டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் - பகுதி -3

கொண்ட குறிக்கோளை அடைய புயலெனச் சீறும் நாயர், சட்டமன்ற மேலவையில் தன் இயல்பான நகைச்சுவையால் தென்றெலென வீசிய காலமும் உண்டு. இதற்கு ஒரு சான்று இதோ:
1909 களிலேயே மிண்டோ - மார்லியின் சட்டப்படி ஆளுநரே சட்டமன்ற மேலவைக்குத் தலைவர். எனவே ஆளுநர் அமர்ந்திருக்கும் அவையில் 1912களில் மன்ற உறுப்பினரான சேலம் வழக்கறிஞர் பி.வி. நரசிம்மையர் ஒரு சிக்கலான செய்தியைத் தலைவரைப் பார்த்துக் கேட்டார்: சட்ட மன்றத்தில் தமிழில் பேசலாமா? தமிழில் பேச உரிமை உண்டா? - என்று. சட்டமன்றச் செயலரோ இதற்கு விதிகளைப் பார்த்துத்தான் பதில் கூறமுடியும் என்று கூறிவிட்டு விதிகளைத் தேடுவதில் முனைந்தார். நரசிம்மையர் நின்றுகொண்டே இருக்க, செயலர் விதிகளைத் தேடிக்கொண்டே இருக்க, காலம் கழிந்து கொண்டிருந்தது. நாயர் எழுந்தார் - கடிகாரத்தைப் பார்த்தார் - உணவு வேளை நெருங்கி விட்டிருந்தது - உடனே தலைவரைப் பார்த்து, தலைவர் அவர்களே, சேலம் நண்பர் தமிழில் பேசிக்கொண்டே இருக்கட்டும், செயலர் விதிகளைத் தேடிக்கொண்டே இருக்கட்டும். நாம் மன்றத்தை உணவு இடைவேளைக்காக ஒத்திவைப்போம்; அதற்குள் செயலர் விதிகளைத் தேடி எடுப்பார் என்றார். ஒரு சிக்கலான வினாவிற்கு விடை கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மன்றம் நாயர் எழுப்பிய சிரிப்போடு ஒத்திவைக்கப்பட்டது. இத்தகு ஆளுமைத் திறத்தாலும், அறிவுக் கூர்மையாலும் மக்களுக்குத் தொண்டாற்றி வந்த டாக்டர் டி.எம்.நாயருக்கு பார்ப்பனீயத்தின் முழு உருவத்தையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு 1916இல் கிடைத்தது. இவ்வாண்டில் சென்னை சட்டசபையிலிருந்து இருவரை டில்லிப் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான தேர்தல் வந்தது. சென்னை சட்டசபை பார்ப்பனீயர்களின் பெரும்பான்மையில் இருந்தது. இருப்பினும் டாக்டர் நாயர் பார்ப்பனரல்லாதார் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். முதற்கட்டத்தில் பார்ப்பன உறுப்பினர்கள் பலரும் டாக்டர் நாயரை ஆதரிப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆரிய மாயையை அறியாத நாயர் அவர்களை நம்பினார். பார்ப்பன உறுப்பினர்கள் நாயரின் புகழையும், செல்வாக்கையும் எண்ணி எண்ணித் தங்கள் நெஞ்சில் பொறாமைத் தீயை வளர்த்துக் கொண்டிருப்பதை நாயர் அறியாமலே போனார்! கடைசிநேரம் வரையில் நாயரையே ஆதரிப்பதாகச் சொன்னவர்கள், தேர்தலின்போது திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்த வி.எஸ். சீனிவாச சாஸ்திரி பி..,எல்.டி. என்ற பார்ப்பனரின் பெயரை முன்மொழிந்து, தேர்ந்தெடுத்து டாக்டர் நாயரைத் தோற்கடித்து விட்டனர். நாயருக்கோ பெரிய ஏமாற்றம் - மனவருத்தம். நாயரின் தோல்வி பார்ப்பனரல்லாதாரின் தோல்வியென்றே பலரும் பேசினர். இத்தோல்விதான், இப்பார்ப்பனீயன் இனப்பற்றின் நடவடிக்கைதான் - பார்ப்பனர்களின் ஜாதிப்பற்றின் ஆழத்தையும், அகலத்தையும், நீளத்தையும், உயரத்தையும், கனத்தையும், உள்ளபடி எடைபோட அரிய வாய்ப்பாக அமைந்தது.
இக்கருத்தை திரு.வீ.ஆர். சந்திரன் தம்முடைய நூலில் தெரிவித்துள்ளார். நாயர் தோல்வியுற்ற இதே நிகழ்ச்சியை ஆன்டி செப்டிக் வெள்ளி விழா மலரில் திரு.எஸ். திருவேங்கடாச்சாரி என்பவர் வேறு கோணத்தில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரு.எஸ். திருவேங்கடாச்சாரியின் கூற்று:
டாக்டர் நாயர் சென்னைச் சட்ட சபை அங்கத்தினராக ஒரு முறைதான் அங்கம் வகித்து வந்துள்ளார். அதுகூட நியமிக்கப்பட்ட மேலவை அங்கத்தினராகத்தான். இக்குறுகிய காலத்தில் அவர் ஆற்றியுள்ள செயலோ மிகப் பெரியதாகும்.... மறுபடியும் இருமுறை சென்னைச் சட்டசபை அங்கத்தினர் பதவிக்கு முயன்றார். இருமுறையும் சென்னை நகரசபையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படவே விரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது விருப்பம் உருப்பெற முடியாமல் போய்விட்டதுசென்னை நகரசபை அங்கத்தினர்களின் ஆதரவு கிடைக்காததால் அல்ல; சூழ்நிலையின் பிடியில் சிக்கியதாலேயேயாகும். இவ்விரு முயற்சிகளில் இரண்டாம் முறையாக முயற்சி செய்தபோது பிட்டி.தியாகராய செட்டியார் தாம் சென்னைச் சட்டசபைக்கு நகரசபையின் பிரதிநிதியாகச் செல்ல விரும்புவதாகக் கூறியதாலும், டாக்டர் நாயரை டில்லி இம்பீரியல் சட்டசபைக்கு சென்னைச் சட்டசபை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டியுள்ள இரு அங்கத்தினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்து அனுப்பும் பொறுப்பைத் தாம் மேற்கொள்வதாகவும் வாக்களித்ததினாலும் நாயர் சென்னைச் சட்டசபைக்குச் செல்லும் விருப்பத்தைக் கைவிடலானார்.
