டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் - பகுதி -1


திராவிட இயக்கச் சிற்பிகளுள் முன்னோடியாய், முதன்மையானவராய் திகழ்ந்தவர் டாக்டர் டி.எம்.நாயர். மூடநம்பிக்கைகளையும், மனிதனை மனிதன் இழிவுப்படுத்தும் சமுதாய அவலங்களையும் வெறுத்து - அறிவியல் அடிப்படையிலான மனித இன மேன்மைக்கு வித்திட்ட வித்தகர் என்றே டாக்டர் டி.எம்.நாயரைக் கூறலாம்.
வருணாசிரம தர்மத்தால் ஏமாற்றி வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு - வாயிருந்தும் பேசாதிருந்த ஊமைகளுக்கு - உயிர்க்குரலாய் விளங்கியவர் டாக்டர் டி.எம்.நாயர்! வரலாறு இவரை வருணாசிரமத்தின் முதல் வைரியாக்கிற்று! பார்ப்பனரல்லாத பாமர மக்களுக்கு - விடுதலை கேட்ட - முதல் மனிதன் என்று காலம் கட்டியம் கூறியது! இந்த நூற்றாண்டின் தொடக்கக் கால அலைகளை, அசைவுகளை - உருவாக்கிய அறிவுக் கடல் என்றே டாக்டர் டி.எம்.நாயரைக் குறிப்பிடலாம்

இவர் விரலசைத்தால் விலா எலும்பைத் தியாகம் செய்யத் தயாராக இருந்த திராவிடர் மிகப் பலர்! சர்.பிட்டி.தியாகராயருடன் இணைந்து இவர் உருவாக்கிய அரசியல் சுவடுகள் காலத்தால் அழிக்க முடியாதவை! இந்த மண்ணில் மனிதனை ஏமாற்றி வஞ்சிக்கும் வருண பேதம் உள்ளவரை டாக்டர் டி.எம்.நாயரின் வைர வார்த்தைகளுக்கும் உயிர் இருக்கும்!

டாக்டர் நாயரின் உருவத்தைப் பற்றிக் கூற புரட்சிக் கவிஞர் கூறிய,
ஆண்ட நாள் ஆண்டுமாண்ட செந்தமிழ்ப்
பாண்டிய மன்னன் மீண்டதுபோல

என்ற கவிதை வரிகளை எடுத்தாளுதல் மிகப் பொருத்தமாக இருக்கும். அரசனைப் போன்ற தோற்றம் - ஆறரை அடி உயரம், உயரத்துக்கேற்ற உடல், மீசையில் அடர்த்தி, கண்களில் ஒளி, முகத்தில் ஆற்றல் - இவர்தான் டாக்டர் நாயர். காண்போரை ஈர்க்கும் பண்புகள் இவை. கருத்து மாறுபாடு கொண்டவரை மிரளவைத்த அம்புகளும் இவைதாம். இவரது தோற்றத்தைக்கண்டு தாம் பெருவியப்பு அடைந்ததாக இந்திய அமைச்சராக இருந்த மாண்டேகு தம்முடைய இந்தியா நாட்குறிப்பில் குறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் வாழ்ந்த காலத்தில் மிகவும் போற்றப்பட்டவராகவும், மிகவும் தூற்றப்பட்டவராகவும் வாழ்ந்த மாபெருந் தலைவர் டாக்டர் டி.எம்.நாயர் மக்களை விடுவித்த செம்மல், இந்நாட்டு லெனின், பார்ப்பனரல்லாதார் இயக்கச் சிற்பி - இவையெல்லாம் இந்நாட்டு மக்கள் அவருடைய பணிகளுக்கும், ஆற்றலுக்கும் அளித்த பட்டங்கள்!

இந்நூற்றாண்டின் தொடக்கக் கால வரலாற்றைத் தன் பக்கம் ஈர்த்துக்கொண்ட தலைவர் என்றே டாக்டர் நாயரைக் குறிப்பிடலாம்.
பேரறிஞர் அண்ணா வாழ்ந்த காலத்தில் அவர் பேசுமிடந்தேடி ஓடிய தமிழர்கள் எண்ணிலடங்கார். அவர் தேனருவியெனப் பொழிந்த தமிழில் கட்டுண்டு மீண்டும் மீண்டும் அவர் குரல் கேட்கத் தவித்த தமிழர்கள் மிகப்பலர். டாக்டர் நாயரின் எழுத்தும், பேச்சும் இவ்வாறே பார்ப்பனரல்லாத மக்களை ஈர்த்தன - புரட்சியை வளர்த்தன! அவருடைய திறமையை, அஞ்சாமையை அறிந்து வியந்தோர் போற்றினர் - அவருடைய கருத்தடிகளால் நிலை குலைந்தோர் தூற்றினர்!

ஒரு கூட்டம் தம்மைக் கடவுளின் முகத்தில் உதித்ததாகக் கூறி மற்றவரை ஏய்க்கும் மடமையை மாய்க்க இவர் தொடங்கிய போர்தான் இன்றுவரை வகுப்புரிமை வரலாறாய் வளர்ந்துள்ளது! இந்த அடிப்படையான சமூக நீதி நசுக்கப்படும் போதெல்லாம் நமக்குப் பல நாயர்கள் தேவை என்பதை இவருடைய வாழ்வும், தொண்டும் நமக்குத் தெளிவாக்குகின்றன.

கேரளத்தில் கள்ளிக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கொடுவாயூரில் சிங்கிச்சம் வீட்டில் வாழ்ந்தவர்கள் சி.சங்கரன் நாயர் - கண்மினி அம்மா தம்பதியர். கேரளத்தில் வாழ்ந்த நாயர்களைப் பற்றிப் பேராசிரியர் திரு.இராஜாராமன் தம்முடைய The Justice Party’ என்ற ஆய்வு நூலில் தந்துள்ள குறிப்புக்கள் பயன் மிக்கவை.

கேரள சமுதாய அமைப்பில் நாயர்கள் குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருந்தார்கள். நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் நாயர்கள் கருதப்பட்டனர். நாயர் என்ற சொல் வடமொழியில் தலைவன் என்ற பொருளுடைய நாயகா என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் எனப் பொதுவாகக் கருதப்பட்ட போதிலும், ஆர்.சீவெல் என்ற ஆய்வாளர் நாயர்கள் விசயநகரத்தை ஆண்ட நாயகர்களுடன் தொடர்புடையவர் என்று கருத்தறிவித்தார். இருப்பினும் இதை உறுதிப்படுத்தப் போதிய சான்றுகள் கிட்டவில்லை. ஆனால் மத்திய கேரளம் அய்ரோப்பியர் காலத்தில் பல மாறுதல்களை அடைந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இக்கால கட்டத்தில் கேரளத்தின் படை, ஆட்சி போன்றவை வலிமைமிக்க நாயர்களாலும், பணம் படைத்த நம்பூதிரிப் பார்ப்பனர்களாலும் முறையே கைப்பற்றப்பட்டன.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மகாராஜாக்களையும் இப்பிரிவினரே தம் இனத்திலிருந்து தேர்ந்தெடுத்தனர். மரபு வழியாகவே நாயர் குல ஆண்கள் வலிமையான உடற்கட்டுடையவர்களாயிருந்தனர். நாட்டின் படைவீரர் பணிக்கு எப்போது அழைப்பு வந்தாலும் செல்வதற்குத் தயாராக இருந்தனர். எனவே நாயர் குலத்தின் ஒவ்வொரு தரவாடும் (Taravad) (தரவாட் - இல்லத்திற்குரியவன் (Household) என்று பொருள்) தனக்காகவும், தன்னுடைய தலைமுறையைத் தொடர்ந்து வலிமைமிக்கதாக வைத்திருக்கவும் உடற் பயிற்சி செய்வதைக் கட்டாயமாகக் கொண்டிருந்தனர். வேளாண்மைதான் இவர்களின் முதன்மைத் தொழில். மகாராஜாவிடம் படை வீரர்களாயிருப்பினும், விடுமுறைக் காலங்களில் வேளாண்மை செய்தனர். இதனால் அவர்களின் மாத வருமானம் அதிகமாயிற்று. பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் நாயர் இனம் நாகரிகம் பெற்ற நடுத்தரவர்க்கம் என்ற நிலை பெற்றது. இதனால் வேறு பணிகள் கிடைத்தபோது வேளாண்மையைத் துறந்தனர் நாயர்கள்! இருப்பினும் இறுதிவரையில் நிலக்கிழார்களாகவும், ஓய்வுக் காலத்தில் வேளாண்மை புரிபவராகவும் இருந்தனர்.
கல்வித் துறையில் நாயர் குலத்தின் முன்னேற்றம் மிகச் சிறப்பானது. இந்தியத் தீபகற்பத்திலேயே பெண் கல்வியை ஆதரித்து - ஊக்குவித்த ஒரே பார்ப்பனரல்லாத இனம் நாயர் இனம்தான். மாணவர்களைப் போன்றே ஒவ்வொரு நாயர் குல மாணவியும் கிராமத்துப் பள்ளிகளில் கல்விகற்க அனுப்பப்பட்டனர். இம்முயற்சிதான் இந்தியாவில் பெண் கல்வியில் முன்னேற்றம் பெற்றது கேரளம் எனும் நிலைக்கு இந்நாட்டை உயர்த்தியது. ஆங்கிலக் கல்வியைப் பெறுவதற்கு திருவாங்கூர் அரசு அளித்த வாய்ப்புகளையெல்லாம் இவர்கள் பயன்படுத்தினர். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் மெட்ரிகுலேசன் தேர்வில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றவர்கள் நாயர் குலப் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கேரளத்து இனங்களில் கல்வி மேம்பட்ட இனமாக விளங்கியது நாயர் இனம். கேரளத்தின் கீழ்த்திசைப் பார்ப்பனர்களின் அறிவாற்றலுக்கு நிகராக விளங்கியது நாயர் குலத்தின் அறிவாற்றல். இக்குலத்தினர் பலர் அரசின் உயர் பதவிகளைப் பெற்றிருந்தனர். நாட்டிற்குப் பல கல்வியாளர்களையும் இக்குலம் வழங்கியது.

