டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் - பகுதி -6

தொழிலாளர் நலத்தில்...
டாக்டர் நாயர் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண விரும்பி-அதில் பார்ப்பனரல்லாதார் இடம்பெற வேண்டுமென விரும்பி ஆற்றிய பணிகளில் - தொழிலாளர்களுக்கு அவர் ஆற்றிய பணி மிகவும் குறிப்பிடத்தக்கது.
மனிதப்பற்று உள்ளவரான டாக்டர் நாயர் இந்தியத் தொழிலாளர்களின் இடர்ப்பாடுகளை நுணுகி ஆராய்ந்து - அதற்காக இரக்கம் கொண்டவர். நாயர் இங்கிலாந்தில் இருந்த காலத்திலேயே ஆர்தர் ஆண்டர்சன்  (Arthen Henderson ) போன்ற தொழிற்சங்கத் தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். இதனால் தொழிலாளர் பிரச்சினையிலும் அவருக்குத் தெளிவான கருத்து இருந்தது மிகுந்த ஈடுபாடு இருந்தது எனலாம். தொழிலாளர், முதலாளிகள் பற்றி டாக்டர் நாயர் கொண்டிருந்த கருத்து இது:
தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் என்பது முதலாளிகளின் வாழ்க்கைத் தரத்திற்கு  இணையானதாக இருக்க வேண்டும்.
1908 ஆம் ஆண்டில் தொழிலாளர் ஆணைக்குழுவின் உறுப்பினராக டாக்டர் நாயர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இக்குழுவுடன் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணமிட்டு, தொழிலாளர்களின் நிலையை உற்று ஆராய்ந்தார். இந்தியாவில் பல தொழிற்சாலைகளில், குறிப்பாகத் தனியார் தொழிற்சாலைகளில் 16, 17 பணிகளுக்குத் தொழிலாளர்கள் பணிபுரிவதையும், முதலாளிகள் அவர்களின் உழைப்பை ஒரு நாளில் எழுபத்தைந்து விழுக்காட்டுப் பகுதிவரை உறிஞ்சுவதையும் நாயர் கண்டு மனம் வருந்தினார்பயணம் முடிந்து தொழிலாளர் நிலையும், மாறுதல்களும் குறித்து அவர் அளித்த அறிக்கையில்,
இப்போது இந்தியாவில் தொழிற்சாலை புனரமைப்பு வேண்டுமென்ற கூக்குரல், காற்று முழுவதையும் அடைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குறிப்பிட்ட தொழில்களை மட்டுமே பதிவு செய்து அரசினர் பார்வையில் வைத்திருப்பது என்பது பிற்காலத்தில் பயனற்ற கொள்கையாகப் போய்விடும்
என்று கூரிய எதிர்கால நோக்கோடு குறிப்பிட்டார் டாக்டர் நாயர். இந்த அறிக்கையின்  அடிப்படையில் தொழிலாளர்களின் பணி நேரத்தைக் குறைக்க வேண்டுமென வலியுறுத்தினார் நாயர். இக்கோரிக்கைக்குப் பிரிட்டன் தொழிலாளர் குழுவின் ஆதரவையும் பெற்றார். பல காலப் போராட்டத்திற்குப் பிறகு மிண்டோ - மார்லிக் குழுவைச் சந்தித்து நிலைமைகளை விளக்கினார்அவருடைய கருத்துக்களில் உண்மை இருப்பதை உணர்ந்த  மிண்டோ - மார்லி குழுவினர், இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களின் பணிநேரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மட்டுமே - எனச் சட்டம் கொண்டு வந்தார். இது தொழிலாளர் வரலாற்றில் டாக்டர் நாயர் சாதித்த பெரும் சாதனையாகும்.
ஓய்வில்
ஓய்வில்லாத் தொண்டினால் அவருக்குள் இருந்த நீரிழிவு நோய் தன் குணத்தை அதிகமாகக் காட்டத் தொடங்கியது. பார்ப்பனர்களுக்கு இடி, மின்னலாக உலவி  வந்த நாயர், நோய்த் தொல்லை காரணமாக அரசியல் கூட்டங்களைச் சிலகாலம் தள்ளி வைத்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டார். இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இயக்க விரோதிகள் வெளிப்படையாகப் பேசுவதிலும், நாளேடுகளில் எழுதி இயக்கம் ஓய்ந்து விட்டதாகக் கேலி பேசுவதுமாக இருந்தனர். நாயர் எங்கே? என்று தலைப்பிட்டு ஒரு நாளேடு அவருடைய ஓய்வுக் காலத்தைக் கேலி செய்தது.
இக்காலச் சூழலைப் பயன்படுத்தி வடநாட்டுத் தலைவராக இருந்த மதன்  மோகன் மாளவியா போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து நாயர் வகுப்புவாதங்களை தூண்டி விடுகிறார் எனக் குற்றம் கூறிவிட்டுச் சென்றனர். இவை மட்டுமின்றி நாயர்மீது வெறுப்பைக் காட்டும் உச்ச நிகழ்ச்சியாக அவர் நலம் பெறக்கூடாது என்று சிலரால் கோவில்களில் தேங்காய்களும் உடைக்கப்பட்டன - திருவல்லிக்கேணி பகுதியில்!
