டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் - பகுதி -4

சட்டமன்றங்களிலும், அரசாங்க அலுவல்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரால் நசுக்கப்படக்கூடாது. ஆதிதிராவிடர் போன்ற பின்தங்கிய வகுப்பினர்களுக்குச் சில சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும்.
என்ற தன்னுடைய இயக்கத்தின் இதயமான கொள்கையைப், பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தி மக்களிடையே பரப்பும் பணியைத் தொடங்கியது.
இக்காலகட்டத்தில் அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்துப் பெண்மணியின் அரசியல் நுழைவு - இந்திய அரசியல் அமைதியைக் குலைத்தது. இதன் சில செயல்களால் இந்த அம்மையார் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கமும், இவரும் நீதிக்கட்சியின் நிரந்தரப் பகைவர்களாயினர்.
அன்னிபெசன்ட் அம்மையார் அயர்லாந்தைச் சேர்ந்தவர். முதலில் அரசாங்கப் பள்ளிகளில் மதத் தொடர்பான பாடங்களைக் கற்பிக்கக் கூடாது எனக் கூறுமளவிற்கு மத எதிர்ப்பாளராக இருந்து, அதை விடுத்து ஃபேபியன் சமதர்மம் (Fabiun Socialism என்ற கொள்கைக்குத் தாவினார். பிறகு மதத் துறையில் ஈடுபட எண்ணமிட்டு. இதே நோக்கத்துடன் இந்தியா வந்தார். அப்போது சென்னை அடையாற்றில் இயங்கி வந்த பிரம்மஞான சபை (Theosophical Society)யின் தலைவியான மேடம் பிளாவிட்ஸ்கி (Madam Blevitsky) யிடம் சீடராக இருந்தார். பிளாவிட்ஸ்கியின் இறப்பிற்குப்பின் அவருடைய இடத்தைப் பிடித்துக்கொண்டார். படிப்படியாகப் பார்ப்பனர்கள் இவரைத் திருமாலின் அவதாரம் என்றும், அருள் பெற்றவர் என்றும் புகழ்பாடி, தம்முடைய வீட்டுப் பிள்ளைகளை அந்த அம்மையாரிடம் அனுப்பி ஞானம் ஓதி ஞானசிகாமணிகளாக மாற்றித் தரும்படி மண்டியிட்டனர். பார்ப்பனர்கள்  இச்செயலில் ஈடுபட்டபோது, பார்ப்பனப் பெண்கள் பலரும் அன்னிபெசன்ட் அம்மையாரை வெறுத்து எதிர்த்தனர் - தம் வீட்டுப் பிள்ளைகளின் ஒழுக்கம் இந்த அம்மையாரால் கெட்டுவிட்டது என்று வெளிப்படையாகவே பேசினர் - ஏசினர். அம்மையாரின் இத்தகைய ஒழுக்கக்கேட்டையும், அவற்றை நாயர் கண்டித்த கதைகளையும் இதே நூலில் எழுத்தாற்றலில் என்ற தலைப்பின் கீழ் விரிவாகத் தந்துள்ளேன்.
இத்தகைய அம்மையார் ஆந்திரப் பார்ப்பனரான நாராயணய்யா என்ற பார்ப்பனரின் பிள்ளைகளான ஜெ.கிருஷ்ணமூர்த்தி, நித்யானந்தம் என்பவர்களைத் தம் சபையில் சேர்த்து, ஜெ.கிருஷ்ணமூர்த்தியிடம் பெரு மதிப்பைக்காட்டி வந்தார். இந்த மதிப்பு இறுதியாக கிருஷ்ணமூர்த்தியிடம் கிறித்துவின் உருவம் மறைந்திருப்பதாகவும், விஷ்ணுபகவானின் கூறு காணப்படுவதாகவும் பிரச்சாரம் செய்யுமளவிற்கு வளர்ந்தது. அச்சிறுவனுக்குப் பல்வேறு வகைகளில் மதிப்பளித்து புகழ்ந்து வந்தார். 1910இல் At the feet of the Master’ என்ற நூல் எழுதி கிருஷ்ணமூர்த்தி பெயருக்கு அர்ப்பணித்தார். இந்நூல் இந்துமதப் பார்ப்பனர்களின் மனத்தைப் புண்படுத்தியது. இந்து மதத்திற்கு எதிரான செயல் என்றும் அவர்கள் நினைத்தனர். மிகப் பெரும் பார்ப்பனர்கள் பலருடைய எதிர்ப்பு வெளிக்கிளம்பியது. இச்சூழலில் நாராயணய்யா தன் மகன் கிருஷ்ணமூர்த்தியைத் தன்னிடம் திருப்பித் தருமாறு வேண்டினார்; அம்மையார் மறுத்தார். இதனால் அவருடைய ஒழுக்கத்தின் மீதும் மதக் கோட்பாடுகளின் மீதும் மேலும் கறை படியலாயிற்று. நாரணய்யா பலமுறை முயன்று தன் மகனைத் திரும்பப்பெற முடியாமல், இறுதியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கின்போதுதான் டாக்டர் நாயரின் மீது இவ்வம்மையார் வழக்குத் தொடுத்தார் (இதன் விவரங்களை எழுத்தாற்றலில் என்ற பகுதியில் தந்துள்ளேன்). இறுதியில் இவ்வழக்கின் தீர்ப்பு ஜி.கிருஷ்ணமூர்த்தியின் விருப்பப்படி இருக்கலாம் என முடிவாக, ஜி.கிருஷ்ணமூர்த்தியோ அம்மையாரின் அரவணைப்பிலேயே இருக்க முடிவு செய்தார். அம்மையாருக்கு வெற்றி கிட்டியது என்றாலும், அவரைச் சூழ்ந்த அவப்பெயர் அகலவில்லை. இதனைப் போக்கவும், மக்கள் தன்னை வேறுகோணத்தில் பார்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் அம்மையார் காங்கிரசில் சேர்ந்தார். ஹோம் ரூல் லீக் என்ற அரசியல் கட்சியை உருவாக்கி ஒரேநாளில் சுதந்திரம் வாங்கித் தருவதாகப் பேசினார். பழைய பகைவர்களெல்லாம் அவருடன் நட்பாகினர். அவர் தொடங்கிய நியூ இந்தியா - காங்கிரஸையும் ஹோம் ரூலையும் புகழ்ந்தது; நீதிக் கட்சியை இகழ்ந்தது.