இத்தகைய நாயர்குலத் தம்பதியருக்கு 1868ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் இளையமகனாகப் பிறந்தவர்தான் டாக்டர் நாயர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மாதவன் என்பது தரவாட் எனும் குடும்பப் பெயருடன் இணைத்து தரவாட் மாதவன் நாயர் என்பவரே சுருக்கமாக டி.எம்.நாயர் ((Taravad Madhavan Nairஎன்றழைக்கப்பட்டார்.
இவருடைய தந்தையார் (சி.சங்கரன் நாயர்) அக்காலத்திலேயே கள்ளிக்கோட்டையில் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கியவர். மாவட்ட முன்சீப்பாகவும் இருந்து பலரால் பாராட்டப்பட்டவர். தாயார் (கண்மினி அம்மா) பாலக்காட்டைச் சார்ந்த பணம் படைத்த குடும்பத்துப் பெண்மணி. நாயரின் மூத்த உடன் பிறப்பான டி.கோபாலன் நாயர் என்பவர் இங்கிலாந்து சென்று பார்-அட்-லா பட்டம் பெற்றவர். அரசுப் பொது வருவாய்த்துறையில் துணை, தண்டலாளராகப் பணியாற்றி, பணிபுரியும் காலத்திலேயே இறந்துவிட்டவர். இவர் மட்டுமல்ல - மலையாள இலக்கிய உலகில் பெரும்புகழ் பெற்றவரும், வடமொழி வல்லுநரும், தமிழில் இருந்து 63 நாயன்மார்களைப் பற்றி மலையாளத்தில் மொழி பெயர்த்து எழுதியவருமான அம்மாளு அம்மா என்பவரும் டாக்டர் நாயரின் உடன்பிறப்பே.

டாக்டர் நாயர் மறைந்தார். அவர் மறைவு பல இலட்சம் மக்களின் மகிழ்ச்சியில் இருள்படியச் செய்தது. சென்னை நகர மக்களின் வாழ்வில் சூடும், சுவையும் குன்றிப் போனது. அவர் மறைந்தபோது கண்ணீர்விடவும், கதறி அழவும் அம்மாளு அம்மாவும், அவருடைய குழந்தைகளும் மட்டுமே இருந்தனர்

என திரு.எஸ்..சோமசுந்தரம் பிள்ளை குறிப்பிடுவதிலிருந்து, அம்மாளு அம்மாவிடம் நாயர் கொண்டிருந்த பாசத்தின் எல்லை நமக்குப் புரிகிறது.

இறுதிவரையில் மக்கள் பணிக்காக, மணம் புரிந்து கொள்ளாமலேயே தன்னை மக்களுக்கீந்த அத்தலைவனுக்கு இறுதிநாள் வரையில் அம்மாளு அம்மாவும், அவருடைய குழந்தைகளுமே உற்ற உறவாக இருந்தனர்.

இத்தகைய அறிவாற்றல், செல்வச் செழிப்பு, அக்காலத்திலேயே அயல் நாட்டுத் தொடர்பு கொண்டிருந்த குடும்பத்தில் டாக்டர் நாயர் பிறந்தார் என்பதை எண்ணுகையில், டாக்டர் நாயர் தனக்கெனப் பொருள் சேர்க்கவோ, விளம்பரம் வேண்டியோ மக்கள் பணிக்கு வந்தவரல்ல என்பது தெளிவாகிறது.

படிப்பில்

பாலக்காடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நாயரின் படிப்பு தொடங்கப்பட்டது. பள்ளிப் பருவத்தில் இவரிடம் கூர்த்தமதியும், சுறுசுறுப்பும், அறிவு வேட்கையும் அளவற்றிருந்தன. இயல்பாகவே இவரிடமிருந்த உய்த்தறியும் ஆற்றலால் பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலம், வடமொழி, மலையாளம் ஆகிய மொழிகளைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் இவரால் முடிந்தது. இம்மொழிகளில் புகழ் பெற்ற அறிஞர்களின் கடிதங்களைப் படிப்பதும் அதைச் செம்மைப்படுத்திச் செப்பிடும் ஆற்றலும் பெற்றார் டாக்டர் நாயர். இப்பருவத்தில் இவரிடமிருந்த இலக்கிய ஆர்வத்தால், இவர் சேகரித்துக் கொண்ட செய்திகள் ஏராளம். துடிப்புமிக்க இளைஞராக இருந்த இவருக்கு பள்ளிப்படிப்பு ஒரு பெருஞ் சுமையாகத் தோன்றவில்லை. பல ஆண்டுகள் பயிலவேண்டிய பாடங்களைச் சில மாதங்களில் கற்று முடித்துவிடும் பேராற்றல் இவரிடமிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி பெறுவதைவிட்டு மாதாமாதம் வகுப்புகள் மாறினார் டாக்டர் நாயர். இதை,
கல்கத்தாவைச் சேர்ந்த ரேஷ்பீ ஹரிகோஷைப் போல மாதாமாதம் வகுப்பு மாறினார் நாயர்
எனக் குறிப்பிடுகின்றார் எஸ்..சோமசுந்தரம் பிள்ளை. இதன் பயனாக மூன்றாண்டுகள் கொண்ட மெட்ரிகுலேசன் படிப்பு இரண்டே ஆண்டுகளில் முடிந்து போனது டாக்டர் நாயருக்கு!