இதற்குப்பின் நாயர் தன் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் 14.03.1917இல் விக்டோரியா பப்ளிக் ஹாலில் அகமத்தம்பி மரைக்காயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் Our Immediate Political out look  என்னும் தலைப்பில் அரியதொரு பேருரை நிகழ்த்தினார். அதில் தன்னை வகுப்புவாதி என்றவர்களுக்கும், நலம் பெறக்கூடாது எனத் தேங்காய் உடைத்தவர்களுக்கும் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார் டாக்டர் நாயர்:
நான் யாருக்கும் பயப்படுபவன் அல்ல. நான் வகுப்பு வாதங்களைத் தூண்டுவதாகச் சில வட நாட்டார் இங்கே வந்து கூறிவிட்டுப் போனார்கள். வட நாட்டார் வகுப்புவாதங்களைப் பேசுவதானது சாத்தான்கள் வேதம் ஓதுவது போலாகும்இது மட்டுமல்ல; என் உடல்நிலைப்பற்றித் திருவல்லிக்கேணி பகுதியில் கோவில்களில் நூற்றுக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டதாகவும் அறிந்தேன். அவர்களுக்கு என் நன்றி - ஏனென்றால் அவர்களின் இச்செயலால் என்னுடைய மலபாரில் தேங்காய் வியாபாரம் பெருகியுள்ளது என்றார்.
டாக்டர் நாயரின் இத்தகைய பேச்சுக்கள், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, வாழ்க வசவாளர்கள், அவர்கள் பலர் - நாம் சிலர் என்றெல்லாம் இயக்க எதிரிகளுக்கு இனிய தமிழால் பதிலுரைத்த பேரறிஞர் அண்ணாவை நினைவூட்டுகின்றன என்றே கூறலாம்.
அரசியலில்
டாக்டர் நாயரின் அரசியல் கருத்துக்கள் - அகில இந்திய அரசியலில் மிகுந்த தொலைநோக்குடையவை என்பதை இன்றைய வரலாறு மெய்ப்பித்து வருகின்றன. (Our Immediate Political Our look) நமது உடனடியான அரசியலில் விழிப்புணர்வு), Politcal Reconstruction in India (இந்தியாவில் அரசியல் சீரமைப்பு) - என்ற தலைப்புகளில் அவர் ஆற்றிய உரைகளில் பொதிந்துள்ள அரசியல் - அரசியலமைப்புப் பற்றிய  கருத்துக்கள் இன்றுவரை - இந்திய அரசால் - நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளாக உள்ளன. பல்வேறு அரசியலமைப்பாய்வுக் குழுக்கள் அரசுகளால் நியமிக்கப்பட்ட போதிலும் அவற்றின் அறிக்கைகளின் முடிவு டாக்டர் நாயர் ஆரம்பத்தில் கூறியதாகவே இருக்கும்! இவ்வரசியல் கருத்துக்களில் சிலவற்றையும் - அவற்றிற்காக நாம் இன்றுவரை போராடி வரும் நிலைகளையும் காண்போம்.
மத்திய அரசால் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் ஆளுநர் பதவியைப்பற்றி நாயர் கூறுகிறார்:
பதவியில் இருக்கும் ஆளுநர்களுக்கு மற்றவர்களின் நிலையைக் கண்டறியும் வாய்ப்பு இல்லை. கோடிக்கணக்கான மக்கள் தாழ்த்தப்பட்டு - அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்றனர் என்று.
இக்கருத்தை அண்ணாவின் ஆட்சிக்காலமும், கலைஞரின் ஆட்சிக்காலமும் ஏற்றுக்கொண்டு ஆளுநர் பதவியே தேவையற்றது எனக் குரல் எழுப்பியதை நாடு நன்கறியும். ஆளுநரிடம் மத்திய அரசினால் குவிக்கப்பட்ட அதிகாரங்களால் மக்கள் அரசின் சுதந்திரமான செயல்பாடுகள் கண்காணிப்புக்குள்ளாகின்றனவிடுதலை நாளில் அரசின் சார்பில் சுதந்திரக் கொடியேற்றுவது கூட ஆளுநர்தான் என்ற நிலையைப் போராடி மாற்றி அனைத்து மாநில முதல்வர்களும் விடுதலை நாளில் கொடியேற்றலாம் என்ற உரிமையைப் பெற்றுத் தந்த கலைஞரின் காலத்தை இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். இதை நாயரின் கொள்கைக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.
மாநிலங்களை நிருவாகத்திற்கு வசதியாக மாற்றி அமைக்கவேண்டும்; மொழி அடிப்படையில் மாற்றம் செய்யவேண்டும் - இது அவசியமானதுஎன்றார் டாக்டர் நாயர்.
1917களில் நாயர் கூறிய இக்கருத்து பல ஆண்டுகள் கழித்து 1956இல் பண்டிதநேருவால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. சென்னை இராசதானி (Madras Presidency) திராவிட மொழிகளின் அடிப்படையில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என்று நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.
