அண்ணா கண்ட தியாகராயர்! part - 1


அன்புள்ள தலைவர் அவர்களே, தோழர்களே,

சர்.பி.தியாகராயர் திருநாளை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்த தோழர்களுக்கு, முதன் முதலிலே என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இவ்வளவு இடைஞ்சலான இடத்திலே, இலட்சக்கணக்கான மக்கள், மறைந்த நம் மாவீரர் தியாகராயர் நினைவு நாளைக் கொண்டாடக் கூடியிருப்பதைக் கண்டு பூரிப்படைகிறேன். இந்த இடைஞ்சலான இடத்திலே நீங்கள் உட்கார்ந்து கொண்டு சர்.பி.தியாகராயரின் நினைவு நாளைக் கொண்டாடுவதற்குக் காரணம் என்ன? அவர் பெயரைக் கேட்டவுடனேயே உங்கள் உள்ளத்தின்கண்ணே பெருமித உணர்ச்சி ஊடுருவிப் பாய்கிறது, வீழ்ச்சியுற்ற திராவிடத்திற்கு எழுச்சியூட்டி அதற்குப் புது உணர்ச்சி தந்த முதல் வீரர் அவர் என்ற காரணத்தால்!

நம்முடைய கட்சிச்சார்பாக (தி.மு..) நடைபெறும் கூட்டத்திற்கு எல்லாம் சர்க்கார் (அரசு) ஒற்றர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்கிறோம். நம்மிடையே உள்ள சிறந்த உணர்ச்சியையும் சர்க்காரின் ஒற்றர் அறிந்து செல்லவேண்டும். அந்த நாளிலே சர்.பி.தியாகராயர் ஏற்படுத்திய அறிவுப் புரட்சி இப்பொழுது எங்கும் பரவியிருக்கிறது. மக்களிடையே காணும் இந்த அறிவுப் புரட்சி எதிர்காலத்திலே சிறந்த பலனைத் தரும்.

அவர் விரும்பியிருந்தால்...

தியாகராயர் பெரிய செல்வந்தர்; பணம் படைத்தவர். தியாகராயர் விரும்பினால், வியாபாரத்தின் மூலம் பல இலட்சம் ஈட்டியிருக்கலாம். ஆனால், அவர் அதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

தியாகராயர் விரும்பியிருந்தால், சென்னையிலேயே பெரும்பாலான இடங்களை அவர் சொந்தமாக வாங்கியிருக்க இயலும். பணத்தின் மதிப்பு இன்றிருந்ததைவிட  அன்று பன்மடங்கு உயர்ந்திருந்தது. இன்றைய இலட்சம் அன்றைய ஆயிரம் ரூபாய்க்குச் சமமானது. அத்தகைய காலத்திலே பல இலட்சம் படைத்த அவர் நினைத்திருந்தால், இராமநாத் கோயங்காவைப் (இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டின் உரிமையாளர்) போலச் சென்னை மாநகரையே தன் முதலீட்டுப் பணமாக ஆக்கியிருக்கலாம். அவர் கூப்பிட்ட நேரத்திலே பணியாற்ற பல ஆட்கள் அவரிடம் இருந்திருக்கக்கூடும். எத்தனையோ சீமான்கள், சிற்றரசர்கள், வியாபார வேந்தர்கள், ஜமீன்தார்கள் உண்டுகளித்து உல்லாச வாழ்வு வாழ்ந்து, களியாட்டத்தில் காலத்தைக் கடத்திக்கொண்டு இன்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பதைப்போல தியாகராயரும் இருந்திருக்க முடியும்.

மேலும் தியாகராயர் விரும்பியிருந்தால், பழைய கோயில்களைப் புதுப்பிக்கும் வேலையிலோ, பளிங்கு மண்டபம் கட்டும் வேலையிலோ ஈடுபட்டிருக்கலாம். அவர் விரும்பியிருந்தால் தெற்கிலுள்ள பழநியைப்போல வடக்கே ஒரு பழநியை உண்டாக்கியிருக்கலாம். இவைகளை ஏற்படுத்துவதற்கு உரிய பணம் அவரிடம் ஏராளமாக இருந்தது. அவர் இவற்றையெல்லாம் பெரிதாக மதிக்கவில்லை. தன்னுடைய சமூகத் தொண்டைத்தான் ஒரு பொருட்டாக மதித்தார். திராவிட சமூகத்திலே ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். அரசியலிலே நம்மவர்கள் முதலிடம் பெற வேண்டும் என்று அவர் விரும்பினார். தியாகராயர் போக போக்கியத்தை விட்டுவிட்டுத் தாமாகவே கல்லும் முள்ளும் காட்டாறும் கருங்குழியும் நிரம்பிய பாதைவழி செல்லத் தொடங்கினார்.