முன்பே டாக்டர் நாயரின் புகழின் எல்லையைக்கண்டு பொறாமை கொண்ட பார்ப்பனர் ஒருபுறம் - தேர்தலில் தோற்றபின் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை ஓங்கத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அமைத்தது மறுபுறம் - இவ்வாறாக டாக்டர் நாயரும், அவருடைய இயக்கமும் பார்ப்பனீயத்தின் வெளிப்படையான பகைவராயினர். இச்சூழ்நிலையில் பார்ப்பனர்கள் தங்கள் பகையுணர்ச்சியை வெளிப்படுத்த அன்னிபெசன்ட் அம்மையாரிடம் தஞ்சமாகி அவருடைய ஹோம் ரூல் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இதன் விளைவாக நீதிக்கட்சி ஏற்பாடு செய்த கூட்டங்களில் எல்லாம் ஹோம் ரூல் இயக்கத்தினர் கலவரம் விளைவிக்கத் தொடங்கினர். இந்தப் பணியில் தமிழ்த் தென்றல் திரு.வி..வும் இருந்தார் என்பதை வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 1916இல் நடைபெற்ற தியாகராயரின் கூட்டங்கள், 1917இல் நடைபெற்ற நாயரின் கூட்டம் - இவற்றில் திரு.வி.. கலந்துகொண்டு அமைதியைக் குலைத்தார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. டாக்டர் நாயரிடம் திரு.வி.. கூட்டத்தில் கேட்ட கேள்வியும், நாயர் உரைத்த பதிலும் சுவையானவை.
திரு.வி.: நீங்கள் ஏன் காங்கிரசை விடுத்து வகுப்புவாதக் கட்சியில் சேர்ந்தீர்கள்? வகுப்பு வாதத்தால் நாடு சுயராஜ்யம் பெறுமா? அப்படியாண்டாயினும் நிகழ்ந்திருக்கிறதா? சரித்திரச் சான்று உண்டா?
டாக்டர் நாயர்: யான் காங்கிரசில் தொண்டு செய்தவனே; அது பார்ப்பனர் உடைமையாகியதை உணர்ந்தேன். காங்கிரசினால் தென்னாட்டுப் பெரு மக்களுக்குத் தீமை விளைதல் கண்டு, அதை விடுத்து, நண்பர் தியாகராயருடன் கலந்து ஜஸ்டிஸ் கட்சி அமைக்கலானேன். வகுப்பு வாதத்தால் சுயராஜ்யம் வரும் என்று எவருங் கூறார். வகுப்பு வேற்றுமை உணர்வு தடித்து நிற்கும்வரை, சுயராஜ்யம் என்பது வெறுங் கனவேயாகும். வகுப்பு வேற்றுமையுணர்வின் தடிப்பை வகுப்புவாதத்தால் போக்கிய பின்னரே சுயராஜ்யத் தொண்டில் இறங்க வேண்டுமென்பது எனது கருத்து. காலத்துக்கேற்ற தொண்டு செய்வது நல்லது. வகுப்பு வேற்றுமை இல்லாத நாடுகளைப் பற்றிய சரித்திரங்களை இங்கே ஏன் வலித்தல் வேண்டும்? இந்தியா ஒரு விபரீத நாடு. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் நாடு.
திரு.வி.: வகுப்புவாதக் கட்சி, வகுப்புகளின் நினைவையன்றோ உண்டு பண்ணும்? அதனால் வகுப்பு வேற்றுமை வளருமா? தேயுமா? உங்கள் கட்சி பிராமணர்களுக்குள் ஒற்றுமையையும், பிராமணரல்லாதாருக்குள் வேற்றுமையையும் வளர்ப்பதாகும்.
டாக்டர் நாயர்: நாளை ஜஸ்டிஸில் விளக்கமாகப் பதில் வரும்.
திரு.வி. - நாயரின் உரையாடலின்போதே கூட்டத்தில் கூச்சல் அதிகமானது; குழப்பம் நிலவியது. நாயர் நாளைக்கு ஜஸ்டிஸில் பதில் தருகிறேன் என்று கூறிச்சென்று விட்டார் என்பது திரு.கோ.குமாராசாமி தரும் குறிப்பாகும். இவ்வாறு நீதிக்கட்சியின் கூட்டங்களில் எல்லாம் நேரிடையாகக் கலவரம் விளைவித்தனர் ஹோம்ரூலர்கள். துண்டறிக்கைகள் பல வெளியிட்டு நீதிக் கட்சியைத் தரக்குறைவாக ஏசினர்.
இச்சூழ்நிலையில் அன்னிபெசன்ட் அம்மையார் பிரிட்டிஷ் எதிர்ப்பு வாதத்தையும், ஜெர்மானிய ஆதரிப்பு வாதத்தையும் மக்களிடையே பரப்பினார். இதன் விளைவு ஹோம்ரூல் இயக்கம் நேரிடையாக அரசாங்கத்தை எதிர்க்கலாயிற்று. கவர்னர் பென்ட்லண்டு பிரபுவின் எச்சரிக்கையை ஏற்காமல் மேலும் பல தாக்குதல்களை நடத்தி நாட்டின் அமைதியைக் குலைத்தது இந்த இயக்கம். இவற்றைக் கண்ட கவர்னர் பென்ட்லண்டு பிரபு அன்னிபெசன்ட்டின் போக்குக்கு Secretary of State for India Petland governer முற்றுப்புள்ளி வைக்க, இந்திய அமைச்சர் ஆஸ்டின் சேம்பர்லின் மூலமாக ஆணையிட்டு அன்னிபெசன்ட் அம்மையாரை 15.06.1917இல் கைது செய்து சிறைக்காவலில் வைத்து விட்டார். நாடு முழுவதுமாக அமைதி இழந்தது. ஹோம் ரூலர்கள், பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், என்று மக்கள் உள்ள இடங்களிலெல்லாம் தாக்குதல் நடத்தினர். பள்ளி, கல்லூரி மாணவர்களைப் படிக்கச் செல்லாமல் மறியல் செய்யத் தூண்டியது ஹோம் ரூல் இயக்கம்.