இதைப்போன்று மாநிலங்களுக்குரிய அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கே தரப்படவேண்டும் என்ற கருத்தை,
தற்போது இந்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். இவற்றில் பலவற்றை மாநில அரசுகளின் பொறுப்பில் விட வேண்டும். இதை நிறுவினால்தான் கூட்டாட்சி முறை (Federal System) வெற்றிபெற முடியும் என வலியுறுத்தினார் நாயர். இது மட்டுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் ஆட்சிப் பொறுப்பில் பங்கு கொள்ள மத்திய அரசு மாநிலங்களுக்குப் பாதை வகுத்துத் தரவேண்டும் என்றும் கேட்டவர் நாயர். மாநில அரசு என்பது,
வழக்கமான உள்ளாட்சி, காவல், நீதித்துறை, சிறைகள், வருவாய்த்துறைகள், கல்வி, மருத்துவம் சுகாதாரம், நீர்ப்பாசனம், கட்டடங்கள், வனத்துறை, நகராட்சி - இவைகளும், இவைபோன்ற பிறவற்றில் முழு அதிகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்
எனப் பட்டியலிட்டு மாநிலத் தன்னாட்சியை (ளுநடக ழுடிஎநசஅநவே) வலியுறுத்துகிறார்  டாக்டர் நாயர். இவ்வுரிமைகளில் சில கிடைத்தும் கிடைக்காமலும் தான் மாநில அரசுகள் இன்றும் இயங்கி வருகின்றன. ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் அரசுகள் - அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மத்திய அரசின் ஆணைகளை எதிர்பார்ப்பது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது  கண்கூடு. இந்த நிலையைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள்,
ஆட்டி வைப்பவர்கள் அங்கே! ஆடும் பதுமைகள் இங்கே!
எசமானர்கள் அங்கே! ஏவலர்கள் இங்கே!
டில்லியின் பாவாடை நாடாவில் ஊசலாடும் மாநிலங்கள்
டில்லியில்தான் அறிவாற்றல் அரியணை அமைந்திருக்கிறதா?
என்றெல்லாம் அழகாகக் கூறினார். அவருக்குப்பின் வந்த கலைஞரும்
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி
உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம்
என்று கூறி மாநில தன்னாட்சியின் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்குப்பின் மத்திய - மாநில உறவுகளை ஆராய்வதற்காக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதும் - அக்குழு அறிக்கை அளித்தபிறகும் அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும் நாம் இங்கு நினைக்க வேண்டியவைகளாக இருக்கின்றன.
இவ்வாறு டாக்டர் நாயர் அப்போது கூறிய அரசியல் கருத்துக்கள் - இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டியவைகளாக உள்ளன என்பதை அறியலாம்.
காலம் மாறிடினும், காலத்தால் அரசுக்கட்டில் கை மாறிடினும் - கடமையாற்ற முடியாமல் மத்திய அரசிட்ட விலங்குகள் உள்ளவரை - நாயரின் கருத்துக்களுக்கும் உயிர் இருக்கும்!
இறப்பில்
டாக்டர் நாயரின் இறுதிக்கால நிகழ்வுகளை இனிக் காண்போம். முன்பக்கங்களில் கூறியபடி மாண்ட் - போர்டு அறிக்கை நியமித்த சவுத் பரோ குழுவைப் புறக்கணித்து, நீதிக்கட்சியின் சார்பாக இங்கிலாந்து சென்று வந்தார் டாக்டர் நாயர். 1-6-1918இல் இங்கிலாந்து சென்ற நாயர் 7-1-1919இல் தாயகம் திரும்பினார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு இங்கிலாந்து பாராளுமன்றங்களின் ஆதரவையும், மக்களின் ஆதரவையும் திரட்டிக்கொண்டு நாயர் தாயகம் திரும்பிய பிறகு சவுத் பரோ குழு தன்னுடைய அறிக்கையை 16-5-1919இல் இந்திய அமைச்சருக்கும், வைசிராய்க்கும் அனுப்பி வைத்தது (இங்கிலாந்திற்கு). அவ்வறிக்கையில் பார்ப்பனரல்லாதாருக்கு எவ்வித வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை! எனவே இந்த வாக்குரிமைக் கமிட்டியினால் எப்பயனும் ஏற்படாது என்பதை உணர்ந்த திராவிடத் தலைவர்கள் தம்முடைய நீதிக்கட்சியின் கோரிக்கையை இங்கிலாந்து மக்கள் முன் வைப்பதென முடிவெடுத்தனர். டாக்டர் நாயர் உறுதியாக முடிவெடுத்தார். இங்கிலாந்து செல்வதே சீரிய வழியென முடிவு செய்து, தன் நலிவுற்ற உடல் நிலையையும் பொருட்படுத்தாது விரைந்து செயலாற்ற வேண்டுமெனக் கருதி இங்கிலாந்து புறப்பட்டார் டாக்டர் நாயர். புறப்பட்ட போது டாக்டர் நாயர் - சி. நடேசனாரிடம்,
நம் ஜஸ்டிஸ் கட்சியைத் தங்களிடம் ஒப்படைத்துச் செல்கிறேன். கட்சி நடந்து வரும்படி தாங்கள் தான் பார்த்துக் கொள்ளவேண்டும்
என்று கூறிச்சென்றார் என்ற குறிப்பைத் தந்துள்ளார் திரு.கோ.குமாரசாமி.