தாம் வாக்களித்திருந்தபடியே பிட்டி.தியாகராயர் தாமே நாயரை டில்லி சட்டசபை அங்கத்தினர் பதவிக்கு நிறுத்தினார். அவருக்காக ஓட்டுகள் சேகரிக்கும் செயலிலும் ஈடுபட்டார். இத்தேர்தலில் என். சுப்பாராவ், நவாப் சையத் முகம்மது, சி.விஜயராக வாச்சாரியார் என்ற வேறு மூவரும் போட்டியிட்டனர். தேர்தலில் வாக்காளர்களாக இருந்தவர்கள் சென்னைச் சட்டசபை அங்கத்தினர்களேயாகும். டாக்டர் நாயருக்குத்தான் தம்முடைய ஓட்டுக்கள் என்று கடிதம் மூலமாகவும் தந்தி
மூலமாகவும் 14 அங்கத்தினர்கள் தெரியப்படுத்தி இருந்தார்கள். இவ்வெண்ணிக்கை தேவைக்கு மேல் இருந்ததால் தம்முடைய வெற்றி நிச்சயம் என்று உறுதியாக இருந்தார் டாக்டர் நாயர். ஆனால் என்ன ஆச்சரியம்! தேர்தலில் நாயருக்குக் கிடைத்த வாக்குகள் நான்கே நான்குதான்! பாவம் நாயரின் ஏமாற்றத்தைச் சொல்ல வேண்டுவதில்லை!
எழுத்து மூலமாக டாக்டரின் பெயரை முன் மொழிந்திருந்த பிட்டி.தியாகராயச் செட்டியார் தேர்தல் சமயத்தில் முறைப்படி அவருடைய பெயரை வாயால் கூறி முன்மொழியவில்லை. மற்ற மூவர் பெயர்களும் முறைப்படி அவர்களை ஆதரித்து நின்றவர்கள் வழிமொழியப்பட்டு விட்டன! ஆனால் நாயரின் பெயரோ இன்னும் முன்மொழியப்படவில்லை. ஒருசில வினாடிகள் சென்றன! என்ன ஆச்சரியம்! எழுத்தால் முன் மொழிந்திருந்த தியாகராயச் செட்டியார் டாக்டர் பெயரை வாயால் முன்மொழிய வாய்திறக்கக் காணோம்! குனிந்திருந்த தலையை நிமிர்த்திடவில்லை! சட்டசபை மன்றத்தில் சாவின் நிசப்தம் குடிகொண்டது! மேலும் சில வினாடிகளும் அந்நிசப்தத்தைக் கலைத்திட முடியாமல் தோல்வி கண்டன! அடுத்த வினாடியில் ஒரு கம்பீரமான குரல்: நான் டாக்டர் டி.எம்.நாயரின் பெயரை முன்மொழிகின்றேன்! என்று தெளிவாகக் கூறியது! அக்குரலுக்கு உரியவரின் கண்கள் இரண்டும் பிட்டியின் முகத்தை ஊடுருவி நின்றன! அக்கண்களில் உருக்கொண்டிருந்த கூர்மையான ஒளி கோபாக்கினியின் பிரவாகமோ அல்லது நம்பிக்கை மோசம் செய்த துரோகியைத் துண்டாடிடும் கூரிய வாளோ? என்னவென்று சொல்லுவது!.... அத்தெளிவான குரல் கொடுத்தவர்தாம் பி.ஆர்.அண்டு சன்ஸ் கம்பெனியின் உரிமையாளர் திரு.ஆர்.அவர்களாகும்.
அடுத்த வினாடிகளில் நான் ஆமோதிக்கிறேன் என்று ரிச்மாண்ட் என்ற ஆங்கிலேயர்தான் குரல் கொடுத்தார்! தேர்தல் முடிந்தது! முடிவு தெரிந்தது! நவாப் சையது முகம்மதுவும், என்.சுப்பாராவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்! டாக்டருக்குக் கிடைத்த ஓட்டுக்கள் இரண்டே இரண்டுதான்! ஒன்று அவரிடம் சிகிச்சை பெற்று அவருடைய நெருங்கிய நண்பராக இருந்துவந்த தொட்டப்பநாயக்கனூர் ஜமீன் தாருடையது! மற்றொன்று ஆங்கிலேயத் தோட்ட முதலாளி ஒருவருடையது! இவ்வாங்கிலேயர் தமக்குள்ள இரண்டு வாக்குகளில் ஒன்றை நாயருக்கு அளிப்பதாக வாக்களித்தார்! இதுதான் டாக்டர் நாயர் தேர்தலில் தோல்வியுற்ற கதை!
