திராவிடத்தால் எழுந்தோம்!


தந்தை பெரியார் அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் - இவ்வாண்டு தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும், வெளி மாநிலத்திலும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

காரணம் - தந்தை பெரியார் அவர்களின் தத்துவம், சித்தாந்தம் மிகவும் தேவைப்படும் காலகட்டம் இது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்துத்துவா என்ற மனுதர்மக் கொடியை ஏற்றலாம் என்று மனப்பால் குடித்து அலைகிறார்கள் அல்லவா - தடித்தனமாகப் பேசுகிறார்கள் அல்லவாகல்வியைக் காவிமயமாக்கத் திட்டம் தீட்டுகிறார்கள் அல்லவா - அதன் காரணமாக இந்த இந்துத்துவா நோய்க்குக் கைகண்ட மருந்து, கண்கண்ட மருந்து பெரியாரியமே என்பது இயல்பாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், பார்ப்பனர் அல்லாதார் மத்தியில், சிறுபான்மை மக்கள் மத்தியிலே பற்றிக் கொண்டு விட்டது.

இல்லையென்றால், தந்தை பெரியார் நினைவு நாளில் தெலங் கானாவில் மாணவர்கள் மனுதர்ம சாத்திர நூலை எரிப்பார்களா?

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பெரியார் - அம்பேத்கர் வட்டம் தொடங்கி, தந்தை பெரியார் அவர்களின் இராமாயண பாத்திரங்கள் என்ற நூல் இந்தியில் சச்சு இராமாயண் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளதே - அந்த நூலை மாணவர்கள் மத்தியில் பரப்புவோம் என்று திட்டமிடும் அளவுக்குத் தந்தை பெரியார் இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்தையே சுனாமி போல எழுந்து கலக்கிக் கொண்டுள்ளார்.

இந்துத்துவாவும், அதனை அடித்தளமாகக் கொண்ட பி.ஜே.பி. யின் அதிகார அரசியலும் பெரியாரியலால் வீழப் போகிறது.

தமிழ்நாட்டில் அது வேரூன்றாமைக்குக் காரணம் திராவிடர் இயக்கத் தத்துவம்தான் - சித்தாந்தம்தான். பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாளில் (24.12.2016) சிறப்புரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன் அவர்கள் திராவிடம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை விரிவாக விவேகமாகவே எடுத்துரைத்தார்.

அது வெறும் கட்சியல்ல - அது ஒரு தத்துவம். சமூகநீதிக்கான தத்துவம், ஜாதி ஒழிப்புத் தத்துவம், பெண்ணடிமை ஒழிப்புத் தத்துவம், மூடநம்பிக்கை ஒழிப்புத் தத்துவம், விழிப்புணர்வுத் தத்துவம் என்பதை வெகு நேர்த்தியாக எடுத்துரைத்தார்.

அதன் தொடர்ச்சியாக அதனை வழிமொழிகின்ற தன்மையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறைந்த நேரத்தில் பேசினாலும், அந்தப் பேச்சு பெரியார் குரலில் கேட்பதுபோல் இருந்தது - அமைந்தது.

இந்தக் கொள்கைக்கு எதிரான தத்துவத்தைக் கொண்ட பி.ஜே.பி. எப்படி தமிழ்நாட்டில் வேரூன்றும் என்பதுதான் அறிவுப்பூர்வமான வினாவாகும்.

சோ ராமசாமி அவர்கள் மறைந்த நிலையில், துக்ளக் ஏட்டுக்கு ஆசிரியராக வந்துள்ள திருவாளர் குருமூர்த்தி இந்துக் கடவுள்கள் திராவிடயிசத்தை ஒழித்துவிடும் - பி.ஜே.பி. ஆட்சி பீடம் ஏறும் என்று எழுதுகிறார்.

இந்துக் கடவுள் சக்திதான் சந்தி சிரிக்கிறதே - அது குறித்து நகைச்சுவையாக ஒரு தட்டுத் தட்டி விட்டார் தமிழர் தலைவர் - அந்தத் தட்டுக்கே அது சரிந்து விழுந்து விடும்!