டாக்டர் இங்கிலாந்து புறப்பட்ட காலத்தில் சவுத்பரோ குழுவின் அறிக்கை, போர்ட் செயின் ஜார்ஜ்ஜிடமிருந்து, வெஸ்ட் மினிஸ்டருக்கு மாற்றப்பட்டிருந்தது; மாண்ட்-போர்டு அறிக்கை பாராளுமன்றக் கூட்டுத் தேர்வுக் குழுவின்முன் அதன் இறுதி முடிவிற்காகக் காத்திருந்தது. இதை அறிந்துதான் சென்னையின் ஒவ்வொரு இயக்கங்களும் தங்களுடைய பிரதிநிதிகளை இங்கிலாந்திற்கு அனுப்பிப் பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் முன், அது தன்னுடைய இறுதி முடிவை எடுப்பதற்குள் - தம்முடைய கருத்துரையை அளிக்க அவசரப்பட்டனமற்ற இயக்கங்களைப் பொறுத்த வரையில் 1909இல் அளிக்கப்பட்ட மிண்டோ-மார்லி சட்டத்தின் பாதுகாப்பு நடப்பில் இருந்தது- அதனால் இழப்பொன்றுமில்லை. ஆனால் நீதிக்கட்சிக்கோ நிலைமை அப்படி அல்ல. அவ்வியக்கம் தன்னுடைய கருத்துரையை பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் முன் உரிய காலத்தில் அளிக்கத் தவறுமேயானால், அச்செயல் அதன் முக்கியக் கொள்கைக்கும் அதனால் பல்லாயிரக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்கும் பேரிழப்பாக முடிந்துவிடும். இந்த அவசரத்தையும், அவசியத்தையும் உணர்ந்த நீதிக்கட்சி, டாக்டர் நாயர் மட்டுமல்லாது, கே.வி.ரெட்டி நாயுடு, ஆற்காடு இராமசாமி முதலியார், கோகா அப்பாராவ் எல்.கே.துளசிராம் ஆகியோரை அனுப்பிவைக்க முடிவெடுத்தது. இவர்களில் .இராமசாமி முதலியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் 21.06.1919இல் கப்பல் மூலம் புறப்பட்டுச் சென்றனர். இவர்களுக்கு ஒரு மாதம் கடந்து, துளசிராமும், கோகா அப்பாராவும் புறப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சில மாதங்கள் முன்னதாகவே டாக்டர் நாயர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இவ்வாறு முன்னதாகச் சென்றதற்கு நாளுக்குநாள் அதிகமாகிவந்த அவருடைய உடல் நலக் குறைவும் ஒரு காரணமாகும்.
திரு.கோ.குமாரசாமி தரும் குறிப்புகளில் இருந்து 25-4-1919இல் டாக்டர் நாயர் இங்கிலாந்து புறப்பட்டதற்கான வழியனுப்பு விழா நடந்ததென்றும், 6-5-1919இல் நாயர் புறப்பட்டு 19-6-1919இல் இங்கிலாந்தை அடைந்தார் என்றும் தெரிய வருகிறது.
டாக்டர் நாயருக்கு முன்பே, காங்கிரஸ், முஸ்லீம் லீக், புதிய ஹோம் ரூல் இயக்கம், மிதவாதக் கட்சியினர் ஆகியோர் இங்கிலாந்து சென்று தமது கருத்துக்களைக் கூற ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். இவர்கள் பலராகவும், டாக்டர் நாயர் ஒருவராகவும் பணியாற்றி வந்தனர். தம் கட்சியின் கொள்கைகளையும், கோரிக்கைகளைம் பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் நேரில் கூறிப் பார்ப்பனரல்லாதாரின் தனி வாக்குரிமையுடன் கூடிய சீர்திருத்தத்தைப் பெறுவதற்கான சான்றுகளைத் திரட்டுவதிலும், பிறரிடம் பேசித் தெளிவுபெறுவதிலும் டாக்டர் நாயர் இரவு, பகல் பாராது ஈடுபட்டார். இக்கடுமையான உழைப்பால் அவர் உடல்நிலை மிகவும் சீர் கெட்டது. மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார் டாக்டர் நாயர்.
நடமாட முடியாமல், இயக்கத் தொண்டர் துணையுமின்றி பாராளுமன்றக் குழுவின்முன் கருத்தைத் தெரிவித்து கோரிக்கையில் வெற்றி பெற வேண்டுமென்ற பெருங்கவலையுடன் மருத்துவமனையில், படுக்கையில் இருந்தார் நாயர்.
சென்னையிலிருந்து நாயரின் புறப்பாட்டிற்குப்பின் புறப்பட்ட . இராமசாமி முதலியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் இங்கிலாந்தை அடைந்தனர். டாக்டர் நாயரின் நிலை அவர்களைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்நிலையிலும் டாக்டர் நாயர் பாராளுமன்றக் குழுவின் வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதற்காக, செய்ய வேண்டிய வழி முறைகளை அவர்களிடம் விளக்கினார். படுத்த படுக்கையிலும் பார்ப்பனரல்லாதாருக்காக - அவர்களின் நலனுக்காகத் துடித்தது நாயரின் நெஞ்சம். தானே பாராளுமன்றக் கூட்டுக் குழுவின்முன் சாட்சியம் கூற வேண்டும் என்றும், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறும் வந்திருந்த இயக்கத் தோழர்களிடம் கூறினார் நாயர். .இராமசாமி முதலியாரும், கே.வி. ரெட்டிநாயுடுவும் குழுவின் தலைவரான செல்போர்ன் பிரபுவிடம் சென்று நாயரின் நிலைமையையும், அவருடைய விருப்பத்தையும் தெரிவித்தார்கள். செல்போர்ன் பிரபு நிலைமையை அறிந்து, டாக்டரின் விருப்பப்படியே ஜூலை 18ஆம் நாள்  அவருடைய சாட்சியத்தை நேரில் வந்து பெறுவதாகத் தெரிவித்தார். இந்த நற்செய்தியைச் சுமந்து கொண்டு சாட்சியம் கூற ஏற்பாடுகளைச் செய்யலாம் என்ற மகிழ்ச்சியில் மருத்துவமனைக்குத் திரும்பிய .இராமசாமி முதலியாரையும், கே.வி.ரெட்டி நாயுடுவையும் நாயர் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய்த் தாக்கிற்று.
