென்னை மாகாணத்தைத் தனியே பெற்றாலும் தனக்கு உடன்பாடே என்பதையும் பெரியார் தெளிவாக விளக்குகிறார். திராவிடர் கழகம் என்று பெயரிடப்பட்டது ஏன்?
சேலத்தில் 1944 ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் நீதிக் கட்சி எனப்பட்ட தென்னிந்திய நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றினார் பெரியார். ஆனால், கி..பெ. விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் தமிழர் கழகம் என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித்தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். தமிழகத்தில் விடாப்பிடியாகத் திராவிட மாயையை ஊன்றினார்.
என்று குற்றம் சாட்டுகிறார் குணா.
இதற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லாமல் பெரியாரே பதில் சொல்லியுள்ளார்.
திராவிடர் என்பதற்கு மாறாக, தமிழர்கள் என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள்தாம் என்று கூறி அதில் சேர்ந்துகொள்கிறார்கள். நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; தமிழே பேசுகிறோம்; தமிழ்நாட்டிலே இருக்கிறோம். அப்படியிருக்க எப்படி எங்களைத் தமிழர் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்? என்று கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர் என்பது தமிழ்ப் (திராவிட) பண்புள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்கக் கூடுமானால், இன்று அது மொழிப் பெயராக மாறிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் ஆரியப் பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்று உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிறார்கள். அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த அந்தச் சேர்க்கையைப் பயன்படுத்திவிடுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக்கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லா கன்னடர்களும், மலையாளிகளும், ஆந்திராக்காரர்களும் அப்படி தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ள ஒப்பமாட்டார்கள். எனவேதான் (அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து) திராவிடச் சமூகத்தின் உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது அது நன்மை பயக்கும் என்றார் பெரியார்.
ஆரியப் பார்ப்பனர்கள் உள்புகுவதைத் தடுக்கவும், உண்மையான தமிழர் இனத்தின் இரத்த உறவுகள் இன அடிப்படையில் ஒன்று சேரவும், அதன் மூலம் ஒரு விடுதலை பெற்ற திராவிடத் தேசத்தை (தமிழர் தேசத்தை) உருவாக்க முடியும் என்ற உயரிய நோக்கத்தில் தான் பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார்.
காலச்சூழல் மாறிய பிற்காலத்தில் பெரியார் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தமிழ்நாடு என்ற கோரிக்கையை வைத்தார். இது அவரது உள்ளத் தூய்மையின் அடையாளம். எனவே, பெரியாருக்குத் துரோக எண்ணம் ஏதும் இல்லை. எல்லாம் தமிழர் நலன் கருதியே செய்தார்.
பெரியார் மட்டுமல்ல, சோமசுந்தர பாரதியார் அவர்களும் இதே கருத்தையே கொண்டிருந்தார்.
1944 ஜனவரி 30ஆம் நாள் திருச்சியில் நடந்த தமிழ் வார விழாவிற்குத் தலைமை தாங்கி பேசியபோது, தமிழர் சமுதாய உணர்ச்சி என்னும் பொருளில் கீழ்க்கண்டவாறு பேசினார்:
தமிழர் என்றால் தமிழ்ப் பேசுபவர் என்று பொருள் கொள்ளல் தகுதியன்று. மலேயா நாட்டில் தமிழர் சென்று மலாய் மொழி பேசினால் எப்படி மலேயர் ஆக முடியாதோ, அதேபோல் மொழி பேசுவதால் மட்டும் தமிழர் ஆகிவிட முடியாது. பண்டைய இலக்கியங்களைக் கொண்டு பார்த்தால், ஆரியர்களைத் தமிழர்கள் என்பதை நாம் ஒப்ப இயலவில்லை. தமிழர் நாகரிகம், கலை வேறு; ஆரியர்களது வேறு. ஜாதி என்பது தமிழர் இலக்கியங்களில் கண்டுபிடிக்க முடியாது. ஆரிய தர்ம சாஸ்திரங்களிலோ நால்வருண பேதங்கள் நிலைநாட்டப்பட்டு இருக்கும். ஆரியர்களை நாம் (தமிழர்கள்) வேண்டுமென்றே புறக்கணித்தது கிடையாது. வேற்றுமையுணர்ச்சி காட்டியதும் கிடையாது. ஆனால், ஆரியப் பார்ப்பனர்களோ நம்மை மிகவும் இழிவாகவே கருதுகிறார்கள்.
தமிழனுடைய நாகரிகம், கலை, சமுதாயம், மார்க்கம் இவைகளுக்கு விரோதமாக எந்த அகில இந்திய கூட்டுறவு முறையையும் தமிழர்கள் விரும்ப மாட்டார்கள். தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோட்பாடு வெறும் கூப்பாடு அல்ல. தமிழர்களின் ஒருமனப்பட்ட உணர்ச்சியின் வேகமாகும். ஆகவே, அகில இந்திய அரசியல் முறையில் சுயமரியாதையோடு தமிழ்நாடு பங்கு கொள்வதில் தடையில்லை. ஆகையால் எனது ஆரியப் பார்ப்பனத் தோழர்களை இப்பொழுதே எச்சரிக்கிறேன். எங்களிடம் வீண் வம்புக்கு வந்து எங்களின் கொள்கையை மிகவும் தீவிரமாக்கிக் கொள்ளும்படி செய்ய வேண்டாமென்று. என் தமிழர்கட்கு எனது வேண்டுகோள், பண்டிதர்கள் வெறும் பழைய புராணக் கதைகளை நம்பி காலத்தைப் போக்கக்கூடாது. நல்ல நூற்களைக் கற்று, பிறருக்கும் போதித்தல் வேண்டும். தமிழர்கட்கு ஒரு மார்க்கம், கலை வேண்டும். அதற்காகத் தமிழர் சமுதாயம் பாடுபட வேண்டும்.
- (குடிஅரசு  12.02.1944)

உண்மையும், நோக்கும் இப்படியிருக்க இதில் பெரியாரைத் துரோகியைப்போல சித்தரித்து, தமிழர் வீழ்ந்ததே இதனால்தான் என்பதாக ஒரு மாயக் கருத்தை உருவாக்கித் தமிழர்களைத் திராவிடத்திற்கும் பெரியாருக்கும் எதிராகத் திசை திருப்ப ஆரியத்தோடு இணைந்து சூழ்ச்சியும், துரோகமும் செய்கிறார் குணா. இதைத் தமிழர்கள் விழிப்புடன் உணர வேண்டும்.

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 

- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!