திராவிடத்தால் எழுந்தோம்


உலக மக்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடிய உன்னத இனம் தமிழ் இனம். காரணம், அது உலக நாகரிகங்களுக்கும், வாழ்வியலுக்கும் வழிகாட்டியது. தன்னிகரற்று வாழ்ந்து காட்டியது. மூடநம்பிக்கை சிறிதும் கலவா பகுத்தறிவு பாதையில், மான உணர்வுடன், வீரம் செறிந்த, விருந்தோம்பிய, நன்றிமறவா, மனிதநேய வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் தமிழர்கள். உலக மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ். அதிலிருந்தே அனைத்து மொழிகளும் உருப்பெற்றன. உலகில் செல்ல முடியும் பரப்பெல்லாம் வெல்ல முடியும் என்று காட்டி, உலகின் பெரும் பகுதியில் பரவி வாழ்ந்து, பல்வேறு உயர் எச்சங்களை இந்த உலகிற்கு விட்டுச் சென்றவர்கள் தமிழர்கள். மொஹஞ்சதாரோ, ஹரப்பாவும் எகிப்து பிரமிடுகளும் அவர்களின் எச்சங்களில் முதன்மையானவை. உலகத் தமிழனுக்கும் தமிழுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டது என்னும் உயர்நிலை பெற்றிருந்த தமிழர் வாழ்வும், தமிழ் மொழியும் தன்னிலை இழந்து தாழ்ந்து, வீழ்ந்தது ஆரியத்தால் என்பதை இந்நூலின் தொடக்கத்தில் சுருக்கமாகப் பார்த்தோம்.
அடுத்து இந்த வீழ்வு திராவிடத்தால், பெரியாரால், பெரியார் கொள்கையால் வந்தது என்று உண்மை கலவா மோசக் குற்றச்சாட்டுகள் கூறிய குணாக்களுக்கு உரிய பதிலை அளித்தேன்.
தற்போது ஆரியத்தால் வீழ்ந்த தமிழர்களும் தமிழும் எப்படித் திராவிடத்தால் எழுந்தனர் என்பதைச் சுருக்கமாகக் காண்போம். அதற்கடுத்து, தமிழினம் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து, முழு உரிமையுடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை இறுதியில் முடிவு செய்து இந்நூலை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
மானமீட்சி
மானமே உயிர் என வாழ்ந்த தமிழர் ஆரியத்தின் ஊடுருவலால், ஆதிக்கத்தால் அடிமையாகி, சாத்திர, கோத்திர மூடநம்பிக்கைகளால் சூத்திரனாகி, இழிநிலையில் உழன்றான். ஆட்சியாளர்கள் அனைவரும் ஆரியத்தின் பிடியில் அகப்பட்டு ஆட்சி செய்தமையால் அந்த இழிநிலை சட்டரீதியாகவும் கட்டிக் காக்கப்பட்டது.
தமிழன் மொழி இழித்துப் பழிக்கப்பட்டது. தமிழன் தீட்டுடையவன் ஆனான். மனிதனாக வாழ்வதற்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதோடு, மானத்தை அறவே விட்டு வாழவும் வற்புறுத்தப்பட்டான்.
மானம் இழந்த மணமுறை; அறிவு இழந்த வாழ்வு முறை; இழிவை ஏற்ற வேலை முறை; குப்பையில் தேடும் கூலி முறை; கேவலமான பெயரையே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவல முறை; நாயும் பன்றியும் நடக்கும் வீதியில் தமிழன் நடக்கக் கூடாது என்ற நாதியற்ற நிலை. இவையே திராவிடர் இயக்கம் இங்குத் தொடங்கப்படுவதற்கு முன் அங்கிங்கெணாதபடி எங்கும் நிலவிய நிலைகள்.
இந்த நிலையை முற்றாக மாற்ற வேண்டும், தமிழன் மானமும் அறிவும் உள்ளவனாக மீண்டும் வாழ வேண்டும் என்பதே முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டது. எனவேதான், இவ்வியக்கத்தின் நிறுவனரான தந்தை பெரியார் அவர்கள் இதை சுயமரியாதை இயக்கம் (தன்மான இயக்கம்) என்றே அழைத்தார்.
தமிழர்களின் தன்மான இழப்பிற்கு எவையெல்லாம் காரணமோ அவற்றையெல்லாம் சாடினார். யார் எல்லாம் காரணமோ அவர்களையெல்லாம் எதிர்த்தார்.
