டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் - பகுதி -5

எழுத்தாற்றலில்
டாக்டர் நாயரின் எழுத்துப் பணி, நீதிக்கட்சியின் ஜஸ்டிஸ் ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே வளர்ந்து நின்ற ஒன்றாகும். இதழ்ப் பணியும், எழுத்துப் பணியும் அவருடைய இறுதிநாள் வரையில் நின்று நிலவியவையாகும்.
எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றுகொண்டிருந்த காலத்திலேயே மாணவன் (The Student) என்ற இதழின் ஆசிரியராக இருந்தார் நாயர்சென்னைக்குத் திரும்பிய பிறகு பரமசிவம் பிள்ளையின் மேற்பார்வையில் வெளிவந்து கொண்டிருந்த மெட்ராஸ் ஸ்டேண்டர்டு  ஏட்டில் முக்கிய பொறுப்பேற்றிருந்தார். இவை மட்டுமின்றி ஆன்டி செப்டிக் ((Theory and Practice of the Municipal Government) என்ற மருத்துவ இதழை முதலில் மாத இதழாகத் தொடங்கி தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய சொந்தப் பொறுப்பில் நடத்திவந்தார்இவ்விதழில் நாயர் தன் முழு எழுத்தாற்றலையும் நிலைநாட்டியுள்ளார். அவருடைய ஆங்கில நடை எளியது - சிக்கலற்றது.
அக்காலத்தில் மருத்துவத்திற்காக எளிய, சிக்கலற்ற நடையில் இதழ் நடத்துவதென்பது எத்துணை அரிது என்பதை எண்ணிப் பார்க்கையில் நாயரின் முழுத் திறமையும் நமக்குப் புலப்படும்.
இந்த ஆன்ட்டி செப்டிக் இதழில் நாயர் அன்னிபெசன்ட் அம்மையாரைப்பற்றி எழுதிய எழுத்துக்கள்தாம், அவரை நீதி மன்றம் வரை செல்ல வைத்தது. நாயரின் எழுத்து வன்மை வரைந்த வரலாறு அது! அதை விரிவாகப் பின்வரும் பக்கங்களில் காண்போம்.
இவை மட்டுமல்ல சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக மாகாண  அரசாங்கம்- கொள்கைகளும், நடைமுறைகளும் (Diabetes - It’s nature and Treatment), என்ற பொருளில் நிகழ்த்திய ஆறு சொற்பொழிவுகள் இவருடைய முதல் நூலாக வெளிவந்தது.
1914இல் நீரிழிவு நோயின் தன்மைகளும் - மருத்துவமும் (Diabetes - It’s nature and Treatment) என்னும் மருத்துவ நூலை எழுதி வெளியிட்டார் டாக்டர் நாயர். இந்நூல் இத்துறையில் - இந்தியாவிலேயே மிகச் சிறந்த நூலாகக் கருதப்படுகிறது.
கட்டுரைகள்: ஜாதிகளும் குடியரசும் (Castes and Democracy) அன்னிபெசன்டின் வெளிப்பாடுகள் (Evolution of Anne Besent) ஒரு இந்தியனின் பார்வையில் இந்தியப் பிரச்சினைகள் (An Indian’s view on Indian Problems) தொழுநோயின் காரணங்கள் (Antiology of Leprosy ) போன்ற கட்டுரைகள் பல்வேறு இதழில் டாக்டர் நாயரால் எழுதப்பட்டனஇவற்றுடன் இந்தியக் கல்வி முறையில் சமூக நீதி இல்லாமை (Social injustice of the Indian Education Systemஎன்ற கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் நாயரின் பல்துறை அறிவையும் ஆழ்ந்த எழுத்தாற்றலையும் பறைசாற்ற வல்லனவாக இருந்தன. எழுதும் பழக்கத்தை அதிகமாக வளர்த்துக் கொண்டிருந்தவர் நாயர். இதற்கு ஒரு சான்றாக ..நாயர் என்பவர் கூறுகிறார்:
டாக்டர் நாயர் சென்னை வேப்பேரியில் லேடி நேப்பியர் வில்லா (Lady Nappier Villa) என்னும் பெயரிட்ட பெரியதொரு வீட்டில் வசித்தார்மழைக் காலத்தில் அவ்வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்கி விடும். இச்சூழலில் என்னுடைய வீடு தொடர்பின்றித் துண்டிக்கப்பட்டது. இப்போது அது ஒரு தனித்தீவு. அத்தீவில் ஒதுக்கப்பட்டிருப்பவன் நான் என்று கவிதை எழுதுவார்.
இத்தகு வியக்கத்தக்க எழுத்தாற்றல் கொண்டிருந்த நாயர் ஜஸ்டிஸ் ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்ற பிறகு அதன் வேகப் பாய்ச்சலில் சிக்கி விலா நொந்து போனவர்கள் பலர்நாயர் ஜஸ்டிஸ் ஏட்டில் ஆசிரியராக இருந்த காலத்தில் சென்னையிலிருந்த டெய்லி எக்ஸ்பிரஸ் ஏடும் மெட்ராஸ் மெயில் ஏடும் ஒன்றாக இணைக்கப்பட்டு மெட்ராஸ் மெயில் என்ற புதிய நாளோடு தொடங்கி வெளிவந்ததுஇதன் ஆசிரியராக இருந்தவர் ஆர். டபிள்யூ. புரோக். இவர் நாயரைப் பற்றி செருக்குடன் - (‘A Political Naireado well) என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். இதில் நாயரைப் பற்றித் தரக்குறைவாகவும், மூளையை மழுங்கச் செய்பவர் என்றும் கூட எழுதியிருந்தார். இதற்கு ஜஸ்டிஸ் ஏட்டில் எழுதப்பட்ட பதில் இது: இப்பதிலுக்கு A Journalialistic Broken Read  (ஓர் எழுத்தாளனின் உடைந்துபோன எழுது கோல்) என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
நாயரை ஏசுவதற்கு மூளை மழுங்கச் செய்பவர் என்ற சொற்களை புரோக் பயன்படுத்தி உள்ளார்அவர் ஏன் இச்சொற்களைப் பயன்படுத்தி உள்ளார் என்றால் நீண்ட காலமாகவே அவர் மூளை மழுங்கிப் போனவராக இருப்பதால்தான்! ஆங்கிலேயர் பலர் இந்தியாவில் பல்வேறு துறைகளில் பல நற்பணிகளைச் செய்து வருகிறார்கள்-சிலரோ வேலை இல்லாமல் அலைகிறார்கள். இந்த வேலையில்லாக் கூட்டத்தில் ஒருவரைத் தூக்கி வைத்துக்கொண்டு, நாயருக்கு புத்தி சொல்ல அவரை ஏவிவிட்டிருக்கிறது மெட்ராஸ் மெயில் இச்செயல் நாயரின் செருப்புத் தைப்பவரை அழைத்துக் கொண்டு போய், நாயரின் சட்டை தைப்பவருக்கு அறிமுகம் செய்த கதையாக இருக்கிறது.
