ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

                            
திராவிடத்தால் வீழ்ந்தோம்! இது கூறப்பட்ட ஒற்றை வரிக் குற்றச்சாட்டல்ல; இதை விளக்கி நூலே வெளியிட்டுள்ளார் குணா என்கின்ற எழுத்தாளர். அவர் எப்போதும் அதிரடியாக ஒரு கருத்தைச் சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தி அதன் வழி விளம்பரம் தேடிக் கொள்ள முயல்பவர் என்பது மட்டுமல்ல, அதன் வழி தன்னை நுட்பமான ஆய்வாளர் என்று காட்டிக் கொள்ளவும் முயல்பவர். அவர் எழுதிய எந்த நூலும் நுட்பமான ஆய்வுக்கு உட்படுத்துகையில் உருக்குலையாமல் நிலைத்து நிற்பவையல்ல. மாறாக நொடிப் பொழுதில் நொறுங்கிப் பொடியாகும் வலுவில்லா வாதங்களின் வடிவமாகும்.
அவரின் மற்ற நூல்களுக்கெல்லாம் மறுப்பெழுத வேண்டும் என்ற கட்டாயம் என்னுள் எழாத சூழலில், இந்த நூலுக்கு மட்டும் கட்டாயம் மறுப்பெழுத வேண்டும் என்ற கடமை என்னை உந்தியது. காரணம், காலமெல்லாம் தூய தொண்டாற்றி உலகத் தலைவராய் உயர்ந்து நிற்கும் ஓர் உன்னதத் தலைவரைக் கொச்சைப்படுத்துவதோடு, திராவிட இயக்கம் தமிழரின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று காட்ட முயல்கிறார். ஓர் ஆய்வாளர் என்பவர் முன் முடிவுகள் ஏதும் இன்றி காய்தல் உவத்தல் (வெறுப்பு  விருப்பு) இன்றி ஆய்ந்து உண்மை நிலையை உறுதி செய்து உலகுக்கு உணர்த்த வேண்டும்.
ஆனால், இந்த குணா என்ற ஆரியக் கைக்கூலி, முடிவை முதலில் வைத்துக்கொண்டு, அதற்கேற்ப எதை எப்படி புனையலாம், எதை எப்படித் திரிக்கலாம், மறைக்கலாம், எதை எப்படித் தொடர்புபடுத்தலாம் என்று பிற ஏடுகளில், நூல்களில் பீராய்ந்து எடுத்த அரைகுறை செய்திகளை வைத்து, அரை வேக்காட்டு வாதம் செய்து, வீழ்ந்து, உறங்கிய தமிழர் சமுதாயத்தை விழித்தெழச் செய்து, சுயமரியாதைச் சூடேற்றி, பகுத்தறிவு வெளிச்சம் காட்டி, படிப்பறிவு தந்து, பதவி கொடுத்து, ஆதிக்கத்தை வீழ்த்தும் ஆற்றல் கொடுத்து, ஆரியக் கூட்டத்தை அஞ்சி நடுங்கச் செய்து, அயலிடத்திற்கு மூட்டை முடிச்சுகளோடு சென்று விடலாமா என்று அவர்களை எண்ணச் செய்த ஓர் இயக்கத்தை, ஓர் இமயத்தை வீழ்ச்சிக்குக் காரணிகளாகக் காட்டி, இன்றைய இளைஞர்களை மூளைச் சலவை செய்து, தங்கள் உயர்விற்கும், வாழ்விற்கும் காரணமானதை  காரணமானவரை வெறுக்கும்படிச் செய்து, அவர்களை ஆரியத்திற்கு அரண் சேர்க்க அழைத்துச் செல்லும் இனத்துரோகத்தை இந்நூலின் வழிச் செய்துள்ளார்.
இவரது வாதங்களை உண்மையென்று மேலோட்டமாக ஏற்று, திராவிடத்தை எதிர்க்க ஓரிரு அரசியல் கட்சிகளே முன்வந்து அதற்கான பரப்புரைப் பணியை மேற்கொண்டுள்ள தாலும், இளைஞர்கள் சிலர், திராவிடம் என்பதை, தமிழ் என்று மாற்றி விட்டாலே அனைத்தும் கிடைத்துவிடும், அது திராவிடம் என்று இருந்ததாலே எல்லாம் போயிற்று என்று எண்ணி, இன்றைக்குப் பெயரை மாற்றினால் வாழ்வே மாறி வளம் சேரும் என்று எண்ணி, பெயர் மாற்றி அலையும் அடிமுட்டாள்களைப் போல, இனப்பகையை, இனத் தடையை அடையாளங் கண்டு வெல்வதற்கு - அகற்றுவதற்கு மாறாய், பெயர் மாற்றமே அனைத்திற்கும் தீர்வு என்று ஆளுக்கொரு பெயரை அவரவர் அமைப்பிற்கு சூட்டிக் கொண்டு அலையும் நிலை வந்து விட்டதால், இந்நூல் வெளி வர வேண்டியது இன்றையச் சூழலுக்குக் கட்டாயமாகிறது. குணாவின் நூல் முதற் பதிப்பு வந்ததும் தமிழர் உணர்வுள்ள ஆய்வாளர்கள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலுக்கு மறுப்பு எழுதியுள்ளனர்.
விடுதலை நாளேடும் மறுப்புக் கட்டுரைகள் வெளியிட்டது. அதன்பின் அடங்கிப் போன இப்பரப்புரை (இப்பிரச்சாரம்), பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2007இல் மீண்டும் வந்தது. அப்போதுகூட அதற்கு ஒரு பெரும் வரவேற்பு இல்லை
. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததும், சிலர் அடுத்தக்கட்ட அரசியல் நடத்த, திராவிடத்தால் வீழ்ந்தோம் எனவே, இனி திராவிடத்தை ஒழிப்பதுதான் முதல் வேலை என்று முழக்கமிட்டு, தமிழர்களைத் திசை மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளனர். தனிமனிதத் தவறுகள் வேறு, தத்துவத் தவறு வேறு. தனிமனித தவறு திருத்தப்பட வேண்டும், தத்துவத் தவறு மாற்றப்பட வேண்டும். ஆனால், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடியலைகின்றவர்கள் இதில் எதையும் கருத்தில் கொள்ளாது, ஏதோ புதுவழி கண்டுவிட்டவர்களாய் குரலை எழுப்புகின்றனர்.
விளைவு என்ன? ஆரியப் பார்ப்பனர்கள் காட்டில் மழை; அவர்கள் செய்ய முயன்றதை தமிழர்கள் பெயரில் இவர்கள் செய்கிறார்கள். அவாளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் பயன்பட்டது குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்ற நூல். எனவே, அதில் உள்ளது உண்மையா? பொய்யா? சரியா, தவறா? எதைப் பற்றியும் சிந்திக்காமல், பார்ப்பன தினமலர் குணாவின் நூலுக்கு விளம்பரம் தருகிறது. இதைப் பார்த்தாவது தமிழன் விழித்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு விழிப்பிருந்தால் ஏன் தமிழன் வீழப் போகிறான்!      பார்ப்பன ஏடும், பதவி ருசி தேடும் அரசியல் கட்சிகள் சிலவும் குணாவின் கணிப்பைச் சரியென்று போற்றி, தமிழர்களை ஆரிய வலையில் வீழ்த்த முயல்வதால், தமிழர்களுக்குச் சரியான தெளிவை, உண்மையான கருத்தைச் சொல்ல இந்த நூல் வெளி வந்துள்ளது. ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்ற நூல் எழுத வந்தவர் நூல் எழுதிய நோக்கை நூலின் தொடக்கத்தைக் கொண்டே அறியலாம்.