அன்னிபெசன்ட்டின் கைது தொடர்பாக அவருடைய கைக்கூலிகள் நீதிக்கட்சியின் மீது பாய்ந்தனர். அவருடைய கைதிலும், காவல் வைப்பிலும் எவ்விதத் தொடர்பும் இல்லாத நீதிக்கட்சி அவர்களின் வசவுகளுக்கும், நாகரிகமற்ற தாக்குதல்களுக்கும் ஆளானது. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினரை தேசத் துரோகிகள் என்றும், ஆங்கிலேயரின் கைக்கூலிகள் எனவும் பேசிவந்த காங்கிரஸ், ஹோம் ரூலர்களைப்பற்றி டாக்டர் நாயர் மக்கள் முன் எடுத்துரைத்தார்.
உலகத்துக்கே விரோதிகளான ஜெர்மானியர்களிடம் கைக்கூலிபெற்று, தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் காங்கிரஸ் ஹோம் ரூல் லீகர்களே தேசத் துரோகிகள். என்று கூறி மக்களைப் புரிந்து கொள்ள வைத்தார். ஒரு நண்பரிடம் நாயர்,
ஒரே ஒரு மணி நேரத்திற்கு பிரிட்டன் அரசு இந்தியாவை விட்டு வெளியே நிற்கட்டும்! நண்பரே! ஹோம் ரூல் இயக்கம் எங்கே போகும் என்பதை அப்போது தெரிந்து கொள்வாய்! எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார் எஸ்..சோமசுந்தரம் பிள்ளை.
15.6.1917இல் அன்னிபெசன்ட் அம்மையாரைக் கைது செய்த ஆஸ்டின் சேம்பர்லின் தமது பதவியைத் துறந்துவிட்டார். அவருடைய இடத்திற்கு வந்தவர் எட்வின் மாண்டேகு. இவர் ஹோம் ரூல் லீகரை ஆதரித்த வெள்ளையர். இந்திய அமைச்சராய்ப் பதவி ஏற்ற ஒரு மாத காலத்தில் அன்னிபெசன்ட் அம்மையாரை விடுதலை செய்துவிட்டார். இதன் பிறகு அன்னிபெசன்ட் காங்கிரசின் தலைவராகி  மாண்டேகுவின் சீர்திருத்தங்களை ஆதரித்தார். இது மட்டுமேன்றி மாண்டேகுவை அடிக்கடி தனிமையில் சந்தித்து நீதிக்கட்சியினரைப்பற்றிக் குறை கூறுவதையும் வாடிக்கையாக்கிக் கொண்டார். இதனால் டாக்டர் நாயரும், தியாகராயரும் வகுப்புவாதிகள் தேசத்துரோகிகள் என்ற வசவுகளுக்காளானார்கள். மாண்டேகு அன்னிபெசன்ட் அம்மையாரைச் சந்தித்த நிகழ்ச்சிகள் பல மாண்டேகுவின் இந்தியா நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றிலிருந்து மாண்டேகு சிந்தித்துப் பாராமல் அன்னிபெசன்ட்டை ஆதரித்தவர் என்பதும், நீதிக்கட்சியின் கோரிக்கைகளைச் செவியேற்காமல் அலட்சியப்படுத்தியவர் என்பதும் புலனாகிறது. இதனை நன்குணர்ந்து கொண்ட டாக்டர் நாயர் ஜஸ்டிஸ் ஏட்டின் தலையங்கத்தில் இவ்வாறு எழுதினார்:
இங்குள்ள சென்னை மாநிலச் செயலாளர் சிந்திக்காமல், அன்னிபெசன்ட் அம்மையாரின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பாரேயானால் இந்தியாவில் வெள்ளையரின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றுதான் கூறுவேன். வெள்ளையர் பரந்த மனப்பான்மையுடனும், தங்களுடைய ஆட்சி இந்தியாவில் முடிவடையக் கூடாது என்ற நோக்கத்துடனும் சிந்திப்பார்களேயானால் எந்த மக்களுக்காக நாங்கள் பேசிவருகிறோம் என்பது தெளிவாகும்.
மாண்டேகுவின் ஆதரவில் அன்னிபெசன்ட்டின் ஆணவம் தலைவிரித்தாடியபோது,
அரசாங்க நடவடிக்கைகளின் ஆபத்திலிருந்து வெள்ளைக்காரப் பெண்கள் தப்பித்துக் கொள்வதுதான் பழக்கம் - அது கைவந்த கலை அவர்களுக்கு என எள்ளி நகையாடினார் டாக்டர் நாயர்.