வாடிய பயிருக்கு வந்த மழைத்துளி!

சர்.தியாகராயர் தோன்றி, திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தலைமை பூண்டு, அவர்களின் தன்னுணர்விற்கு வழிகோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்றப் பாடுபட்டுச் சமுதாயத்துறை, பொருளாதாரத்துறை, அரசியல்துறை ஆகியவற்றில் நல் இடம் பெற்று உழைத்தார். நம்முடைய அடிப்படைக் கட்டடம் பலமாக இருக்க வேண்டும் என்று அவர் அல்லும் பகலும் பாடுபட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் இன்று வளர்ச்சி பெற்றிருப்பதற்கு மூலகாரணம் ஆனவர் யார்? நம் தியாகராயர். திராவிட இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்த பூமான் அவர்.

நாமிருக்கும் நாடு நமது என்று அறியவேண்டும். இங்கு நாம் அடிமைகளாக வாழ்வது அடாது என்பதை அவர் உணர்ந்தார். நம் பண்டைப் பெருமைகளையும் அவரால் உணர முடிந்தது. வாடிய பயிருக்கு வந்த மழைத்துளிபோல, அலுத்த உடல் மீது இனிய தென்றல்போல, கொல்லும் காசத்தைக் கருவறுக்கும் மருந்துபோல, அன்று தேய்ந்து வந்த திராவிடருக்கு ஆறுதல் அளித்து அவர்களின் புத்துயிர்களுக்குக் காரணமாகக் காட்சி தந்தார் - நம் வீரர் தியாகராயர். அன்று தியாகராயர் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டும் என்று பாடுபட்டதன் பலனை இன்று காண்கிறோம்.
சமுதாயப் புரட்சிக் கொடி!

இன்று நம் கழகத்துக்கு இலட்சக்கணக்கான அங்கத்தினர்கள், ஆயிரத்துக்குமேல் தொண்டர்கள், நூற்றுக்கணக்கான கிளைக்கழகங்கள், பத்துக்குமேல் பத்திரிகைகள், கணக்கற்ற புத்தகங்கள், இருக்கின்றன. ஆகவே, பிராமணர் வலக்கையில் நெருப்பு இருப்பதாக யாரும் நம்புவதில்லை. ஆனால், அன்று பிராமணர்களின் வலக் கையிலே நெருப்பு இருந்ததாக சொல்லப்பட்டது. இன்றோ எல்லோர் உள்ளத்திலும் தான் அத்தகைய நெருப்பைக் காண்கிறோம். தியாகராயர் அன்று பிரிட்டிசாரை எதிர்க்கவில்லை! அவர் சென்ற பாதை-பார்ப்பனரல்லாதார் சேவை-அன்று ஏன் பயங்கரபாதையாக இருந்தது எனில், அது அந்தக் காலத்தில் செப்பனிடப்படாத, புதிய, பலர் சென்றறியாத பாதை. சாத்திரிகளின் சீற்றம் எனும் குழிகளும், ஆச்சாரிகளின் ஆத்திரம் எனும் அந்தகார வளைவுகளும், மற்றும் எதிர்ப்பு, ஏளனம், சாபம், சூழ்ச்சி எனும் பல்வேறு தொல்லைகளும் சர்.பி.தியாகராயர் சென்ற பாதையில் அடிக்கடி உண்டுஅது அவருக்குத் தெரியும். நன்கு தெரிந்துதான் அவர் அந்தப் பாதைவழிச் சென்று, சமுதாயப் புரட்சிக் கொடியைப் பறக்கவிட்டார்.

திராவிட வீரனே, விழி, எழு, நட!

தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். மதத்திலே அவன் தரகு வேண்டாம். கல்வியிலே அவன் போதனை வேண்டாம். சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே! அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே! திராவிட வீரனே, விழி, எழு, நட! உன் நாட்டை உனதாக்கு என்றார் தியாகராயர்.   அன்று  முதல் தியாகராயரின் உருவம் தென்னாட்டில் புரட்சியின் அறிகுறியாகிவிட்டது. இன்றோ நம்மிடம் பெரும்படையிருக்கிறது. பார்ப்பனியத்தை எதிர்க்கும் பெரியபடை நம்மிடம் இருக்கிறது.