இச்சொற்களில் வெள்ளையரைத் தாக்கும் நாயரின் வேகத்தை நாம் காண முடிகிறதல்லவா?
நீதிக் கட்சியைத் தோற்றுவித்து பார்ப்பனீயத்தைத் தோலுரித்துக்காட்டி பார்ப்பனரல்லாத பாமர மக்கள் என்னும் ஊமைகளுக்கு உயிர்க்குரலாய், குருடர்களுக்குப் பார்வையாய்ப் பணியாற்றியதால் டாக்டர் நாயரும், தியாகராயரும் தேசத் துரோகிகளாக்கப்பட்டனர் வகுப்புவாதிகள் என்று வக்கணை பேசப்பட்டனர். இந்நிலையில் டாக்டர் நாயருடைய கருத்துக்களைப் புகழ்பெற்ற நாளேடுகள் எதுவும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தனஇயக்கம் கண்டபின் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், எழுதிய கருத்துரைகள் அனைத்தும் இன்று பெருமளவில் கிடைக்காமற் போனதற்கு இதுவே முக்கியக் காரணம் எனலாம்.
இச்சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்ட டாக்டர் நாயர்தன்  பொறுப்பிலிருந்த ஜஸ்டிஸ் ஆன்டிசெப்டிக் ஏடுகளை முழுக்க முழுக்க இயக்கக் கொள்கைகளை, பார்ப்பனீயத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கருத்துக்களைப் பரப்பும் கருவியாகவே மாற்றினார்.
டாக்டர் நாயரின் செல்வாக்கால், உழைப்பால் ஜஸ்டிஸ் ஏடு அரசியல் உலகில் ஒரு தனி இடத்தை குறிப்பிடத்தக்கவகையில் பற்றிக் கொண்டது. தன் வாழ்நாள் வரையில் இவ்விரு ஏடுகளுக்கும் உழைப்பதை உயிர் மூச்சாகவே கொண்டிருந்தார் டாக்டர் நாயர்.
ஒருமுறை ஓய்விற்காக நீலகிரியில் தேவசோலை என்ற இடத்தில் தங்கி இருந்தபோது தேவசோலை ஞானியின் சிந்தனைகள் என்ற தலைப்பில் அரசியல் கருத்துக்களைத் தன் பெயரிடாமலே எழுதினார் நாயர். ஆனால் அக்கருத்துக்களின் நடையும், போக்கும் அதை எழுதியவர் நாயரே என்பதைக் காட்டிக் கொடுத்தன.
அண்ணாவுக்கென ஒரு தனிநடை - அவர் எப்பெயரில் எழுதினாலும் காட்டிக் கொடுத்ததைப்போல்-நாயருக்கென ஒரு தனிநடை இருந்ததுஅந்நடையில் நகைச்சுவையான பதிலும், புயல் போன்ற சீற்றமும், கடல் போன்ற கருத்து வளமும் பொதிந்து கிடந்தன.
டாக்டர் நாயரின் கட்டுரைகளையும், கருத்துக் குவியல்களையும் சில ஹோம் ரூல் இயக்க - அன்னிபெசன்ட் தலைமையேற்ற காங்கிரஸ்காரர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருமே படித்தனர் எனலாம்.
காங்கிரஸ் பேரியக்கத்தால் பார்ப்பனரல்லாதார்க்கு எப்பயனும் இல்லை என்பதை உணர்ந்த டாக்டர் டி.எம்.நாயர் அதன் முழுப் பகைவரானார் - தன் முழுத் திறமையையும் ஒன்றாக்கிக் காங்கிரஸை ஒடுக்குவதற்கே செலவிட்டார். ஒருமுறை மலபார் மாப்ளா இனத்தினர்களுக்குள் காங்கிரஸ் கிளர்ச்சியைத் தூண்டி விட்டது. அதைக் கண்ட நாயர் தன்னுடைய ஏட்டில்,
காங்கிரசின் இச்செய்கை துப்பாக்கி மருந்துக் கிடங்கில் புகை பிடிப்பதற்கு ஒப்பாகும் என்று எழுதிக் காங்கிரசை எச்சரித்தார். இவ்வாறு காங்கிரசையும், காங்கிரசால் பாலூட்டி வளர்க்கப்பட்ட பார்ப்பனீயத்தையும் எதிர்ப்பதே நாயரின் எழுதுகோல் வேலையாயிற்றுகுறிப்பாகப் பார்ப்பனர் இந்திய விடுதலைக்குப் பின்னரும் தங்களின் வாய்ப்பு, வசதிகளை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையால் உருவாக்கப்பட்டு அன்னிபெசன்ட் அம்மையாரால் நடத்தப்பட்டு வந்த ஹோம்ரூல் இயக்கமும் - அன்னிபெசன்ட் அம்மையாரும் நாயரின் வாழ்நாள் பகைவர்களாயினர். இதன் விளைவாக,
நீக்ரோ தன்னுடைய தோலை மாற்றிக் கொண்டாலும், சிறுத்தை தன்னுடைய  தோலின் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பனன் தன்னுடைய ஜாதிவெறியை மறக்கவே மாட்டான்.
எனப் பார்ப்பனர் மீதும், விடுதலை வரும் என்று கூறிய அன்னிபெசன்ட் அம்மையார் மீது,
வருகின்ற விடுதலை, அக்கிரகாரங்களோடு நில்லாமல் எங்கள் வீதிகளுக்கும் வரட்டும் என்றும் குத்தீட்டிகளுடன் உலா வரத் தொடங்கியது ஜஸ்டிஸ் ஏடு.
இங்கு, டாக்டர் நாயர் அன்னிபெசன்ட் அம்மையாருடன் கொண்ட கருத்து மாறுபாடு-பகைமைக்குக் காரணமான கால நிகழ்வுகளைப் பார்ப்போம்.
இந்திய மக்கள் விடுதலைக்குப் போராடத் துவங்கிய காலத்தில், சென்னை பிரம்மஞான சபையின் பொறுப்பாளராக இருந்த அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்துப் பெண்மணி ஹோம் ரூல் என்றொரு இயக்கத்தைத் தொடங்கினார்.