சாட்சியம் கொடுக்க வேண்டிய ஜூலை 18ஆம் நாளுக்கு முன் நாளே ஜூலை 17-1919இல் டாக்டர் நாயர் இறந்துவிட்டார்காலை 5 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர் அறிக்கை கூறியது. காலத்தால் தோன்றிய தலைவனை இழந்து  விட்டோம் என்று பார்ப்பனரல்லாதாரின் வரலாறு அழுதது....
டாக்டர் நாயருடன் உடனிருந்து உதவி செய்து வந்த கே.வி. ரெட்டி நாயுடு தன்னுடைய நாட்குறிப்பில் அன்றைய தினம் கண்ணீரால் எழுதினார்:
இது நமக்குப் பேரிடி - நம்மையே நாம் இழக்க வைத்த பேரிடி, நம் நம்பிக்கை, நம் வழி, நம் கொள்கை நம் தலைவர், நாயர் இறந்து விட்டார். 27 லட்சம் மக்கள் ஏற்றுக்கொண்டிருந்த தலைவரை நாம் இழந்து விட்டோம். அவருடைய இறப்பு பெருமைக்குரிய இறப்பு. மூன்று ஆண்டுகளின் ஓய்வில்லாத, சலியாத, துவளாத உழைப்பு அவரைக் கொன்று விட்டது.
டாக்டர் நாயரின் இறப்பை இங்கிலாந்தின் லண்டன் டைம்ஸ் முதலான பல நாளேடுகளும், இறுதியடக்கம் நடைபெறும் நேரம், இடத்துடன் விரிவாக விளம்பரம் செய்தன.
டாக்டரின் உடல் இந்திய முறைப்படி கோல்டர்ஸ் கிரீன் (Goders Green ) என்ற இடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தை நாயரின் உறவினர் கோவலப்பாரா மூப்பில் நாயரும், நீதிக்கட்சித் தலைவர்களும் நடத்திச் சென்றார்கள். ஊர்வலத்தில் கலந்துகொள்ள  இங்கிலாந்தின் செய்தி ஏடுகள் பலவும் தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருந்தன. இவர்கள் மட்டுமன்றி பல அய்ரோப்பியர்களும் கலந்து கொண்டனர். ஊர்வலம் கோல்டர்ஸ் கிரீனை அடைந்தது. கே.வி.ரெட்டி நாயுடு டாக்டர் நாயரின் அனைத்துத் தகுதிகளையும், திறமையையும், உழைப்பையும் நினைவுகூர்ந்து அரியதோர் உரை நிகழ்த்தினார். பின்னர் செய்தி ஏடுகள் சார்பாகவும், சங்கங்கள் சார்பாகவும் மலர் வளையங்கள் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டன. பின்னர் சடலம் எரியூட்டப்பட்டது. மாபெரும் நிதியை இழந்து விட்ட மாளாத் துயரத்துடன் நீதிக்கட்சித் தலைவர்கள் கலங்கித் திரும்பினர்.
டாக்டர் நாயரின் புகழ்ச்சாம்பலை இந்திய நதிகளில் கரைப்பதற்காக - அவருடைய  உறவினர் மூப்பில் நாயர் - ஒரு செப்புக் குடத்தில் எடுத்து வைத்துக் கொண்டார். டாக்டர் நாயர் எரியூட்டப்பட்ட இடத்தில் நினைவுக்கல் ஒன்று அமைக்கப்பட்டது. அதில்,
பொறிக்கப்பட்ட வாசகங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட வேண்டும். என்ற புகழ்வரிகள் பொறிக்கப்பட்டன. ஆங்கில ஆட்சியின் இந்தியச் செயலாளராக இருந்த லார்ட் இஸ்லிங்டன் பிரபு, சென்னை நகரில் வாழ்ந்த டாக்டர் நாயர், நேர்மையில் நம்பிக்கைக் கொண்டவர், நாட்டு ஒற்றுமைக்கு உண்மையாகப் பாடுபட்டவர் எனக் கூறித் தனது இறுதி வணக்கத்தைத் தெரிவித்தார்.
இந்து நாளேடு மறைந்த மாபெரும் தலைவருக்கு புகழ் மாலை சூட்டியது இப்படி:
டாக்டர் நாயர் மிகத் திறமையான, வேகமான பேச்சாளர் - வாதத் திறமைமிக்கவர் - அஞ்சாத அரசியல்வாதி - திறமையான மருத்துவர். அவருடைய இழப்பால் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம் சென்னை மக்களின் அன்றாட  வாழ்வில் நீங்கா இடம் பெற்றிருந்த மாமனிதரை நாடு இழந்து விட்டது. எனக் குறிப்பிட்டிருந்தது.