இதற்குப்பின் சென்னை மாநிலக் கல்லூரியில் அறிவியலை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டு எப்.., (Fellow of Artsபட்டத்திற்காக இரண்டு ஆண்டுகள் பயின்றார் டாக்டர் நாயர். இதில் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இப்பருவத்திலேயே அறிவியல் ஆராய்ச்சிக்குத் தகுதியான மாணவர் இவர் எனப் பேராசிரியர் வில்சோனியம் போன்றவர்களால் கண்டறிந்து ஊக்குவிக்கப்பட்டார் டாக்டர் நாயர்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறிது காலமே பயின்ற நாயர், அயல் நாட்டுப் பட்டம் பெற விரும்பி 1889இல் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1894இல் எம்.பி.சி.எம்., பட்டம் பெற்றார். இப்பட்டம் பெற்றவுடன் இங்கிலாந்தில் சூசெக்ஸ் (Sussex) மருத்துவமனையில் உள்நிலை அறுவை மருத்துவராகப் ((House Surgeon) ) பயிற்சியும் பெற்றார்.
எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது டாக்டர் நாயர்தான் அக்கல்லூரியின் மாணவர் தலைவர். இவரிடம் இயல்பாக இருந்த நகைச்சுவையுணர்வு - பிறர்க்குதவும் பெருங்குணம் - இவைகளே இவரைத் தலைவராக்கின. விரைந்து கற்கும் வேட்கை, மிகுந்த நினைவாற்றல், பொதுப்பணிகளில் இவர் காட்டிய ஈடுபாடு - இவையனைத்தும் இவரை அப்பல்கலைக் கழகத்தின் குறிப்பிடத்தக்க மாணவராக்கின.

எம்.பி.சி.எம்., (M.B.C.M.) பட்டம் பெற்ற டாக்டர் நாயர், காது - மூக்கு - தொண்டை (ENT) மருத்துவத்தில் சிறப்பார்வம் செலுத்திப் பயின்றார். சூசெக்ஸ் மருத்துவமனையில் கிடைத்த பயிற்சியும் இவ்வார்வத்தை மேலும் வளர்த்தன. இதற்கிடையில் இதே எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1896இல் எம்.டி. (M.D) பட்டம் பெற்றார் டாக்டர் நாயர். இப்பட்டப் படிப்பிற்கு, ஏதேனும் ஒரு மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது இப்பல்கலைக் கழகத்தின் விதிமுறைகளுள் ஒன்று. இதற்காக டாக்டர் நாயர் கிரேக்க மொழியைக் கற்றார் என்கிறார் திரு.எஸ்..சோமசுந்தரம் பிள்ளை. டாக்டர் நாயரின் விரைவான கல்வி ஆற்றலுக்கும், அறிவு வேட்கைக்கும் அமைந்த சான்று இது.
காது - மூக்கு - தொண்டை மருத்துவத்தில் ஓராண்டு சிறப்புப் பயிற்சி பெற பாரீசுக்குச் சென்றார் டாக்டர் நாயர். இங்கிலாந்து, எடின்பர்க், பாரீசு, என அடிக்கடிப் பயணமிட்டார் டாக்டர் நாயர். இங்கிலாந்தில் சூசெக்ஸ் மருத்துவமனையில் இருந்த காலத்தில் பெற்ற அனுபவம் - எடின்பர்க், பாரீசில் பெற்ற அனுபவம் - இவையனைத்தும் நாயரிடம் இருந்த திறமைகளுக்கு மேலும் பொலிவேற்றின. எப்பொருளைப் பற்றியும் உடனுக்குடன் வரும் செய்திகளை அறிந்துகொண்டார் நாயர். அவருடைய அறிவு, இத்தகைய அனுபவங்களால் தினம் தினம் வளரும் வாய்ப்புப் பெற்றது (Uptodate knowledge).
எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பயின்ற காலத்தில் மாணவன் (The Student) என்ற மாணவர் வெளியீட்டிற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தார் நாயர். இது மட்டுமின்றி எடின்பர்க் இந்தியர் சங்கத் தலைவரும் நாயர்தான். இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற காலத்தில் இலண்டன் மாநகர இந்திய சங்கத்தின் செயலாளரும் நாயர்தான்! இச்சங்கம்தான் அக்காலத்தில் தாதாபாய் நெளரோஜி தலைவராக இருந்து நடத்திய சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
எஃப்.. முடித்து தன்னுடைய மருத்துவக் கல்வியை சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய போது கல்லூரியில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி, நாயரின் அஞ்சாமைப் பண்பை அவனிக்கு உணர்த்துவதாக அமைந்தது. அந்நிகழ்ச்சி இதுதான்:
மருத்துவக் கல்லூரியில் பயின்ற காலத்தில் நாயர் நீண்ட தலைமுடி வளர்த்திருப்பார். கல்லூரிக்குச் சென்று அவருடைய இருக்கையில் அமரும்போது, நீண்ட தலைமுடி கீழே தாவித் தரையைத் தொட எத்தனிக்கும். இத்துணை அழகிய தலைமுடியை ஒருநாள், அவருக்குப் பின்புறத்தில் அமர்ந்திருந்த மாணவன் ஒருவன் கத்தரிக் கோலால் வெட்டி விட்டான்! நிலையை அறிந்து கொண்டார் நாயர். பின்பக்கம் திரும்பினார். முடியை வெட்டிய மாணவனைப் பார்த்து ஒரு சிறு புன்முறுவல் பூத்தார். அம்மாணவன் எதிர்பாராத அடுத்த நொடிகளில் அவனைப் பலமுறை தாக்கினார் நாயர்!

மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவருக்கு நீண்ட தலைமுடி பழமையின் சின்னம்தான்! இருப்பினும் தன்னை இழிவுப்படுத்தும் முறையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை நாயரால் பொறுத்துக்கொள்ளவோ - ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. அம்மாணவனின் செய்கை தன்னுடைய தன்மானத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியென்றே கருதினார் நாயர். இதன் விளைவே தாக்குதலாயிற்று! தாக்கினால் திருப்பித்தாக்கும் இவ்வுணர்வே - இவ்வுரிமை காக்கப் போராடும் போர்க் குணமே - இவருடைய மாபெரும் அரசியல் வாழ்வில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதைக்காண முடிகிறது. மாணவப் பருவத்தில் தனக்கென எழுச்சிபெற்ற இப்போர்க் குணமே - பிற்காலத்தில்தான் சமுதாயத்திற்கென விரிவடைந்தது எனக் கருதுதல் பொருத்தமே.

இங்கிலாந்து வாழ்க்கை நாயருக்குப் பெரும் புகழும், பயிற்சியும் அளித்தது; பல்வேறு உலக அனுபவங்களைப் பெறவைத்தது. இங்கிலாந்தில் நாயர் வாழ்ந்த காலம் அவர் வாழ்வின் மிக முக்கியமான ஒரு பகுதி என்கிறார் எஸ்.ஜி.மணவாள இராமானுஜம். அந்நாட்டு அரசியலாரிடமிருந்து அரசியல் கற்றார், வரலாற்றை அறிந்தார், பிரிட்டன் மருத்துவச் சங்கத்தில் (British Medical Association ) உறுப்பினரானார்.
ராயல் ஆசியச் சங்கம் (Royal Asiatic Society )
தேசிய முற்போக்குக் குழு ((National Liberal Club)
ராயல் மன்றம் ((Royal Societies Club)
எடின்பர்க் பல்கலைக் கழக மாணவர் உறுப்பினர் அவை
(The Edinburg Universities Student’s Representative Council)
பல்கலைக் கழக மாணவர் மன்றம்  (The University Student’s Association)
பல்கலைக் கழக முற்போக்குக் குழு (The University Liberal Club)
போன்ற பல சமுதாய அமைப்புகளில் உறுப்பினராகவும், முக்கியப் பொறுப்பாளராகவும் செயல்பட்டார் டாக்டர் நாயர். இத்தகு சமுதாய அமைப்புகளால் நாயரின் அறிவும், அனுபவமும் நாளுக்குநாள் வளரலாயின. தன்னுடைய ஆளுமைத்திறத்தால் எத்தகைய சிக்கலையும் எளிதாகத் தீர்த்துவிடும் ஆற்றல் கைவரப் பெற்றார் டாக்டர் நாயர். சுருங்கக் கூறின் இந்தியாவில் மனித இழிவைப் போக்கப் போராடிய நாயரை உருவாக்கி, பட்டை தீட்டிய வைரமாய் நமக்களித்தது இங்கிலாந்து என்பதே பொருத்தமானது.