கடவுள்களைக் கண்டுபிடிப்பதற்கு காவல் துறையில் தனிப் பிரிவே இருக்கவேண்டிய அளவுக்குத்தானே உங்கள் இந்துக் கடவுளுக்குச் சக்தி இருக்கிறது - கடவுள் திருடப்படும்பொழுது, திருடனைக் கண்டுபிடிக்க போலீஸ் துறையில் உள்ள நாயல்லவா அழைக்கப்பட வேண்டியுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னபொழுது - அந்த நகைச் சுவையை வெகுவாகவே மக்கள் கைதட்டி ரசித்தனர்.

இந்து மதக் கடவுள் சக்தியால் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றால், அது எப்பொழுதோ நடந்திருக்கவேண்டுமே - தமிழ்நாட்டில் இந்துக் கோவில்களுக்கா பஞ்சம்? இந்துக் கடவுள்களுக்கா பஞ்சம்? இவ்வளவுக்கும் கொலைகாரன், கொள்ளைக்காரன் கைகளில் இருக்கும் ஆயுதங்கள் எல்லாம் அல்லவா இந்துக் கடவுள்களின் கைகளில் இருக்கின்றன. என்ன பயன்? அதையும் சேர்த்து அல்லவா கடத்திக் கொண்டு போய் வெளிநாட்டில் விலைக்கு விற்கிறார்கள்.

இந்த நாட்டில் கடவுளும், ஆஸ்திகமும், திராவிட இயக்கத்தின் எழுச்சிக்குமுன் கரைந்து முகவரியில்லாமல் போனது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
தேர்தல் களத்தை மய்யப்படுத்தியேகூட எடுத்துக் கூறலாம். 1971   ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை அவ்வளவு சுலபமாக குருமூர்த்திகள் மறந்துவிட முடியாதே!

தந்தை பெரியார் ஊர்வலத்தில் சென்றபோது  ஜனசங்கக் காலிகள் பெரியார்மீது செருப்பை வீசவில்லையா? அந்த செருப்பை லாவகமாகக் கருஞ்சட்டைத் தோழர்கள் பிடித்து, ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ராமன் படத்துக்குச் செருப்பாபிஷேகம் நடத்தினரே!

அதை முதலாக வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்த கூட்டம் தானே இதே குருமூர்த்தி கும்பல். துக்ளக் சிறப்பு இதழ் வெளியிட்டு மக்களிடத்தில் கொண்டு சென்றதே - தேர்தல் முடிவு என்ன? 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.. - ராமன் செருப்படிபட்ட பிறகு 183 இடங்களில் அல்லவா வெற்றி பெற்றது.

உடம்பெல்லாம் மூளை என்று பார்ப்பனர்கள் தம்பட்டம் அடிப்பார்களே அந்த ராஜாஜி கல்கியில் (4.4.1971) என்ன எழுதினார். இந்த நாடு ஆஸ்திகர் வாழத் தகுதியிழந்து விட்டது என்று கூறி, தோல்வியை ஒப்புக் கொண்டாரே -

இந்த நிலையில், இந்துக் கடவுள்கள் திராவிடயிசத்தை வீழ்த்தும் என்று எழுதுவது வரலாறு கொடுத்த அடியின்மூலம் பாடம் கற்றுக்கொள்ளாதவர்களே!

பக்தர்கள் கூட்டம் பெருகிவிட்டதால் அய்யப்பன் கோவிலுக்குச் செல்லுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாம். அதனைக் கூறி திராவிடயிசம் வீழும் என்கிறார் குருமூர்த்தி.

அதே அய்யப்பன் கோவில் மகரஜோதி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் நூறு பேர் செத்தார்களே - இரண்டு நாள்களுக்கு முன்புகூட கூட்ட நெரிசலில் பலர் படுகாயம் அடைந்தார்களே - இதுதான் கடவுள் சக்தியின் யோக்கியதையா?

கோவிலில் கூட்டம் கூடுகிறது என்று குருமூர்த்தி அய்யர்வாள் குதூகலிப்பதற்கு தமிழர் தலைவர் முகத்தில் கொடுத்ததுபோல ஓர் அடி கொடுத்தார். கோவிலுக்குக் கூடும் கூட்டத்தைவிட டாஸ் மாக்கில்கூடத்தான் அதிகம் கூடுகிறது என்றாரே பார்க்கலாம் - பலத்த கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று!

பகல் கனவு வேண்டாம் குருமூர்த்திகளே!