ஒருவருடைய நோக்கம் என்ன என்பதை அவர் செயல், பேச்சு, எழுத்து, ஆர்வம், முன்னுரிமை, முனைப்பு போன்றவற்றைக் கொண்டு நுட்பமாய் அறியலாம். அவர்கள் மறைக்க நினைத்தாலும் அது முந்திக்கொண்டு வந்து நிற்கும். அந்த வகையில் குணா இந்நூலை எழுதியதன் நோக்கு, திராவிடத்தால் தமிழர் வீழ்ந்தனர், தமிழ்த் தேசியம் பேசப்பட்டிருந்தால் தமிழர்கள் வாழ்ந்திருப்பர் என்பதாய் இருந்திருந்தால் அதனை முதன்மையாய்க் கொண்டு, அதை நோக்கி அந்நூலின் செய்திகள் செல்லும், அதன் தொடக்கமும் அமையும். ஆனால், குணாவின் நோக்கம் அதுவல்ல.

ஆரியப் பார்ப்பனர் எதிர்ப்பு தவறான அணுகுமுறை; ஆரியப் பார்ப்பனர் நம் எதிரிகள் அல்லர்; ஆரியர்கள் ஆடு மாடு மேய்க்க வந்தவர்கள் அல்லர்; ஆரியர்கள் எவ்வகையிலும் தமிழர் கேட்டிற்கு, இழப்பிற்கு, வீழ்ச்சிக்குக் காரணமாய் இல்லை. சாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் அல்லர் என்று வரலாற்றுக்கும், உண்மைக்கும் மாறான கருத்துக்களைத் தமிழர்களிடம் பரப்பி, அதன் வழி ஆரியர்களுக்கு ஆதரவாய் நிற்க வேண்டும் என்ற தனது ஆரியர் சார்பு நிலைக்காகவும், தமிழர்களின் ஆரிய எதிர்ப்பு மனநிலையைத் திசை மாற்றி, தமிழர்களின் எதிர்ப்பை ஆரிய எதிர்ப்பாளர்களின்மீது திருப்ப வேண்டும் என்பதற்காகவும் இந்நூலை அவர் எழுதியுள்ளார்.