தந்தை பெரியார் என்னும் தன்மானச் சூரியன் தந்த சூட்டினால் சொரணை பெற்ற தமிழர்கள் மெல்ல மெல்ல விழித்தனர். தான் யார்? என்ற தன் உணர்வே அப்போதுதான் தமிழனுக்கு வந்தது.
இந்த மண்ணின் உரிமையாளர் நாம். வந்தேறிகள் நம்மைக் கேவலப்படுத்துவதா? அடிமைப்படுத்துவதா? ஆதிக்கம் செலுத்துவதா? சிந்தனைகள் பிறந்தன. தந்தை பெரியாரின் கருத்துக்களை அசைபோடத் தொடங்கின. அதன் விளைவாய் ஆரியத்தை வசைபாடத் தொடங்கினர். ஆரிய எதிர்ப்பு நெருப்பு பற்றிப் பரவத் தொடங்கியது. மானச்சூட்டின் விளைவாய் வந்த நெருப்பல்லவா அது. எனவே, மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. வெப்பந்தாங்காத ஆரியர்கள் தப்பித்தால் போதும் என்று மூட்டை முடிச்சுகளோடு புலம்பிப் புறப்பட அவர்களைத் துரத்தியது திராவிடம் அல்லவா? ஆறு வயது ஆரியச் சிறுவன் அறுபது வயது தமிழ் முதியவரை, வாடா, போடா என்ற நிலையைத் தகர்த்த இயக்கம் திராவிடம் அல்லவா? உளச்சான்று உள்ள எவர் இதை மறுப்பர்!
உரிமை பெறல்
கல்வி, வேலை வாய்ப்பு இரண்டையும் முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செய்த ஆரியக் கோட்டையை இடஒதுக்கீடு என்னும் எரிபொருள் கொண்டு தகர்த்தது அல்லவா திராவிடம்? தகர்த்தவர் அல்லவா தந்தை பெரியார்! இயற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தம் செய்த இயக்கம் அல்லவா திராவிடர் இயக்கம்! இடஒதுக்கீடு பெற்று தமிழர்கள் எல்லாத் துறையிலும் நுழைவாசல் திறந்த இயக்கம் அல்லவா திராவிடர் இயக்கம்!
உயர்பதவிகள் முழுக்க ஆரியப் பார்ப்பனர்களுக்கே என்ற ஆதிக்கத்தைத் தகர்த்து, தமிழர்கள் அப்பதவிகளில் தலைநிமிர்ந்து அமர வழி செய்த இயக்கம் அல்லவா திராவிடர் இயக்கம்!
தாசில்தாராகத் தாழ்த்தப்பட்டவர் முன்செல்ல, கோப்புகளைச் சுமந்து ஆரியப் பார்ப்பனர்கள் பின் செல்ல தலைகீழ்ப் புரட்சியை ஏற்படுத்திய புரட்சி இயக்கமல்லவா திராவிடர் இயக்கம்!
கல்வி
சூத்திரன் கற்கக்கூடாது என்ற சாத்திரத்தை மாற்றிச் சரித்திரம் படைத்த இயக்கம் எது?
குலக்கல்வித் திட்டத்தைக் குழியில் புதைத்து அம்பட்டன் பிள்ளையை ஆட்சியராக்கிய இயக்கம் எது?
மருத்துவமா? சட்டமா? பொறியியலா? கலையா? இசையா? ஆட்சியா? வங்கியா? வானொலியா? எல்லா இடத்திலும் ஆரியப் பார்ப்பனர் என்ற ஆதிக்கத்தை அகற்றி, தமிழர்களை அங்கெல்லாம் அமர்த்தியதோடு அவர்களைச் சாதிக்க செய்த இயக்கம் எது?
இன்று எல்லா துறைகளிலும் முதலிடம் பெற்று பரிசு பெறுபவர்கள் யார்? கல்வியே வராது என்று சொல்லப்பட்ட சூத்திரன்தானே? இந்த மாற்றத்தை நிகழ்த்தியது திராவிடம் அல்லவா?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வா, சூத்திரத் தமிழன்தான் முதலிடம் பெறுகிறார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வா சூத்திரத் தமிழன்தான் முதலிடம். இந்திய ஆட்சிப் பணியா? சூத்திரத் தமிழர்கள்தான் அதிகம் தேர்வு பெறுகிறார்கள்.
பொறியியல், மருத்துவம், சட்டம், பொருளாதாரம், அறிவியல், ஆட்சி என்று அனைத்திலும் முத்திரை பதிப்பவர்கள் யார்? தமிழர்கள் அல்லவா?