...தி.மு.. பொதுச்செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்ததால் வெற்று இடம் ஏற்பட்டுவிட்டதாம் - அதை பி.ஜே.பி. நிரப்புமாம் - இப்படி ஓர் அற்ப ஆசையில் மூழ்கிக் கிடக்கிறார்கள் குருமூர்த்திகள்.

தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டத்தில் நறுக்கென்று கேட்டார் தமிழர் தலைவர். புத்திசாலியாக இருந்தால் அதைச் சொல்லலாமா? என்று கேட்டார்.

திராவிட இயக்கங்களைப் பார்த்துப் பார்த்து மக்கள் எல்லாம் களைத்துப் போய்விட்டார்களாம் - அந்தக் களைப்பை ஆற்றிக் கொள்ள பி.ஜே.பி. என்பது என்ன தூங்கு மூஞ்சித் திண்ணையா?

தி.மு.. எதிர்ப்பு வாக்குகள்தான் .தி.மு..வுக்கு, .தி.மு.. பலவீனப்பட்டால் அந்த வாக்குகள் எல்லாம் பி.ஜே.பி.க்கு வருமாம் - இப்படி ஆண்டி, மடம் கட்டிய கதையாகக் கனவு லோகத்தில் பார்ப்பனர்கள் சஞ்சரிக்கிறார்கள் போலும்.

கடல் வற்றி மீன் கருவாடு தின்ன குடல்வற்றி காத்திருக்குமாம் கொக்கு என்ற கதையாக அல்லவா இருக்கிறது.

சொந்தக்காலில் நிற்க முடியாமல், மிஸ்டு காலில் நிற்கும் கட்சியல்லவா - அப்படித்தான் சிந்திக்கும் என்று ஒரு போடு போட்டார் கழகத் தலைவர்!

ஒரு தகவலை நினைவூட்டினால் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்.

ஒரு கட்சியில்  சேரவேண்டுமானால் அல்லது சேர்க்க வேண்டுமானால், அந்தக்கட்சியின்கொள்கையை,கோட்பாட்டைச் சொல்லியல்லவா அந்த வேலையைச் செய்ய வேண்டும். ஆனால், மிஸ்டு காலில் சேர்ப்பது என்றால், என்ன பொருள்; கொள்கையாவது - மண்ணாங் கட்டியாவது; ஏன் அதைச் செய்யவில்லை என்றால், அவர்களின் இந்துத்துவா கொள்கைகளைச் சொன்னால், தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பலத்த அடி கிடைக்குமே!

என்ன வேடிக்கை என்றால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களுக்கே பி.ஜே.பி.யில் சேர மிஸ்டு கால் என்றால் - இவர்களின் பைத்தியக்காரத்தன, கோமாளிக் கூத்துக்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை.

செல்வி ஜெயலலிதா மறைவால் வெற்று இடம், வெற்று இடம் என்கிறார்களே - என்ன அந்த வெற்று இடம் எங்கே இருக்கிறது அது?

ஜெயலலிதா இருந்த இடத்தில் முதலமைச்சராக ஏற்கெனவே இரண்டு முறை இருந்த .பன்னீர்செல்வம் அவர்கள் இப்பொழுதும், சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.

கட்சிக்குப் பொதுச்செயலாளராக ஒருவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதில் எங்கே வந்தது வெற்றிடம்?

அப்படியே இருந்தாலும், அதிக சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சியாக இருக்கிற தி.மு..தானே அந்த இடத்திற்கு வர முடியும்.

மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அச்சுறுத்தலாம் - மிரட்டலாம் என்றால், அது எதிர்விளைவைத்தான் உண்டாக்கும். கொஞ்ச நஞ்சம் பி.ஜே.பி.,யின் மேலிருந்த அனுதாபம்கூட வேறு மாதிரியாக உருமாறும்.

மத்தியில் உள்ள பி.ஜே.பி. ஆட்சி - .தி.மு.. ஆட்சியைச் சுருட்டிக் கொள்ளலாம் என்ற நினைப்போடு சில காய்களை நகர்த்துவதை திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி முதன்முதலில் எச்சரித்தார்.

திராவிடர் கழகத் தலைவரைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் அந்த மய்யக் கருத்தை வைத்தே தங்கள் கருத்துகளைக் கூறி வருகிறார்கள். தொலைக் காட்சிகளில் தமிழர் தலைவரின் அந்த அறிக்கையே விவாதப் பொருளில் தலைப்பாகவும் ஆகிவிட்டது.