இங்குதான் நாயரின் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இத்திருப்பம் சாமானியத் திருப்பமன்று! இந்திய அரசியல் முன்னேற்றம் என்ற கடிகாரத்தின் முள் நேர்மாறாக ஓடிக் கடந்த காலத்தைக் காட்டத் துவங்கியது! பொறுத்திடுவதற்கு முடியாத பெருந் தவறு ஏற்பட்டுவிட்டது. பெரும் அரசியல் அநியாயம் ஒன்று எக்காலமும் நிலைபெற்றிருக்கும்படி செய்யப் பட்டுவிட்டது! இப்பெருந் தவறு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர் யார்?
இக்கேள்வியைக் கேட்டு, பிட்டி.தியாகராயரைக் குற்றவாளி போல் எண்ணவைத்து, டாக்டர் நாயரின் தோல்விக்கு பிராமணர்களின் வகுப்புத் துவேஷம் காரணம் அல்ல என்றும் செய்திகளை அடுக்கிக் கொண்டே போகிறார். பிட்டி. தியாகராயர் சட்டமன்றத்தில் ஏன் டாக்டர் நாயரின் பெயரை முன் மொழியவில்லை என்பதற்கான காரணத்தைக் கூறாமல் பார்ப்பனச் சூழ்ச்சியால் நாயர் தோற்கவில்லை என்பதை நிலைநாட்டும் நோக்கத்திலேயே இவருடைய கட்டுரை முழுவதும் அமைந்துள்ளது. டாக்டர் நாயரின் பண்புகளை எண்ணிப் பார்க்கையில் இவ்வாறு நம்பிக்கை மோசடி செய்த ஒருவருடன் இணைந்து ஒரு மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்திருப்பார் என்று சிறிதளவும் கற்பனைகூடச் செய்ய முடியாதே! இக்கட்டுரை, உள்நோக்கம் கொண்டு எழுதப்பட்டு பிட்டி.தியாகராயரைக் குற்றவாளியாக்குகிறது என்பதையும், 1916 இல் நடைபெற்ற பார்ப்பனச் சூழ்ச்சியே அவருடைய தோல்விக்குக் காரணம் என்பதையும் டாக்டர் பி.ராஜாராமன் தம்முடைய நூலில் தந்துள்ள கருத்து தெளிவாக்குகிறது.
டாக்டர் நாயரின் தோல்வி பார்ப்பனரல்லாதாரின் தோல்வியாகவே கருதப்பட்டது, இவரைப்போன்றே நிலக்கிழார்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்ட பி.இராமராயநிங்கர், கே.வி.ரங்கசாமி அய்யரால் திருச்சியில் தோற்கடிக்கப்பட்டார். இதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில்தான் கே.வி.ரெட்டிநாயுடுவும் தோற்கடிக்கப்பட்டார். இதே ஆண்டில் பிட்டி.தியாகராயர் உள்பட பல பார்ப்பனரல்லாத தலைவர்களும் பல்வேறு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர் என்பது புதுமையானது. இவர்களைத் தோற்கடித்தவர்கள் பெரும்பாலும் மைலாப்பூர் மற்றும் ஹோம்ரூல் இயக்கத் தொடர்புடையவர்களே. பிரகாசம் போன்ற பார்ப்பனர் வெற்றிபெறும்போது, இவர்களின் தோல்வி என்பது அரசியல் ஆட்சியுடன் தங்களை இணைத்துக்கொண்டிருந்த பார்ப்பனர்களின் சுய நலத்தால் - ஏற்படுத்தப்பட்ட தோல்வியே என மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் பி.இராஜாராமன். எனவே பார்ப்பனீயத்தின் சூழ்ச்சிக்கு முதல் பலியானவர் டாக்டர் நாயர் என்பது தெளிவாகிறது. டாக்டர் நாயர் மட்டுமே தோல்வியுற்றிருந்தால் திரு.எஸ்.திருவேங்கடாச்சாரியின் கூற்றில் உண்மை இருக்கக் கூடும். ஆனால் பார்ப்பனரல்லாதார் தலைவர்கள் பலரின் தோல்விக்கு பார்ப்பனீய ஆதிக்கம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
வரலாற்றைத் திசை திருப்ப நேர்ந்த இத்தோல்வியைக் கேள்விப்பட்டதும் டாக்டர் நாயர் தம்முடைய மாநகராட்சி, உறுப்பினர் பதவியைத் துறந்தார். மதராஸ் ஸ்டேண்டர்டு (ஆயனசயள ளுவயனேயசனஇதழில் கட்டுரை ஒன்றை எழுதி,
தங்களுடைய நிரந்தரமான ஈனச் செயல்களால் கவுரவமானவர்களை வீழ்த்திவிட்டவர்களிடமிருந்து விலகிச் சென்று வேறுவிதமான மேடைகளில் நிற்க விழைகிறேன்
என்று தெரிவித்துவிட்டார். நாயரின் இவ்வறிக்கை இந்திய அரசியல் முன்னேற்றத்தின் ஆணிவேரையே அசைத்து விட்டது! இதுதான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றிட வித்தாகவும் அமைந்தது! இதுதான் டாக்டர் நாயரின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட திருப்பத்திற்குக் காரணமாகும்!
இவ்வாறு வேறு மேடை, வேறு நோக்கம் என்று அறிவித்த டாக்டர் நாயரை, டாக்டர் சி.நடேசனார் சந்தித்ததன் விளைவே 1916இல் டாக்டர் நாயர் சென்னை திராவிடர் சங்கத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு! பார்ப்பனீயம் பற்றி ஆழ்ந்து சிந்தித்த நாயர் அவ்வாண்டிலிருந்தே,
ஜனநாயக அமைப்பை - முறையை நாம் பின்பற்றி வருகிறோம் என்றாலும், பின்பற்ற முடிகிறது என்றாலும், ஜாதி வேற்றுமைகள்  ஒழியும்வரையில் அது உறுதியற்றதாகவே இருக்கும். என்ற முடிவுக்கு வந்தார் என்பது பொருத்தமானது.