இந்தியா விடுதலை பெற்றால் தம்முடைய வாய்ப்பு, வசதிகளை இழந்துவிட நேரிடுமே என்றஞ்சிய பார்ப்பனர்கள் இந்த அமைப்பில் இணைந்து கொண்டனர். இந்த இயக்கத்தின் கொள்கைகள் பலவாறாகக் கூறப்பட்ட போதிலும் இந்தியர்கள் நிற்கவே முடியாமல் இருக்கிறார்கள் -இனிமேல்தான் நிற்கவும் நடக்கவும் பழக வேண்டும். அதற்குப் பிறகுதான் சுதந்திரம் கேட்கவும், ஆட்சி நடத்திக் கொள்ளவும் வேண்டும், அக்காலம் வரையில் ஆங்கிலேயர் ஆட்சி இருக்கட்டும்; அவர்களின் கீழ் நாம் சுயாட்சி செய்துகொள்ளப் பழகுவோம் என்பதுதான் அடிப்படையான கருத்து. இக்கருத்தை நாயர் தன்னுடைய Our Immediate Political Out – Look என்ற சொற்பொழிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய கொள்கை விடுதலை பெற்றபிறகும் பார்ப்பனீய ஆதிக்கத்தை நிலைநாட்டத்தான் உதவும் என்பது வெள்ளிடைமலையாகத் தோன்றிவிட்டது நம் தலைவர்களுக்கு! இதுமட்டுமன்றி அன்னிபெசன்ட் அம்மையாரின் அரசியல் நிகழ்வுகள் காங்கிரசுக்காரர்களாலும் நம்பக் கூடியதாக இல்லைஇச்சூழ்நிலையை அரசியல் ஞாபகங்கள் என்ற நூலில் அக்காலத்தில் ஹிந்துஸ்தான் ஏட்டின் துணை ஆசிரியராக இருந்த திரு.கி.சடகோபன் என்பவர் பின்வருமாறு கூறுகிறார்:
1914 ஆம் வருஷத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் இந்திய அரசியல் அரங்கத்தில் தோன்றினார். அவருடைய கைங்கரியம் சுமார் அய்ந்து வருஷகாலம் நடைபெற்றது. ஆனால் பழைய தேசீயவாதிகளுக்கு அகில இந்திய அரசியல் தலைவராகப் பெசன்ட் அம்மையார் இருப்பது பிடிக்கவில்லைஇதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, ஆங்கில ஜாதிப்பெண் என்னும் காரணம். அவள் எவ்வளவுதான் இந்தியாவுக்கு அனுகூலமாக வேலை செய்தாலும், நான் அவளை நம்பவே மாட்டேன்; அவளுடைய பிறவிக்குணம் போய்விடுமா, ஸார்? நெருக்கடியான நிலைமை ஏற்படும்போது, அவளுடைய அனுதாபம் தான்பிறந்த நாட்டினிடம் இருக்குமா? குடி புகுந்த நாட்டினிடம் இருக்குமா? என்று பல தலைவர்கள் வாதித்ததை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் நினைத்தது போலவே, அன்னிபெசன்ட்டும் நடந்துகொண்டார். கடந்த யுத்தத்தின்போது, இந்தியாவுக்குச் சுய ஆட்சி கொடுப்பதாக வாக்களித்தால்தான், யுத்தத்துக்கு உதவி செய்வோம் என்று தலைவர் திலகர் சொல்லிக் கொண்டிருக்கையில் அன்னிபெசன்ட் அம்மையார், பேரம் செய்வதற்கு இதுவல்ல தருணம். பேரம் செய்வது இந்தியரின் கவுரவத்திற்கு ஏற்றதல்ல என்று கூச்சல் போட்டார்அன்னிபெசன்ட்டைத் தலைமைப் பதவியிலிருந்து வீழ்த்த வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்ட பழந்தலைவர்களில், சி.விஜயராகவாச்சாரியார் முதலில் நின்றார்.
அக்காலத்தில் சென்னை ராஜதானியில் அரசியல் துறையில் அன்னிபெசன்ட்டு அம்மையார் ஏகச்சக்கராதிபத்தியம் நடத்திவந்தார். அவருக்குப் போட்டித் தலைவரே கிடையாது. இதற்கு ஒரு முக்கியமான காரணமென்னவெனில், சென்னை மாகாணத்தில் பிரம்மஞான சங்கமானது நன்றாகப் பரவி, ஜனங்களிடம் நல்ல செல்வாக்குப் பெற்றிருந்தது. பெசன்ட்டு அம்மையார் அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தது மாத்திரமல்ல; அவரைப் பராசக்தியின் அவதாரமென்றே, அந்தச் சங்கத்தில் சேர்ந்த அனைவரும் நினைத்துத் தொழுது வந்தார்கள்அம்மையார் அந்தச் செல்வாக்கை அரசியல் வேலைகளுக்குப் பிரயோஜனப்படுத்திக்கொண்டார். இப்பேர்ப்பட்ட செல்வாக்கு வாய்ந்த ஒருவரை எவ்வாறு வீழ்த்துவது? சென்னை ராஜதானியிலுள்ள மிதவாதிகளெல்லோரும் சூரத் காங்கிரசுக்குப் பிறகு மனம் இடிந்து பூனைகளாகி விட்டனர். அதுவுமின்றி அவர்களில் முக்கியமானவர்கள் சர்க்கார் உத்தியோகப் பரிசுகளையும் பெற்றுவிட்டார்கள். அதுவே அவர்களுக்குச் சுயராஜ்யமாகி விட்டது. எஞ்சினவர்கள் பெசன்ட்டுடன் போர்செய்து யார் ஜெயிப்பது என்று பத்திரிகைகளில் எழுதியதோடு, தங்களுடைய வியாபாரத்தைச் சுருக்கிக் கொண்டார்கள்.
இவ்வாறு அனைத்து நாளேடுகளும் தங்களைச் சுருக்கிக் கொண்டபோது, டாக்டர் நாயரின் ஆன்டிசெப்டிக் ஏடு மட்டும் அன்னிபெசன்ட்மீது கூர்வாளாகப் பாய்ந்ததுபிரம்மஞான சபையின் ஒழுக்கமின்மைகளை உலகறியச் செய்தது. நாயரின் ஆன்டிசெப்டிக் இதழில் ஒரு கட்டுரையில் ஒரு மகாத்மாவின் காமக்களியாட்டங்கள்  PschoPathic Sexualities in a Mahatma) என்ற தலைப்பிட்டு பிரம்மஞான சபையைப்பற்றி பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: இங்கிலாந்து பிரம்மஞான சபையின் மேலிடத் தலைவர்களுள் ஒருவரான லெட் பீட்டர் (Lead Beater ) என்பவர் அமெரிக்கப் பயணத்தின்போது தன்னுடன் வந்திருந்த சிறுவனைத் தகாத முறையில் உடல் உறவு கொண்டார். இதன் காரணமாகவே லெட் பீட்டர் பிரம்மஞான சபையிலிருந்து  வெளியேறும் நிலை ஏற்பட்டதுஇவரை மீண்டும் 1909இல் தனது உறுப்பினராக பிரம்மஞான சபை ஏற்றுக்கொண்டதுஅச்செயலுக்காக அச்சபை அளித்த விளக்கம், லெட்பீட்டரும், அன்னிபெசன்ட் அம்மையாரும் ஒரு ரகசியமான தத்துவ சோதனை((Occult Expriment)யில் ஈடுபட்டார்கள். அதன்பிறகே லெட் பீட்டர் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பதுதான்இதற்குப் பிறகு லெட்பீட்டரும், அன்னிபெசன்ட்டும் இணைந்து ஆந்திரப் பார்ப்பனச் சிறுவன் ஒருவனை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை அழைத்து வந்து, அவனே அடுத்த தீர்க்கதரிசி எனப் பிரகடனம் செய்தனர்ஆனால் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தந்தை தன் மகனைத் தன்னிடமே ஒப்படைக்கும்படி அன்னிபெசன்ட் அம்மையார் மீது வழக்குத் தொடுத்தார்.