அப்துல்கலாமும், அண்ணாதுரையும் ஆரியப் பார்ப்பனர்களைப் பின்தள்ளி முன்னே நின்றது எந்த இயக்கத்தால்? திராவிடம் தந்த விழிப்பாலும் உரிமையாலும் அல்லவா?
கலை
கே.பி. சுந்தரம்பாளும், சிவாஜிகணேசனும், பாரதிராஜாவும், இளையராஜாவும், .ஆர். ரஹ்மானும் ஆரியத்தை அடியில் தள்ளி, பிடியைத் தங்களுக்குள் கொண்டு வந்தது திராவிடம் தந்த விழிப்பால், ஊக்கத்தால், வாய்ப்பால், உரிமையால் அல்லவா?
பிராணாநாதாவும், சகியும் வசனமாகி, புராணமும், இதிகாசங்களும் திரைப்படங்களாகிய நிலையை மாற்றி, வேலைக்காரியும், பராசக்தியும், மனோகராவும், இரத்தக் கண்ணீரும் வந்து, அனல் தெறிக்கும் தமிழ் வசனம் பேசிய மாட்சியும், சமூக அவலங்களை உணர்த்திய காட்சியும் திராவிடம் தந்த புரட்சியல்லவா?
தெலுங்கு கீர்த்தனையும், கர்னாடக சங்கீதமும் பாடப்பட்ட மேடைகளில் தமிழிசையை வழிந்தோடச் செய்தது திராவிடம் அல்லவா?
மேடைத் தமிழ்
மேடையில் நற்றமிழ் சொற்களை, அடுக்கு மொழியில் மிடுக்காகப் பேசுவது, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, உணர்வைத் தூண்டி எழுச்சியை உருவாக்குவது என்ற செயல்கள் திராவிடம் தந்த கொடையல்லவா?
மேடை நாடகங்கள்
மன்மத நாடகமும், பக்த பிரகலாதாவும், சூரசம்காரமும் நடிக்கப்பட்ட மேடைகளில், சமூக விழிப்பூட்டும் நாடகங்கள் நடத்தப்பட்டது திராவிடம் ஏற்படுத்திய புரட்சியல்லவா? கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.இராதா போன்றோரால் சமூகச் சீர்திருத்த நாடகங்கள் மூலைமுடுக்கெல்லாம் நடத்தப்பட்டு, தன்மானமும் பகுத்தறிவும், தமிழ் உணர்வும் ஊட்டப்பட்டது திராவிடத்தால் அல்லவா?
புரட்சி இயக்கங்கள்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புலவர் குழந்தை, தேவநேயப் பாவாணர், இலக்குவனார், பெருஞ்சித்திரனார், கவிஞர் சுரதா போன்றோரால் இனஉணர்வும், மொழி உணர்வும், விழிப்புணர்வும், தன்மானச் சூடும், உரமும், திரமும், ஊக்கமும் கொடுக்கப்பட்டது திராவிடத்தின் எழுச்சியால் அல்லவா?
மானமுள்ள மணமுறை
ஆரியர் மந்திரம் சொல்லி, அக்கினி வளர்க்கப்பட்டு, மானம் இழந்து, மதியிழந்து, நடத்தப்பட்ட தமிழர் வீட்டுத் திருமணங்களை, மானமும், அறிவும் உள்ளதாய், தமிழ் மரபுக்கு உகந்ததாய் மாற்றிய சாதனை திராவிடத்தின் வெற்றியல்லவா? அருந்ததி பார்க்காமல், அம்மி மிதிக்காமல், ஆரியப் பார்ப்பனர் மந்திரம், அக்கினி இல்லாமல் செய்யும் திருமணம் செல்லாது என்றிருந்த நிலையை மாற்றி, மனம் ஒத்து மாலை மாற்றிக் கொண்டாலே திருமணம் செல்லும் என்று சட்டப்படி தகுதி கொடுத்தது திராவிட அரசு அல்லவா?
தமிழர் விழாக்கள்
தமிழர்களை இழிவு செய்யும் ஆரியர் விழாக்களை அடையாளங் காட்டி, தமிழர்க்குரிய பொங்கல் போன்ற விழாக்களைக் கொண்டாடச் செய்து தமிழர் பண்பாட்டை மீட்ட இயக்கம் திராவிடம் அல்லவா?