ஒரு மாணவராக இருந்த காலத்திலேயே இத்தனை பொறுப்புகளா? என்ற வியப்பு மேலிடுவது இயற்கைதான். இரவு பகல் வீணாக்காமல், இப்பணிகளோடு மட்டுமின்றி, அரசியல் அறிஞர்களின் வரலாற்றையும், அரசியல் அமைப்புகளின் வரலாற்றையும், இலக்கியங்களையும் இடையறாது படித்தார் டாக்டர் நாயர். இவ்வாறு எத்துறைகளையெல்லாம் ஓர் எதிர்காலத் தலைவன் அறிந்துணர வேண்டுமோ அத்துறைகளையெல்லாம் ஆய்ந்தறிந்து கொண்டார் டாக்டர் நாயர். ஆம்! இத்துணை வலிமையான அடிப்படை கொண்டெழுந்து நின்றதால்தான், அவரை இறுதிவரையில் எவரும் இடித்துடைக்க முடியவில்லை.

பிறப்பால் மலையாளியாகப் பிறந்த நாயர், தன் தாய் மொழியாம் மலையாளத்தின்மீது தணியாத பற்று வைத்திருந்தார். எடின்பர்க்கில் பயின்ற காலத்தில் தன் நாட்டில் வெளியான கேரள பத்திரிகா என்ற மலையாள இதழை வரவழைத்துப் படிப்பது நாயரின் வழக்கம். அவ்விதழில் சந்துமேனன் எழுதிவந்த இந்துலேகா என்ற தொடர்கதையை நாயர் படித்து வந்தார். எடின்பர்க்கில் இருந்தபோது சில காலம் இதழ்கள் அவருக்கு வரவில்லை. இந்துலேகா கதையின் நிலையை அவர் அறிய வாய்ப்பின்றிப் போயிற்று. அக்கதையில் தலைவியின் பெயர் இந்துலேகா - தலைவன் பெயர் மாதவன். கதையில் இந்துலேகா மாதவனை என்றைக்குச் சந்திப்பாள் என்று தெரியாத நிலை! நாயருக்கோ கேரளபத்திரிகாவை எப்போது சந்திப்போம் என்று அறியாத நிலை! இரண்டு ஏக்கங்களையும் இணைத்து அப்பத்திரிகையின் ஆசிரியருக்கு நாயர் பின்வருமாறு எழுதினார்:

நான் நீண்ட தூரத்தில் இருப்பதால் இந்துலேகாவைப் பார்க்க முடியவில்லை. என்றைக்கிருந்தாலும் இந்துலேகா மாதவனைச் சந்திப்பாள்.

இவ்வரிகளில் இந்துலேகா, மாதவன் சந்திப்பு பற்றிய கதையின் நிலை, கேரளப் பத்திரிகாவை என்றைக்கேனும் தன்னால் சந்திக்க முடியும் என்ற ஆவல் - இதழாசிரியர் இதழை அனுப்பவில்லை என்பதை நகைச்சுவையோடு சுட்டிக்காட்டிய பாங்கு - அனைத்தையும் ஒருங்கே காண முடிகிறதல்லவா? இதழை அனுப்புங்கள், கதை என்னவாயிற்று என்றெல்லாம் கேட்பதை விடுத்து அறிவார்ந்த முறையில் அமைந்துள்ள இவ்வரிகள் நாயர் எழுத்துக்களின் அக்கால நாயகத் தன்மையைப் புலப்படுத்துவதாக உள்ளது. இந்த இதழில் நாயர் தன் தாய்மொழியாம் மலையாளத்தில் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1897இல் தாயகம் திரும்பிய நாயர் சென்னையில் காது, மூக்கு தொண்டை மருத்துவராக நிலைபெற்றார். அத்துறையில் குறிப்பிடத்தக்க மருத்துவர் எனப் பெயர் பெற்றார். ஏழைகளுக்காகப் பல மருத்துவமனைகளை பல இடங்களில் நிறுவினார். மருத்துவத் துறையில் சிறந்து பணியாற்றிய இவரை பம்பாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டிற்கு அரசே தன்னுடைய பிரதிநிதியாக அனுப்பி வைத்தது. இது மட்டுமின்றி சென்னை மருத்துவக் கழகத்தின் (Madras Medical Council) துணைத் தலைவராகவும் விளங்கினார் நாயர்.
காது, மூக்கு, தொண்டை (ENT) வைத்தியத்தில் தனக்கு நிகர் தானே என்றும், மருத்துவ மன்னன் என்றும் வெற்றிக் கொடி நாட்டினார். சென்னை சட்ட மன்றத் தலைவராயிருந்த டாக்டர் யூ.கிருஷ்ணாராவின் தந்தையும், சென்னை கவுன்சிலின் பிரசிடெண்ட்டாயிருந்தவருமான டாக்டர் யூ.ராமராவ்

எல்.எம்.எஸ்., டாக்டர் நாயரின் மருத்துவத் தொழிலுக்கு உதவியாளராக, எடுபிடி டாக்டராகவும்கூட இருந்திருக்கிறார் என்பதில் இருந்தே நம் மாபெருந் தலைவர் டாக்டர் நாயரின் மேம்பாடு பற்றி மேலும் சொல்ல வேண்டுமா என்ன? என்கிறார் சேலம் பெரியவர் வி.ஆர்.சந்திரன்.