பிரம்ம ஞானசபைபற்றிய இத்துணைச் செய்திகளை அம்பலப்படுத்திய நாயர் அன்னிபெசன்ட் அம்மையாரின் இயக்கத்தால் பார்ப்பனரல்லாதார்க்கு பயன் எதுவுமில்லை என்பதைக்கூறி நன்கு எச்சரித்தார். இக்கட்டுரையை இந்து நாளேடு எடுத்துக்கூறி நாயரைக் கண்டித்து அறிக்கைவிட்டது. இதன் தொடர்ச்சியாக அன்னிபெசன்ட் அம்மையார் டாக்டர் நாயர் மீதும், பதிப்பாளர் மீதும் வழக்குத் தொடுத்தார். அப்போது அன்னிபெசன்ட் அம்மையார் கூறிய சொற்கள் இங்கு கருதத் தக்கவை:
என் உடலைத் தீ சுடுகின்ற வரையில் நாயரின் சொற்கள் சுடாமல் இருக்காது. நான் வயதானவள் - பெண். இதற்குமேல் நான் இதைப்பற்றி ஒன்றும் கூறப்போவதில்லை.
பார்ப்பனீயத்தை சுட்டெரிக்கும் பணியில் அஞ்சாமல் நின்ற நாயர் இச்சொற்களைக் கேட்டும், அன்னிபெசன்ட் மீது இரக்கம் கொள்ளவோ, பின்வாங்கவோ மறுத்துவிட்டார்அவருக்குள் குடிகொண்டிருந்த போர்க்குணம் இச்சமயத்திலும் அன்னிபெசன்ட் மீது புயலாகப் பாய்ந்தது - வழக்கின்போது நாயர் கூறினார்:
She (Anne Besent) is a Woman of deep Penetration quick conception and easy delivery
இவ்வரிகளை மேலோட்டமாக மொழிபெயர்த்தால்:
அன்னிபெசன்ட் அம்மையார், கருத்துக்களை ஆழமாகத் தனக்குள் வாங்கி, அதை வேகமாக உருவாக்கி, எளிமையாக வெளியே தருபவர்
என்று கருத்துப்படும். ஆனால் நாயர் - அன்னிபெசன்ட் வழக்கையும், பார்ப்பனீயத்தை வேரறுக்கத் துவளாது போராடிய நாயரின் மன நோக்கத்தையும் கருத்தில் கொண்டு மொழிபெயர்த்தால் (இப்படி மொழி பெயர்ப்பது தான் இந்த இடத்திற்குச் சரியாக இருக்கும்) என்ன கருத்து கிடைக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! (இச்செய்திகள் முழுவதையும் யூஜின் எஃப். இர்ஷிக் தம்முடைய Politics and Social Conflict in South India - என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.)
இவற்றைப் பார்த்து, டாக்டர் டி.எம்.நாயர் ஒரு பார்ப்பன இன எதிரி என்று ஒட்டுமொத்த முடிவுக்கு வந்தால் அது மிகப்பெருந்தவறாகும். அவருக்கு உதவியாளராக இருந்தவரே ஒரு பார்ப்பனர்தான்! அவருடைய சொத்துக்களை நிர்வகித்து வந்தவரும் ஒரு பார்ப்பனர் தான்! இதைப்பற்றி அவரிடம் ஒருமுறை கேட்கப்பட்டபோது,
பார்ப்பனன்தான் அளித்த வேலையை எதிர்க்கேள்வி கேட்காமல் ஒழுங்காகச் செய்பவன். அதனால்தான் அவனை வேலைக்கு வைத்திருக்கிறேன் என்றும் பதில் கூறியிருக்கிறார். இக்கருத்தைக் கொண்டிருந்த நாயர் பார்ப்பன இனத்தின் எதிரி அல்ல - மாறாக மதத்தின் பேரால் - பராசக்தி வடிவமாய் - மக்களை ஏமாற்றி வந்த அன்னிபெசன்ட் அம்மையார் தனக்கிருந்த மக்கள் ஆதரவை அரசியலுக்குப் பயன்படுத்திப் பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்திற்கு அடிக்கல் நாட்ட முற்படும் போது வெகுண்டெழுந்தார் - வெங்கனலாய்ச் சீறினார்.
இவ்வழக்கத்திற்கு முன்பே அன்னிபெசன்ட் அம்மையாரை அறிவுறுத்தியும் எச்சரித்தும் பல இதழ்களில் (ஆன்ட்டிசெப்டிக் இதழ்களில்) கடிதம் எழுதினார். அவற்றிலும் அன்னிபெசன்ட்டின் ஒழுங்கற்ற மதக்கோட்பாடுகளைச் சாடினார். இக்கடிதங்கள் அனைத்துமே அன்னிபெசன்ட்டின் சுயசரிதைக்கு நாயர் அளித்த நன்கொடைகள் என்றுதான் கூறவேண்டும் என்கிறார் பேராசிரியர் ஒருவர்.