அன்னிபெசன்ட் எதிர்ப்புக்கும், அரசின் கவனிப்பற்ற போக்கிற்கும் அஞ்சாத நாயர், இயக்கத்தைத் தொய்வின்றி நடத்துவதில் கவனம் செலுத்தலானார். இதன்பிறகு 28-12-1917, 29-12-1917களில் சென்னை வெலிங்டன் திரையரங்கில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முதல் மாநில மாநாடு அன்னிபெசன்ட் இயக்கத்தின் ஆணிவேரை அசைப்பதாக இருந்தது. வெங்கடகிரி ராசா தலைமை ஏற்று நடத்திய இம்மாநாட்டில், பிட்டி. தியாகராயரின் உரைக்குப் பிறகு டாக்டர் நாயர் ஆற்றிய உரையின் சுருக்கம் இது:
பார்ப்பனரல்லாதாராகிய நாங்கள் எங்களுடைய அரசியல் முன்னேற்றம் மிகுந்த கவனத்துடன், படிப்படியாக நிகழவேண்டும் என்றே விரும்புகிறோம். இதுதான் உண்மையேயன்றி, இந்து பத்திரிகையாசிரியர் குறிப்பிட்டதைப்போல் கழுத்து முறியும்படியான, பதட்டமான முன்னேற்றத்தை அல்ல (சூடிவ செநயம - நேஉம ளுயீநநன). இங்கே நடைபெறும் ஹோம்ரூல் இயக்க நடவடிக்கைகளுக்கெல்லாம் ஜெர்மன் நாட்டின் மறைமுகத் தூண்டுதலே காரணம். போரின் தொடக்கத்திலேயே இந்நாட்டு ஹோம் ரூல் கிளர்ச்சி தொடங்கப்பட்டது. இதற்கு ஜெர்மானிய நாட்டின் சூழ்ச்சியும், மறைமுகமான ஆதரவுமே காரணம். ஜெர்மன் நாடு அமெரிக்க இந்தியர்களுக்காக அதிக அளவில் செலவிட்டு, அவர்களில் ஒரு பிரிவினரை 1915இல் இந்தியாவிற்கு அனுப்பியது. அவர்கள் பஞ்சாப்பில் ஒரே இரவில் கலகத்தை விளைவித்தனர். இராணுவ முகாம்களைக் கூட இக்கலகக்காரர்கள் கைப்பற்றினார்கள். இதன் அடிப்படையில் லாலாலஜபதிராய் போன்றவர்கள் ஜெர்மானிய நாட்டுடன் தொடர்புகொண்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. உள்துறைச் செயலாரும் இதைப் பற்றிப் புலனாய்வு செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
டாக்டர் நாயரின் இக்கூற்றில் உண்மை உண்டு என்பதை அக்கால அரசியல் சூழ்நிலையும், அதற்குப்பின் அன்னிபெசன்ட் அம்மையார் கடைப்பிடித்த அமைதியும் மெய்ப்பித்தன. இவ்வாறு காலமறிந்து கணைகளைத் தொடுத்த நாயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைப் பல்வேறு இடர்ப்பாடுகளில் இருந்து, தன்னுடைய தனித்திறமையால் காப்பாற்றியவர் என்றே கூறலாம்.
தென்னிந்திய நல உரிமைச்சங்கம் இயங்குவதற்கு வெளி உலகில் இருந்த யாருடைய தயவையும் வேண்டி நிற்கவில்லை. அச்சங்கம் தன் சொந்தக் கால்களில் நின்றது. இயக்கத்தை நடத்துவதற்குரிய சுய சிந்தனையும், மூளையும் அதற்கு இருந்தது.
என, டி.வரதராசுலு நாயுடு கூந துரளவஉந ஆடிஎநஅநவே 1917 என்ற ஆங்கில நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய இயக்கத்தின் சொந்தக்கால்களாய், சுய சிந்தனையாய், மூளையாய் இருந்தவர் டாக்டர் டி.எம்.நாயர்தான் என்பது கூறாமலே விளங்கும்இவ்வாறு பார்ப்பனரல்லாதார் கொள்கைகளையும், அன்னிபெசன்டின் போலிப் போர்வையையும், நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம் மேடையிட்டு விளக்கி வந்தார் டாக்டர் நாயர். இவருடைய பேருழைப்பாலும், இயக்கத்தின் சீரான அமைப்பு முறையாலும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எவரும் எதிர்க்கமுடியாத அரசியல் பேரியக்கமாக வளர்ந்தது.
நீதிக்கட்சி இவ்வாறு ஏற்பாடு செய்த கூட்டங்களுள் 7-10-1917இல் ஸ்பர்டாங்க் சாலையில் நடத்திய பஞ்சமர் கூட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
பஞ்சமர்கள் இந்நாட்டின் மிக  இழிந்த பிறவிகள் - பார்ப்பனர்களோ இந்நாட்டின் மிக உயர்ந்த பிறவிகள்.
பஞ்சமர் பார்ப்பனர்   என்பதெல்லாம் என்ன தோழா? - இவை
          பாரத நாட்டுப்
பழிச் சின்னத்தின் பெயர் தோழி!
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பஞ்சமர்களின் இழிநிலை கண்டு மனம் வருந்திய டாக்டர் நாயர், நீதிக் கட்சியை அவர்களின் பாதுகாப்புக் கவசமாக்கினார். சில பஞ்சமர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டிக்கவே இக்கூட்டம் நடத்தப்பட்டது. டாக்டர் நாயர் கூட்டத்திற்குத் தலைமை ஏற்றார். இவருடைய ஆங்கில உரையை சோமசுந்தரம் பிள்ளை (1920இல்T.M. Nair M.D’ ) என்ற ஆங்கில நூலை எழுதியவர்) தமிழில் மொழிபெயர்த்தார். இக்கூட்டத்தில் தீண்டாமைக் கொடுமையைச் சாடினார் நாயர். ஆண்டாண்டுக் காலமாய்ப் பஞ்சமர்களை அடிமைப்படுத்தி வரும் பார்ப்பனீய ஏகாதிபத்தியத்தை மக்களுக்கு எடுத்துரைத்து விளக்கினார். பஞ்சமர்களுக்குச் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும்
எனக்குப் பின்னால் நிற்கின்ற மாபெரும் மக்கள் கூட்டத்தை விட்டுவிட்டு, முன்னேற்றம் என்ற பெயரால் குறுகிய நோக்குடைய எந்த இயக்கத்திலும் இருக்கமாட்டேன்
என அக்கூட்டத்தில் முழங்கினார் டி.எம்.நாயர். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது குறுகிய நோக்கம் என்றும், வகுப்புவாதம் என்றும் வசைபாடியவர்களின் காதுகளில் செந்நெருப்பாக நுழைந்தன நாயரின் சொற்கள்.