அவர் சொன்னது உண்மைதான் என்பதற்கு வேறு எங்கும் போகவேண்டாம். ...தி.மு..வின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன் அவர்களே வெளிப்படையாக திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்ட அதே கருத்தை வழிமொழிகிற வகையில் கருத்துக் கூறியுள்ளாரே  - இதன் விளைவு, தி.மு..வும், ...தி.மு..வும் பி.ஜே.பி. எதிர்ப்பில் தீவிரமாக முனைப்போடு இருக்கப் போகின்றன. பி.ஜே.பி.யை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள இந்த இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் பிரச்சாரம் செய்யப் போகின்றன.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகி விட்டதே! ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்குக் கதையாக அல்லவா ஆகிவிட்டது.

நடந்து முடிந்த தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளை பி.ஜே.பி. பெறவில்லையா!

இந்த  நிலையில் எந்தத் தைரியத்தில் பி.ஜே.பி. தமிழ் நாட்டின் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது?

கனவுகாண யாருக்கும் உரிமை உண்டு. நன்றாகவே காணட்டும் - பட்டப் பகலிலேயே காணட்டும் - அந்த அற்ப சந்தோஷத்தை நாம் ஏன் கெடுப்பானேன்.

தந்தை பெரியார் 43ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்புக் பொதுக் கூட்டம், சென்னைப் பெரியார் திடலில் கடந்த 24.12.2016 அன்று முற்பகல் நடைபெற்றது. அக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல்.திருமாவளவன் அவர்களும் பங்கேற்று குறைந்த நேரத்தில் நேர்த்தியான கருத்துகளை எடுத்துக் கூறினார். திராவிடம் என்பது ஒரு கட்சியைச் சார்ந்ததல்ல. ஒரு சித்தாந்தம், தத்துவக் கோட்பாடு. ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூகநீதி இவற்றின் குறியீடு என்பதை அழகாகப் பதிவு செய்தார். தந்தை பெரியார் இந்த குறியீடுகளின் ஒட்டு மொத்த அடையாளம் என்பது அவர்தம் கருத்தாக அமைந்திருந்தது.

அரசியலில் பல நேரங்களில் சமரசங்களுக்கு இடம் ஏற்படுகிறது. அரசியல் போக்கு, தேர்தல் என்பதெல்லாம் சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

தேர்தல் அரசியலைப் புறக்கணித்து விட்டு, திராவிடர் கழகத் தொண்டனாகப் பணியாற்றலாம் என்று கூட சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு என்று எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் உணர்வுப் பூர்வமாக நெகிழ்ச்சியுடன் தன் கருத்துகளைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சில முக்கியமான கருத்துகளைப் பதிவு செய்தார்.

சகோதரர் திருமாவளவனுக்கும், எங்களுக்கும் இடையில் தேர்தல் நேரத்தில் இடைவெளி ஏற்பட்டதுண்டு. அதனால் எங்களின் உறவு பாதிக்கப்பட்டதாக நினைக்க வேண்டாம். அவர் எங்களின் சகோதரர். எங்களை யாரும், எந்த சக்தியும் பிரித்து விட முடியாது.

அவர் எடுத்த முடிவின் காரணமாக தேர்தலில் தோல்வியைக் கண்டிருக்கலாம். அதன் காரணமாக அவர் சோர்வடைந்து விடக் கூடாது என்பதற்காக தேர்தல் முடிவைத் தொடர்ந்து முதலாவதாக நான் அவரிடம் தொடர்பு  கொண்டு தொலைபேசியில் பேசினேன் - தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதீர்கள் - சோர்வடைந்து விடாதீர்கள் - அரசியல் ஒரு பரமப்பத விளையாட்டுப் போன்றது. அந்தப் பாம்பு மேலே ஏறும், பிறகு கீழே வந்து விடும் - இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று கூறினேன்.

இப்பொழுது சில பாம்புகள் உள்ளே புகுந்து கடிக்கலாம் என்று மனப்பால் குடிக்கலாம்; அதற்கு நாம் இடம் தந்து விடக் கூடாது, இதில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

இளைஞர்கள் அதிகமாக திராவிடர் கழகத்திலும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிலும் இருக்கிறார்கள். அந்த  இளைஞர்களிடம் கட்டுப்பாட்டை உருவாக்கி வழி நடத்திட வேண்டும் என்று சகோதரர் திருமாவளவனைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் அரசியலை விட்டு விலகி வருவதாகக் குறிப்பிட்டது குறித்தும் தன் கருத்தைப் பதிவு செய்தார்.