தன் மருத்துவத் தொழிலுடன் ஆண்டி செப்டிக் (Anti Septic) என்ற மருத்துவ இதழையும் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் தன்னுடைய முழுப் பொறுப்பில் நடத்தினார் டாக்டர் நாயர். இக்காலத்தில் இவரிடமிருந்த நூலகம் மிகப் பெரியது. மருத்துவம், அரசியல், இலக்கியம், குடியுரிமை, சுகாதாரம் எனப் பல்துறை நூல்களைக்  கொண்ட நூலகம் அது. தென்னிந்தியாவில் இருந்த தனியார் நூலகங்களில் மிகப் பெரியது என அறிஞர்களால் கருதப்பட்டது டாக்டர் நாயரின் நூலகம்.
1914இல் ஏற்பட்ட அய்ரோப்பியப் போரின்போது சென்னை மாநகரும், மக்களும் சேர்ந்து போர்க்களத்திற்கு மருத்துவ நலக்குழு ஒன்றை அனுப்பிவைத்தன. இக்குழு பிரிட்டனுடன் கொண்டிருந்த நல்லுறவை வலுப்படுத்தவும், அதன் வேண்டுகோளின் அடிப்படையிலும் அனுப்பி வைக்கப்பட்ட குழுவாகும். டாக்டர் நாயர் இக்குழுவில் ஊதியம் ஏதுமின்றிப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து இணைந்தார் (Volenteer ). களத்தில் ஊனமுற்ற வீரர்களை மருத்துவ உதவியாலும், மனம் கவரும் நகைச்சுவைமிக்க பேச்சினாலும் நலமுறச் செய்தார் நாயர். வலியோடு வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்து நோய் மறந்து சென்றனர். கடமையில் கவனம் மிகக்கொண்ட நாயர் கண் துஞ்சாது, பசி நோக்காது பணியாற்றிப் பலருடைய துயரங்களை துடைத்தார். மருத்துவப் பணி மட்டுமல்லாது, மருத்துவக் கல்வியைப் பாதியில் நிறுத்திவிட்டு, பிறகு தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்காக டாக்டர் நாயர் வகுப்புகள் நடத்தினார். ஆம்; களத்திலே கல்விப் பணியும் புரிந்தார் டாக்டர் நாயர்.
தன்னுடைய பணி போர்க்களத்தில் மேலும் தேவை இல்லை என்பதை உணர்ந்த நாயர், அவராகவே அப்பதவியைத் துறந்து தாயகம் திரும்பினார். இப்போர்களப் பணியைப் பாராட்டி நாயருக்கு கெய்சர் - I - இந்து தங்கப்பதக்கம் (Kaiser - I - Hind. Gold Medal )  வழங்கப்பட்டது. பெரும் புகழோடும், வசதியோடும் வாழ்ந்துகொண்டிருந்த நாயர் போர்க்களப் பணிக்குச் சென்றாக வேண்டும் என்று கட்டாயம் இல்லை - யாரும் அவரைக் கட்டாயப்படுத்தவுமில்லை, அவருக்குள் எப்போதும் இருக்கும் மனிதப்பற்று, பிறர்க்குரியராக வாழ்ந்த பெருந்தன்மை - இவற்றின் தூண்டுதல்தான் துயரம் மிகுந்த பணிகளையும் துரும்பாக எண்ணிச் செய்ய வைத்தது எனலாம்.
காங்கிரசில்
இத்தகு பேராற்றல், பெரும்புகழ் பெற்றுச் சளையா உழைப்பால் சரித்திரம் படைத்துக்கொண்டிருந்த டாக்டர் நாயர், தாயகம் திரும்பிய 1897ஆம் ஆண்டிலேயே காங்கிரசில் இணைந்து பணியாற்றவும் தொடங்கிவிட்டார். அதன் தொடக்கக்கால வளர்ச்சியில் நாயரின் பெருந்தொண்டு பேருதவி புரிந்தது என்ற வரலாற்றை யாரும் மறைத்துவிட முடியாது. இந்திய மக்களின் அரசியல் நோக்கங்களை அடையவும், இந்தியருக்குள் ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் இந்தியரை விடுதலைக்குப் போராடும் வீரர்களாக உருவாக்கவும் தொடங்கப்பட்டது அக்கால இந்திய தேசிய காங்கிரஸ். நாயரின் பொதுநல மனப்பான்மைக்கு இத்தனை குறிக்கோள்கள் போதுமல்லவா?
காங்கிரசில் உறுப்பினரான நாயர் அதன் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் தவறாமல் பங்கேற்றார். காங்கிரசின் நடவடிக்கைக் குழுக் கூட்டங்களில் அதிக ஊக்கத்துடன் கலந்துகொண்டு பல ஆக்கப் பூர்வமான கருத்துக்களைக் கூறி, காங்கிரசையே வழி நடத்தும் வல்லாளரானார் டாக்டர் நாயர். அக்கால காங்கிரசின் கூட்டங்களில் தலைமைப் பேச்சாளரும், தலைசிறந்த பேச்சாளரும் டாக்டர் நாயர்தான்.
ஆனால், அன்னிபெசண்ட் அம்மையார் இந்திய விடுதலையைப் பற்றித் தாம் எழுதிய How India Fought For Freedom’   (இந்தியா விடுதலைக்குப் போராடியது எப்படி?) என்ற நூலில் டாக்டர் நாயரைப் பற்றி - அவர் காங்கிரசில் பணியாற்றியதைப்பற்றி இரண்டே இடங்களில் மட்டும் சுட்டிக்காட்டியுள்ளார் எனக் குறிப்பிடுகின்றார் திரு.கோ.குமாரசாமி.
முதலில், காங்கிரசின் 14ஆவது மாமன்றக் கூட்டம் திரு..எம்.போஸ் என்பவர் தலைமையில், 1898இல் சென்னையில் நடைபெற்றபோது அதில் தொண்டர் படைத் தலைவராகப் ((Captian of the Volunteers) பணியாற்றினார் நாயர். இக்கூட்டத்தில் டாக்டர் நீல ரத்தினம் சர்க்கார் என்பவர் கொண்டு வந்த இந்தியாவின் மருத்துவ அலுவலர்களின் நிலை ((Status of Indian Officers in Medical Service) எனும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார் டாக்டர் நாயர். அன்று அவருடைய பேச்சில், இந்திய மருத்துவத்துறையின் இயலாமையும், மருத்துவப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் மிகவும் கண்டனத்துக்குள்ளாயின. அத்தீர்மானத்தின் மீது பேசுகையில் நாயர்,
இந்திய மருத்துவத் துறையில் இயலாமை மிகுந்துவிட்டது. இதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. முதலில் இத்துறைக்கு பணியாளர் தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் வேண்டும்.
முதலில் நாட்டின் மற்ற துறைகளிலிருந்து மருத்துவத்துறை பிரிக்கப்பட்டு, தனித் துறையாகக் கருதப்பட வேண்டும். மருத்துவப் பட்டத்தோடு மட்டுமின்றி, சுகாதார அலுவலராகச் சிறப்புப் பயிற்சியும், நுண்கிருமிகள் பற்றிய ஆராய்ச்சியும் பெற்றிருப்பவர்களை இத்துறையில் நியமிக்க வேண்டும். மருத்துவ உதவியாளர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். மருத்துவத் துறை சில தனித் தன்மைகளைக் கொண்டது. இதைப் பிற துறைகளோடு இணைப்பதால் இதன் முன்னேற்றம் பெரிதும் தடைபடுகிறது. இவை மட்டுமின்றி இத்துறையை 1. குடிமக்கள் மருத்துவப்பிரிவு (Civil Medical Service ), 2. இந்திய மருத்துவப்பிரிவு (Indian Medical Service) என இருபிரிவுகளாகப் பகுத்து முன்னேற்றத்திற்கு வழி காணவேண்டும். இவற்றை விடுத்து, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்களை அழைப்பது தேவையற்றதாகும். இந்தியாவின் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற, பயிற்சி அளிக்கக்கூடிய மிகச் சிறந்த மருத்துவர்கள் பலர் உள்ளனர். அவர்களை முறையாகப் பயன்படுத்தி இத்துறையில் நாம் முன்னேற்றம் கண்டாக வேண்டும்.