இக்கால கட்டத்தில் வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி.தியாகராயரின் வாழ்விலும் - மனப்போக்கிலும் அரிய மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. இந்து என்ற பிடியிலும், வைதீகராகவும் இருந்த தியாகராயர் பார்ப்பனர்களின் கொடுமையை உணர்ந்துகொண்ட நிகழ்ச்சி இதுதான்:
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு மற்றெல்லாரையும்விட அதிகத் தொகையாகிய ரூ.10,000 அளித்தார் தியாகராயச்செட்டியார். இருந்தும் அவர் விழாக் கூட்டத்திற்குச் சென்ற போது அவரை மேடையில் உட்காரவைக்காமல் கீழே உட்காரச் செய்தார்களாம். அய்க்கோர்ட் ஜட்ஜ் முதல் அர்ச்சக, பரிச்சாரக, தரகர் - பார்ப்பனரெல்லாம் மேடையில் அமர்ந்திருந்தனராம். இவரிடம் இவருடைய ஆஃபிசில் வேலைக்கு இருந்த சில பார்ப்பனச் சிப்பந்திகள்கூட மேடைமேல் வீற்றிருந்தனராம். இந்தப் பார்ப்பன  ஜாதித் திமிரை சகிக்க முடியாத தியாகராயச்செட்டியார், அந்த இடத்தை விட்டு விர்ரென்று எழுந்து காரிலேறி டாக்டர் நாயர் பங்களாவுக்குச் செல்லச் சொன்னாராம்! டிரைவருக்கோ பேராச்சரியம்! கீரியும் பாம்புமென இருந்தவர்களல்லவா அதுவரையில்! மலையும் மலையும் என இவ்விரு பெரும் மேதைகளும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்.
முன்பே, தேர்தலில் தோற்றுப் பார்ப்பனீயத்தின் தன்மைகளைப் புரிந்துகொண்டிருந்த நாயர், டாக்டர் சி.நடேசனார் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் என்பதைக் கண்டோம். இச்சமயங்களில் இவ்விரு தலைவர்களும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் குறித்தும் - அதற்கெனத் தனி இயக்கம் காணவேண்டும் என்பதைப் பற்றியும் - பலமுறை கலந்துரையாடியிருப்பார்கள் என்பதில் அய்யமில்லை.
முன்பே பார்ப்பனரல்லாதாருக்காகச் சென்னை திராவிடர் சங்கம், திராவிடர் இல்லம் - ஆகிய அமைப்புகளை உருவாக்கித் தொண்டாற்றி வந்த டாக்டர் சி.நடேசனார், ஒன்றுபட்ட டாக்டர் நாயரையும் வெள்ளுடை வேந்தரையும் தகுந்த காலத்தில், தகுந்த முறையில் பயன்படுத்தி - பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்குப் பயன்படச் செய்தார் என்றுதான் கூறவேண்டும். இதைப்பற்றி பேராசிரியர் .அன்பழகன் அவர்கள்,
பலகாலமாகவே மதத் துறையில் புண்ணிய தீர்த்தம் கங்கை, புண்ணியத்தலம் காசி, துவாரகை என்று வழங்கியது போல் அரசியலுக்குத் தலைநகர் டில்லி வாணிபத்துக்குப் பீடம் பம்பாய், நெசவாலைகளுக்கு உரிய இடம் ஆமதாபாத், இரும்புத் தொழிற்சாலைக்குச் சிறப்பிடம் ஜாம்ஷெட்பூர் என்று இப்படியே வடக்கின் பட்டியல்வளருவதைக் கண்டனர். இதற்குத் துணையாகவே காங்கிரஸ் அமைகிறது என்பதையும் கண்டறிந்தனர் பலர். அவர்களுள் சர்.தியாகராயர் அவர்களும், டி.எம்.நாயர் அவர்களும் வடவர் ஆதிக்கப் போக்கைக்கண்டே வெவ்வேறு சமயங்களில் விலகிக் கொண்டனர்.... அக்காலத்தில் தியாகராயரும், நாயரும் சென்னை நகரசபை உறுப்பினர்களாக அமர்ந்து, ஒருவரோடு ஒருவர் மாறுபடும்வகையில் ஆற்றல்மிக்க எதிர்க்கட்சியினராக அருந்தொண்டாற்றி வந்தனர். அவர்களது ஆற்றலையும், அவ்விரு அரும்பெரும் தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் எதிர்த்து நிற்பதால் திராவிடச் சமுதாயத்தில் ஏற்படும் பெரியதொரு இழிவையும் கண்ட டாக்டர் நடேசனார், அவர்கள், அவ்விருவரையும் மாறுபாடு நீங்கி ஒன்றுபடச் செய்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விரு தலைவர்களும், டாக்டர் சி.நடேசனாரின் பெருமுயற்சியால் இணைந்த கால வரலாற்றிற்குப்பின், சர்.தியாகராயர் பார்ப்பனரல்லாத மக்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியின் முதற்கட்டமாக அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பார்ப்பனரல்லாதார் ஒவ்வொருவரும் இன்றுவரை சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய அந்த அழைப்பில்,
சமுதாய வாழ்வில் பார்ப்பனர் முதலிடம் பெற்றிருப்பதும், உடலுழைப்பில்லாதவாறு அன்னார் வாழ்க்கை முறை அமைந்திருப்பதும், மோட்ச உலகத்திற்கு வழிகாட்டிகளாக அவர்கள்  மதிக்கப்படுவதுமே இந்நாட்டினில் பார்ப்பனரைப் பெருவாழ்வு வாழச் செய்துவிட்டது. பிறப்பினால் உயர்வு - தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமைப் பேசினாரில்லை. பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும், நால்வகை ஜாதி இந்நாட்டினில் நாட்டியோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார் - முடியவில்லை, பின்னர் வந்த பல சீர்திருத்தவாதிகள் முயன்றார்கள் முடியவில்லை. இராமானுசர் வந்தார் - முயன்றார் - தோற்றார். பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை, பாராமை, முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகின. அத்தகைய ஜாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம் - இதுவே தக்க வாய்ப்பு
எனக் குறிப்பிட்டிருந்தார் சர்.தியாகராயர். தியாகராயரின் அழைப்பிற்கு நாடெங்கிலுமிருந்து பேராதரவு எழுந்தது. பொங்கு புனலெனப் புறப்பட்டனர்! அதுவரையில் புழுவாய்க் கிடந்த மக்கள்.