இன்றைக்கு இருக்கின்ற பிரிட்டிஷ் அரசு, பார்ப்பனர் இழுத்த இழுப்புக்கெல்லாம் தலையசைக்காமல் நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பஞ்சமர் இனத்திற்குக் கல்வி அளித்து, தங்களுடைய வாக்குரிமையைச் சரியான முறையில் பயன்படுத்தும் அளவிற்கு அவர்களை அறிவுடையவர்களாக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் பிரிட்டிஷ் அரசு ஒரு சார்பின்றி நடந்து கொண்டதாகப் பொருள் - அப்போதுதான் உயர் ஜாதிக்காரர்களெனக் கூறப்படுகின்ற பார்ப்பனர் பெறும் சலுகைகளைப் பஞ்சமரும் பெறுவார்கள். என்றார் டாக்டர் நாயர்.
இவை மட்டுமின்றி பஞ்சமர்கள் தங்களுக்கென ஒரு குழுவை அமைத்துத் கொள்ளவேண்டும், சென்னையில் உள்ள பஞ்சமர் ஒவ்வொருவரோடும் தொடர்புகொள்ள வேண்டும். மற்ற வகுப்பாரைப்போல் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் நீதிக் கட்சியுடன் அவர்களுடைய நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டியுரை நிகழ்த்தினார் நாயர்.
இதில் வியப்புக்குரிய ஒரு செய்தி என்னவெனில், அந்நாளில் இருந்த பறையர் மகாஜன சபை (Paraiah Mahajanah Sabha ) யின் தலைவர் ஒரு கூட்டம் நடத்தி, அதில், டாக்டர் நாயரின் தலைமையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், பஞ்சமர்களைச் சொந்த சகோதரர்களாய் நடத்துவது ஒன்றே பார்ப்பனர் அல்லாத தலைவர்களின் உண்மையான வழிகாட்டுதல் ஆகும் என்றும் கூறியதுதான்.
இதற்கெல்லாம் சளைக்காத டாக்டர் நாயர், பஞ்சமர்களின் பாதுகாவலன் என்ற நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. தன்னுடைய வீட்டின் அனைத்துப் பணிகளிலும் பஞ்சமர்களை நியமித்தார். அவர்களோடு சகோதரத்துவமாய் அன்புடன் பழகினார்.
காந்தியார் அரிசன முன்னேற்றத்திற்குக் குரல் கொடுப்பதற்கு முன்பே, அவர்களுக்கென ஓர் அமைப்பை உருவாக்கி அவர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வாதாடியவர் டாக்டர் டி.எம்.நாயர்.
என டாக்டர் பி.இராஜாராமனின் ஆய்வேடு அறுதியிட்டுக் கூறுகிறது.
இந்திய அரசியலிலும், பிற நடவடிக்கைகளிலும் பஞ்சமர் தமக்குரிய, உரிமையான பங்கைப் பெறாத வரையில் இந்தியாவின் எதிர்காலம் இருளடைந்ததாகவே இருக்கும் என்பது டாக்டர் நாயரின் பஞ்சமர் அமைப்புக் கோட்பாடு. இதே கோட்பாடு நீதிக்கட்சியின் கோட்பாடுகளில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்தகைய உறுதி மிக்க கோட்பாடுகள், கூட்டங்கள் தமிழ்த்தென்றல் திரு.வி.. போன்றவர்களாலேயே எள்ளப்பட்ட காலத்தின் கொடுமையை முன்பே கண்டோம்.
இச்சூழ்நிலையில் இந்திய அரசியல் சீரமைப்பு பற்றிய ஆணையை 20-8-1917இல்  இந்திய அமைச்சரான மாண்டேகு வெளியிட்டார். இவ்வாணையின் குறிக்கோள் இந்தியருக்குப் பொறுப்பாட்சி தருவதாக இருந்தது. இந்த அறிவிப்பைக் கண்ட காங்கிரஸ் - முஸ்லீம் லீக் - ஹோம் ரூல் கட்சியினர், வெள்ளையர் அளிக்கப்போகும் அரசியல் சீரமைப்பில் தம்முடைய இனத்தாரின் நலன்களும், காங்கிரஸ் - லீக் ஒப்பந்தப்படி தம்முடைய பெருவிருப்பங்களைப் பாதுகாத்துக்கொள்வதுமான செயல்களில் ஈடுபட்டனர். இதை உணர்ந்த நீதிக்கட்சியினர் பார்ப்பனரல்லாதாருக்குத் தனி ஒதுக்கீடுடன் கூடிய அரசியல் சீரமைப்பே தேவை என்பதை மாண்டேகுவிடம் கூறத் தயாராயினர். இதைக் கூட்டங்கள் நடத்தி மக்களிடம் கூறுவாராயினர்.
இதன்படி 14.12.1917இல் சென்னை வந்த மாண்டேகுவைப் பல்வேறு இயக்கங்களும் சந்தித்து அரசியல் சீரமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான கருத்துரைகளை வழங்கின. இவற்றில் அன்னிபெசன்ட் தூண்டுதலால் பார்ப்பனரல்லாதார் சிலர் நடத்திவந்த சென்னை மாகாண சங்கமும் ஒன்று. இது தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட அம்மையாரின் மற்றொரு வடிவமாகும். இச்சங்கத்தை அடுத்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தியாகராயர் தலைமையில் டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேச முதலியார், திவார்பகதூர் பி.இராஜரத்தின முதலியார். பி.இராமராய நிங்கார் முதலியோர் அடங்கிய குழுவாகச் சென்று இந்திய மந்திரி மாண்டேகுவையும், வைசிராய் செம்ஸ்போர்டுவையும் சந்தித்து - தமது விண்ணப்பம் ஒன்றை வாசித்தளித்தனர். அதில் பார்ப்பனரல்லாதாருக்குத் தனி வாக்குரிமையுடன் கூடிய அரசியல் சீர்திருத்தம் தரப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதற்குப்பின் காங்கிரஸ், முஸ்லிம்லீக், ஹோம் ரூல் இயக்கங்கள் தத்தம் விண்ணப்பத்தையும் அளித்தன. அனைத்தையும் பெற்றுக்கொண்டு டெல்லி சென்ற மாண்டேகுவும் செம்ஸ்போர்டும் பல மாதங்கள் கழித்து 8.6.1918இல் கூட்டுக் கையொப்பமிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டனர். இவ்வறிக்கையின் முக்கியச் செய்திகள் இவை:
1) இந்தியாவிற்கு நேரடியான தேர்தல் முறை - அதிகமான வாக்குரிமை வழங்கப்பட்டது.