என மருத்துவத்துறையின் சீரமைப்பு குறித்து முழங்கினார். இம்முழக்கத்தில் மருத்துவத்துறையின் முன்னேற்றம் என்பது நாட்டுப் பற்றுடன் இணைந்து வெளிப்படுவதை அறியலாம். இங்கிலாந்தில் படித்தவராயினும் இந்தியா முன்னேற வேண்டும் என்ற காங்கிரசுக்காரராக இருந்தவர்தான் டாக்டர் நாயர் என்பதற்கு இது ஒரு சான்று.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய காங்கிரசு இறக்குமதிப் பொருள்களைப் (இங்கிலாந்திலிருந்து) பகிஷ்கரித்து சுதேசி இயக்கத்தைத் தொடங்கியது. இந்த இயக்கத்தை டாக்டர் நாயர் வரவேற்று, அதில் தீவிரப் பணியாற்றினார். 1905ஆம் ஆண்டில் டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாயர், அந்நியப் பொருள் பகிஷ்காரம் நாட்டுக்கும் மக்களுக்கும் புதியதல்ல என்று கூறி, 1703, 1705, 1707 ஆம் ஆண்டுகளில் அயர்லாந்து நாட்டினர் இவ்வாறே இங்கிலாந்தின் இறக்குமதிப் பொருள்களை விலக்கித் தம் நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்திய செய்திகளையும், ஒரு காலத்தில் பிரிட்டன் வாணிபக் கட்டுப்பாடுகளை விதித்தபோது. அமெரிக்கக் குடியேற்ற நாடுகளும் இதேமுறையில் பிரிட்டனின் இறக்குமதிப் பொருள்களைப் பகிஷ்கரித்து தன்னாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்திய செய்திகளையும் எடுத்துக்காட்டிப் பேசினார். இப்பேச்சை சென்னை நகரே பாராட்டி வரவேற்றது - அந்நியப் பொருள் பகிஷ்கரிப்பு சென்னையில் தீவிரமடைந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் திரு.கோ.குமாரசாமி.
இதற்குப்பின், லக்னோவில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் டாக்டர் நாயர் முக்கியப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். அதற்குப்பின், 1907இல் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள சித்தூரில் நடைபெற்ற காங்கிரசின் ஆண்டு மாநாட்டிற்குத் தலைமையேற்றார் நாயர். 24.07.1915இல் ஈரோட்டில் நடைபெற்ற கோவை மாவட்ட காங்கிரஸ் மாநாட்டிற்கும் நாயர்தான் தலைவராக இருந்தார். இவருடைய காங்கிரஸ் பற்று என்பது நாட்டுணர்வோடு கலந்து இயங்கிய ஒன்றாக இருந்தது.
அக்காலத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு தாதாபாய் நெளரோஜியை, ஒரு பிரிட்டிஷ் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்ததில், அக்காலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவராயிருந்த டாக்டர் நாயரின் செல்வாக்கிற்கும், திறமைக்கும், சேவைக்கும் பெரும் பங்குண்டென்பதை நெளரோஜி உள்பட, பலப்பல தலைவர்களும் போற்றியுள்ளனர்.
என்கிறார் திரு.வி.ஆர்.சந்திரன். இவர் ஒரு நாட்டுப் பற்றுடன் கூடிய காங்கிரசுக்காரர் என்பதற்கு மற்றொரு சான்றைப் பார்ப்போம்:
கல்விக்காக மட்டுமின்றி, கோடைக்காலத்தின் ஓய்வுக்காகவும் இங்கிலாந்து செல்பவர் டாக்டர் நாயர். இவர் இந்தியாவில் இருக்கும்போது வெள்ளையர்கள், இந்தியர்களை சுதேசிகள் (சூயவஎநள) என வீதிகளில் கூட கேலி பேசியதைக் கண்டார் நாயர். சுதேசி என்ற சொல்லில் பொருட்பிழை ஏதுமில்லை. ஆனால் இதே சொல்லை பிழைப்பதற்காக வாணிபம் செய்யவந்த வெள்ளையர்கள் இந்தியரைப் பார்த்து கேலிச் சொல்லாகப் பயன்படுத்தியபோது நாயர் இதன் ஆழ்ந்த பொருளை உணர்ந்தார். 16 ஆண்டு ஆங்கில நாட்டு அனுபவம், பகுத்தறிவுவாதி, நாத்திகரோ என்று எண்ணத்தக்க அளவுக்குத் தன்னுடைய பழக்க வழக்கங்களை நாகரிகப்படுத்திக் கொண்டவர். வளமான உடல், அளவான மீசை, ஒளிபொருந்திய கண்கள், மேலை நாட்டு உடை இத்தனைக்கும் இருப்பிடமான நாயர், ஒரு சில நேரங்களில் ஆங்கிலேயரின் துதிபாடியோ என்று கூட இந்தியர்களை எண்ணச் செய்தவர். இத்தனை தகுதிகள் இருந்தும் வெள்ளையரின் பார்வையில் தானும், தன் நாட்டவரும் எள்ளி நகையாடத் தக்கவர்தானா? - என்ற வினா, கவலை நாயரிடம் இருந்தது. இதற்கும் ஒரு வாய்ப்புக் கிட்டியது. இங்கிலாந்தில் வெள்ளையர்கள் நிறைந்த மன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பு ஒருநாள் கிட்டிற்று. நாயர் எழுந்து பேசினார்:
இங்கே இருப்பவர்களில் இந்தியனாகிய என்னைத் தவிர மற்ற அனைவரும் சுதேசிகள் (சூயவஎநள) என்று.
இந்தியரைப் பழித்தவர்களுக்கு இச்சொல்லின் ஆழ்ந்த பொருளாழம் அன்றேனும் புரிந்திருக்குமல்லவா? சிங்கத்தை அதன் குகையில் சந்தித்துச் செருக்கடக்கும் நாயரின் அஞ்சாமைக்கும் இந்நிகழ்ச்சி ஒரு சான்றாக நிற்கிறது.
காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தபோது, இந்தியக் கப்பல் படையிலும், போரில் புண்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்தார் நாயர். சூரத்((Surat)தில் காங்கிரசில் பிளவு ஏற்பட்டபோது பெரிதும் கலங்கினார் நாயர். தீவிரவாதிகளால் நேர்ந்த இப்பிளவைப் பற்றி மிகவும் கவலைப்பட்டவர் இத்தகைய பிளவுகள் இனியும் நடை பெறக் கூடாது, என அறிவுறுத்தினார் நாயர். தன் நாட்டு மக்களுக்குள் ஒற்றுமை வளர வேண்டும், நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைந்த நெஞ்சம் கொண்டவராக - உண்மையான காங்கிரசுக்காரராக - இப்பணியில் போலித்தனத்தையும், ஏமாற்றுவேலைகளையும் - எதிர்த்த அழுத்தமான காங்கிரசுக்காரராக விளங்கினார் டாக்டர் நாயர்.