இத்தகைய பேராற்றல் மக்கள் சக்தியைப் பயன்படுத்தி - சர்.தியாகராயர் 1916ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20ஆம் நாள் விக்டோரியா பப்ளிக் ஹாலில் - ஒரு கூட்டத்தைக்கூட்டி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation ) என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார் சர்.தியாகராயர். இதற்கு உறுதுணையாக நின்றவர் டாக்டர் நாயர்; உழைப்பை நல்கியவர் டாக்டர் சி.நடேசனார். இந்த அமைப்புடன் சங்கத்தின் நிதித் தொடர்பான பணிகளுக்காக தென்னிந்திய மக்கள் சங்கம் (South Indian People’s Association) ) என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.
சர்.தியாகராயர் தம்முடைய கையொப்பமிட்ட பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையை இதே நாளில் வெளியிட்டார். பல பக்கங்கள் கொண்ட அவ்வறிக்கையின் முக்கியக் கருத்தாக,
விழிப்படைந்த பார்ப்பனரல்லாதார்கள் விரைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அவர்களுடைய பிற்காலம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்கள் செய்ய வேண்டிய காரியம் மிகப் பெரிது. அத்துடன் மிக அவசரமானதுமாகும் என்ற அழைப்பையும்,
சட்டமன்றங்களிலும், அரசாங்க அலுவல்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும், ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரால் நசுக்கப்படக் கூடாது, ஆதிதிராவிடர் போன்ற பின்தங்கிய வகுப்பினர்களுக்குச் சில சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும்.
என்ற இயக்க நோக்கத்தையும் கொள்ளலாம்.
சர்.தியாகராயருடன் இணைந்து பார்ப்பனரல்லாதாருக்கென இயக்கம் கண்ட நாயர் - தன் பயணப் பாதையைத் தெளிவாக்கிக் கொண்டார். அவருடைய பணிகளில் புதிய வேகம், புத்துணர்ச்சி எழுந்தது. 1916 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் நடைபெற்ற முதல் கூட்டத்தில் பலருடைய உரைகளுக்குப் பிறகு டாக்டர் நாயர் ஆற்றிய உரை இது:
இப்போது பேசிய நண்பர்கள் எல்லோரும் சொல்லவேண்டிய செய்திகளைச் சொல்லி, செய்ய வேண்டிய செயல்களை நினைவுப்படுத்தித் தங்கள் கடமைகளைச் செய்தார்கள். அவர்கள் கூறிய ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாகும்! முக்கியத்துவமுடையதாகும்! அவைகளெல்லாம் நாம் ஓர் அரசியல் கட்சி காணுவதற்கு ஏற்ற காரணங்களாக அமைந்துள்ளன! இவ்வுண்மையை நாம் மறந்து விடக் கூடாது! ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே கட்சி காணவேண்டிய நிலையில் இல்லை நாம். நம்மைச் சுற்றிப் பலதரப்பட்ட பிரச்சினைகள் சூழ்ந்துள்ளன! இவைகளை எல்லாம் எடுத்துக்காட்டிய நண்பர்கள் அவைகளைச் சமாளிக்க வேண்டிய வழிவகைகளையும் கூறிடத் தவறவில்லை! அவர்களுக்கெல்லாம் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமக்கென்று கட்சி காணவேண்டியது அவசியந்தான்! அவசரமுடையதும் ஆகும்! இக்கருத்தை நான் எனது மனமார ஆதரிக்கிறேன்! நண்பர் தியாகராயச் செட்டியாரும் இதனை ஆதரித்து நிற்பது நாம் செய்த நற்பயனே ஆகும்! நண்பர் நடேச முதலியாரின் சலியாத முயற்சியாலும், திவான்பகதூர் இராஜரத்தின முதலியார் ஒத்துழைப்பாலும் மற்ற நண்பர்களின் துணையுடனும் கூட்டப்பட்டுள்ள இக் கூட்டமானது சாதாரணக் கூட்டமல்ல! விந்தியம் முதல் குமரி வரை உள்ள தென்னாட்டு மக்களின் பெருங்கூட்டம். பல நாட்களாகப் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு கூட்டப்பட்டுள்ள கூட்டமாகும்!
இக் கூட்டத்திற்கு மிகத் தொலைவான இடங்களிலிருந்தெல்லாம் வந்து கலந்து கொண்டதுடன் தங்களுடைய அரிய கருத்துக்களையும் விருப்பங்களையும் எடுத்துக்கூறி நம்மையெல்லாம் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்திட்ட நண்பர்களை இக் கூட்டமே போற்றிப் புகழுகின்றது! நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றது. நம்முடைய விருப்பம், நோக்கம் ஆகியவைகளெல்லாம் கட்சி என்ற உருக்கொண்டு விட்டதை யாவருமே காண்கிறோம்! என்னைப் பொறுத்தவரையில் தென்னாட்டு பிராமணரல்லாதார் நலனுக்காக என் உயிரையும் தத்தம் செய்திடத் தயாராகி விட்டேன்!