அவர் தூவிய விதை

அவர் களத்திலே தூவிய விதை நன்றாக விளைந்திருக்கிறது. அவர் அன்று பறக்கவிட்ட சமுதாயப் புரட்சிக்கொடியின் கீழ் நின்றுதான், நாம் இன்று பணியாற்றிவருகிறோம். அன்று அவர் துணைக்கு டாக்டர் டி.எம்.நாயர் கிடைத்தார். டாக்டர் நாயருடன் பார்ப்பனியத்தை எதிர்க்க ஒரு நல்ல போர் முகாமை அன்று அவர் ஏற்படுத்திக் கொண்டார். பார்ப்பனியம் என்றால் என்ன என்பதை அவர் மக்களுக்கு நன்கு எடுத்துரைத்தார். இதை நாம் இன்று நன்கறிகிறோம். பல ஆண்டுகளாக நாம் பார்ப்பனியத்தை எதிர்த்துப் பல வெற்றிகளைக் கண்டிருக்கிறோம். இங்கு நாம் வெற்றிக் களிப்போடு கூடியிருக்கிறோம். ஆனால், நம் வெற்றிகளின் எதிரொலியாக எதிர்முகாமில் பரபரப்புக் காணப்படுகிறது. சி.என். அண்ணாதுரை எந்த செக்ஷனிலே (பிரிவில்) அகப்படுவான்? 153-இலே அகப்படுவானா? எந்தச் சட்டப் பிரிவிலே அவனைப் பிடிக்கலாம்? என்றுதான் சர்க்கார் இருக்கிறது. உண்மையிலே இது நீதிப்படியல்ல. சர்க்காருக்கு ஏற்பட்டிருக்கும் பீதியாலேதான். சர்க்கார் நம்மைக் கண்டு மருளுவது பயத்தின் விளைவாகும். அன்று பார்ப்பனர் ஆதிக்கம் கண்டு பார்ப்பனரல்லாதார் அஞ்சினர். இன்று அஞ்சுபவர் பார்ப்பனர்கள்தான். ஆனால், உண்மையிலே அவர்கள் அஞ்சத் தேவையில்லை.

பார்ப்பனரை அல்ல - பார்ப்பனியத்தை!

பார்ப்பன நண்பர்களே, பயப்படாதீர்கள்! நாங்கள் உங்களுக்கு எதிரிகளல்லர். நாங்கள் எதிர்த்து வருவது பார்ப்பனியத்தைத்தான். உங்களிடையே புகுந்த பார்ப்பனியத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். எதிர்த்துக்கொண்டே நாங்கள் வளருகிறோம். இன்னும் வளர்ந்து கொண்டே செல்கிறோம். எங்கள் வளர்ச்சியைத் தடுக்காதே! தடை செய்யாதே! எங்கெங்கு எங்கள் வளர்ச்சிக்குத் தடைசெய்கிறாயோ, அங்கெல்லாம் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். உம்மிடையே பல்லாண்டுகளாக நீக்க முடியாமலிருக்கும் பார்ப்பனியத்தை ஒழித்து நம்மிடையே புதிய உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால், பார்ப்பனியத்தை வளர்க்க விரும்பாதே! தியாகராயர் அன்று உண்டாக்கிய அறிவுப் புரட்சி இன்று எங்களிடையே எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்பதைக் கண்டு களி. பள்ளிக்கூடங்களிலே இடம் கிடைக்கவில்லையே என்ற பயம் உன்னிடம் குடி கொண்டிருக்கிறது. இதற்காக அல்லாடியையும்  (அல்லாடி கிருஷ்ணசாமி) வைதீக (டைகர்) வரதாச்சாரியையும் அழைத்துக்கொண்டு கோர்ட்டுக்குப் போகிறாய்! சட்டப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறாய்! என்ன என்னவோ செய்கிறாய்! சட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால் கூட என்ன ஆகிவிடும்? அதனால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? நாட்டு மக்களிடையே உள்ள அதிருப்தியை அது பெருக்குமே அன்றிக் குறைக்காது. உங்களுக்குப் பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால், நேர்மையாக நீங்கள் செய்யவேண்டியது என்ன? இன்னும் அதிகப் பள்ளிகள், கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேளுங்கள். அதை விட்டுவிட்டுத் தகுதி-திறமை என்று கூறாதீர்கள்; கெடுவழி செல்லாதீர்கள். இவை பிரச்சினையைத் தீர்க்கும் வழிகளல்ல, பெருக்கும் வழிகள்.