தமிழ் வளர்த்தல்
ஆரியம் அழித்தொழிக்க நினைத்த தமிழை, வீரியத்துடன் மீட்டு, ஏட்டிலும், நாட்டிலும் உயர்த்தி நிறுத்தியது திராவிடம் அல்லவா?
ஸ்ரீயும், ஸ்ரீமதியும், மகாராய ராயஸ்ரீயும், கனமும், மகா கனமும் பேசிய தமிழ் ஏடும் நாடும், திரு, திருமதி, பெருந்தகை, மாண்புமிகு, மானமிகு என்று பேசச் செய்தது திராவிடம் அல்லவா?
நாராயண சாமியும், சுப்பிரமணியுமாய் திரிந்த தமிழனை செழியன், பாண்டியன், தமிழ்வளவன், தமிழரசி, செல்வி, செல்வன் என மாற்றியது திராவிடம் அல்லவா?
தமிழ்ப் படித்தவர்களை இரண்டாம் தரமாக நடத்திய நிலையை மாற்றி, அவர்களுக்கும் சமநிலை, உயர்நிலை தந்தது திராவிடம் அல்லவா?
தமிழ்வழிக் கல்வி அளித்து, வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை தந்தது திராவிடம் அல்லவா?
நீதிமன்றங்களிலும், ஆட்சி நிர்வாகத்திலும் தமிழைப் பயன்படுத்தியது திராவிடம் அல்லவா?
திருக்குறளை தெருதோறும் பரவச் செய்தது திராவிடமும், பெரியாரும் அல்லவா? தொல்காப்பிய வாழ்வைத் துலங்கச் செய்தது திராவிடம் அல்லவா?
தமிழ்நாடும், தமிழ் மாநாடும் :
தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி, நடைமுறையில் அப்படியே அழைக்கச் செய்த சாதனையைப் புரிந்தது திராவிடம்.
தமிழுக்காக மாநாடுகள் நடத்தி, தமிழ் அறிஞர்களைப் பங்கு பெறச் செய்து எண்ணற்ற ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டது திராவிடம். கல்லூரிகளில் தமிழை இடம் பெறச் செய்தது திராவிடம்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கியது திராவிடம். தமிழ் வளர்ச்சித் துறையைத் தந்தது திராவிடம், தமிழ் அகராதிகளை, அகர முதலிகளை வெளியிட்டது திராவிடம். தமிழை, செம்மொழி என அறிவிக்கச் செய்தது திராவிடம். அதற்கான நிதியைப் பெற்றதும் திராவிடம். தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்கி, அவர்களின் குடும்பங்களின் இன்னலைப் போக்கியது திராவிடம்.
இந்தி ஆதிக்க எதிர்ப்பு :
இந்தியை வலியப் புகுத்த முயன்ற அரசின் செயலை எதிர்த்து, வென்று, தமிழுக்குப் பாதுகாப்பையும், சிறப்பையும், தந்தது திராவிடம். அதற்காக இன்னுயிரை இழந்ததும் திராவிடம்.
தொழிலாளர் நலன் :
தொழிற்சங்கங்களை வலுவாகக் கட்டமைத்துத் தொழிலாளர் நலனையும், பாதுகாப்பையும், உரிமையையும் உறுதி செய்தது திராவிடம்.
பெண்ணுரிமை :
இந்தியாவிலே தமிழகப் பெண்கள்தான் உரிமையும், விழிப்பும், பாதுகாப்பும், கல்வியும், சொத்தும் பெற்றுள்ளனர். இதற்குக் காரணம் பெரியாரும் திராவிடமும்தானே! விதவை மணம், கலப்பு மணம், சொத்துரிமை, வேலை வாய்ப்பு போன்ற புரட்சிச் சிந்தனைகள் செயலில் வந்தது திராவிடத்தால்தான்!
தேவதாசி முறையை ஒழித்து, தமிழ்ப் பெண்களை மீட்டது; கூட்டங்களில் ஆண்களோடு பெண்களை அமரச் செய்தது திராவிடம். மகளிர் காவல் நிலையங்கள் அமைத்து பெண்களைக் காவலர்களாகப் பணிக்கமர்த்தியது திராவிடம். ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் இன்று நிமிர்ந்து நிற்பது திராவிடம் தந்த திடம் அல்லவா!