அன்னிபெசன்டின் வாழ்வும் - பொதுப்பணிகளும் (Life and Public activities of Mrs Besent) என்ற கட்டுரை -அன்னிபெசன்ட் அம்மையாரைப்பற்றி நாயர் எழுதிய இறுதிக் கட்டுரையாகும். இக்கட்டுரையில் அன்னிபெசன்ட் அம்மையாரின் சமூக, மத, அரசியல், சமயச் சார்பின்மை போன்ற கருத்துக்களை விரிவாக அலசி ஆராய்ந்து அவருடைய தொண்டர்களும் அவரைப் புரிந்துகொள்ளச் செய்தது. இக்கருத்துக்கள் பாய்ந்த புலிப் பாய்ச்சலில் - அதுவரை ஆன்மஞானி என்றும், தேவியின் வடிவம் என்றும் ஒழுக்க சீலர் என்றும் மக்களால் நம்பப்பட்டு வந்த அன்னிபெசன்ட் அம்மையாரின் தூய்மை வேடம் மக்கள் மனத்திலிருந்து கலைந்து மறைந்தது. பார்ப்பனீயத்தின் அயர்லாந்துப் போர்வையிலிருந்து பல பார்ப்பனர்கள் காப்பாற்றப்பட்டார்கள்! காங்கிரசுக்காரர்களே கண்டு, குழம்பிக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு - காங்கிரசில் இருந்து விலகிய டாக்டர் நாயர் தான் முடிவுரை எழுதினார்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி ஆதரவு திரட்ட இங்கிலாந்து சென்றிருந்த காலத்தில் நாயரின் எழுத்துப்பணி குறிப்பிடத்தக்க வகையில் இங்கிலாந்து மக்களைச் சிந்திக்க வைத்ததுஇங்கிலாந்தின் ஸ்பெக் டேட்டர் பத்தொன்பதாம் நூற்றாண்டும் அதன் பிறகும் மாத இதழ்களிலும், டெய்லிடெலிகிராப் எடின்பர்க் ரெவியூ ஆகிய நாளேடுகளிலும் அவர் எழுதிய எழுத்துக்களையெல்லாம் தொகுத்தால் அதுவே ஒரு பெரு நூலாக பார்ப்பனரல்லாதாரின் உரிமைக்குரலாகத் திகழும் என்கிறார் திரு. கோ. குமாரசாமி. இவை மட்டுமின்றி லண்டன் டைம்ஸ், கார்டியன் என்ற நாளிதழ்கள் டாக்டர் நாயரின் புகழ்பெற்றப் பேருரைகளை எழுத்து வடிவில் வெளியிட்டு, தலையங்கமும் தீட்டி அவருடைய கோரிக்கைக்கு வலிமை சேர்த்தனமாண்டேகுவின் அரசியல் சீர்திருத்த அறிவிப்பினால் வெறுப்பும், ஏமாற்றமும் கொண்ட டாக்டர் நாயர் இங்கிலாந்தில் ஸ்பெக்டேட்டர் இதழில் எழுதிய கட்டுரை இது:
இந்த நாட்டில் இந்தியாவைப்பற்றிப் பேசுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள்; கூறிடின் மாண்டேகு - செம்ஸ்போர்டுவை விட பலவகையில் மேம்பட்டவர்கள் இவர்கள். இந்தியாவின் நன்மையில் பற்றுகொண்ட இவர்களும் மற்றும் பல காமன்சபை அங்கத்தினர்களும் இடம்பெற்ற ஒரு கூட்டுக் கமிட்டி கூடி ஆராய்ந்தால் இந்திய அரசியல் முன்னேற்றத்திற்கும் அதன் பாதுகாப்பிற்கும் ஏற்றதொரு திட்டத்தைத் தயாரிப்பது பெரிய செயலல்ல! இப்படிப்பட்டதொரு கமிட்டி நியமிக்கப்பட்டால் அது என்ன செய்திட வேண்டும்? இந்திய அரசியல்வாதிகள் பலரையும் - அரசியல் கட்சியினர் பலரையும் நேருக்கு நேர் சந்தித்து, பகிரங்கமாக விசாரித்து அவர்களுடைய கருத்துக்களையும் யோசனைகளையும் அறிந்துகொள்ள வேண்டும்......நான் கூறிடும் இந்தப் பகிரங்க விசாரணையின்மூலம் இந்தியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய அவசியம் இதற்கு முன் இல்லாத அளவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. ஏனெனில், மாண்டேகு-செம்ஸ் போர்டு செயலானது அந்த நல்ல தீர்ப்பைக் காண முடியாமல் தோற்று விட்டது.
பெரு முயற்சிகளுக்குப் பின்னர் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கை இங்கிலாந்து மக்களவைகளில் ஒலிக்கத் தொடங்கிய பிறகு 6-8-1918இல் டெய்லி டெலிகிராப் இதழில் நாயர் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் இவை:
நேற்றையதினம் பார்லிமெண்டின் இருசபைகளிலும் இந்திய அரசியல் சீர்திருத்தம்பற்றி விவாதிக்கப்பட்டதைக்கண்டு மகிழ்ச்சியடைகிறேன்... பிரபுக்கள் சபையில் கர்சன்பிரபுவினால் கொடுக்கப்பட்ட அறிக்கையை வரவேற்கிறேன்மாண்டேகு - செம்ஸ் போர்டு திட்டத்தை ஆதரிப்பதென்றோ, ஆதரிப்பதில்லையென்றோ மந்திரிசபை இன்னும் எவ்வித முடிவும் செய்யவில்லை என்று திடமாகத் தெரிவித்தார். இந்திய அரசையும் மாகாண அரசுகளையும் கலந்து ஆலோசிக்காமல் பிரிட்டிஷ் அரசினர் எவ்வித திடமான முடிவையும் மேற்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். அத்துடன் பல ஜாதி மதங்களையும் சார்ந்த இந்திய மக்களின் பெரும்பான்மையான கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்ளாமலும் பிரிட்டிஷ் அரசினர் எவ்வித முடிவுக்கும் வரமாட்டார்கள் என்றும் கூறினார். மந்திரி சபையில் ஒரு மந்திரி என்ற முறையில் அவர் கூறியவை யாவும் எனக்குத் திருப்தி அளிக்கின்றனமாண்டேகு-செம்ஸ்போர்டு திட்டத்தை இறுதியாகப் பார்லிமெண்டின் இருசபை அங்கத்தினர்களும் அடங்கிய ஒரு கூட்டுக் கமிட்டி பரிசீலனை செய்யும்படி விடவேண்டும் என்ற செல்போர்ன் பிரபுவின் யோசனைக்கு மிகுந்த ஆதரவு இருப்பதைப் பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்செல்போர்ன் பிரபுவின் யோசனையை ஏற்றுக்கொண்டு மாண்டேகு - செம்ஸ்போர்டு திட்டத்தை அலசி ஆராய்ந்து பார்த்து நேர்மையான முடிவை பிரிட்டிஷ் அரசினர் மேற்கொள்வர் என்று நம்புகிறேன்.
டாக்டர் நாயர் இங்கிலாந்தில் ஸ்பெக்டேட்டர் இதழில் மாண்டேகு - செம்ஸ்போர்டு இருவரையும் குறிப்பிட்டு எழுதும்போது மாண்ட்-போர்டு (Mont – Ford) என்ற புதிய சொல்லைப் பயன்படுத்தினார்இவருடைய ஆங்கில அறிவின் அழகான வெளிப்பாடாக இருந்த இச்சொல்லை ஆங்கில மொழி வரலாறு அப்படியே ஏற்றுக்கொண்டது. இன்றுவரை இவ்விருவரையும் இச்சொல்லாலேயே வரலாறு குறிப்பிட்டு வருகிறது.