2) மாநில அரசின் ஒரு சில பிரிவுகளை இந்தியர்களின் கைக்கு மாற்றி நிர்வகிக்க அனுமதி வழங்கப்பட்டது.
3) வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பிற்பட்டோரின் நலத்திற்குத் தடையெனக் கருதி - அவ்வுரிமை மறுக்கப்பட்டது.
4) ஆனால், இந்திய இஸ்லாமியருக்கும், பஞ்சாப்பின் சீக்கியருக்கும் வகுப்புவாரியுரிமையும், வாக்குரிமையும் வழங்கப்பட்டது.
5) வகுப்புவாரி உரிமை வழங்க, உரிய ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு சவுத்பரோ பிரபுவின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது (South Borough Committee). இதுவே வாக்குரிமைக்குழு (Franchaise Committee)   எனப்பட்டது.
6) இந்தியர்களிடம் ஒப்படைக்கக்கூடிய அரசு பிரிவுகள் குறித்து ஆய்ந்து அறிக்கை அளிக்க ரிச்சர்ட் பீத்தரம் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இவற்றில் சவுத்பரோ குழுவில் வகுப்புரிமைக் கோரிக்கைக்கு எதிர்ப்பாக நின்ற வி.எஸ். சீனிவாச சாஸ்திரியையும், சுரேந்திரநாத் பானர்ஜியையும் உறுப்பினர்களாகவும் நியமித்து விட்டது மாண்டேகு - செம்ஸ்போர்டு அறிக்கை.
          சமூக நீதி கிடைக்குமென ஆவலுடன் இருந்த நீதிக் கட்சித் தலைவர்களுக்கு இவ்வறிக்கை ஏமாற்றத்தை அளித்தது மட்டுமன்றி, வகுப்புரிமைக்கு எதிரான உறுப்பினர்களை நியமித்த செய்கை பெருங் கோபத்தை உண்டாக்கிவிட்டது.
          சென்னை அரசு இக்குழுவின்முன் தம்முடைய கருத்தைக் கூறுமாறு தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திற்கு அழைப்பு விடுத்ததுடாக்டர் நாயரும், தியாகராயரும் இக்குழுவின் பரிந்துரைகளால் பார்ப்பனரல்லாதார்க்கு நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தனர். தம்முடைய சங்கம் சவுத்பரோ குழுவின் முன் கருத்துரை கூறாது என்றும், தம்முடைய சங்கம் அக்குழுவை நிராகரிக்கிறது (பகிஷ்கரிப்பு) என்றும் அறிவித்துவிட்டனர்அரசின் அழைப்பிற்குப் பதில் அனுப்பும்முறையில் நாயர் தன்னுடைய 9.1.1919 நாளிட்ட கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்:
பொது இலாகா சீர்திருத்தம் 104 அய்.ஆர்.எண் உள்ளதும் 7.1.1919 தேதி இட்டதுமான கடிதம் கிடைக்கப்பெற்றேன். அதில் கேட்டுக்கொண்டுள்ளபடி வாக்குரிமைக் கமிட்டியிடமோ அல்லது நிர்வாகக் கமிட்டியிடமோ என்னுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு நேரமும் அவகாசமும் எனக்குக் கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்மேற்கண்ட கமிட்டிகள் பகிரங்க விசாரணை நடத்திக் கூறுவோரின் கருத்துக்களையும் எண்ணங்களையும் எழுத்து மூலம் குறித்துக் கொள்ளப் போவதில்லை என்பதாலும், இப்படிப்பட்டக் கமிட்டிகளின் அனுபவம் எனக்கு நிறைய உண்டு என்பதாலும் நான் இக்கமிட்டிகளின் முன்வந்து சாட்சியங்கள் தரும் காரியத்தை மேற்கொள்ள விருப்பமற்றவனாய் இருக்கிறேன்மேலும் நான் வாக்குரிமைக் கமிட்டி அமைப்புபற்றி, குறிப்பாக உத்தியோகப் பற்றற்ற ஒருவரைக் கமிட்டி அங்கத்தினராக நியமித்துள்ளதுபற்றி மாறுபாடான கருத்துக் கொண்டிருப்பதுடன் எனது அரசியல் எதிரிகளால் நான் விசாரிக்கப்படும் நிலைக்கு என்னை ஆளாக்கிக் கொள்ள விருப்பமில்லாதவனாகவும் இருக்கிறேன்.
டி.எம்.நாயர்
இவ்வாறு சவுத்பரோ குழுவை நிராகரித்துவிட்ட நிலையில், மாண்டேகுவின் அறிக்கையின்படி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெற முடியாது என முடிவு தெரிந்துவிட்ட நிலையில் டாக்டர் நாயர் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இங்கிலாந்து சென்று இச்சிக்கலுக்குத் தீர்வு காண்பதென முடிவெடுத்தார்.
டாக்டர் நாயர், தாதாபாய் நெளரோஜியுடன் நெருங்கிப்பழகியவர் என்பதையும், இங்கிலாந்தில் அவரை வெற்றி பெறச் செய்ய உழைத்தவர் என்பதையும் முன்பே கண்டோம். அக்காலத்தில் தாதாபாய் நெளரோஜி டாக்டர் நாயருக்குக் கூறிய அறிவுரைகளில் ஒன்று:
இந்தியாவில் இருக்கும் வெள்ளையர் ஏகாதிபத்தியம் உன்னைப் பொருட்படுத்த மறுக்குமேயானால், இங்கிலாந்துக் குடியாட்சியிடம் முறையிடு அதன் உதவியை நாடு.