ஜாதி ஒழிப்பு :
இந்தியா முழுமையும் இன்றளவும் ஜாதிக் கொடுமைகள் தலைதூக்கி நிற்கின்ற நிலையிலும் தமிழகத்தில் ஜாதி வெறுப்பு ஒழிந்து, ஒரே இடத்தில் எல்லோரும் சேர்ந்து வாழும் நிலையை உருவாக்கியது திராவிடம். அதன் உச்சமாகச் சமத்துவபுரங்கள், சமபந்தி உணவு. தாழ்த்தப்பட்ட மக்கள் முழுப் பாதுகாப்போடும், சம உரிமையுடனும் வேறுபாடின்றி வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு காணப்படுவதற்கு முழுக்க முழுக்கக் காரணம் திராவிட கட்சிகளும், பெரியாரும் அல்லவா?
தமிழர் ஆண்டு :
உலகுக்கே ஆண்டுக்கணக்கைக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆனால், இந்த உண்மை மறைக்கப்பட்டு, நம்மீது புராணக் கதை சுமத்தப்பட்டு, 60 சமஸ்கிருத ஆண்டுகளைத் தமிழாண்டுகள் என்று சொல்லி நம்மைக் கேவலப்படுத்தியதை மாற்றி தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று ஆணையிட்டது திராவிடம். ஆனால் அதைத் தகர்த்தது ஆரியம். ஆரிய திராவிடப் போர் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதற்கு இது ஒரு நல்ல அடையாளம்!
அது மட்டுமல்ல, ஆரியம் தனது விருப்பத்தைத் தமிழர்களைக் கொண்டே நிறைவேற்றியுள்ளது. ஆக, தமிழனைக் கொண்டே திராவிடக் கொள்கைகளை அழித்தொழிக்க ஆரியம் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதிதான் குணாவின் நூல்; அதன் அடுத்த வேலைதான் தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற அரசு ஆணையை நீக்கறவு செய்தது. குணா கூட்டங்கள் ஆரியத்திற்கு ஆதரவாய் செயல்படும் போக்கு தொடர்ந்தால், இது போன்று எல்லாவற்றையும் தமிழர்கள் இழந்து மீண்டும் ஆரியத்திற்கு அடிமையாகும் அவலம் வரும் என்பதைத் தமிழர்கள் கருத்தில் கொண்டு விழிப்போடும், எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும்!
ஆரியர் ஆதிக்கம் அகற்றல் :
உணவு விடுதி என்றால் அதில் ஆரியப் பார்ப்பனர்களுக்கு தனியிடம், தண்ணீர் பானை தனி என்ற நிலை நீடித்தது. இதைக் கடுமையாக எதிர்த்துத் திராவிட இயக்கம் போராடியதன் விளைவாய் இந்த வேறுபாடு அகற்றப்பட்டது. அதேபோல் உயர்பதவியில் ஆரியப் பார்ப்பனர்களே அமர்ந்த நிலை தகர்க்கப்பட்டுத் தமிழர்களும் செல்லும் நிலை திராவிடத்தால் உருவாக்கப்பட்டது.
இந்த வெற்றிகள் குறித்துக் குடிஅரசு இதழில் 1944இல் வெளிவந்த அறிக்கையைப் பார்த்தால் நன்கு தெளியலாம்.
இந்தியர் என்றாலே ஆரியர் என்று பொருள் கொள்ளும்படியாகவே சமூக, மதத் தத்துவங்கள் எப்படி இருந்து வருகின்றனவோ, அதுபோலவேதான் அரசியல் தத்துவமும் இருந்து வருகிறது. அதனாலேயே இந்தியமயம் என்றால் ஆரியமயம் ஆகிவிட்டது... அட்வகேட் ஜெனரல் பதவி மட்டும் இந்தியமயமாக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை ஆரிய மயமாகவே இருந்து வந்தது. இது மாத்திரமில்லாமல், 15 வருஷமாக ஒரே பார்ப்பனரே இருந்து வரும்படியாகவும் இருந்து வந்தது. இப்போது தமிழர் (திராவிடர்) கிளர்ச்சியின் பயனாய் அதுவும் ஆரியர்க்கு எதிரான கிளர்ச்சியின் பயனாய் ஒரு தமிழர் (திராவிடர்) கைக்கு வந்திருக்கிறது. இது தமிழர் மகிழ்ச்சியடைய வேண்டிய முக்கியச் செய்தியாகும். தமிழ்நாட்டில் தமிழருக்கு ஒரு பதவி கிடைப்பது இவ்வளவு பாராட்டத்தக்கதும் மகிழ்ச்சியடையத்தக்கதுமான காரியமாகுமா என்று சிலர் கேட்கலாம். ஆம். இது அதிசயமான சங்கதிதான்; பாராட்டப் படக்கூடியதுதான்; மகிழ்ச்சியடையக் கூடியதுதான் என்போம்.