மாநகராட்சியில்
சென்னையில் புகழ்பெற்ற மருத்துவராகவும், காங்கிரசின் உண்மைத் தொண்டராகவும் பணியாற்றி வந்தார் டாக்டர் நாயர். இவருடைய மருத்துவப் பணியைப்பற்றி புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர்.
டாக்டர் நாயர் மருத்துவத்தில் காட்டிய தனித் திறமையும், நுணுக்கமான அணுகுமுறையும் வியப்புக்குரியன. நாயரின் இந்த ஆற்றல்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது. இத்தகைய தனிப்பண்புகளை நான் அவரிடம் காணாத நாள் ஒன்றுகூட இல்லை என்றுதான் கூறுவேன்.
எனக் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறுகிறார் திரு.எஸ்..சோமசுந்தரம்பிள்ளை. இத்தகு திறம் பொருந்திய டாக்டர் நாயரின் பணி - வழக்கமான அறுவைச் சிகிச்சைக் கருவிகளோடும், மருந்துகளோடும் நின்றுவிடவில்லை - மாநகரத்தின் பொதுவாழ்வில் அதன் பணிகளில் நீண்டு சென்றது. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது இவர் நேரில் கண்ட இங்கிலாந்தின் அரசியல் அனுபவம், சென்னை நகர அரசியலில் ஈடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தியது என்கிறது ஆண்டிசெப்டிக் ஏடு. இவ்வாறு மக்கள் பணியில் பேரீடுபாடு கொண்டுவிட்ட நாயர் 1904 முதல் 1916 வரை பன்னிரண்டு ஆண்டுகள் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் (ஊடிரஉடைடிச) பணியாற்றினார். வெளிநாட்டு அனுபவத்துடன் கூடிய தொலைநோக்கு, சுறுசுறுப்பான செயல்பாடு, தனக்கு சரியெனத் தெரிந்ததை அஞ்சாமல் எடுத்துரைக்கும் பாங்கு இவற்றால் இவர் வகித்த பதவிக்கே பெருமை சேர்ந்தது எனலாம்.
இக்கால கட்டம்தான் நாயரின் வாழ்வில் பெரும் புகழையும், பெரும்புயலையும் சந்தித்தது. நாயர் ஒரு மருத்துவர் என்பதை விட, அவர் ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நிர்வாகி, ஆளுமைபெற்றவர் என உலகறியும்வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னை மாநகராட்சியில் கழிவுநீர், குடிநீர் வழங்கல், நலவாழ்வு, நோய்த்தடுப்பு, சாலைப் பராமரிப்பு, நிலவருவாய், ஒப்பந்தங்கள் - இவ்வாறு எப்பொருள்பற்றிய வாதம் நிகழ்ந்தாலும் அதில் டாக்டர் நாயரின் கருத்துரை, இடித்துரை, நெறியுரை தவறாமல் இடம்பெறும். மேலைநாட்டு முன்னேற்றம்பற்றித் தெளிவாகத் தெரிந்தவராதலால் இவர் கூறும் கருத்தை சென்னை மாநகரே எதிர்பார்த்த காலம் ஒன்று உண்டு. அவ்வுரையில் நகைச்சுவை இருக்கும், சரிசெய்யப்படாத தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவதற்கு மன்றத்தை ஈர்க்கும் வேகமும் இருக்கும்.
ஒருமுறை மோலின் (Molyne) என்ற ஆங்கிலேயர் நகராட்சித் தலைவராக இருந்தார். நாயர் அப்போது உறுப்பினர். அவையில் குடிநீர் வழங்கல்பற்றிய விவாதம் வந்தது. அப்போது வழங்கப்பட்டு வந்த குடிநீர், குடிக்கின்ற நீராக இல்லை. நாயர் வாதத்தின்போது கூறினார்: இப்பொழுது நகர மக்களுக்குக் கிடைப்பது தண்ணீர் இல்லை - மோலின் மிக்சர் (Molyne Mixture) என்று. நகரத்தலைவர் மோலின் பதில் இது:
பெரும்பாலான தண்ணீரை வடிகட்டி விட்டோம், சிறிதளவு வடிகட்டாத நீர்தான் கலந்துள்ளது.
உடனே நாயர் கேட்கிறார்:
இப்படி அதிகமான நல்ல நீரில் சிறிதளவு கெட்ட நீரைக் கலந்தால், கிருமிகள் அதிகமாக உருவாகும் என்பதைச் சாதாரண மக்களும் அறிவார்களே; உங்களுக்குத் தெரியாதா? என்று.
பதவி பெரிதல்ல - பதவியால் மக்களுக்காற்றும் தொண்டே பெரிதெனக் கருதியவர் - அதைச் செய்யவும் அஞ்சாதவர் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
டாக்டர் நாயரின் மாநகராட்சிப் பணிகளைப்பற்றித் தேடுதல் நடத்திய எனக்கு 14.07.1906களில் இந்தியா இதழில் தேசிய கவி பாரதியார் எழுதிய கட்டுரைகள் கிடைத்தன. இவற்றை பாரதி தரிசனம் என்னும் தலைப்பில் இளசை மணியம் நூலாகத் தொகுத்து 1975இல் வெளியிட்டுள்ளார். இக்கட்டுரைகளில் பாரதியார், டாக்டர் நாயரின் மாநகராட்சிப் பணி, அதில் நடைபெற்ற தேர்தல், நாயரின் தோல்வி, நாயரின் நற்பண்புகள் ஆகியவற்றைப் பலவாறாகப் பாராட்டிப் பேசுகின்றார். அரிய கால வரலாற்றுக் கருவூலம் என்பதால் பாரதியின் கட்டுரைகளை அப்படியே தொகுத்தளிக்கிறேன்: கட்டுரை கீழ்க்கண்டவாறு தொடங்குகிறது.
Topics of the week
Dr.Nair’s Splendid Magnanimity
ஸ்ரீ மாதவன் நாயரின் அரிய உதாரணத் தன்மை
பராபவ வருஷம் ஆவணி மாதம் 3ஆம்; தேதி ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி 1906
திங்கட் கிழமையன்று பிற்பகலில் சென்னை முனிசிபல் மெம்பர்கள் சட்டசபைக்கு ஒரு பிரதிநிதியை அனுப்பும் பொருட்டாக மறுபடியும் கூடினர். 32 மெம்பர்கள் வந்திருந்தார்கள்.
சபைத் தலைவர் காரியாதிகளைத் தொடங்கலாமென்பதாக அறிவித்தார். அப்போது டாக்டர் நாயர், சிவஞான முதலியார், மிஸ்டர் பி.தியாகராஜ செட்டியார், ஸர்.வி.ஸி.தேசிகாச்சாரியார் என்ற நால்வரும் அபேஷகர்களாக முற்பட்டனர்.
முதல் முறை                                                     வோட்
டாக்டர் டி.எம்.நாயர்                                       10
சிவஞான முதலியார்                                  10
ஸர்.வி.சி.தேசிகாச்சாரி                              6
மிஸ்டர் பி.தியாகராஜசெட்டி                                5
                                                                                          31
சபைத்தலைவர் : ஒருவருக்கேனும் சரியான மெஜாரிட்டி கிடைக்க வில்லையே என்றார்.
மிஸ்டர் பி.தியாகராஜசெட்டி : நான் விலகிக்கொள்கிறேன்.
சபைத்தலைவர் : மிஸ்டர் தேசிகாச்சாரியாரே, தாம் இப்பொழுது விலகிக் கொள்கிறீரா?
ஸர்.வி.சி.தேசிகாச்சாரியார் : இல்லை
இரண்டாம் முறை
மறுபடியும் பின்வருமாறு வோட்டுகள் கிடைத்தன.
டாக்டர் டி.எம்.நாயர் வோட்                                                     14
மிஸ்டர் பி.எம்.சிவஞான முதலியார் வோட்         11
ஸர்.வி.சி.தேசிகாச்சாரியார் வோட்                                                7
                                                                                                          32
சபைத் தலைவர் : தேசிகாச்சாரியாரே இப்போதாவது விலகிக் கொள்கிறீரா?
தேசிகாச்சாரியார் : நான் விலகிக் கொள்ள மாட்டேன்.
டாக்டர் டி.எம்.நாயர் : நான் விலகிக் கொள்கிறேன் அய்யா
(அப்போது பல மெம்பர்கள், தாம் ஏன் விலக வேண்டும்? கூடாது கூடாதென்று சத்தமிட்டார்கள்.)
ஸர்.வி.சி.தேசிகாச்சாரியாரின் அனுகூலத்தின் பொருட்டாக நான் விலகிக் கொள்கிறேன் என்று டாக்டர் நாயர் கூறினார்.
மூன்றாம் முறை
மறுபடி வோட் எடுத்ததில் பின்வருமாறு ஏற்பட்டது.
ஸர்.வி.சி.தேசிகாச்சாரியார் வோட்                                18
பி.எம்.சிவஞான முதலியார் வோட்                               14
                                                                                                          32