          இந்த அறிவுரையை நினைவுபடுத்திக் கொண்ட நாயர், தன் இயக்கத் தோழர்களிடமும் இதையே வழி யெனக் கூறினார். இதன்படி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை இங்கிலாந்து மக்கள் முன் வைப்பதென முடிவு செய்யப்பட்டு, (31.3.1918இல் தஞ்சை மாநாட்டில்) டாக்டர் நாயரின் தலைமையில் ஒருகுழு அனுப்புவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுஆனால் டாக்டர் நாயருக்கு மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதி கிடைத்ததுதனி ஒரு மனிதனாக, தொல்லை தரும் நீரிழிவு நோயையும் பொருட்படுத்தாமல், சொந்தச் செலவில் இங்கிலாந்து புறப்பட்டார் டாக்டர் டி.எம். நாயர். கப்பல் வழியாகச் சென்று 19.06.1918இல் இங்கிலாந்தை அடைந்தார் நாயர். பிறகு இரயில் வழியாக லிவர்பூர் நகரை அடைந்தார்
அந்நகரில் இங்கிலாந்தின் ராணுவ அதிகாரி ஒருவர் நாயரிடம் வந்து தடை உத்தரவு ஒன்றை நீட்டினார். அதில்,
நோய்க்கு மருத்துவம் செய்துகொள்ள இங்கிலாந்து வந்துள்ள நீங்கள், மருத்துவம் முடியும்வரை - இந்தியா திரும்பும்வரை - இந்நாட்டில் எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது, பேசக்கூடாது எனக் கூறப்பட்டு, இதற்கு நாயரின் ஒப்புதல் கையொப்பமும் கோரப்பட்டது. தடையுத்தரவைப் பெற்றுக்கொண்ட டாக்டர் நாயர் பேசினார்:
இந்தியா திரும்பும்வரையில் என்னுடைய வெடி மருந்தை நனைக்காமல் வைத்திருப்பேன் (Will keep my powder dry, untill my return to India) ) என்று.
டாக்டர் நாயர் மருத்துவத்திற்காகவா இங்கிலாந்து சென்றார்? இங்கிலாந்தில் இவர் செய்யப்போகும் செயலைக்கூறி அனுமதிகேட்டால், மாண்டேகுவின் ஆட்சியில் அது கிடைக்கக் கூடியதா? இதையுணர்ந்துதான் மருத்துவம் செய்துகொள்ள எனப் புகன்று அனுமதி பெற்றார் டாக்டர் நாயர். வகுப்புரிமை வரலாற்றை இத்துணை இடர்பாடுகளுடன்தான் டாக்டர் நாயர், இங்கிலாந்துவரை சுமந்து சென்றார்.
டாக்டர் நாயருக்குத் தடை உத்தரவு விதிக்கப்பட்டதைக் கேள்வியுற்றவுடன் சர்.பிட்டி.தியாகராயர் கொதித்தெழுந்தார்.  20.10.1918இல் ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டி,
அன்னிபென்சன்ட், திலகர் போன்றவர்களும் அவர்களுடைய தொண்டர்களும் மாண்டேகுவைத் தூண்டி டாக்டர் நாயருக்கு இத்தகைய தடை உத்தரவைத் தந்துள்ளார்கள்
எனத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிக் கண்டனத்தை வெளியிட்டார்நகரத்தில் பல பகுதிகளிலும் கூட்டங்களை ஏற்பாடு செய்து அன்னிபெசன்ட், மாண்டேகுவின் முறையற்ற செய்கையை மக்களுக்கு எடுத்துரைத்து மக்களின் ஒருமித்த எதிர்ப்புணர்வைத் திரட்டினார்.
ஆனால், நாயருக்குத் தடையுத்தரவு வழங்கி அவரையும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையையும் அடக்கி விடலாம் என்றெண்ணியவர்களின் முயற்சி, இறுதியில் தோல்வியைத் தழுவியது.
டாக்டர் நாயர் இங்கிலாந்திலிருந்தபோதே மாண்டேகு-செம்ஸ்போர்டின் அறிக்கை பல செய்தித்தாள்களின் விமரிசனங்களுக்கு இரையானதுஇவை மட்டுமின்றி இங்கிலாந்து மக்கள் மன்றத்தில் மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கையை ஆராய்ந்து குற்றங்களைக் கூறியும், டாக்டர் நாயருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு முறையற்றது என்றும் லே மிங்டன் பிரபுவும், சைடன்காம் பிரபுவும் உரையாற்றினர்சைடன்காம் பிரபு டாக்டர் நாயரின் மீது அதிக அன்புள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதுஅவர் டாக்டர் நாயரின் புகழை இங்கிலாந்தின் மக்கள் மேலவையில் கீழ்வருமாறு கூறி உயர்த்தியது என்றைக்கும் அழியாத வரலாறாகும்.
நாம் எப்போதும் கேட்டிராத, அறியாத இந்திய உழைக்கும் மக்களின் உரிமைக்குரலை, தேவைகளை நமக்கு எடுத்துரைக்கவல்ல ஒரே ஒரு இந்திய அரசியல்வாதி, தற்போது இங்கிலாந்தில் உள்ள டாக்டர் டி.எம்.நாயர்தான் என்றார் சைடன்காம் பிரபு.
இவருடைய இத்தகைய உரைக்கு அடுத்த நாளே நாயருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது! புத்துணர்ச்சியும், புதிய வேகமும் பெற்றார் டாக்டர் நாயர்!