உறுதியுடன் உயிர்த் தியாகம் செய்யவும் தயாராகிவிட்ட டாக்டர் நாயர் பார்ப்பனரல்லாதார்க்கென அரசியல் கட்சி உருவாக்கும் அடிப்படைப் பணிகள் ஒவ்வொன்றிலும் ஈடுபாட்டுடன் உழைத்தார்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்குப் பெயர் வைக்கப்பட்டது. இப்பெயரை வைத்து, சங்கத்தைத் தொடங்கி வைத்தவரே டாக்டர் நாயர்தான் என்பதை பிட்டி. தியாகராயரே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
1916 நவம்பர் 20ஆம் நாள் கூட்டத்திற்குப் பிறகு, ஒருசில நாட்களுக்குப்பிறகு பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஓர் அரசியல் கட்சியின் கூட்டம் என்ற புத்துணர்வோடு கூடியது. அக்கூட்டத்தில்தான் கட்சியின் பெயர் முறைப்படி அறிவிக்கப்பட்டது. சட்டதிட்டங்கள், கொடி, முதலியவைகளும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. கட்சியின் பெயர், சட்டதிட்டங்கள் இவற்றை உருவாக்குவதில் டாக்டர் நாயரின் பங்கு முதன்மையாக இருந்தது என்பதை அன்றையக் கூட்டத்தில் பிட்டி.தியாகராயர்,
நண்பர்களே! அன்று நான் தெரிவித்தபடி நமது கட்சிக்குப் பெயர் சூட்டியாகி விட்டது! தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதுதான் நமது கட்சியின் பெயர்!.... இந்த நல்ல பெயரைச் சூட்டி நம் சமுதாயத்திற்கான கட்சியைத் துவக்கி வைத்த நம் நண்பர் டாக்டர் நாயரைப் போற்றிப் புகழ்வோமாக!.... நாயர் அவர்களே இக்கட்சியின் சட்ட திட்டங்களையும் வகுத்துள்ளார். நம் விருப்பத்திற்கிணங்கவே கொள்கைகளையும் தெரிவித்துள்ளார்; இவைகளையெல்லாம் உங்கள் முன் படித்துக்காட்டுகிறேன். இவைகள் உங்களுக்கு ஏற்றதாக இருப்பின் கர ஒலி எழுப்பி ஆதரித்திடுங்கள்
என ஆற்றியிருக்கும் உரையினால் தெரிந்துகொள்ள முடிகிறது.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கொள்கைகளை மக்களிடையே பரவச் செய்ய மூன்று செய்தித்தாள்கள் தொடங்கப்பட்டன. தமிழில் திராவிடன் தெலுங்கில் ஆந்திரபிரகாசிகா, ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் (Justice) என்பவைகளே அவ்விதழ்கள்.
ஆங்கில நாளிதழான ஜஸ்டிஸ் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்க இசைந்திருந்த திவான்பகதூர் பி.கருணாகரமேனன், பார்ப்பனர் சூழ்ச்சிக்குப் பலியாகி இறுதிக்கட்டத்தில் அப்பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். டாக்டர் நாயர், தாமே முன்வந்து அவ்விதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நெருக்கடியைத் தீர்த்து வைத்தார்.
டாக்டர் நாயர் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய ஜஸ்டிஸ் ஏட்டின் ஆழ்ந்த கருத்துடைய, நேர்மையான தலையங்கங்கள் அனைவரையும் வியக்க வைத்தன. இதன் முழக்கம் ஹோம் ரூல் இயக்கத்தினரின் போக்கை மக்களுக்குப் புரிய வைத்தன. ஹோம் இயக்கமெனும் நோய்க்கு மருந்தாகவே இவை இருந்தன எனலாம்.
ஜஸ்டிஸ் ஏட்டின் கருத்துத் தாக்குரவால் தெளிவடைந்த மக்கள், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைக் குறிப்பிட்டுப் பேசும்போதும், அழைக்கும்போதும் இந்த ஏட்டின் பெயர் கூறியே அழைக்கத் தொடங்கினர். எனவே தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஜஸ்டிஸ் ஏட்டின் பெயரோடு ஜஸ்டிஸ் பார்ட்டி (துரளவஉந ஞயசவல) என்று வழங்கப்பட்டது - அழைக்கப்பட்டது. இதையே தமிழில் நீதிக்கட்சி என்று அழைத்தனர்.
இவ்வாறு பிட்டி.தியாகராயருடன் இணைந்து இயக்கம் கண்ட டாக்டர் நாயரையும், தியாகராயரையும் ஹோம் - ரூல் இயக்கத்தினர் கேலி பேசினர். இந்த இயக்கத்தை, செட்டி கட்சி - நாயர் கட்சி என எள்ளி நகையாடினர். ஆனால் இவ்வருந்தலைவர்களின் உறுதியை, உழைப்பை உணர்ந்த பார்ப்பனரல்லாதார் கூட்டம் இவ்விருவரையும் பார்ப்பனரல்லாதார், இயக்கத்தின் சக்தியும் சிவனும் எனப் போற்றிப் புகழ்ந்தனர்.