எனவே ஸர்.வி.சி. தேசிகாச்சாரியாரே மெம்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அச்சமயத்தில் டாக்டர் நாயர் விலகிக் கொள்ளாவிட்டால் சரியான மெஜாரிட்டி (16 வோட்) எவருக்கும் கிடைக்காமல் கார்ப்பரேஷன் மெம்பர் சட்டசபையிலிருப்பதற்கே இடமில்லாமல் போயிருக்கும். அதனால், கார்ப்பரேஷனுக்கு அவமானமேற்பட்டிருக்கும். அந்த அவமானம் ஏற்படாமல் தடுத்த பெருமை டாக்டர் நாயருக்கே உரித்தாகும் என்ற போதிலும் மிகவும் தகுதி பெற்றவரும் அதிக வோட்டுகள் பெற்றவருமாகிய டாக்டர் நாயர் விலகிக் கொண்டமை மிகுந்த வருத்தமுண்டாக்குகிறது. சென்ற தடவையும், இந்தத் தடவையும் எல்லோரைக் காட்டிலும் அதிசொற்பமான வோட்டுகள் பெற்ற தேசிகாச்சாரியார் விலகிக் கொள்ளாததால், தமக்கு மேற்படி ஸ்தானம் கிடைக்காவிடினும் மற்றவர்களுக்கும் இல்லாமல் போய் விடட்டுமென்று நினைப்புக் கொண்டவர் போல இவர் நடந்தது மிகவும் வருத்தமளிக்கத்தக்கதாய் இருக்கின்றது. பொது நலத்தின் பொருட்டு சொந்த ஆசைகளை அடக்கிக் கொள்ள முடியாத மனிதர்கள் உயர்ந்த ஸ்தானங்களிலிருக்க யோக்கியதை உடையவர்களல்லர்.
Another Explanation
மற்றொரு விவரம்
மேலே டாக்டர் நாயரைப்பற்றி எழுதியிருப்பது அச்சிற்குச் சென்றபிறகு, டாக்டர் நாயர் விலகிக் கொண்டமைக்கு வேறொரு முகாந்திரம் சொல்லப்படுகிறது. அதாவது டாக்டர் நாயர் தமக்கு 14 வோட்டுக்களுக்கு மேல் கிடையாதென்று அறிந்தவராதலால், தேசிகாச்சாரியார் விலகிக் கொள்வாரானால், அவரது வோட்டுக்கள் கூட, தமக்கு வராமல் ஸ்ரீ சிவஞான முதலியாருக்கே வருமென்று அறிந்தவராதலாலும், சிவஞான முதலியார் சட்டசபை மெம்பராக வருவதைக் காட்டிலும், தேசிகாச்சாரியார் வருவது விசேஷமென்று நினைப்பவராதலாலும் தேசிகாச்சாரியாருக்கு அனுகூலமாக தாம் விலகிக் கொண்டனர் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற வதந்திகள் வேறு பலவும் உள. இவை மெய்யா, தவறா என்று நிச்சயித்துக் கூற யாதொரு வழியும் இல்லை. எவ்வாறாயினும், நாயரவர்களின் உதாரத் தன்மையைப் பற்றி மேலே நாம் கூறியதில் சிறிதேனும் மாறுபாடு செய்ய விரும்புகிறோமில்லை
இதனை அடுத்து மற்றொரு நாளில் பாரதி எழுதிய கட்டுரையையும் கீழே தருகின்றேன்.
Topics of the Week
Some Municipal Problems
சில முனிசிபாலிடி விஷயங்கள்
பராபவ வருஷம் ஆவணி மாதம் 17ஆம் தேதி
செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 1906
சென்ற சனிக்கிழமை டாக்டர் நாயர் சிந்தாதிரிப்பேட்டையிலே முனிசிபல் விவகாரங்களைப்பற்றிப் பேசினார். ஸ்ரீ மாதவன் நாயர் முனிசிபல் விஷயங்களைப் பற்றி இன்னும் பல இடங்களிலேயேயும் பல உபந்நியாசங்கள் செய்வதாக உத்தேசம் புரிந்திருக்கிறார். கல்வி கற்றவர்கள் கூட, முனிசிபாலிடி சமாச்சாரங்கள்பற்றி ஒன்றுமறியாமல் மந்தகார நிலைமையிலேயே இருக்கும் இந்நகரத்தில் நாயரவர்களைப் போன்ற அறிஞர்கள் இவ்விதமான உபந்நியாசங்கள் புரிவதனால் விளையக்கூடிய நன்மை கொஞ்சமில்லை. சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் என்ற இரண்டு நயங்களும் அமைய நாயரவர்கள் செய்திருக்கும் பெரிய பிரஸங்கத்தில் அமைந்திருக்கிற விஷயங்களையெல்லாம் விரிவாக எடுத்தெழுதல் இங்கே சாத்தியமில்லை. எனினும் அவரது பிரஸங்கத்தின் சாரத்தை மட்டுமே இயன்றளவு கீழே தருகிறோம். ஆரம்பத்திலே நாயர், தாம் முனிசிபாலிடியார் செய்த சட்டசபை எலக்ஷனில் ஏன் பின்வாங்கிக் கொண்டார் என்ற விஷயத்தைப்பற்றிப் பேசினார். அதற்கு நாம் சென்ற தடவையெழுதிய விஸ்தாரமான காரணத்தையே இவர் கூறினார். இவரது செய்கை இவருக்கிருந்த அளவிறந்த மதிப்பு விளைவித்திருக்கிறதென்பதில் சந்தேகமில்லை. இவரது செய்கைக்கு அநேகர் வெவ்வேறு முகாந்திரங்கள் கூறியிருப்பினும் அவற்றையெல்லாம் ஒழித்து இவர் நாம் நினைத்தபடி பெருந்தன்மையாலும், உதார சிந்தையாலுமே பின் வாங்கிக் கொண்டார் என்பதை அவர் வாயினின்று கேட்பது நமக்குச் சந்தோஷமளிக்கிறது.
முனிசிபாலிடியாவது யாது?
ஒருநகரம் அல்லது பட்டினத்திலுள்ள ஜனங்கள் பொதுக் காரியங்களை நிர்வகிக்கும் பொருட்டாகவும், அமைதியைப் பாதுகாப்பதன் பொருட்டாகவும், அதிகாரம் பெற்ற ஒரு கூட்டத்தார் மூலமாக தம்மைத் தாமே ஆட்சி செய்து கொள்ளுமாறு நியமனம் பெற்றிருக்கும் சங்கத்திற்கு முனிசிபாலிடியென்று பெயர் என அய்ரோப்பாவில் வழங்கப்படுகிறது. அய்ரோப்பாவிலே, பொது அமைதி காப்பதுகூட முனிசிபாலிடியாரின் பொறுப்பாகிறது. ஆதலால், முனிசிபாலிடியார் போலீசாரின்மீது கூட அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவிலே அப்படி இல்லை. இங்கே முனிசிபாலிடிகள் இன்னும் குழந்தைப் பருவத்திலேயே இருக்கின்றன என்ற போதிலும், இங்கே கூட சென்னை நகரத்திலேயிருப்பது போன்ற முனிசிபாலிடிக்கு எத்தனையோ அதிகாரங்களுண்டு. முதலாவது ஜலவசதி ஏற்பாடுகள், முனிசிபாலிடியாரின் முக்கியக் கடமைகளிலே ஒன்று. ஜலம் சுத்தமாயிராமல் வியாதிகளுக்கு இடமாயிருக்கும் பட்சத்தில், ஜனங்கள் முனிசிபாலிடி மீது வியாஜ்யம் செய்து நஷ்ட ஈடு வாங்க சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள். வீட்டில் இரண்டாம் முறை வடிகட்ட வேண்டிய அவசியம் இல்லாதபடி அத்தனை சுத்தமான ஜலம் முனிசிபாலிடியார் கொடுக்க வேண்டும்.
சாக்கடை, ஜலமலாதிகளை நகரத்தினின்றும் அகற்றி அப்புறப் படுத்தல் முனிசிபாலிடியார் வெகு ஜாக்கிரதையுடன் கவனிக்க வேண்டிய விஷயம். இதிலேனும் சிறு தப்பிதங்கள் நேர்ந்து விடுமானால், அதனின்றும் கொடூரமான தொத்து வியாதிகள் ஏற்படக் கூடும்.
இனி ரஸ்தாக்களை அகலமாயும், சுத்தமாயும் வைத்திருப்பது மற்றொரு கடமை. ரஸ்தாக்கள் எவ்வளவுக் கெவ்வளவு நெருக்கமாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு சுகாதார விரோதமான நிலைமைகள் உண்டாகி, வியாதிகள் மிகுந்துவிடும். ரஸ்தாக்கள் அகலமாயிருப்பது வண்டிப் பிரயாணம், ஆள் நடை முதலியவற்றிற்கு மிகவும் சவுகரியமாகும். 40 அடி அகலத்திற்குக் குறைவான புது ரஸ்தாக்கள் போடக் கூடாதென்று புதிய விதி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இப்போது 40 அடிக்குக் குறைவான அகலமுடைய எத்தனையோ ரஸ்தாக்கள் சென்னையில் இருக்கின்றன. குறுகிய ரஸ்தாக்களை லண்டனில் கூட முனிசிபாலிடியார் சொந்தச் செலவுசெய்து அகலமாக்கிக் கொள்கிறார்கள். அக்கம்பக்கத்து ஸ்தலத்தை விலைக்கு வாங்கி, ரஸ்தாக்களை முனிசிபாலிடியார் அகலமாக்கித் தர கடமைப்பட்டிருக்கிறார்கள். கட்டிடங்களை ஒழுங்குபடுத்துவது முனிசிபாலிடியாரின் பொறுப்பே. நகரத்திற்குச் சரியாக வெளிச்சம் போட்டுக் கொடுக்கவும், அவர்களே கடமைப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை நகரத்திலே இப்போது வெளிச்சம் போடும் விஷயம் வெகு ஊழலாக நடக்கிறது. ஆனால் நகரத்தின் ஒரு பகுதிக்கு எலக்டிரிக் வெளிச்சம் போட்டுவிடும் படிக்கு முனிசிபாலிடியார் ஒரு கம்பெனியாருடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து மகிழ்ச்சி அடைகிறோம். இதனால், சாமானிய ஜனங்கள் கூட தமது வீடுகளில் எலக்டிரிக் வெளிச்சமும், எலக்டிரிக் விசிறியும் சுலபமான செலவில் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என அக்கட்டுரை முடிகிறது. பாரதியின் இக்கட்டுரையிலிருந்து டாக்டர் நாயரின் மாநகராட்சிப் பணி அக்காலத்தில் எத்தகைய முறையில் அனைவரின் கவனத்திலும் கலந்திருந்தது என்பதை அறிய முடிகிறது.


நூல் - டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்

ஆசிரியர் - கவிஞர் கூ.வ.எழிலரசு

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!