முதலில் அறிவுப் புரட்சி

திராவிடர் என்ற உணர்ச்சியும் திராவிட நாடு என்ற எண்ணமும் குறைந்து, எங்கு நோக்கினும் திராவிடர் துன்ப வாழ்வில் சிக்கிச் சிதைந்துவந்த அந்தக் காலத்தில்தான் தியாகராயர் தோன்றினார். வேதனை மிகுந்த காட்சியைக் கண்டு உள்ளம் வெதும்பினார். சீறிப்போரிட்டுச் சீர்கேட்டை ஒழிக்கச் செயலிலே இறங்கினார். அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு ஒரு குறையுமில்லை. மற்ற பிரச்சாரங்களைவிட அறிவுப் பிரச்சாரம்தான் முக்கியமானது என்று தியாகராயர் எண்ணினார். அன்றே அவர் அறப்போரைத் தொடங்கினார். அந்த அறப்போர் இன்று வெற்றிபெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அரசியல் வாழ்விலே பலர் இடம் பெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம்அன்று தியாகராயர் மத விடயங்களிலே புகவில்லை! புரோகிதத்தை எதிர்க்கவில்லை. ஏனென்றால், முதலில் அவர், திராவிடர்களுக்குத் தன்னுணர்வையும் தன்மானத்தையும் உண்டாக்கவே விரும்பினார். மக்களுக்கு முதன் முதலிலே தன்னுணர்வை ஏற்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பிய பின்தான் அவர் மத விடயத்திலே புக விரும்பினார். முதன் முதலில் நம் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்குணர்ந்தே அவர் முதலிலே அப்படி ஈடுபட்டார்.

அன்றும் இன்றும்

அந்த நாளிலே டாக்டர்களிலே சிறந்தவர் யார் என்றால் - டாக்டர் அரங்காச்சாரிதான் (சென்னை அரசாங்க பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர்) சிறந்தவர் என்று கூறப்பட்டது. இப்பொழுது டாக்டர்களிலே சிறந்தவர் யார்? டாக்டர் குருசாமி. இதைக்கேட்டு நாம் பூரிப்படைகிறோம். அந்த நாளிலே ஆங்கிலத்தில் பேசுவதிலே யார் சிறந்தவர் என்றால், ரைட் ஆனரபிள்-சீனிவாச சாஸ்திரியார் என்று மயிலையும், திருவல்லிக்கேணியும் சொல்லிற்று. இன்று நம் திராவிடப் பெருங்குடி மக்களிலே சிறந்த பேச்சாளர் யார்? என்றால், சர்..இராமசாமி முதலியார் என்றே யாவரும் கூறுவர். சிறந்த பொருளாதார வல்லுநர் யார்? என்று அன்று கேட்டால் யார் யாரையோ கூறுவர். இன்று நம் சர்.ஆர். கே.சண்முகம் தான் அங்ஙனம் யாவராலும் போற்றப்படுபவர். அல்லாமலும் தமிழிலே சிறந்த பாடகர் யார்? அன்று எஸ்.ஜி.கிட்டப்பா (பிரபல தமிழ்ப் பாடகி கே.பி.சுந்தராம்பாளின் கணவர்) என்று கூறப்பட்டது; இப்பொழுது எம்.கே.தியாகராச பாகவதர். நகைச்சுவையிலே மன்னன் யார்? அன்று ஒரு சாமண்ணா. இன்று நம்முடைய என்.எஸ்.கிருஷ்ணன். இந்து பத்திரிகையிலே எழுதப்படும் தலையங்கங்களை விட, சிறந்த தலையங்கங்களை ஆங்கிலத்தில் தீட்ட நம்மிடையே டாக்டர் .கிருட்ணசாமி இருக்கிறார்.

இன்று நம் சமுதாயம் மாறி எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டது. இன்று நம் திராவிடப் பெருங்குடி இவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு யார் காரணம்? நம்முடைய தியாகராயர்தான். பேச்சுத் துறையிலே, பாடல் துறையிலே, வைத்தியத் துறையிலே, பொருளாதாரத் துறையிலே மட்டுமல்ல; எந்தத் துறையிலும் திராவிடர்கள் அவர்களுடைய வல்லமையைக் காட்டமுடியும். தியாகராயருக்குப் பின் நிலைமைகள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. இன்னும் மாறும். கடலடியில் சென்று முத்து எடுப்பவர்கள் என்றும் திராவிட இனத்தவரே. வேண்டுமானல் நாம் எடுத்த முத்து ஓர் ஆரிய மங்கையின் காதுகளை அணி செய்யலாம். ஆனாலும் கடலிருக்கிறது. கடலுள்ள அளவும் முத்து இருக்கும். முத்து உள்ள அளவும் நாமும் இருப்போம். ஆகவே, நமக்கு எதிர் காலம் எப்போதும் உண்டு. ஆனால் ஆரியம், அறிவு வளர்ச்சியடைந்தபின் ஆரியமாக வாழாது; ஆரியமாக மதிப்புப் பெறாது. சாக்ரடீஸ், வால்டேர், லெனின் ஆகிய மூவரது புரட்சியின் கூட்டுறவு நம் இயக்கம்.