மெயில் ஏடு, டாக்டர் நாயரின் இழப்பால் சிறப்பு மிக்க குடிமகன் ஒருவரை - அரசியல்வாதியை இழந்து விட்டோம். இதற்கு மாற்று இல்லை என புகழாரம் சூட்டியது. ஆன்ட்டிசெப்டிக் ஏடு, டாக்டர் நாயரின் வளையாத குறிக்கோளையும், சளைக்காத உழைப்பையும், நினைவுகூர்ந்து கோபத்துக்கிடையிலும் அவரிடமிருந்த மனிதப் பற்றை மறக்க முடியாது என்று தன் இறுதி வணக்கத்தைச் செலுத்தியது.
இங்கிலாந்தில் டாக்டர் நாயரின் மறைவின்போது உடனிருந்த நீதிக் கட்சித் தலைவர்கள் ரூட்டர் செய்தி நிறுவனம் மூலம் ஜஸ்டிஸ் அலுவலகத்திற்கு அத்துயரச் செய்தியை அனுப்பினர். செய்தி சென்னை மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவியது. இச்செய்தியை ஜஸ்டிஸ்திராவிடன், ஆந்திரப்பிரகாசிகா ஆகிய நீதிகட்சி ஏடுகள் மட்டுமின்றி சென்னை இந்து, மெயில், சுதேசமித்திரன், பம்பாய் டைம்ஸ் ஆப் இந்தியா, அட்வொகேட் ஆப் இந்தியா, கல்கத்தாவின் இங்கிலீஷ்மேன் - ஆகிய ஏடுகளும் வெளியிட்டு இரங்கல் தலையங்கம் எழுதின.        பாலக்காட்டிலிருந்த டாக்டர் நாயரின் தமக்கையார் அம்மாளு அம்மாவிற்குத் துயரச் செய்தி தெரிவிக்கப்பட்டது. மணம் புரிந்து கொள்ளாமலேயே மக்கள் பணியில் உயிர்துறந்த அம்மாபெரும் தலைவனின் மறைவு அவர்களை உலுக்கியது.
பாலக்காடு நகரமே அன்றையதினம் துயரத்தில் மூழ்கியது. வேறு பணிக்குச் செல்லாமல் வேதனையில் புலம்பினர் பாலக்காட்டு மக்கள். கடைகளும், பள்ளிகளும் மூடப்பட்டன. துயர ஊர்வலம் நடத்தப்பட்டது. 25.07.1919இல் பாலக்காட்டு மக்கள் அனைவரும் திரண்டிருந்து இரங்கல் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் குந்நிக்குட்டி தம்பிரான், நாயரின் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான சீரிய பண்புகளையும், சிறந்த தொண்டுகளையும் நினைவு கூர்ந்து இரங்கலுரை நிகழ்த்தினார். இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநிலமோ செய்வதறியாது திகைத்தது. திரும்பிய திசைகளிலெல்லாம் துயரம், துயரம்! டாக்டர் நாயரின் புகழ்ச் சாம்பல் டாக்டர் .ஆர்.மேனன் நாயரால் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது என்ற செய்தியைக் கேட்டு - மக்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தை நிரப்பினர். அவருடைய புகழ்ச் சாம்பல் வந்தபோது அழுத கண்ணீரும், ஆற்றொணாத் துயருமாய் அஞ்சலி செலுத்தினர்.
ஆகஸ்ட் திங்கள் இரண்டாம் நாள் சனிக்கிழமை மாலை ஜஸ்டிஸ் அலுவலகத்தில், தியாகராயர் தலைமையில் பார்ப்பனரல்லாத பல்லாயிரக்கணக்கான மக்கள்கூடி, தம்முடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றினர். தியாகராயரால் அக்கூட்டத்தில் பேசவே முடியவில்லை. தீர்மானத்தின் வரிகள் இவை:
இம்மாபெரும் கூட்டமானது நமது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தலைவர் திரு.டி.எம்.நாயர் அவர்கள் லண்டனில் 17.07.1919 அன்று எதிர்பாராதவிதத்தில் மரணம் அடைந்துவிட்ட செய்திகேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறது. அவரது மரணத்தினால் நாட்டிற்கும் பிராமணரல்லாதாருக்கும் ஈடுசெய்ய முடியாத நட்டம் ஏற்பட்டுள்ளது. அவரை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தாருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இத்தீர்மானத்தை ஆதரித்து ஜே.பி.கோட்டிலிங்கம் பேசிய பிறகு, பலரும் இரங்கலுரை நிகழ்த்தினர். இவற்றிற்குப் பிறகு பி.சோமசுந்தரம் பிள்ளை டாக்டர் நாயரின் நினைவாக எழுதிய பாடல்கள் பாடப்பட்டன. இக்கூட்டத்தில், சிறுமியாக இருந்த டாக்டர் தருமாம்பாள் பாடல் பாடினார்.
இச்செய்தியை,
அக்காலத்தில் நான் சிறுமி, கூட்டங்களில் நான் நீதிக்கட்சிப் பாடல்களைப் பாடிவரும் பணியை மேற்கொண்டிருந்தேன். நமது இயக்கத் தலைவர் டாக்டர் நாயர் மரணத்திற்கு வருந்திக் கூடிய கூட்டம் ஒன்றில் நான் அவரைப்பற்றிப் பாடியது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது எனத் தம்முடைய நூலில் தந்துள்ளார் திரு.கோ.குமாரசாமி.