இந்நிலையில் உள்ள தமிழர்களுக்கு அட்வகேட் ஜெனரல் பதவி கிடைத்தது அதிசயமல்லவா? பாராட்டக் கூடியதல்லவா? மகிழ்ச்சியடையக் கூடியதல்லவா?
அதற்கு அடுத்தாற்போல் மகிழ்ச்சிக்குரிய செய்தி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் செய்யப்பட்ட ஒரு முக்கிய மாற்றமாகும். என்னவெனில், அங்கு உணவு விடுதியில் இதுவரை இருந்து வந்த பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற தனிப் பிரிவை எடுத்துவிட்டதாகும். இது தமிழர்களின் சுயமரியாதைத் தோற்றத்திற்கு நல்ல அடையாளமாகும்.
இந்தப் பிரச்சினையானது ரயில்வே நிலையங்களில் உள்ள உணவு விடுதி பேதத்தை எடுத்தபோதே எழுந்தது என்றாலும், அதற்கடுத்து திருவையாறு சமஸ்கிருதக் கல்லூரியில் உள்ள உணவு விடுதியில் இப்பேதம் தஞ்சை ஜில்லா போர்டு தீர்மானம் மூலம் நீக்கப்பட்டபோது உருண்டு திரண்டது என்றாலும், இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது.
மற்றும் சென்னை பச்சையப்பன் கல்லூரி உணவு விடுதியிலும் இப்பேதம் அகற்றப்பட்டுள்ளது. இன்று ஆதி திராவிடர்கள், திராவிடர்கள் ஆரியர்கள் யாவரும் ஒன்றாக இருந்து உணவருந்தி வருகிறார்கள்...
என்றாலும், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பார்ப்பனர்க்கான பானைத் தண்ணீரைத் தமிழர் ஒருவர் குடித்துவிட்டார் என்பதற்குக் கல்லூரி முதல்வர் அபராதம் விதித்துள்ளார். ஆனால், அந்த அபராதம் விதிக்கப்பட்டதால் தமிழர்களுக்கு சூடு வந்து திராவிடர் மாணவர் கழகம் தோற்றுவித்தார்கள். திராவிட மாணவர் மாநாடு நடத்தினார்கள். அம்மாநாட்டில் புதுக்கோட்டை திவான் கான்பகதூர் கலிபுல்லா சாயபு, ஆலிஜனாப் தாவுத்ஷா, தோழர்கள் குஞ்சிதம், சி. என். அண்ணாதுரை, புலவர்கள் பெரியசாமி, ஜானகிராமன், மாணிக்க முதலியார், மாணவர்களில் .அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், கே.. மதியழகன், தண்டபாணி, குழந்தையா, ஜனார்த்தனன் போன்ற சொல்லாளர்கள் வந்து திராவிடர் (தமிழர்) பண்பு பற்றியும், தன்மானம் பற்றியும் பேசி மாணவர்களுக்கு உணர்ச்சி ஊட்டினார்கள்... என்று பலவற்றைக் குறிப்பிட்டுச் செல்கிறது குடிஅரசு ஏடு. - (குடிஅரசு 08.04.1944) மேற்கண்ட செய்திகள் எதைக் காட்டுகின்றன. தமிழன் தன்மானத்திற்கும், தலைநிமிர்விற்கும், உயர்விற்கும், விழிப்பிற்கும், வேற்றுமை ஒழிப்பிற்கும் முழுக்க முழுக்க திராவிடம்தான் காரணம் என்பதல்லவா!

பெரியார்மீது பழி சுமத்த, குற்றம் சொல்ல குடிஅரசு ஏட்டிலிருந்து குறிப்புகள் காட்டும் குணாவிற்கு இந்தக் குடிஅரசுகள் கிடைக்கவில்லையா? கிடைக்காமல் இல்லை. கோத்துமாத்து செய்து குற்றம் சொல்ல தனக்குத் தேவையானதை அங்கும் இங்கும் பொறுக்கி ஒட்டுச் சேர்த்து குள்ளநரி வேலை பார்த்து, ஆரியத்திற்கு அடிமையாய், விசுவாசமாய் உழைத்ததால் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டார்;
உண்மை தெரியக்கூடாது என்பதற்காக ஒளித்துவிட்டார். அவ்வளவே! எனவே, இக்கைக்கூலிகளை களை எடுக்க வேண்டியது தமிழர்களின் கட்டாயக் கடமையாகும்!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!