கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு வேறு வேறா?


தமிழருக்கும் தமிழிய (திராவிட) மொழிகளுக்கும் இடையிலான உறவைப் பற்றிப் பெரியார் கொண்டிருந்த நிலைப்பாடு இயற்கைக்கும் அறிவியலுக்கும் என்றும் பொருந்தவே பொருந்தாது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு தமிழிலிருந்து தோன்றவில்லை. தமிழே வெவ்வேறு வகையில் பேசப்பட்டமையால் வந்த தமிழின் வடிவங்கள் மட்டுமே! இது பெரியார் கூறும் கருத்து. இது எப்படிச் சரியாகும்? என்று குற்றஞ்சாட்டுகிறார் குணா.
பெரியார் சொல்வதுதான் 100 சதவீதம் சரி. கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற திராவிட மொழிகள் புதிதாய் உருவான மொழிகள் அல்ல. தமிழே இடத்திற்கும், அந்த இடத்தில் வந்து கலந்த பிறமொழி கலப்பிற்கும் ஏற்ப மாறியது என்பதே உண்மை. சுருங்கச் சொன்னால் அவை பிறமொழி மிகையாகக் கலந்த தமிழ். தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ் பிறமொழிச் சொற்கள் குறைவாகக் கலந்த தமிழ். ஆக எல்லாம் தமிழே.
தூய்மையான பால் உள்ள நான்கு பால் குடங்களில் மூன்று குடத்தில் முதலில் கள் கலக்கிறது. அடுத்து இரண்டு குடங்களில் சுண்ணாம்பு நீர் கலக்கிறது. அடுத்து ஒரு குடத்தில் கள்ளிப்பால், இன்னொரு குடத்தில் அத்திப்பால், இன்னொரு குடத்தில் ஆலம்பால் கலக்கிறது. இப்படி மூன்று குடங்களிலும் தொடர்ந்து வெவ்வேறு விதமான பால் கலக்கிறது. நான்காவதாக உள்ள குடத்தில், ஒரு கரண்டி அளவு கள், அய்ந்து சொட்டு அத்திப்பால் கலந்தது. இந்நிலையில் இந்த நான்கு குடங்களையும் பார்த்தால் அதிகக் கலப்பில்லாத 4ஆவது குடம் பால்குடமாகவே இருக்கும். மற்ற மூன்று குடமும் பால்குடமாக இல்லாமல் புதுப் புது கலவையாக இருக்கும். இங்கு முதலில் நான்கும் பால் குடம்தான். ஆனால் தற்போது மற்ற மூன்றும் பால்குடம் என்று சொல்ல முடியாமல் மாறி வெவ்வேறு கலவையாய் இருக்கின்றன. இப்படித்தான் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நான்கு பகுதிகளிலுமே, தூய தமிழே பேசப்பட்ட நிலையில், ஆரியர், அரேபியர், என்று கலந்த அளவிற்கு ஏற்ப சமஸ்கிருதம், உருது போன்றவை தமிழ் மொழியுடன் கலந்து கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் தமிழ் மாறியது. கேரளப் பகுதியில் மட்டும் அதிகக் கலப்பில்லாமல் தமிழே பேசப்பட்டு, அதன்பின் மிகப் பிற்காலத்தில் சமஸ்கிருதம் மிகையாகக் கலந்து மலையாளமாக மாறியது.
கேரளா தூய தமிழ் பேசப்பட்ட சேரநாடு என்பதை எண்ணிப் பார்த்தால் இவ்வுண்மைகள் தெளிவாகும்.

ஆக, தமிழே பிறமொழிகளின் தொடர் கலப்பால் கன்னடமாக, தெலுங்காக, மலையாளமாக மாறி நிற்கின்றதே தவிர மற்றபடி தமிழிலிருந்து பிறந்தவை என்று கூறும் கூற்று தவறானது. எனவே பெரியாரின் கருத்தே சரியானது. அதுவே மொழி ஆய்வின்படி உண்மையானது!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!