இக்கூட்டத்தில் குசலம் ஆசுகவி சு.கணபதியா பிள்ளை,
என் செய்வோம், என் செய்வோம்
என் தலைவா, எங்களுக்கார்
இரங்குவார் இனிமேலய்யா!
முன் செய்த வினை முடித்தோம்
உனை இழந்தோம்
மாதவனே, முதல்வா, மூத்த
தன் செல்வ மாமகனை
இந்திய மாதா இழந்தாள்
தணியாத் துன்பம்!
என் செய்வோம்! என் செய்வோம்!
வினை முடிந்தபடி இதுவோ!
என்னே! என்னே!
எனத் தொடங்கும் 40 கவிகளைப் பாடி கூட்டத்தையே அழவைத்த நிகழ்ச்சியைத் தம்முடைய நூலில் குறிப்பிட்டுள்ளார் திரு.வி.ஆர்.சந்திரன். இதே நூலில் டாக்டர் வரதராஜூலு நாயுடுவிடம் டாக்டர் நாயர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள செய்தி ஒன்று, இன்றுவரை நின்று நிலைபெற்று வருவதைக் காணமுடிகிறது.
எனக்கு நம்பிக்கையிருக்கிறது. காங்கிரசில் உள்ள தாங்களும், தங்களைப் போன்ற பிற பார்ப்பனரல்லாதாரும் எப்போதாவது ஒருநாள் என் கட்சியின் லட்சியத்தை நோக்கி வந்தே ஆகவேண்டும்.
எவ்வளவு மகத்தான உண்மை! 40 ஆண்டுகள் கழித்து இதே டாக்டர் வரதராஜூலு நாயுடு ராசாசியின் அமைச்சரவையைக் கவிழ்த்ததும், இதற்குத் திரு.காமராசரே ஒத்துழைத்ததும், இன்றுவரையில் பார்ப்பனர் செல்வாக்கு காங்கிரசில் இல்லாதபடி செய்திருப்பதும் நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் நாயரின் தீர்க்க தரிசனம் அல்லவா? என்றும் குறிப்பிடுகிறார் திரு.வி.ஆர்.சந்திரன்.
டாக்டர் நாயரின் தொண்டுகளை தம்முடைய என் நினைவுகள் ((My Memories ) என்ற நூலில் நினைவு கூர்ந்த - ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு,
டாக்டர் நாயரால் நீதிக்கட்சியும், பார்ப்பனரல்லாதாரும் பெற்ற நன்மைகள் மிகப் பல. இத்தகைய தன்னலம் கருதாத் தொண்டருக்கு ஒரு சிலையாவது வைத்திருக்க வேண்டுமல்லவா?
எனக் கவலைப்படுகின்றார். கவலையில் நியாயம் இருக்கிறது. சென்னை நகராட்சியின் சார்பில் எழும்பூர் பகுதியில் ஒரு சாலைக்கு டாக்டர் நாயரின் பெயர் வைக்கப்பட்டிருப்பதை இங்கெண்ணி நாம் ஆறுதல் கொள்ளலாம்.
டாக்டர் நாயருடன் இயக்கத் தோழராயிருந்து அவருடைய ஆங்கில உரைகளை மேடைகளில் தமிழில் மொழி பெயர்த்தவர் சாத்தூர் திரு.எஸ்..சோமசுந்தரம் பிள்ளை. டாக்டர் நாயர் இறந்தவுடன் (Dr.T.Madhavan Nair M.D’) என்ற ஆங்கில நூலை எழுதி மதுரையில் வெளியிட்டவர். இந்நூலில் இவர் டாக்டர் நாயரைப் பற்றிக் கூறும் செய்திகள் இங்கு வைத்தெண்ணத் தக்கவை.
டாக்டர் நாயர் சிந்திக்க மூளையும், உணர்வதற்கு நெஞ்சமும், செயல்படக் குறிக்கோளும், பேசுவதற்கு நாவும், காண்பதற்கு கண்களும், கேட்பதற்குச் செவிகளும் பெற்றிருந்தார் - இவற்றையெல்லாம்விட அவரிடம் வன்மை வாய்ந்த எழுதுகோல் ஒன்று இருந்தது. இவையனைத்தையும் அவர் ஓர் உயர்ந்த நோக்கத்திற்காக, உயர்ந்த முறையில் ஒரு கால் நூற்றாண்டுக்காலம் பயன்படுத்தினார். போற்றுதலையும், தூற்றுதலையும் அவர் என்றும் பொருட்படுத்தியதில்லை. நேர்மையின்மை, ஒழுக்கமின்மை, ஊழல் இவற்றை உண்மையாக வெறுத்தவர் அவர். போலித்தனம் அவருக்கு அறவே பிடிக்காத ஒன்று. எவ்வித சலுகையையும் எவரிடமும் எதிர்பார்க்காத அவர், தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த பண்புகள் இவைகளே. ஒரு சலுகையை நாம் எதிர்பார்த்து அடைகிறோம் என்றால் நம்முடைய உரிமை ஒன்றை இழக்கிறோம் என்று கருதியவர் அவர். கல்வியாளராய், விஞ்ஞானியாய், பேச்சாளராய், வாதத்தில் வல்லவராய், அரசியல்வாதியாய், எழுத்தாளராய், நேர்மைமிக்கவராய், சட்டமன்ற ஆற்றலாளராய், மருத்துவராய் விளங்கிய இம்மாபெரும் மனிதரின் வாழ்வு போற்றுதலுக்குரியது; நமக்கு வழிகாட்டியாய்த் திகழ்வது
என்றும்,