தடையிலிருந்து விடுபட்ட டாக்டர் நாயர் அக்டோபர் 2 ஆம் நாள் 1918இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலந்துகொண்டு மாண்டேகு - செம்ஸ்போர்டு அறிக்கையின் குறைபாடுகளையும், அதைப் பயன்படுத்தி மீண்டும் பார்ப்பன ஆதிக்கம் நிலைபெற்று விடும் என்பதையும் விளக்கி உரை நிகழ்த்தினார்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஏற்று அதற்கேற்ப அரசியல் சீர்திருத்தம் செய்வது ஒன்றுதான், தற்போது சென்னை அரசியலில் நிலவி வரும் நோய்களை ஒழிக்கும் வழி
எனக்கூறி வகுப்புவாரி உரிமையின் முக்கியத்துவத்தை இரு அவைகளும் உணரும்படிச் செய்தார் டாக்டர் நாயர். மேலும்,
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாத அரசியல் சீர்திருத்தம் என்பது தென்னிந்தியாவில் தோல்வியையே தழுவும் என அறுதியிட்டுக் கூறினார் நாயர். மேலும்,
1909இல் இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டதைப்போலவே, பார்ப்பனரல்லாதாருக்கும் வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான், சென்னை அரசியலில் பார்ப்பனரல்லாதார் பிரதிநிதிகள், அம்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட முடியும்.
எனச் சான்றுகாட்டி வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தை இங்கிலாந்து மக்களவை மன்றங்களும், மக்களும் உணரச் செய்தார் டாக்டர் நாயர்.

இறுதியில் இங்கிலாந்து பாராளுமன்றம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துடன் அரசியல் சீரமைப்பே தேவையானது என்ற முடிவுக்கு வந்ததுஇதைச் சாதித்தவர் தனி ஒருவராக இங்கிலாந்து சென்ற டாக்டர் நாயர். சைடன்காம் பிரபுவும் லேமிங்டன் பிரபுவும் நாயரின் இக்கோரிக்கை செயல்பட்டு, வருவதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.

டாக்டர் நாயர் இந்தியா திரும்பும் வழியில் பெல்காம், தார்வார் போன்ற இடங்களுக்கும் சென்று அங்கெல்லாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கைக்கு ஆதரவைத் திரட்டிக்கொண்டு தாயகம் திரும்பினார்.
டாக்டர் நாயர் இங்கிலாந்தில் தனது கோரிக்கைக்குச் சாதகமான அரசியல் சூழ்நிலையை உருவாக்க எவ்வளவு அரும்பாடுபட்டிருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்தனி ஒரு மனிதராய், நோயுற்றவராய்ச் சென்ற டாக்டர் நாயர் புரிந்த இச்சாதனைதான், பிற்காலத்தில் வகுப்புரிமை வரலாற்றின் உலகவழித் திறப்பாக அமைந்தது என்பதில் அய்யமில்லை!
இவ்வாறு திராவிடரின் நலனுக்காகத் தனி ஒருவராய் நின்று தொண்டாற்றிய நாயர் 1.1.1919 மாலையில் சென்னைக்கு வந்தார். அவர் வருகையும், சென்னை நகர மகிழ்ச்சியும்பற்றித் திரு.கோ.குமாரசாமி கூறுகிறார்:
தம் தலைவரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நீதிக்கட்சியினர் திரும்பி வரும் தலைவருக்குச் சிறந்த முறையில் வரவேற்பு ஒன்றை ஏற்பாடு செய்தனர். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து மவுண்ட்ரோடு நீதிக்கட்சி அலுவலகம் வரையில் வளைவுகளும், கொடிகளும் தோரணங்களும் கட்டி அழகுபடுத்தினர். நகரம் விழாக்கோலம் பூண்டதுடாக்டர் நாயர் 1919 ஜனவரி 7 ஆம் நாள் மாலை சென்னை வந்து சேர்ந்தார்சென்ட்ரால் இரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். டாக்டர் நாயரைக் கண்டதும் நாயர் வாழ்க பிராமணரல்லாதார் தலைவர் வாழ்க என்ற வாழ்த்தொலி எழுப்பினார்கள்பிட்டி.தியாகராயர் டாக்டருக்கு மலர் மாலைகள் அணிவித்து வரவேற்றார். அவரைத் தொடர்ந்து பலரும் மலர் மாலைகளை அணிவித்து வரவேற்பு நல்கினார்கள். வரவேற்பு உரை ஒன்றையும் வாசித்து அளித்தார்கள். அவர்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பின்னர் டாக்டர் நாயர் இரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்அழகுற அமைக்கப்பட்ட கார் ஒன்று டாக்டரை ஏற்றிச் சென்றது. பாண்டு வாத்தியங்களும், மேளதாளங்களும் முழங்கினடாக்டரின் காரைத் தொடர்ந்து தலைவர்களின் கார்கள் சென்றன. சாலையின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி நின்று வாழ்க நாயர் என்ற வாழ்த்தொலிகளைமுழங்கினார்கள். ஊர்வலம் நீதிக்கட்சி அலுவலகம் அடைந்ததும் டாக்டர் நாயர் அழகான சொற்பொழிவாற்றித் தன் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். பிராமணரல்லாதார் தொடர்ந்து செய்து வர வேண்டிய முக்கிய வேலைகளையும் விளக்கினார்திராவிடரின் வகுப்புநீதி வெற்றிபெற்றே தீரும் என்று கூறினார்இதனைக் கேட்ட மக்கள் கர ஒலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இவ்வாறு வெற்றி வேந்தராய், திராவிட மாவீரராய்த் திரும்பிய டாக்டர் நாயர் மீண்டும் ஒருமுறை இங்கிலாந்து செல்ல நேர்ந்தது. ஆனால் அப்பயணமே அவருடைய இறுதிப் பயணமாகிவிட்டது. அப்பயணத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கும்முன் அவருடைய எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் சற்று மதிப்பிட்டுக் காண்போம்.

நூல் - டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
ஆசிரியர் - கவிஞர் கூ.வ.எழிலரசு

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!