இத்தகைய வாளினும் கூர்மையான டாக்டர் நாயரின் எழுதுகோல் ஜஸ்டிஸ் ஏட்டைச் சாய்க்க முடியாத நீதிக்கட்சியின் படைக்கலனாய் உருவாக்கியது. மாற்றார் ஏசல்களை எதிர்த்துத் தூளாக்கியது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ வரலாற்றில் வரிகளாய்ப் பதிந்து இன்றுவரை உயிரூட்டி வருகிறது எனில் அது மிகையன்று.
பேச்சாற்றலில்
இத்தகைய வாளினும் கூர்மையான எழுத்துக்குச் சொந்தக்காரரான டாக்டர் நாயர், மக்களை ஈர்க்கும் மகத்தான நாவன்மையும் பெற்றிருந்தார்.
இங்கிலாந்திலேயே சிறந்த பேச்சாளராக உருவாக்கப்பட்டவர் டாக்டர் நாயர்ஆங்கிலச் சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, ஆங்கில மொழிநடை நன்கு கைவரப்பெற்றவராய், ஏற்ற கருத்தை அஞ்சாது எடுத்துரைக்கும் ஆற்றலாளராய்த் தன்னை உருவாக்கிக் கொண்டவர் டாக்டர் நாயர். போலி வார்த்தை அணிவகுப்பிலும், புகழ்ச் சொற்களிலும் மனம் பறிகொடுக்காமல் - தகுந்த கருத்தை- தகுந்த நேரத்தில் எடுத்துரைக்கும் மிகச் சிறந்த கருத்தாளராக விளங்கினார் டாக்டர் நாயர்.
அவருடைய பேச்சு வேகத்தின் பிறப்பிடம்; அஞ்சாமையின் அணிவகுப்பு; கருத்துக்களின் சுரங்கம்; மேற்கோள்களின் புதையல்; குழப்பங்களின் மருந்து; அறிவுக்கு விருந்து; அவருடைய திறனாய்வுகள் தாங்க முடியாத குத்தீட்டிகள் - விழுங்க முடியாத கசப்புகள் - ஆனால் வீழ்த்த முடியாத உண்மைகள்!
இங்கிலாந்தில் இருந்தபோது தன்னுடைய புகைச் சுருளில் இருந்து, புகையிலையை வழக்கமாகத் திருடிக் கொண்டிருந்த ஒருவனிடம் நாயர் கூறினார்: திருட முடிகிறது என்றாலும் திருடாதே! என்று
கருத்தைப் புலப்படுத்த, சொற்களைக் கையாளும் முறை நாயரிடம் சிறப்பாக அமைந்திருந்த ஒன்று. பிற்காலத்தில் அறிஞர் அண்ணா அவர்களிடம் இச்சிறப்பைக் காணமுடிந்தது எனலாம்.
அக்கால நீதிக்கட்சிக் கூட்டங்களிலும், அதற்கு முன்பு காங்கிரசின் கூட்டங்களிலும் நாயர்தான் முதன்மைப் பேச்சாளர். இதனை
..நாயர் பின்வருமாறு கூறுகிறார்:
அக்காலக் கூட்டங்களில் டாக்டர் நாயர்தான் முக்கியப் பேச்சாளார்; வேகம் நகைச்சுவை, ஈடு இணையற்ற ஆங்கில உச்சரிப்பு, தங்குதடையின்றி மனதை ஈர்க்கும் நடை- இவையெல்லாம் நாயரின் சொற்பொழிவின் தனித் தன்மைகள். திருவல்லிக்கேணியில் பார்ப்பனர்கள் அதிகமாக வாழ்ந்து வந்த கங்கைகொண்டான் பகுதியில்தான், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப்பற்றி நாயர் அடிக்கடி பேசுவது வழக்கம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற டபுள்யூ. எஸ்.கிருஷ்ணசாமி நாயுடு என் நினைவுகள் (My Memories ) என்ற தன்னுடைய நூலில் நாயரின் பேச்சாற்றலைப் பற்றி,
1919இல் வெங்கடகிரி மகாராஜா தலைமையில் சென்னை மவுண்ட்ரோடில் (தற்போதைய அண்ணா சாலை) நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் இயக்கக் கூட்டம் - இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதில் என்னையும் ஒரு தொண்டராக வரும்படி அழைத்தனர். ஆனால் நான் மறுத்து விட்டேன். அன்றைய கூட்டத்தில் டாக்டர் டி.எம்.நாயர் பேசிய பேச்சு இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. வெள்ளையர் ஆட்சியின் அடக்குமுறைகளையும், அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தையும் பற்றி அவர் பேசினார். அவர் ஒரு  குறிப்பிடத்தக்க, குற்றங்களைச் சுட்டிக்காட்டக் கூடிய மிகச் சிறந்த பேச்சாளர்; ஆங்கிலத்தில் மிகுந்த திறமை பெற்றவராயிருந்தார் எனக் குறிப்பிடுகின்றார். இவருடைய  பேச்சாற்றலைத் தமது ஆய்வுரையில் மதிப்பீடு செய்த ஜி.ரேவதி,
இவருடைய பேச்சில் உண்மைகளும், புள்ளி விவரச் சான்றுகளும் நிரம்பிக் கிடந்தனஅவருடைய திறனாய்வுச் சொற்கள் கசப்பாகத்தான் இருந்தன. பல்கலைக் கழகம் முதல் பட்டி தொட்டிவரை பேசியவர் அவர். அவருடைய பேச்சு மக்களுக்கிடையில் அவரை ஒரு குறிப்பிடத்தக்க மனிதராக்கியது... வாக்காளர்களை ஈர்த்தது. அவர் பல்வேறு துறைகளைப் பற்றிப் பேசியுள்ளார். சுருங்கக் கூறினால் தன்  காலத்தில் தென்னிந்தியாவின் தலைவர்களிலேயே இவர் மட்டுமே குறிப்பிடத்தக்க சிறந்த பேச்சாளர் என்னும் நிலை பெற்றிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் நாயரின் பேச்சாற்றலை நினைவு கூர்ந்த பி. ரங்கசாமி நாயுடு,
டாக்டர் நாயரின் பேச்சு அக்காலத்து மாணவர்களாலும், தொழிலாளர்களாலும் மறக்க முடியாத ஒன்றாக  இருந்ததுஅவர்களின் தேவைகளைக் கோரவும், அவர்களைப் பலப்படுத்திக் கொள்ளவும் அதன் மூலம் இயக்கத்தை வலிமை பெறச் செய்யவும் அவர்கள் துணிவுடன், அஞ்சாமல் வெளிவர வேண்டும் என்னும் பொருள்பட அவர் பேசுவது வழக்கம். இப்பேச்சுகளிலும், மற்ற பேச்சுகளிலும் எப்போதும் தன் உரையை எழு. விழி, இல்லையெனில் எப்போதும் வீழ்ந்துகிட (Awake, Arise or be for ever fallen) என்று கூறித்தான் முடிப்பார் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.