அதனால், அவரின் நூலின் தொடக்கம் அதன்வழி செல்கிறது. இந்த உண்மையை அவர் நூலின் தொடக்கமே தெளிவாய் உணர்த்துகிறது; உறுதி செய்கிறது. அவர் நூலைத் தொடங்கி முதலில் சொல்லும் கருத்தே ஆரியர்கள் ஆடு மாடு மேய்க்க வந்தவர்கள்; அவர்கள் ஜாதியை உருவாக்கியவர்கள்; ஆரியர்களாலே தமிழர்கள் வீழ்ந்தனர் என்ற அடிப்படைத் திராவிடக் கொள்கை தவறானது; உண்மையற்றது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதால், அடிப்படையே தவறு என்பதால், திராவிட இயக்கத்தின் அணுகுமுறையும், போராட்டங்களும், இலக்கும் தவறாய் மாறி, உண்மை எதிரிகளை எதிர்க்காமல் விட்டதால், தமிழர்கள் வீழ்ந்தனர் என்பதாகும். இரண்டாவது கருத்து. ஆரியர்கள் எவ்வகையிலும் நம்மீது படையெடுக்கவில்லை; நம் உரிமைகளைப் பறிக்கவில்லை.

நாம் கெட்டது எல்லாம் கன்னட வடுகர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் போன்றவர்களால் என்பது. ஆக, நூலின் தொடக்கமே இவை என்பதால் அவர் இலக்கு என்ன என்பதை எளிதாய் விளங்கிக் கொள்ளலாம்.      அடுத்து, தமிழர் வீழ்ந்தமையை அவர் கடைச்சங்க காலத்திலிருந்து எடுக்கிறார். அவர் வசதிக்கு ஏற்ப, அவர் நோக்கத்திற்கு ஏற்ப வரலாற்றை எடுத்துக்கொள்கிறார். இந்தியா முழுமையும் வாழ்ந்தவர்கள் தமிழர். இந்தியா முழுமையும் தமிழர்க்கு உரிமையான நாடு; இந்நிலையில் ஆரியர் நுழைந்து, மெல்ல மெல்ல நம்மை ஜாதியால் பிரித்து, ஜாதியால் வீழ்த்தி, நம் இடத்தைப் பறித்து, நம் கலாச்சாரத்தை, மொழியைக் கெடுத்து நம்மை அடிமைகளாய், கீழானவர்களாய், தீட்டுள்ளவர்களாய் ஆக்கி, கல்வி கற்கக்கூடாது எனக் கட்டாயப்படுத்தி பகுத்தாராயக் கூடாது என பயமுறுத்தி மூடநம்பிக்கைகளால் மூளையை மழுக்கி, முயற்சியைக் கெடுத்துத் தமிழரை வீழச் செய்தனர் என்ற வரலாற்று உண்மையை மறைக்கிறார்.

தனித் தமிழ்நாடு ஆயினும், தமிழ் ஈழம் ஆயினும் உண்மையிலே சூடு, சொரணை, மானம், அக்கறையிருந்ததால், யாராயினும் மற்றவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, அதற்கான துணிவுடன், தியாக உணர்வுடன் போர் வியூகம் அமைத்துத் திட்டமிட்டுப் போராடி வெற்றி காண வேண்டும். இவற்றை ஆதரிக்கின்றவர்களைக் குறை சொல்வது, கேலி செய்வது, துரோகப் பட்டம் சூட்டுவது இவற்றை விட்டுவிட்டு, இவற்றிற்குத் தடையாய் இருக்கின்றவர்களை மட்டுமே எதிர்க்க வேண்டும்; குறை சொல்ல வேண்டும். கையாலாகாத, வாய்வீரர்கள் மட்டுமே குற்றச்சாட்டுகள் கூறிக் கொண்டிருப்பார்கள்.

சாதனையாளர்களும், புரட்சியாளர்களும் செய்ய வேண்டியதை மட்டுமே சிந்திப்பார்கள்; மற்றவர்கள் செயல்பாட்டை விமர்சிக்க மாட்டார்கள். அப்படி விமர்சிக்கின்றவர் எவரும் விளம்பர வேட்கையுடன் செயல் படுகிறவர்கள் என்பதே பொருள்.

குணா போன்றவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்தவர்களிடம் குறை காண்பதை விட்டுவிட்டு, சரியாக இவர்கள் செய்து சாதித்துக் காட்ட வேண்டும். இல்லையென்றால் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க வேண்டும். குறுக்குசால் ஓட்டி குட்டையைக் குழப்பி எதிரிக்கு இடம் தரக் கூடாது. அது எட்டையப்பன் செயல்! எச்சரிக்கை!! குணாவின் ஆய்வின் அடிப்படையே தவறு!