சங்கத்தின் தமிழ் இதழான திராவிடன் - இப்பெயரைப் பெற்றதற்கும் டாக்டர் நாயரே காரணமாக நின்றார். இதைத் திரு.கோ.குமாரசாமி தம்முடைய திராவிடப் பெருந்தகை - தியாகராயர் நூலில், எஸ்.எஸ். அருணகிரிநாதர் (திராவிடன் ஏட்டின் பிற்கால ஆசிரியர்) தம்மிடம் கூறியதாகத் தந்துள்ள இக்குறிப்பு மெய்ப்பிக்கின்றது.
சுமார் இரண்டு மூன்று நாட்கள் நாயரும் மற்றத் தலைவர்களும் கூடி யோசித்த பின்னரே தமிழ் நாளிதழுக்குத் திராவிடன் என்ற பெயர் சூட்டப்பட்டது.
எனவே பிராமணரல்லாதார் இயக்கத்திற்குத் தக்க பெயரிட்டது, சட்ட திட்டங்களை வரையறுத்தது, கொடியை முடிவு செய்தது, கொள்கைகளை வரையறுத்தது, இதழ்களுக்குப் பெயர் சூட்டியது - இவ்வாறு இயக்கத்தின் தொடக்கப் பணிகளுக்கெல்லாம் டாக்டர் நாயரே அறிவின் மூலதனமாய் இருந்து செயல்பட்டார் என்பதை அறியலாம்.
டாக்டர் நாயர் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை உருவாக்க உழைப்பை நல்கிய முறையை டாக்டர் P.. இராஜாராமன் தம்முடைய The Justice Party என்ற ஆய்வு நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
டாக்டர் நாயரின் அமைப்பாற்றலும், நாவன்மையும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை அமைக்க முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டன. இவரை திராவிட இயக்கச் சிற்பி எனக் கூறுவதைவிட திராவிட இயக்கத்தின் இதயம், மூளை எனக் கூறுவதே மிகவும் பொருத்தமானது. இவருடன் இணைந்துநின்ற பிட்டி.தியாகராயரின் பணிகளைவிட இவர் ஆற்றியுள்ள பணி குறிப்பிடத்தக்கது. டாக்டர் நாயரைத் தவிர பார்ப்பனரல்லாதாரின் கலங்கரை விளக்கென வேறு யாரையும் கூற முடியாது. வரலாற்றுச் சிறப்புமிக்க பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை சங்கத்தின் செயலர் என்ற முறையில் பிட்டி.தியாகராயரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டபோதிலும், அதன் உள்ளுணர்வாய் ஒலிக்கின்ற போர்க் குரல் - டாக்டர் நாயரின் - வாளினும் கூரிய எழுதுகோலால் உருவாக்கப்பட்டதே.
இவை மட்டுமின்றி தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சட்ட திட்டங்களை வரையறுப்பதில் டாக்டர் நாயர் பின்பற்றிய முறை - அவரது பரந்துபட்ட அறிவையும், தெளிவான தொலை நோக்கத்தையும் இன்றுவரை மெய்ப்பித்து வருகின்றன. இச்சட்ட திட்டங்களை வகுப்பதில், டாக்டர் நாயர் பிரெஞ்சு நாட்டு விடுதலை இயக்கத்தைப் பின்பற்றினார் என்பதை,
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சட்ட திட்டங்கள், பிரெஞ்சு நாட்டு விடுதலை அமைப்பின் முறையைப் பின்பற்றி டாக்டர் நாயரால் உருவாக்கப்பட்டன.
என ராபர்ட் எல்.ஆர்ட்ரோவ் (Robert Hardgrore ) தம்முடையThe Dravidian Movement  என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இதைப்பற்றி விரிவான செய்திகளை திரு.கோ.குமாரசாமி தம்முடைய நூலில் தந்துள்ளார். அவை:
தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின் சட்டதிட்டங்களைப் பொறுத்தவரையில் பிரெஞ்சு நாட்டு ராட்டிக்கல் ரிபப்ளிக்கன் பார்ட்டியின் சட்டதிட்டங்களையே டாக்டர் நாயர் பின்பற்றலானார். பிரெஞ்சு நாட்டு வேங்கை என்று புகழப்பட்ட டாக்டர் கிளிமொன்கோ அவர்களிடம் மருத்துவப் பயிற்சி பெறும் வாய்ப்பினை டாக்டர் நாயர் பெற்றிருந்தார். புரட்சிக்கு முன்னர் நிலவி வந்த பிரெஞ்சு நாட்டுப் பெரும்பான்மை மக்களின் அரசியல் சமுதாய நிலைமையும், தென்னிந்தியாவில் நிலவி வந்த திராவிட மக்களின் அரசியல் சமுதாய நிலைமையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தன. புரட்சிக்கு முன்பு அதிகாரம் வகித்துவந்த பிரபுக்கள் அரசாட்சியானது, பிரபு வகுப்பினரைத் தவிர்த்த மற்ற வகுப்பு மக்களுக்கு எவ்வித பங்கும் உரிமையும் அளிக்க மறுத்து வந்தது. நடுத்தர மக்கள் கூட அவர்கள் நடத்திய பள்ளிகளில் சேர்வதையும் கல்வி பெறுவதையும் தடுத்தது. பிரபுக்களைப்போல அறிவும், ஆற்றலும் பிரபுக்கள் அல்லாத மற்ற வகுப்பு மக்களுக்கு கிடையாது எனவும், அவர்கள் யாவரும் கீழ்ப் பிறப்பினர் எனவும், கீழ்க்குலத்தினர் எனவும் கூறி, அப்படிப்பட்ட தாழ்ந்த வகுப்பார் ஆட்சியில் பங்கு கொள்வது நாட்டுக்குத் தீமை விளைவிக்கும் எனவும் கூறிவந்தது. இப்படியெல்லாம் கூறி வந்ததோடு நில்லாமல், பிரபுக்கள் வகுப்பினரும், அரச குலத்தினரும் கடவுள் அருள் பெற்றவர்கள் என்றும், மற்ற மக்களைப் போல கீழ்மையான நிலையோ, பிறப்போ உடையவர் அல்லர் என்றும், தாங்கள் உயர்வாழ்வு வாழவே கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்னும் மற்ற யாவரும் தங்கட்குக் கீழ்ப்பட்ட வாழ்வு வாழவே பிறந்தவர்கள் என்றும் மமதை பேசி அதிகார ஆரவாரம் செய்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட  குல - வகுப்பு ஆணவக்காரர்களையும் அவர்தம் ஆதிக்க வெறியையும் எதிர்த்துத் தமது உரிமைக்குப் போராட முன்வந்த பிரபுக்கள் அல்லாத பிரெஞ்சு மக்கள் தங்களுக்கென ராடிக்கல் ரிபப்ளிக்கன் கட்சி என்றதோர் அரசியல் கட்சியை அமைத்துக் கொண்டனர். அக்கட்சியை பிரபுக்கள் அல்லாதார் கட்சி என்று அழைத்தனர். பெரும் பான்மையினரான நாட்டு மக்களைப் பழித்தும், இழித்தும் பேசிவந்த பிரபுக்கள் வகுப்பினர் எவரையும் அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதை அக்கட்சியின் சட்டதிட்டங்களில் முதல் சட்ட திட்டமாகக் கொண்டனர்.... இறுதியில் ஏற்பட்ட புரட்சியில் பிரபுக்கள் வகுப்பே பூண்டற்றுப் போனது.