நீண்ட சொற்பொழிவுகள் மட்டுமின்றி, நேரத்திற்கும் நடைபெற்ற சூழ்நிலைக்கும் ஏற்ப நாயர் கூறும் கருத்துக்கள் பகைவரை எள்ளி நகையாடும் தன்மையிலும், சிந்திக்க வைக்கும் நோக்கத்திலும் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண்போம். இவை நாயரின் அறிவுக்கூர்மையை, மொழி வளத்தைத் தகுந்த நேரத்தில் பயன்படுத்தும் (Presence of mind) தனித்திறமையைப் பறைசாற்ற வல்லன. மாநகராட்சியில் உறுப்பினராகப் பணிபுரிந்த காலத்தில், பல்வேறு மாநகராட்சியின் பணிகளையும் கூர்ந்து கவனிப்பது நாயரின் வழக்கம்.  1910களில் பாலக்காடு நகராட்சி கலைக்கப்பட்டது. நாயர் அங்குச் சென்றார். சிலருடன் கூடி ரகசிய முடிவுகளை எடுத்தார். இச்சமயத்தில் அவருடன் புலனாய்வுத் துறைக் காவலர் ஒருவரும் அவரைப் பின்பற்றிச்சென்று செய்திகளைத் திரட்டிக் கொண்டிருந்தார். நாயர் நடத்திய கூட்டத்தில் நகராட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாயர் தீர்மானத்தை நிறைவேற்றி வைத்துக் கூறினார்:
இந்தத் தீர்மானம் காவல்துறை அதிகாரி ஒருவரைத் தவிர மற்ற எல்லோராலும் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது என்று.
தேசத்துரோகி எனப் பெயரிட்டு விட்ட  அரசு, காவல் துறையினரை அனுப்பாமல் இருக்குமா? எங்கு சென்றாலும் காவல் துறையின் கண்காணிப்புக்குள்ளானார் டாக்டர் நாயர். அந்த அதிகாரிகள் நாயரின் கிண்டலுக்காளாகி தவித்தனர். இத்தகைய ஒரு நிகழ்ச்சியைத் தந்தை பெரியார் கூறியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. 3.12.1950இல் திருச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் டாக்டர் நாயரை நினைவுப்படுத்தி பெரியார் ஆற்றிய உரையில் இப்பகுதி இடம்பெற்றுள்ளது.
தோழர்களே, நீங்கள் யோசிக்க வேண்டுவது அவசியம். டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் பாவி யாக்கப்பட்டார்? நான் ஏன் பாவி யாக்கப்பட்டிருக்கிறேன்? முன்பெல்லாம் டாக்டர் நாயர் வெளியே செல்லுகிறார் என்றால் அவரோடு ஒரு துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரும் மாறு உடையில் உடன் செல்வாராம். அதுசமயம் நான் ஓர் இளைஞன். ஒருசமயம் ஏதோ ஒரு பொது அலுவலாக அவர் ஈரோட்டுக்கு வந்திருந்தார். அவருடைய நண்பர் ஒருவர், யாருடைய பாதுகாப்பில் சாமான்கள் விடப்பட்டிருக்கின்றன என்று கேட்கவும், நாயர் எனக்குக் காவலாக ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பப்பட்டுள்ளார். வேறு யாரும் என்னுடன் இல்லை எனவே அவரிடமே என் சாமான்களை ஒப்புவித்து வந்தேன் என்றும் நாயர் தெரிவித்துள்ளதாகத் தந்தை பெரியார் கூறினார்.
இதைப்போன்று காவல்துறையினரை நாயர் எள்ளி நகையாடிய மற்றொரு நிகழ்ச்சி இது: வங்காளத்தில் பாரிசால் என்ற இடத்தில் ஒரு கூட்டத்தைக் கலைப்பதற்குக் காவல் துறையினர் மிதமிஞ்சிய வன்முறையைக் கையாண்டதைக் கண்டிப்பதற்காக சென்னையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய நாயர்,
போலீசார் எவ்விதமான ஆயுதத்தையும் பயன்படுத்திக் கூட்டத்தைக் கலைக்கவில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அங்கு எனது நண்பர் சௌந்தர் தலையில் படுகாயமுற்றார். அது எவ்வாறு ஏற்பட்டது? நிச்சயமாக வந்தே மாதரம் என்று கூச்சலிட்டதனால் காயம் ஏற்பட்டிருக்காது என்றார். சிரிப்பொலி எழுந்தது கூட்டத்தில்!
அரசியல் எதிரிகளுக்கு அவர் பதில் கூறுவது மிகவும் விளையாட்டாக இருக்கும் - நாயரின் நாவன்மையையும் எடுத்துக்காட்டும். பார்ப்பனரல்லாதார் தலைவர்களில் ஒருவரான திவான் பகதூர் கேசவப்பிள்ளை காங்கிரசிலிருந்து விலகாமல் இருந்தது நீதிக் கட்சியினருக்குப் பிடிக்கவில்லை - வருத்தம். அப்போதிருந்த சட்டசபையில் கேசவப்பிள்ளை சிறைச்சாலைகள் சீர்திருத்தம் பற்றியும், காட்டு இலாகா சீர்திருத்தம்  பற்றியும் அடிக்கடி பேசுவார். ஒருமுறை நாயர் அவரை எதிர்த்துப் பேசும்போது, கேசவப்பிள்ளை காட்டில் இல்லாத நேரம் சிறையில் இருப்பார் - சிறையில் இல்லாத நேரம் காட்டில் இருப்பார். என்று கூறினார். கேசவப்பிள்ளையோ சிரித்துக் கொண்டே, இரண்டிற்கும் இடையில் மருத்துவமனையில் இருப்பேன் என்றார்.