1.பெரியார் திராவிடர்களுக்காய் குரல் கொடுத்தபோது திராவிடர்கள் நிமிர்ந்து நின்றார்களா? வீழ்ந்து கிடந்தார்கள். ஆரியத்திற்கு அடிமையாய் மூடநம்பிக்கைச் சகதியில் ஜாதி சச்சரவில், தன்மானமிழந்து, தன்னிலை அறியாது வீழ்ந்து கிடந்தனர். திராவிட கொள்கை வருமுன்னே வீழ்ந்து கிடந்தவன், திராவிடத்தால் வீழ்ந்தான் என்பது அசல் பொய் என்பதா? அயோக்கியத்தனம் என்பதா?

 2.திராவிடத்தைக் கையில் எடுத்து பெரியார் போராடிய போது திராவிடப் பகுதியின் நிலை என்ன என்பதை முதலில் ஆய்வு செய்து, அதற்கு திராவிடத்தைக் கையில் எடுத்தது சரியா? தமிழைக் கையில் எடுத்திருக்க வேண்டுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

3.பெரியார் திராவிடம் பேச வந்தபோது தமிழ்நாடு என்பதே இல்லையே. அங்கு சென்னை இராஜ்யம்தானே இருந்தது. அது நான்கு மொழியாரையும் உள்ளடக்கித்தானே இருந்தது. அதற்கேற்ற அணுகுமுறையைத்தானே கொள்ள முடியும்?

 4.மொழியடிப்படையில் பிரிக்கும்போது, வேற்று இனத்தானும் வருவானே (வருகிறானே). ஆரியப் பார்ப்பான் நான் தமிழன் என்று வரும்போது நீ எப்படி மறுப்பாய்!

5.மொழியடிப்படையில் பார்த்தால் ஓர் இனத்தவரே எதிர் எதிர் நின்று எதிரிகளாவரே. வடஇந்தியாவில் உண்மையான திராவிடன் எல்லாம் ஹிந்தி பேசுவதால் தமிழரோடு எதிரியாய் நிற்கிறானே; இது மொழிப் பிரிவின் சீர்கேடு அல்லவா?

6.இன்றைக்குள்ள நதி நீர்ச் சிக்கலை அன்றைய நிலைக்குப் பொருத்திப் பார்த்து திராவிடத்தை விமர்ச்சிப்பதா?

7.இன்றைக்கு மார்வாடிகள் மற்றவர் தமிழகப் பகுதிகளைக் கைப்பற்றுவதை வைத்துச் சுரண்டுவதை வைத்து, அன்றைக்குத் திராவிடத்தை எடுத்தது தவறு என்பதா? அதற்குத் தீர்வு என்ன? மார்வாடி, குஜராத்தி, மற்றவர் கடைகளை, நிறுவனங்களை, கலாச்சாரத்தைத் தமிழர்கள் புறக்கணிக்க விழிப்புணர்வு ஊட்டப் பட வேண்டுமேயன்றி, ஒருங்கிணைந்த இந்தியாவில் மாற்றார் வருவதைச் சட்டப்படி எப்படித் தவிர்க்க முடியும்? வேற்று மாநிலத்தார் தொழில் செய்யக்கூடாது, சொத்து வாங்கக் கூடாது என்று சட்டப்படி தடுக்க முடியுமா? விழிப்போடிருந்து நாம் தவிர்க்கலாமே தவிர, தடுக்க இயலுமா?

8.இன்று தமிழ்ப் பெண்களெல்லாம் சுடிதாரும், ஜீன்ஸ்மாய் நிற்பது திராவிடத்தாலா? கால மாற்றத்தில் கலந்து பழகுவதன் விளைவாலா? சிந்திக்க வேண்டாமா?


9.தமிழ்ப் பேசுகிறவன் எல்லாம் தமிழன் என்றால், அயல்நாடுகளில் சென்று தங்கி, தலைமுறைத் தலைமுறையாய் வாழ்ந்து வரும் தமிழர்களின் வாரிசுகள் தமிழே தெரியாது அந்நாட்டு மொழியையே பேசுகின்றனர். தமிழ் தெரியாததால் அவர்கள் தமிழர்கள் இல்லையா? தமிழகத்திற்கு வந்த மார்வாடிகள் நன்றாகத் தமிழ்ப் பேசுகிறார்; அதனால் அவர்கள் தமிழர்களா? இனமே இரத்த உறவைக் காட்டும். மொழியை யார் வேண்டுமானாலும் பேசலாம். இனத்தால் யார் என்று பார்க்கத் தவறினால், எல்லாமே நீர்த்து நிலைமாறிப் போகும்


நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 

- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!