இத்தகைய விடுதலை இயக்கத்தின் கொள்கைகளும், சட்ட திட்டங்களும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அமைப்பிற்கும், தோற்றத்திற்கும், செயல்பாட்டிற்கும் மிகப் பொருத்தமாக அமைந்திருப்பதைக் கண்ட நாயர், தாம் கண்ட கட்சிக்கும் - திராவிடர் மட்டுமே இணைந்த கட்சிக்கும் - அதன் அடிப்படையிலேயே விதிமுறைகளை உருவாக்கினார். அக்காலப் பிரஞ்சுப் புரட்சியில் பிரபுக்கள் - இக்கால திராவிடர் புரட்சியில் பார்ப்பனர்கள்! பிரபுக்களும் கடவுள் அவதாரம்; பார்ப்பனர்களும் கடவுளின் அவதாரம். இப்படி ஒவ்வொரு பொருத்தத்தையும் நாம் காண முடியும். டாக்டர் நாயரின் அறிவாற்றலையும் எதிர்கால நோக்கத்தையும் எத்துணைமுறை எப்படிப் பாராட்டினாலும் தகுமன்றோ!
இவ்வாறு நீதிக்கட்சியை உருவாக்கிய டாக்டர் நாயர், கட்சியின் நிகழ்ச்சி செயல்பாடுகளை பிட்டி.தியாகராயருடன் கலந்துரையாடிய பிறகே முடிவு செய்து வந்தார், என்றாலும் வெகு விரைவில் இயக்கத்தில் சிறப்பான பேச்சாளர் என்ற நிலையை அடைந்தார். இயக்கத்தின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய தலைவரானார் டாக்டர் நாயர், சர்.பிட்டி.தியாகராயர் இயக்கத்தில் தனக்குரிய சிறப்பான இடத்தில்தான் இருந்தார். அவரே டாக்டர் நாயரைப்பற்றிக் குறிப்பிடும்போது, நம் தலைவர் வழிகாட்டி என்றுதான் குறிப்பிட்டார் என்பது இங்கே கருதத்தக்கது. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முதல் மாநாடு சென்னையில் 25-12-1917இல் நடைபெற்றபோது பிட்டி.தியாகராயர், டாக்டர் நாயரைக் குறிப்பிட்டுக் கூறிய வார்த்தைகள் இவை:
அவர் (டாக்டர் டி.எம்.நாயர்) காட்டிய வழியின்படியே நாம் இப்போது களத்தில் நிற்கிறோம். நாம் நம்முடைய முன்னேற்றப் பாதையில் சென்று ஆற்ற வேண்டிய கடமைகளுக்கும் அவரே தலைவராய் இருந்து வழிகாட்ட வேண்டும்.
(டாக்டர். பி. இராஜாராமன் - நூல் : The Justice party - பக்கம் 100).
இத்தகைய பெருமதிப்பும் உயர்நிலையும் இயக்கத்தில் பெற்றிருந்த டாக்டர் நாயர்தான் தொடக்கக் காலத்தில் புயலாலும், அலைகளாலும் ஆர்ப்பரித்த கடல் நடுவே நீதிக்கட்சி என்னும் கப்பலைத் திறம்படச் செலுத்திய மாலுமி என்கிறார் பி.இராஜாராமன். இக்கூற்று டாக்டர் நாயருக்குச் சற்றும் மிகையன்று என்பதை, அவருடைய பிற்கால இயக்கப் பணிகளும் பறைசாற்றுகின்றன.

இவ்வாறு டாக்டர் நாயரின் மூளைத்திறத்தால் முழு உருவம் பெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கம்,


நூல் - டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
ஆசிரியர் - கவிஞர் கூ.வ.எழிலரசு

Comments

Popular posts from this blog

திராவிடமும் தமிழும் (தமிழ்) - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்

கூட்டாளி (குமரிமைந்தன்) பார்வையில் குழப்பல் பேர்வழி குணா! - (ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்)

திராவிடத்தால் தமிழன் எழுச்சிப் பெற்றான் - தொல்.திருமாவளவன்!