சிறந்த கல்வியாளராகவும், கல்வித்துறையின் வளர்ச்சி - அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் கருத்துரைப்பாளராகவும் விளங்கியவர் டாக்டர் நாயர். 1915இல் சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் டாக்டர் நாயர். செனட் கூட்டம்  நடந்தது ஒருமுறை - அதில் ஆண்டு அறிக்கை ஒன்றும் படிக்கப்பட்டது. அவ்வறிக்கையைப் பார்வையிட்ட உறுப்பினர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஆங்கில மொழி நூல் பேராசிரியரின் பெயரைக் கூறி, அவரைப் பற்றி யாதொரு குறிப்பும் காணப்படவில்லையே, அவர் ஒரு சொற்பொழிவும் நிகழ்த்தவில்லையா? அப்படியானால் அவர் என்ன ஆராய்ச்சி செய்தார் என்பதையாவது குறிப்பிடலாமே என்று கேட்டார். டாக்டர் நாயர் அதை ஆதரித்தார். ஒரு செனட் உறுப்பினர் அதற்குப் பதில் கூறும் முறையில்,
சாதாரண மக்களுக்கு அவர் ஆராய்ச்சி விளங்காது; மேலும் சாதாரண ஆங்கில நடையில் அதை எழுதவும் முடியாது என்றார். உடனே நாயர் எழுந்து,
சாதாரண நடையில் விளக்க முடியாத ஓர் ஆராய்ச்சி நடைபெறுகிறதென்றால், அத்தகைய ஆராய்ச்சி பொய்யாகவோ அல்லது அதை நடத்தும் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்று வித்தைக்காரராகவோ தான் இருக்கமுடியும் என்றார்.
கல்வித்துறையில் மாறுதல்கள் தேவை-அம்மாறுதல்களை பார்ப்பனரல்லாதார்க்குப் பயன்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும்போது,
தற்போதுள்ள கல்விமுறை மிகப் பெரும்பான்மை பெற்ற... பார்ப்பனரல்லாத மக்களுக்கு அநீதி இழைப்பதாகவே உள்ளது. சமூக நீதி அளிப்பதாக இல்லை, எனவே அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இத்துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டாக வேண்டும் என்று குறிப்பிடுகின்றார் டாக்டர் நாயர்.
ஒருமுறை நாயர் உறுப்பினராக இருந்த சட்டமன்ற மேலவையில், நாயரால் நிறைவேற்றப்பட்ட  மருத்துவப் பதிவுச் சட்டம் குறித்தும், பொது மருத்துவ மனையை ஸ்பர்டாங்க் சாலைக்கு மாற்றியது
குறித்தும் தொடர்பில்லாத வாதங்கள், சில வழக்கறிஞர்களால் கொண்டு வரப்பட்டன. வாதத்தைக் கூர்ந்து கவனித்த டாக்டர் நாயர் கூறினார்:
என்னுடைய கருத்துக்களில் மாறுபாடு கொண்டவர்கள் என்னுடன் தேநீர் அருந்தவோ, அல்லது துப்பாக்கியுடனோ என்னை ஸ்பர்டாங்க் சாலையில் சந்திக்க அழைத்திருக்க வேண்டும். அதை விடுத்து எது சரி, எது சரியல்ல என்பதை நன்கறிந்த வழக்கறிஞர்களே மருத்துவப் பதிவுச் சட்டத்தைப் பற்றித் தெடர்பற்ற வாதங்களை  அவையில் கூறுவது அழகல்ல. என்றார்.
மக்கள் மன்றத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாயரின் பேச்சாற்றல் சுட்டிக் காட்டியது.
சமூக நீதி வீடுகளிலும், வீதிகளிலும் வேர் விட்டு வளர்ந்து, அரசின் அனைத்துத் துறைகளிலும் கிளைகளாய்ப் பரவிட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர் டாக்டர் நாயர். இச் சமூக நீதிக்கு - அநீதி இழைக்கப்படும் போதெல்லாம் அதை ஒடுக்க-போராட்டத்தின் எந்த  எல்லைக்கும் செல்லத் தன்னைத் தயார் நிலையில் வைத்திருந்தவர் டாக்டர் நாயர்.
1917இல் ஒருமுறை ஆதி திராவிடர்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர்எழும்பூர் ஏரிப்பகுதியில் இக்கூட்டத்தை நடத்துவதென முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த இடம் மேல் ஜாதியினரின் பிள்ளைகள் விளையாடுமிடமாம்! அங்கே கூட்டம் நடத்தக் கூடாதாம்! மேல் ஜாதியினரின் எதிர்ப்பு, பல்வேறு வடிவங்களில் தன் பலத்தைக் காட்டியது. அஞ்சி நடுங்கிய ஆதி திராவிட மக்கள் டாக்டர் நாயரிடம் ஓடிவந்து நிலைமையைக் கூறினர். டாக்டர் நாயர் அந்த இடத்திற்கு விரைந்தார்கூடியிருந்த மக்களைப் பார்த்து, உங்கள் கூட்டத்தைத் தொடங்கி நடத்துங்கள் - அது நடக்கும் என்று கூறிவிட்டு - கூட்டத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டார். கூட்டம் சிறப்பாக நடந்தது. நாயர் அன்றைய கூட்டத்தில் ஒன்றுமே பேசவில்லை. கூட்ட முடிவில் தான் அவருடைய கையில் தடி ஒன்று குடியேறியிருந்ததைப் பலரும் கண்டனர். அவர் முகத்தில் இருந்த கோபமும், கையிலிருந்த தடியும் அன்று பார்ப்பனரல்லாதார்க்குப் பாதுகாவல் அரணாக நின்றன.
இதே ஆண்டில் ஸ்பர்டாங்க் சாலையில் பஞ்சமர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் வீர உரையாற்றினார் டாக்டர் நாயர். அவ்வுரையில் நகைச்சுவையும், சமூக நீதியின் அவசியமும் கலந்திருந்தன. இவ்வுரை (Spurtank Road Speaches) ஸ்பர்டாங்க் சாலை உரைகள் என்ற தலைப்பில் நூலாகவும் வெளி வந்திருப்பதாக அறிய முடிகிறது.
டாக்டர் நாயரின் பேச்சாற்றலைத் தம் ஆய்வுரையில் மதிப்பீடு செய்த எஸ். . சோமசுந்தரம் பிள்ளை, ஒருகாலத்தில் மிகப்பெரும் பேச்சாளராக விளங்கிய ஜி. பெடஸ்டோன் என்பவரின் பேச்சுக்கள் நாயரை ஈர்த்து - சிறந்த பேச்சாளராக்கத் தூண்டியிருக்கலாம் என்கிறார். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்

வேட்ப மொழிவதாய் விளங்கிய நாயரின் பேச்சுக்கள் அவருடைய வாழ்வின் இறுதி மூச்சுவரை  பார்ப்பனரல்லாத மக்களுக்காக அவர் வழங்கிய பாதுகாப்புக் கவசங்கள் என்றே கூறலாம்.­­­­

நூல் - டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
ஆசிரியர் - கவிஞர் கூ.வ.எழிலரசு

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!