அவசரப்படாதீர்கள், அரசியலுக்குச் சென்று விட்ட பிறகு சிலவற்றில் உறுதியாக இருக்க வேண்டும். சந்தனம் இருக்க வேண்டிய இடத்தில் சாணங்கள் அமர்ந்து விடும். நீங்கள் அரசியலிலேயே தொடருங்கள் - உங்களுக்குரிய இடம் கிடைத்தே தீரும் - அதற்குக் கொள்கை ரீதியாக திராவிடர் கழகம் துணை நிற்கும் என்று தமிழர் தலைவர் சொன்ன சொற்கள் நிச்சயமாக எழுச்சித் தமிழருக்குப் பெரும் ஆறுதலையும், உற்சாகத்தையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் அளித்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

சகோதரர் திருமாவளவன் சொன்னதும், அதற்குத் திராவிடர் கழகத் தலைவர் தொடர்ந்து தெரிவித்த கருத்தும் 48 ஆண்டுகளுக்கு முன் தருமபுரி - நாகரசம்பட்டியில் நடந்த ஒரு விழாவையும், அவ்விழாவில் அறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் தெரிவித்த கருத்துகளையும் தான் நினைவூட்டுகின்றன.

முதல் அமைச்சராக ஆன நிலையில் நாகரசம்பட்டியில் பெரியார் ராமசாமி உயர்நிலைப்பள்ளி தொடக்க விழாவில் பேசிய முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

நான் முதல் அமைச்சராகப் பணியைத் தொடரவா அல்லது முன்பு தந்தை பெரியார் அவர்களோடு இணைந்து பட்டி தொட்டியெல்லாம் அலைந்து பகுத்தறிவு, சுயமரியாதை கருத்துகளைப் பரப்பும் பணியில் ஈடுபடுவதா என்பதை இந்த விழாவில் தந்தை பெரியார் அறி விக்கட்டும். அதன்படி நடந்து கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன் என்று முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் அந்த விழாவில் பேசினார்.

முதல்வர் அண்ணாவைத் தொடர்ந்து உரையாற்றிய தந்தை பெரியார் அவர்கள் முதல் அமைச்சர் பதவியில் ஒரு நாளைக்கூட இழக்காமல் தொடர்ந்து அண்ணா அவர்கள் பணியாற்றிட வேண்டும், மற்றபடி சமுதாயப் பணிகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று  சொன்னார்.

இதில் நினைவூட்டத் தகுந்தது என்னவென்றால் அந்த விழாவுக்குத்  தலைமை வகித்தவரே நமது ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான்.

டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாளில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தெரிவித்த கருத்தும், அவரைத் தொடர்ந்து தமிழர் தலைவர் தெரிவித்த கருத்தும் நாகரசம்பட்டி பள்ளி விழாவில் வெளியிடப்பட்ட அதே கருத்துகளின் மறு பதிப்பாகவே இருந்தன என்பது இந்த இடத்தில் நினைத்துப் பார்த்து சிந்திக்கத்தக்கதாகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரை உட்கார வைக்க வேண்டும் என்று கருதியவர் தந்தை பெரியார். அந்தக் கருத்தைச் செயல்படுத்திக் காட்டியவர் மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

அதே நிலை - ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர வைப்பது - திராவிடர் இயக்கத்தின் சித்தாந்தம்தான் - அதனைத்தான் அய்யா நினைவு நாள் சிறப்புக் கூட்டத்தில் கோடிட்டுக் காட்டினார் திராவிடர் கழகத் தலைவர்.


பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்று சொன்ன தலைவரின் நினைவு நாளில் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானதாகும். நாளைக்கே நடந்து விடும் என்பதல்ல - ஆனாலும் நடந்து தீர வேண்டும் என்ற தொலைநோக்கு கருத்து மிகவும் முக்கியமானதேயாகும்.



நூல் : திராவிடத்தால் எழுந்தோம்!
ஆசிரியர் : திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி 

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!