டாக்டர் நாயரை, லார்ட் மெக்காலேவின் இந்தியப் பதிப்பு என்றே கூறலாம். மெக்காலேவைப் போன்றே குறிக்கோளை அடையும் வேகம், கற்பதில் ஆர்வம், சளையாத உழைப்பு, சரியான காரணங்களுக்காகப் போராடுவதில் காளையைப் போன்ற பாய்ச்சல் கொண்டவர் டாக்டர் டி.எம்.நாயர். மெக்காலேவைப் போன்றே தனக்கு முன்பிருந்த வரலாற்றையும், செய்திகளையும் விரும்பினார். அவற்றைக் கற்றுணர்ந்து அழகிய முறையில் நடைமுறைப் படுத்தினார். மெக்காலேவைப் போன்றே வன்மை வாய்ந்த நாவும், வாளினும் கூரிய எழுதுகோலும் இவரிடமிருந்தன. மெக்காலேவைப் போன்றே தமக்கையாரிடம் அளவற்ற அன்பு வைத்திருந்தார். அவரைப் போலவே வேலைக்காரர்களையும் நேசித்தார். இவை அனைத்திற்கும் மேலாக மெக்காலேவைப் போன்றே இவரும் இறுதிவரையில் மணமாகாமலே இறந்தார். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் நாயரின் உடனிருந்து அவரை உணர்ந்த - இந்த வைர வரிகள் நம் நெஞ்சிலும் துயரம் படியச் செய்ய வல்லவை. மேலும்,
டாக்டர் நாயருக்குத் தகுந்த முறையில் நினைவுச் சின்னம் அமைக்க நிதி திரட்டப்பட்டு வருகிறது. ஆனால் அவருடைய தொண்டுகளுக்கும் தியாகத்திற்கும் சிலை மட்டுமே சரியான நினைவுச் சின்னமாகிவிடாது. பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை மேலும் வளர்த்து வலிமை பெறச் செய்வதும், அவர் நடத்திய ஜஸ்டிஸ், திராவிடன் ஏடுகளை நிலைகுலையாமல் நடத்தி வருவதுமே, அவருக்கு நாம் அமைக்கும் சரியான நினைவுச் சின்னமாகும்.
என்றும் குறிப்பிட்டுள்ளார் எஸ்..சோமசுந்தம் பிள்ளை. இவைகள் பார்ப்பனரல்லாத ஒவ்வொருவரும் எண்ணி வழிநடக்கத்தக்கவை.
டாக்டர் நாயரைப்பற்றி தன்மானத் தலைவர் தந்தை பெரியார் கூறிய கருத்துக்களை இங்கே குறிப்பிடுகிறேன்:
இன்று, நமது காலஞ்சென்ற தலைவர் டாக்டர் நாயர் அவர்கள் உயிர் துறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்றாலும், அத்தலைவர்கள் இறக்கவில்லை என்று சொல்லுவேன். அவர் கொள்கைகளும், தொண்டுகளும் இன்னும் இந்நாட்டில் வேலை செய்து கொண்டு வருகின்றன. ஆதலால் அவர் இன்னும் உயிருடனிருக்கிறார். டாக்டர் ஒரு புரட்சிவீரர்; சுயமரியாதை வீரர்; அவரை ஒரு திராவிட லெனின் என்று சொல்லவேண்டும். நாயர் நாளில் பிறக்காதவர்களுக்கும், அவர் நாளில் கோவணம்  கட்டாத சிறுபிள்ளையாய் இருந்தவர்களுக்கும் - இன்று, நாயர் பெருமையையும் அவரால் தாங்களடைந்த மேன்மையையும் அறிந்துகொள்ள முடியாது. ஏனெனில், நாயர் தொண்டாற்றத் தொடங்கிய நாளில் இந்நாட்டு மக்கள் நிலை எப்படியிருந்தது என்பது அப்போது போதிய அறிவு பெற்றிருந்த மக்களுக்கே விளங்கியிருக்கும். அவர் தொண்டின் பயனாய் இப்போது யோக்கியதைப் பெற நேர்ந்த மக்கள் நாயர் தேசத்துரோகி என்றும் வகுப்புவாதி என்றும் பேசலாம். அப்படிச் சொல்லும் ஒவ்வொரு திராவிடனும் இன்னும் தன்னைப்பற்றி யோசித்துப் பார்ப்பானானால் சிறிது சுயமரியாதை இருந்தாலும், நாயர் இனியும் கொஞ்ச காலமிருந்து வகுப்புவாதத்தைக் கொழுந்து விட்டெரியச் செய்யாமல் போய்விட்டாரே! என்று வருத்தப்படுவான்.
(சென்னை கோகலே மண்டபத்தில் 20.07.1949 இல் நடந்த டாக்டர் தின நிகழ்வில் ஆற்றிய சொற்பொழிவு)
தந்தை பெரியாரின் வருத்தத்தில் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரின் வருத்தமும் கலந்திருந்தது - கலந்திருக்கும் என்பதைக் காலம் எப்போதும் மெய்ப்பித்து வந்திருக்கிறது; இனியும் மெய்ப்பிக்கும்!

நூல் - டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்

ஆசிரியர் - கவிஞர் கூ.வ.எழிலரசு


Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!