விசித்திர வைதீகர்களை வீதி சிரிக்கவைத்தார் சாக்ரடீசு. சாக்ரடீசுக்குப் பின்னர்தான் வால்ட்டேர் வைதீகத்தின் மடமையை வாட்டினார்; மூடநம்பிக்கையை முரியடித்தார். உலகமுணராத வைதீகர் உலகம் தட்டை என்று நம்பினர். ஆனால், அது உருண்டை என்று அவர்கள் உணர வைத்தார் அறிவியல் மேதை கலிலியோ; அதற்காக கலிலியோ அன்று தாக்கப்பட்டார். இவ்வளவு புரட்சிக்குப்பின் உரூசோ கிளம்பி மக்கள் மன்றத்துக்கு மதிப்புத் தரவேண்டுமென்றார். வேத புத்தகத்தை, விபசார விடுதிக்குப் பணம் தரும் போகிகளைக் கண்டித்தனர் விக்ளிஃவ், சிவிங்கிளி, கால்வின் முதலியோர். பின்னர் முதலாளிகளின் கொடுமைக்காகப் போராடினார் காரல்மார்க்சு. காரல்மார்க்சுக்குப்பின் முதலாளிகளிடம் போராட லெனின் தோன்றினார்.

கூர்முனைப் பேனா கொண்டு அரண்மனைகளை, அஞ்ஞானிகளின் இருப்பிடங்களை, பழைமையின் கோட்டைகளைத் தாக்கிய வீரன் வால்டேர் வெற்றி பெற்ற பின்னர்தான், புரட்சித்தேவன் லெனின் போராடி வெற்றிபெற, முடிந்தது. சமுதாயத்துறையிலே வால்டேர் ஒரு புரட்சியை உண்டாக்கிய பின்னர்தான், மக்கள் லெனினை வரவேற்றார்கள்.

முதலிலே சாக்ரடீசு. பின்னர் வால்டேர், அதற்குப்பின் லெனின். இந்த மூன்று சம்பவங்களும் வேறுவேறு காலத்தில் நடைபெற்றன. இவ்வளவும் சமுதாயப் புரட்சிக்காகவே நடைபெற்றன. ஆனால், இவர்களிடையே வேறு சீர்திருத்தமில்லாமலில்லை. சாக்ரடீசை அடுத்து பிளேட்டோ; வால்டேரை அடுத்து உரூஸோ; மார்க்ஸை அடுத்து லெனின். இங்ஙனம் மூடநம்பிக்கை எதிர்ப்பும், அறிவுப் புரட்சியும் சமூகப் புரட்சியும் எங்கும் விரவியுள்ளன. ஆனால், நம் நாட்டில் இம் மூன்றையுமே நம் இயக்கம் ஒருங்கே நடத்த வேண்டியிருக் கிறது. இதனால்தான் நம் புரட்சி மூன்று புரட்சிகளின் ஒரு கூட்டாயிருக்கிறது.

முதன் முதலிலே மக்களுக்கு அறிவுப் புரட்சியை உண்டாக்கிய பின்னர்தான் மதம், கலை, கலாசாரம் ஆகியவற்றிலே அவர்களைத் திருத்தமுடியும். தியாகராயர்தான் முதலிலே நம்முடைய அறிவுக் கண்களைத் திறந்தார். அதைக் கொண்டுதான் நாம் இன்று மதத்தை எதிர்க்கிறோம். வேறுபல மூட பழக்கவழக்கங்களை முறியடித்தும் நாட்டின் நலிவைப் போக்கப் பாடுபடுகிறோம். இன்று நம் இயக்கம்,

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டிச்
            சர்க்கரையும் கற்கண்டின் பொடியு மிகக் கலந்தே,
தனித்தநறுந் தேன்பெய்து பசுப் பாலும் தெங்கின்,
            தனிப்பாலும் சேர்த்தொரு தீம்பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்யளைந்தே யிளம்சூட்டில் இறக்கி
            எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடும்
இயக்கமாக மாறியிருக்கிறது

இப்படி மாறியிருக்கும் நம்முடைய இயக்கத்துக்கு சர்க்காரால் 144, 124, 153 என்னும் குற்றச் சட்ட விதிகள் போடப்படுகின்றன.

- தொடர்ச்சியைப் படிக்க


அண்ணா கண்ட தியாகராயர்!, - part - 2





Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!